இந்தியாவின் நிலைப்பாடு, உலக அரங்கில் ஐ.நா.வின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை ஆதரித்தும், அவரை நாட்டிலிருந்து தடை செய்யும் இஸ்ரேலின் முடிவை விமர்சித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் கடிதத்துடன் இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளாதது புதிராகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சிலி நாடு பகிர்ந்து கொண்ட கடிதத்தில், ஐ.நா மற்றும் அதன் தலைவர்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இதில், இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் பாரபட்சமாக இருப்பதாக குற்றம் சாட்டியதோடு, குட்டெரெஸ் "இஸ்ரேலிய மண்ணில் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர்" என்று கூறியதை அடுத்து இந்த விவாதம் வந்தது. இந்த மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக கவனித்து வரும் நிலையில், டெல் அவிவ் அக்டோபர் 7, 2023 ஹமாஸ் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து, இஸ்ரேல் காசா மீது கடுமையான குண்டுவீச்சு மூலம் பழிவாங்க முயன்றது.
இதில், லெபனான் மற்றும் ஏமனில் உள்ள முக்கியமான இலக்குகளைத் தாக்கியதுடன், அதன் எல்லைகளைத் தாண்டியும் தாக்குதல்களை நடத்தியது. இதில், டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது குண்டுவீச்சு, தெஹ்ரானில் ஹமாஸ் தலைவரைக் கொன்றது, லெபனானில் ஹெஸ்புல்லாவை குறிவைக்க பேஜர் குண்டுகளைப் பயன்படுத்துவது போன்ற இரகசிய நடவடிக்கைகளை இஸ்ரேல் நடத்தியது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டில் ஐ.நா அமைப்பின் மீதான அதன் தாக்குதல்தான் தனித்து நிற்கிறது.
இஸ்ரேல் வேண்டுமென்றே இந்தியா ஆதரிக்கும் அமைப்பான, ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரண முகமையை (United Nations Relief and Works Agency(UNRWA)) குறிவைத்தது. ஐ.நா. பொதுச் சபையில், இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு இந்த அமைப்பை "யூத எதிர்ப்புக்கான" (anti-semitic) சதுப்பு நிலம் (swamp) என்று குறிப்பிட்டார். மிக சமீபத்தில், லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை நடத்தின. இதில், 50 நாடுகளின் 10,000 பேர் கொண்ட வலுவான படையின் ஒரு பகுதியாக 903 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எனபவர், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தெளிவாகக் கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் விளைவாக, 104 நாடுகள், ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் இணைந்து ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டன. மற்றொரு கடிதத்தில் 34 ஐ.நா அமைதி காக்கும் நாடுகள் கையெழுத்திட்டன. அதில் இந்தியா முதலில் கையெழுத்திடவில்லை, ஆனால் பின்னர் ஆதரித்தது. உலகளாவிய தெற்கிலும், ஐரோப்பாவிலும் உள்ள அமைதியின்மை, நாடுகளுக்கிடையேயான மோதல் பிரச்சினைகளைத் தீர்க்க உலக அமைப்பின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் கவலையை அளிக்கிறது.
மோதல்களின் நிலைமை மற்றும் இந்திய வீரர்களுக்கு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, ஐ.நா.வுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சிப்பதில் இருந்து இந்தியா விலகி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சமீபத்தில் வியாழன் அன்று வெளிவிவகாரத் துறை அமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியபோதும் கூட, இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சிப்பதைத் தவிர்த்தது.
ஐ.நா.வில் இந்தியா ஒரு முன்னணி உறுப்பினராக உள்ளதுடன், ஆரம்பத்தில் இருந்தே அதற்குப் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. ஐ.நா உலக நாடுகளுக்கு முக்கியமான சேவைகளையும் மற்றும் தளங்களையும் வழங்குகிறது. அனைத்து உறுப்பு நாடுகளும் இதன் மூலம் பயனடைகின்றன. ஐ.நா. பொதுச்செயலாளர் அலுவலகத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் மதிக்க வேண்டும் என்று ஐ.நா சாசனத்தின் பிரிவு 100 (2) கூறுகிறது.
இஸ்ரேலுடன் இந்தியா வலுவான உறவைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, அரசாங்கத்தில் உள்ள சிலர் மௌனம் காக்கும் அவர்களின் முடிவை ‘உண்மையான அரசியல்’ (realpolitik) கட்டுப்பாட்டின் ஒரு வடிவமாகக் கருதலாம். எவ்வாறாயினும், ஐநா அடிப்படையிலான சர்வதேச சட்டம் மற்றும் உலகளாவிய ஒழுங்குமுறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, எந்த சமரசமும் இருக்க கூடாது.