நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனைக் குழுக்களின் சட்ட ஆலோசனைகள் அரசிற்கு முக்கியமானதாக இருக்கும். இந்த அறிவுரை சில சட்டங்களின் உண்மையான நோக்கத்தை தெளிவுபடுத்த உதவும்.
தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறாததற்கு காரணம், சட்டச் சிக்கல்களை சரியாகக் கையாளாததன் காரணமாக இருக்கலாம். அரசு சட்ட ஆலோசனை பெறும் விதம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனைக் குழுக்களின் வழக்கமான, தகவலறிந்த உள்ளீடு சில சட்டங்களின் உண்மையான நோக்கத்தை தெளிவுபடுத்த உதவும். பொருளாதார ஆலோசனைக் குழுவைப் போன்று (Economic Advisory Council (EAC)) பிரதமருக்கான சட்ட ஆலோசனைக் குழுவை (Legal Advisory Council (LAC)) அமைப்பது பயனுள்ளதாக இருக்கும்.
சமீபத்திய சட்ட சிக்கல்கள்
அரசாங்கத்தின் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளால் பல முக்கியமான சட்டச் சிக்கல்கள் உருவாகியுள்ளன. உதாரணமாக, தேர்தல் பத்திரங்கள் திட்டம் வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன், நன்கொடையாளர்களின் தனியுரிமையை வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமையுடன் சமநிலைப்படுத்துவதற்கான சோதனை நடத்தப்பட்டிருந்தால், சட்டச் சவாலையும் நீதிமன்றத் தீர்ப்பையும் தவிர்த்திருக்கலாம்.
ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகளின் இலக்கு விநியோகம்) சட்டம் 2016 (Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits and Services) Act, 2016) தொடர்பான இதே போன்ற நடவடிக்கை, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை K.S. புட்டசாமி எதிராக யூனியன் ஆஃப் இந்தியா (Supreme Court in K.S. Puttaswamy v. Union of India (2018)) வழக்கு தேவையற்றதாக இருந்திருக்கும்.
பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita), 2023-ன் பிரிவு 106(2) சட்டத்தின் காரணமாக தொழிலார்கள் நடத்திய போராட்டம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். விபத்தில் சிக்கிய எவருக்கும், காவல்துறையில் புகார் அளிக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயன்றால், அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இந்தச் சட்டம் கூறுகிறது. எந்த சூழ்நிலையிலும் இந்த சட்டம் தங்களை பாதிப்படைய செய்வதாக போக்குவரத்து ஊழியர்கள் கவலைப்பட்டனர். இந்த விதியை முறையாக மாற்றும் வரை அதை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு ஒப்புக்கொண்ட பின்னரே நாடு தழுவிய வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
சட்ட சிக்கல்கள் மற்றும் பாதிப்புகள் முழுமையாக ஆராயப்படாததால் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதைச் செய்ய, இடைவெளியைக் குறைப்பது முக்கியம். சுதந்திரமான பொதுக் கல்வி நிறுவனங்களான தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், அரசியலமைப்பு ரீதியாக உறுதியான மற்றும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டங்களை உருவாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு உதவுவதற்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் வளங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, 2008-ஆம் ஆண்டின் தேசிய சட்டப் பல்கலைக்கழக தில்லி சட்டம், (National Law University Delhi Act, 2008), பல்கலைக்கழகத்தின் நோக்கத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் பற்றிய ஆய்வு மற்றும் பயிற்சிகள் நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் வழக்கமான ஆய்வுகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இந்த நிறுவனங்களில் தங்கள் முதலீடுகளை சிறப்பாகப் பயன்படுத்த உதவும். உதாரணமாக, உள்துறை அமைச்சகம் டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் குற்றவியல் சட்டங்களில் சீர்திருத்தங்களுக்கான குழுவை (Committee for Reforms in Criminal Laws) அமைத்தது. கூடுதலாக, அனைத்து விதமான சட்டங்களை சரி செய்யும் உரிமைக்கான கட்டமைப்பில் பணியாற்றுவதற்காக ஆசிரியர்களில் ஒருவர் நுகர்வோர் விவகாரக் குழுவிற்கு (onsumer Affairs Committee) பரிந்துரைக்கப்பட்டார். கல்வி நிபுணத்துவம் எவ்வாறு அரசாங்க முயற்சிகளை ஆதரிக்கும் என்பதை இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
சவால்களை எதிர்நோக்குதல்
சட்டச் சவால்களைக் கையாள்வதற்கான மற்றொரு வழி, பொருளாதார ஆலோசனைக் குழுவைப் போன்ற சட்ட ஆலோசனைக் குழுவை உருவாக்குவதாகும். இந்த சட்ட ஆலோசனைக் குழு பிரதமரின் அலுவலகத்திற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கும். சட்ட ஆலோசனைக் குழுவின் முக்கியமான பணிகள் இந்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட சட்ட சிக்கல்களை பகுப்பாய்வு செய்தல், பிரதம மந்திரி கோரும் போது முன்மொழியப்பட்ட சட்டங்களின் சாத்தியமான தாக்கங்களை மதிப்பீடு செய்தல், முக்கியமான தற்போதைய சட்ட சிக்கல்களில் அதன் சொந்த ஆராய்ச்சி நடத்துதல் ஆகியவையாக இருக்க வேண்டும். சட்ட ஆலோசனைக் குழுவானது குற்றவியல் சட்டம், வர்த்தக சட்டம், சர்வதேச சட்டம், வணிகச் சட்டங்கள் மற்றும் வரிவிதிப்புச் சட்டங்கள் போன்ற அரசாங்கங்களால் அடிக்கடி சட்டமியற்றப்படும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சட்ட வல்லுநர்கள், புகழ்பெற்ற சட்ட வல்லுநர்கள், முக்கிய கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கொண்டு செயல்படலாம்.
சட்ட ஆலோசனைக் குழுவானது இந்திய சட்ட ஆணையத்திலிருந்து (Law Commission of India (LCI)) பல வழிகளில் வேறுபடும். இந்திய சட்ட ஆணையம் நீதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சட்ட ஆலோசனைக் குழுவானது பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து செயல்படும். இந்திய சட்ட ஆணையம், ஏற்கனவே உள்ள சட்டங்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கிறது. அரசாங்கத்தால் அமல்படுத்தப்படவிருக்கும் சட்டங்களில் ஏற்படும் பாதிப்புகள், சவால்கள் மற்றும் இடைவெளிகளைக் கணித்து நிவர்த்தி செய்வதை சட்ட ஆலோசனைக் குழு (Legal Advisory Council (LAC)) நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கும் இந்திய சட்ட ஆணையத்திற்கும் இடையே குறைந்த அளவிலான புரிதல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. விரிவான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தேவைப்படும் பல சட்ட சிக்கல்கள் இருந்தபோதிலும், 22-வது சட்ட ஆணையத்தால் நான்கு அறிக்கைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இந்த ஆணையம் 2020 மற்றும் 2024-க்கு இடையில் செயல்பட்டது.
இந்திய சட்ட ஆணையம் முழுமையாகச் செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஏனெனில், அதன் பரிந்துரைகளில் 50% மட்டுமே இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நீதி அமைப்பில் உள்ள சட்ட சிக்கல்கள் அவசரமானவை மற்றும் வேறுபட்டவை. இருந்த போதிலும், இந்திய சட்ட ஆணையம் உருவாக்கப்பட்டதிலிருந்து சராசரியாக ஆண்டுக்கு 4.19 அறிக்கைகளை மட்டுமே தயாரித்துள்ளது.
சிக்கலான மற்றும் மாறுபட்ட சட்ட நிலப்பரப்பை விரைவாகவும் திறமையாகவும் கையாளக்கூடிய ஒரு மாற்று அமைப்புக்கான தேவை ஏற்பட்டுள்ளது. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கல்வி வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சட்ட ஆலோசனைக் குழுவை (Legal Advisory Council (LAC)) உருவாக்குதல் ஆகியவை சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கு உதவலாம். இவை மட்டுமே தீர்வுகள் அல்ல. ஆனால், அவை சட்டச் சிக்கல்களைத் தீர்க்க உதவுகின்றன.
ஜி.எஸ். பாஜ்பாய், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார். அங்கித் கௌசிக், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், உதவிப் பேராசிரியராக உள்ளார்.