இந்தியாவில் கிராமப்புற வறுமையின் தீர்மானிக்கும் முக்கிய சமூக பொருளாதார காரணிகள் எவை? அவை எவ்வாறு வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் இரண்டையும் பாதிக்கின்றன?
உலகின் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஏழைகள் துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர். உலகின் அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது என, உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீட்டு அறிக்கை (Global Multi dimensional Poverty Index (MPI)) 2024 கண்டறிந்துள்ளது.
உலகின் ஏழைகளில் கிட்டத்தட்ட 84 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மேலும், அவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளை விட ஏழைகளாக உள்ளனர் என்றும் அறிக்கை குறிபிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, கொள்கை வகுப்பாளர்களுக்கு கிராமப்புற வறுமை ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது.
இந்தியாவில் கிராமப்புற வறுமை பிரச்சினையை ஆராய்ந்து, கிராமப்புற வறுமை என்றால் என்ன? அது எவ்வாறு அளவிடப்படுகிறது? அதன் நிலைத்தன்மைக்கு என்ன காரணம்? போன்ற கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்போம்.
உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீடு (MPI), சபீனா அல்கிரே மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தாலும் (United Nations Development Programme (UNDP)) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் உள்ள பற்றாக்குறையை அளவிடுகிறது, பண வறுமையை (monetary poverty) அல்ல .
இந்திய அரசாங்கத்தின், நிதி ஆயோக் (NITI Aayog), UNDP மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (Oxford Poverty and Human Development Initiative (OPHI)) ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பல பரிமாண வறுமையைக் கண்காணிக்க தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டை (National Multidimensional Poverty Index) உருவாக்கியது.
இந்த ஆண்டு ஜனவரியில், நிதி ஆயோக் 2005-06 ஆண்டு முதல் இந்தியாவில் பல பரிமாண வறுமை என்ற தலைப்பில் ஒரு விவாத அறிக்கையை வெளியிட்டது. இது 2013-14 ஆம் ஆண்டில் 29.17 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 11.28 சதவீதமாக பல பரிமாண வறுமையில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டதாகக் கூறுகிறது. 24.82 கோடி மக்கள் பல பரிமாண வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.
2030-ஆம் ஆண்டுக்குள் பல பரிமாண வறுமையை பாதியாகக் குறைப்பது என்ற நிலையான வளர்ச்சி இலக்கு 1.2-யை அடைய இந்தியா முன்னேறி வருகிறது என்ற நேர்மறையான செய்தியை இந்த விவாத அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கிராமப்புற இந்தியா பல பரிமாண வறுமையில் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. 2015-16 மற்றும் 2019-21 ஆண்டுக்கு இடையில், கிராமப்புற இந்தியாவில் வறுமை 32.59 சதவீதத்திலிருந்து 19.28 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புற வறுமை 8.65 சதவீதத்திலிருந்து 5.27 சதவீதமாக குறைந்துள்ளது.
இருப்பினும், நிதி ஆயோக்கின் வறுமை கணிப்புகள், குறிகாட்டிகளின் தேர்வு; சேவை வழங்கலின் குறியீடு என்றும் குறிப்பிடப்படும் முறையியல் அணுகுமுறை; வீட்டு கணக்கெடுப்பு தரவுகளை சார்ந்து இருத்தல்; ஜூலை 2013 முதல் வறுமை புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படாததால் சமீபத்திய வறுமை தரவு இல்லாதது ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
எனவே, மிகவும் பயனுள்ள கிராமப்புற கொள்கை மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஆதரவளிக்க அடிக்கடி வறுமை தரவு தேவை என்று வலியுறுத்தப்படுகிறது.
கிராமப்புற வறுமை என்பது கிராமப்புறங்களில் நிலவும் வறுமையைக் குறிக்கிறது. இது மோசமான வாழ்க்கை நிலைமைகள், விவசாயத்தை பெரிதும் சார்ந்து இருத்தல், நிலமின்மை மற்றும் அடிப்படை சேவைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வகைப்படுத்தப்படுகிறது. கூடுதலாக, கிராமப்புற ஏழைகள் பெரும்பாலும் சாதி, பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றிலிருந்து உருவாகும் சமூகக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். இது சமூக இயக்கம் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும்.
உதாரணமாக, கல்வி குறித்த 2018 தேசிய மாதிரி கணக்கெடுப்பு (National Sample Survey (NSS)) அறிக்கை குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது. நகர்ப்புறங்களில் 87.7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது கிராமப்புற கல்வியறிவு 73.5 சதவீதமாக உள்ளது. மேலும், தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை 76-வது சுற்று அடிப்படை சேவைகளை அணுகுவதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டியது. நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட 4 சதவீதத்திற்கு மாறாக, கிராமப்புறங்களில் சுமார் 29 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை என்றும் மற்றும் நகர்ப்புறங்களில் 20 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, கிராமப்புறங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் வீட்டிற்குள் குடிநீர் வசதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் பற்றாக்குறை மற்றும் பல பரிமாண வறுமையைப் புரிந்துகொள்வதற்கு தரவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு முன்னோக்கு தேவை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும், இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். ஆனால், விகிதாசாரமற்ற அளவில் சுமார் 90 சதவீதம் நாட்டின் ஏழைகள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.
கிராமப்புற தொழிலாளர்களில் சுமார் 59 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு தரவு (Periodic Labour Force Survey) காட்டுகிறது. விவசாயத் தொழிலாளர்களிடையே, தொழிலாளரா, சாகுபடியாளரா அல்லது தற்காலிக கூலித் தொழிலாளியா என்பதை அடிப்படையாகக் கொண்டு ஏற்றத்தாழ்வு உள்ளது.
சாகுபடியாளர்களைவிட விவசாயத் தொழிலாளர்களிடையே வறுமையின் நிகழ்வு அதிகமாக உள்ளது. உதாரணமாக, 2004-05 ஆண்டு நிலவரப்படி, விவசாயிகளில் 21.5 சதவீதம் பேர் ஏழைகளாகவும், விவசாய தினக்கூலி தொழிலாளர்களில் 46.4 சதவீதம் பேர் ஏழைகளாகவும் உள்ளனர். கிராமப்புற விவசாயம் அல்லாத தொழிலாளர்களிடையே, விவசாயம் அல்லாத வேலை செய்பவர்களின் வகை முக்கியமானது. விவசாயம் அல்லாத வேலைகளில், சுய வேலை அல்லது கட்டுமானம் போன்ற நிலையற்ற மற்றும் சாதாரண பண்ணை சாரா வேலைகள் வறுமை குறைப்பிற்க்கு வழிவகுக்காது.
கிராமப்புற வறுமையைப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு வழி, நிலம் மற்றும் நில உரிமைக்கான அணுகலைப் பார்ப்பதாகும். சிறிய (1-2 ஹெக்டேர் நிலம்) மற்றும் குறு (1 ஹெக்டேருக்கும் குறைவாக) விவசாய குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழை குழுக்கள் என்று தரவு வெளிப்படுத்துகிறது.
தெற்காசியாவில் ஆண் தலைமைத்துவக் குடும்பங்களுடன் ஒப்பிடுகையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களிடையே வறுமை கணிசமாக அதிகமாக உள்ள ஒரே நாடு இந்தியாவாகும். இந்தியாவில் 19.7 சதவீத பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஏழைகளாகவும், 15.9 சதவீத ஆண் தலைமைத்துவ குடும்பங்கள் ஏழைகளாகவும் உள்ளன.
எனவே, பிராந்திய காரணிகளுடன், பாலினம், சாதி மற்றும் மதம் ஆகியவையும் இந்தியாவில் வறுமையைப் புரிந்துகொள்வதில் முக்கியமான தீர்மானகரமான காரணிகளாக உள்ளன. உதாரணமாக, இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் இருவருமே அவர்களின் மக்கள்தொகை பங்கீட்டைவிட பல பரிமாண வறுமைக்கு அதிக பங்களிப்பு செய்கிறார்கள் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
கிராமப்புற வறுமை, இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்தபோதிலும், நாடு குறிப்பிடத்தக்க கிராமப்புற-நகர்ப்புற இடம்பெயர்வையும் கண்டுள்ளது. 2020-21 ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு புலம்பெயர்ந்தவர்கள். நகர்ப்புறங்களில் மொத்த மக்கள் தொகையில் 34.6% பேர் புலம்பெயர்ந்தவர்கள். இது "வறுமையின் நகரமயமாக்கல்" (urbanisation of poverty) குறித்த விவாதங்கள் அதிகரிக்க வழிவகுத்தது.
நகர்ப்புற மையங்களுக்கு இடம்பெயர்வது அதிகரிக்கும் போது, வீட்டுவசதி, நீர், சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமையைக் குறைப்பதற்கு சுகாதாரம், ஊட்டச்சத்து, மகப்பேறு சுகாதாரம் மற்றும் அணுகக்கூடிய மருத்துவ வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகள் முக்கியமானவை.
மாநிலம், பிராந்தியம், சாதி, பாலினம் மற்றும் மதம் ஆகியவற்றால் வேறுபடும் இந்தியாவில் வறுமையின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த இடம் சார்ந்த மற்றும் சமூக பரிமாணங்களைக் கருத்தில் கொள்ளாமல் வறுமையை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ அல்லது தீர்க்கவோ முடியாது என்பது தெளிவாகிறது.