இந்தியாவுக்கு ஒரு தேசிய பாதுகாப்பு உத்தி நிலைத்தன்மை தேவை -அர்சான் தாராபூர்

     அதிகரித்து வரும் உலகளாவிய குழப்பத்தைப் புரிந்து கொள்ளவும், அதற்குத் தயாராகவும் நாட்டிற்கு ஒரு நிலையான செயல்முறை தேவை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  புதிய அரசாங்கம் பழைய தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. மற்றொரு விமானம் தாங்கி கப்பலை உருவாக்குவது, முப்பட்டைகளின் (theaterisation) செயல்பாட்டை மேம்படுத்துவது, அமெரிக்காவுடனான உறவுகளை நிர்வகிப்பது மற்றும் சீனாவுடனான போட்டி ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், அதன் வளங்கள் மற்றும் தேவையான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, அந்த முடிவுகளை எவ்வாறு எடுக்கும்?


அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு அடித்தளத்தில் இருந்து நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு விரிவான அணுகுமுறையை மேற்கொள்வதே அரசாங்கத்தின் சிறந்த முடிவாகும். சீர்திருத்தங்கள் அல்லது மற்ற நாடுகளுடனான உறவை தனித்தனியாக கையாளக்கூடாது. இது வளங்களை வீணடித்து, தேசிய நோக்கங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். அதற்குப் பதிலாக, இந்த முடிவுகளை எடுப்பதற்கு ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது ஒரு தேசிய பாதுகாப்பு உத்தியை (National Security Strategy  (NSS)) உருவாக்க உறுதியளிக்க வேண்டும்.


பல சக்திவாய்ந்த நாடுகள் தேசிய பாதுகாப்பு உத்தியை  உருவாக்கியுள்ளனர். ஆனால் இந்தியா இன்னும் அந்த நடவடிக்கைகளை தொடங்கவில்லை. இதன் விளைவாக, இராணுவ முதலீடுகள் குறித்த முடிவுகள் பெரும்பாலும் ஆயுதப்படைகளிடையே நடைபெற்று விடுகிறது. திட்டங்களும் முன்னுரிமைகளும் நிலையானதாக இருக்க வேண்டும். அவை தொடர்ந்து கவனிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த பார்வை சில உயர் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்ற சில விஷயங்கள் அரசியல் தலையீடு காரணமாக மறைக்கப்படுகிறது.


பல ராஜதந்திர அபாயங்கள்


இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக  ஒருங்கிணைந்த கொள்கைகள் தேவைப்படும் காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற பல அபாயங்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது. கடற்படை விரிவாக்கம், தெற்காசியாவில் பொருளாதார செல்வாக்கு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சவால்களை சீனா முன்வைக்கிறது. உக்ரைன் மற்றும் காசா போன்ற மோதல்கள், இந்தியாவின் பிராந்தியத்தை பாதிக்கும் புதிய போர் தொழில்நுட்பங்கள் பல்வேறு புதிய சிக்கல்களை உருவாக்குகின்றன. இந்தச் சவால்களைப் புரிந்துகொள்வதற்கும் அதற்குத் தயாராக இருப்பதற்கும் இந்தியாவுக்கு ஒரு நிலையான செயல்முறை தேவை.


அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு வரைபடம்


நன்கு வடிவமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு உத்தி உருவானால் இந்தியாவிற்கு ஐந்து முக்கியமான நன்மைகளை வழங்கும். முதலாவதாக, நாட்டின் பாதுகாப்பு  அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்புப் போக்குகளை மதிப்பீடு செய்து, ஒரு முழுமையான மதிப்பீட்டை நடத்துவதற்கு அரசாங்கத்தை அது கட்டாயப்படுத்தும். இந்த மதிப்பாய்வு சீனாவின் கடற்படையின் வளர்ச்சி போன்ற வளர்ந்து வரும் சவால்களை முன்னிலைப்படுத்தும். அவை உடனடி அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும்கூட சில ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பிற்கு சவாலானதாக மாறலாம். தேசிய பாதுகாப்பு உத்தி  இல்லாத பட்சத்தில், நீண்டகால அச்சுறுத்தல்களைக் கையாள்வது கடினம்.  இந்த அச்சுறுத்தல்கள் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும்போது மட்டுமே தீர்க்கப்படும். 


இரண்டாவதாக, ஒரு தேசிய பாதுகாப்பு உத்தி நீண்ட கால கட்டமைப்பை வழங்கும். இந்தியாவின் விரிவடையும் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும் இராணுவத் திறன்கள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளை உருவங்களை மேம்படுத்துவதற்கும் நீண்டகாலத் திட்டங்கள் தேவைப்படுகிறது. கடற்படைக்கு ஒரு புதிய விமானம் தாங்கி கப்பலுக்கு நிதியளிப்பது அல்லது இராணுவத்திற்கு ஒரு புதிய காலாட்படை பிரிவை நிறுவுவது போன்ற முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான ஒரு ராஜதந்திர வரைபடம் அரசாங்கத்திற்கு முறையான பாதுகாப்பு உத்தியை வழங்கும். அத்தகைய செயல்முறை இல்லாமல், குறைந்த மதிப்புமிக்க திட்டங்களில் வளங்கள் சுரண்டப்படலாம்.  


மூன்றாவதாக, ஒரு தேசிய பாதுகாப்பு உத்தி இந்தியாவின் நோக்கங்களை கூட்டாளிகளுக்கும் எதிரிகளுக்கும் தெளிவாகத் தெரிவிக்கும் ஒரு கருவியாகச் செயல்படும். உதாரணமாக, சிறிய நாடுகளுக்கு எதிரான தாக்குதலைத் தடுத்து, இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது.


கூடுதலாக, ஒரு தேசிய பாதுகாப்பு உத்தி அதன் நட்பு நாடுகளுக்கு இந்தியாவின் கொள்கைகளை கோடிட்டுக் காட்டும். நலன்களை அடையாளம் கண்டு, தவறான புரிதல்களைத் தடுக்க எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உதவும்.

 

நான்காவதாக, ஒரு தேசிய பாதுகாப்பு உத்தி அரசாங்க முயற்சிகளை மிகவும் திறம்பட ஒருங்கிணைக்க ஒரு நிலையான செயல்முறையை உருவாக்க உதவும். இராணுவத்திற்குள், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் முயற்சிகளை சீரமைக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் எதிர்கால கூட்டு அமைப்புகளுக்கு இது ஒரு ஒருங்கிணைந்த ஆணையை வழங்கும். ராணுவத்தைத் தவிர, ஒரு தேசிய பாதுகாப்பு உத்தி, தேசிய பாதுகாப்பு நிறுவனங்களான பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சகம், உள்துறை மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கு பொதுவான இலக்குகளை அமைக்கும். இது அமைச்சரவை மட்டத்தில் அவ்வப்போது கூட்டங்களுக்குப் பதிலாக தினசரி ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும்.

 

பொறுப்புக்கூறல் பிரச்சினை


இறுதியாக, ஒரு தேசிய பாதுகாப்பு உத்தி பொறுப்புக்கூறலுக்கான புதிய கருவியை உருவாக்கும். அரசாங்கத்தின் இலக்குகளை பின்பற்றுவதையும், கொள்கைகள் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படையாக இருப்பதையும் இது உறுதி செய்யும். இந்திய குடிமக்கள் தேசிய பாதுகாப்பை எவ்வாறு பாதுகாக்க தங்கள் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது மற்றும் அது எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


அனைத்து தேசிய பாதுகாப்பு உத்திகளும் சமமானவை அல்ல. அரசாங்க முயற்சிகளை ஆதரிப்பதும், அரசியல் நோக்கங்களை தெளிவாக அடையாளம் காட்டவும் ஒரு உண்மையான பயனுள்ள ராஜதந்திர உத்தி பிரதமரால்  வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒரு வலுவான தேசிய பாதுகாப்பு உத்தி அனைத்து அரசாங்க மோதல்களையும் தீர்க்காது என்றாலும், அது வர்த்தகம் மற்றும் செலவுகளை கோடிட்டுக் காட்ட உதவும். எனவே, ஒரு தேசிய பாதுகாப்பு உத்தி  இந்தியா ஒரு உலகளாவிய முன்னணி சக்தியாக ஆவதற்கு தேவையான அத்தியாவசிய கட்டமைப்பை வழங்கும்.


அர்சான் தாராபூர் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தில் ஆராய்ச்சி அறிஞராகவும், ஆஸ்திரேலிய ராஜதந்திர கொள்கை நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராகவும் உள்ளார்.


Original link : https://www.thehindu.com/opinion/op-ed/india-needs-the-anchor-of-a-national-security-strategy/article68332647.ece

Share: