ஜூன் 16 அன்று, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் தலைமைப் பதிவாளர் (Registrar General of India) இந்தியாவின் மக்கள்தொகை 2027-ஆம் ஆண்டில் கணக்கிடப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து, மற்ற காரணங்களுடன், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளின் எண்ணிக்கையை (caste enumeration) சேர்ப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது. கடைசி மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) 2011-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த பணி 2021-ஆம் ஆண்டில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தொற்றுநோயால் தாமதமானது. இப்போது அது மேலும் 2027 வரை தள்ளப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அதன் அமலாக்கத்தை பாதிக்குமா? விஜைதா சிங் நடத்திய உரையாடலில் சஞ்சய் குமார் மற்றும் பூனம் முத்ரேஜா இந்த கேள்வியை விவாதிக்கின்றனர். திருத்தப்பட்ட பகுதிகள்:
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதா?
சஞ்சய் குமார்: மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ஆம் ஆண்டில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்த நேரம் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்தது. 2020-ஆம் ஆண்டில் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அந்த ஆண்டின் பெரும்பகுதி முழு ஊரடங்காக (lockdown) இருந்ததால், மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை.
மேலும், தாமதத்திற்கு அரசியல் காரணங்கள் ஏதேனும் உள்ளதாக நீங்கள் பார்க்கிறீர்களா? 2026-ஆம் ஆண்டு வரை முடக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை பணியுடன் (delimitation exercise) இதை சரிப்படுத்த அரசு விரும்பியதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
சஞ்சய் குமார்: இந்த தாமதத்திற்கு என்னிடம் விளக்கம் இல்லை. தொற்றுநோய் பரவல் 2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முடிந்தது. 2022-ஆம் ஆண்டின் இறுதியில், பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன, பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பின மற்றும் அனைவரும் அலுவலகங்களுக்கு திரும்பத் தொடங்கினர். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் தாமதம் என்பது வெளிப்படையாக விளக்க முடியாதது. அரசு ஏன் முன்னதாக முன்முயற்சி எடுக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. தொகுதி மறுவரையறை பணியின் காரணமாக இது நடந்ததாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், தொகுதி மறுவரையறை நடைபெறும் ஒவ்வொரு முறையும், அந்தப் பணி முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவைப் பயன்படுத்துகிறது. எனவே அரசு 2023-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஆரம்பித்திருக்கலாம். 2025-ஆம் ஆண்டில் இந்த பணியைத் தொடங்கினாலும், தொகுதி மறுவரையறை பணிகளில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்காது.
தாமதமான மக்கள்தொகை கணக்கெடுப்பின் தாக்கங்களைப் பற்றி நீங்கள் சொல்ல முடியுமா?
பூனம் முத்ரேஜா: இந்த தாமதம் ஆட்சி மற்றும் வளர்ச்சிக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தரவுகளை இந்தியா 2025-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 2011-ஆம் ஆண்டிற்க்குப் பிறகு நிலைமை மாறியுள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி, உள்நாட்டு இடம்பெயர்வு (internal migration), நகரமயமாக்கல் (urbanisation), மற்றும் பிறப்பு விகித முறைகள் (fertility patterns) அனைத்தும் வேகமடைந்துள்ளன அல்லது மாறியுள்ளன. இருப்பினும், கொள்கை காலாவதியான அனுமானங்களின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தாமதம் அனைத்து துறைகளையும் பாதிக்கிறது. பள்ளி சேர்க்கை கணிப்புகள் (school enrolment projections) தவறானவை. தடுப்பூசி பாதுகாப்புகள் (Vaccine coverage) அதன் இலக்கை அடையத்தவறிவிட்டன. பொது விநியோக முறை (public distribution system (PDS)) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) போன்ற சமூக நலத்திட்டங்கள் உண்மையான மக்கள்தொகை தேவைகளுக்கு ஏற்ப சரி செய்ய முடியவில்லை. இந்த தாமதம் பேரிடர் தயார்நிலை (disaster preparedness) மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடலையும் பாதிக்கிறது.
இது இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பாக இருக்கப் போகிறது. அதைப் பற்றி ஏதேனும் கவலைகள் உள்ளனவா?
பூனம் முத்ரேஜா: டிஜிட்டல்மயமாக்கல் (Digitisation) செயல்திறனைக் கொண்டுவரும், மனிதப் பிழையைக் குறைக்கும் மற்றும் விரைவான தரவு செயலாக்கத்தை அனுமதிக்கும். ஆனால், முழுமையான டிஜிட்டல்மயமாக்கல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கிராமப்புற வீடுகள் மற்றும் முறைசாரா குடியிருப்புகளில் உள்ளவர்கள், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் போன்றவர்களைச் சென்றடைய கடினமாக இருக்கும் மக்களை விலக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. அவர்களிடம் திறன்பேசிகள் (smartphones), நிலையான மின்சாரம், அல்லது டிஜிட்டல் அணுகல் இல்லாமல் இருக்கலாம். பெண்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் - கிராமப்புற பெண்களில் 33% மட்டும் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். குறைந்த வருமானம் உள்ள வீடுகளில் உள்ள பெண்களிடையே, மொபைல் போன் வைத்திருப்பது குறைவாக உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் 'டிஜிட்டல் முதல்' என்ற அணுகுமுறை (digital first approach) தற்போதுள்ள பாலின சார்புகளை (gender bias) வலுப்படுத்தக்கூடும்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெற்றிபெற, வீடு வீடாக (door-to-door) நேரில் சென்று கணக்கெடுப்பை நடத்த வேண்டும். குறிப்பாக, அணுகுவதற்கு கடினமான பகுதிகளில் இதை சரியாக செய்ய வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் பிராந்திய மொழிகளில் பல்வேறு மக்களுடன் பணியாற்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். துல்லியமான தரவுகளைச் சேகரிக்க தேவையான மனித தொடர்பை, தொழில்நுட்பம் ஆதரிக்க வேண்டும்; அது மாற்றக்கூடாது.
தேசிய மக்கள்தொகை பதிவு (National Population Register (NPR)) குறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இது தேசிய குடிமக்கள் பதிவு (National Register of Citizens (NRC)) உருவாக்குவதற்கான முதல் படியாகும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டத்துடன் இது புதுப்பிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. NPR மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு - இரண்டும் இணைக்கப்பட்டால், NPR-ஐ சுற்றிய சர்ச்சைகள் மற்றும் பயங்களால் அது செயல்முறையை பாதிக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சஞ்சய் குமார்: நீங்கள் ஒரு வேலையைச் செய்ய முயற்சித்து, அதை மற்றொரு வேலையுடன் இணைத்தால், இரண்டிலும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. விவகாரங்கள் தாமதமாகலாம், குழப்பமடையலாம், மேலும் சில தகவல்கள் தவறாக சித்தரிக்கப்படலாம்.
ஆனால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு யாருக்கும் பாதிப்பில்லாத முறையில் செய்யப்படுவதற்காக ஒன்றிய அரசு தேசிய மக்கள்தொகை பதிவை முன்னெடுக்கவில்லை என்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?
சஞ்சய் குமார்: மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தனியாக முடிப்பதற்கு நான் ஆதரவாக இருப்பேன். ஏனென்றால், இது மிக நீண்டகாலத்திற்குப் பிறகு, ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படுகிறது என்பதை நாம் மறக்கக்கூடாது! மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதே இதுவே முதல் முறை. ஒரு புதிய அம்சம் ஏற்கனவே உள்ளது. கணக்கெடுப்பாளர்கள் (enumerators) மீது அதிக சுமையை ஏன் சுமத்த வேண்டும்?
சாதி தரவைச் சேகரிப்பது அரசுக்கு எவ்வளவு கடினமாக அல்லது எளிதாக இருக்கும்? 2011-ஆம் ஆண்டில் சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பில் (Socio-Economic and Caste Census), சுமார் 40 லட்சம் சாதி பெயர்கள் வெளி வந்தன. மக்கள் தங்கள் சமூக பெயர்களுக்கு பதிலாக தங்கள் குடும்பப்பெயர்களை எழுதிய நிகழ்வுகள் இருந்தன. இது சுய-வெளிப்பாட்டின் (self-disclosure) அடிப்படையில் இருந்தது. இந்த செயல்முறையை வலுவானதாக மாற்ற அரசு எந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சஞ்சய் குமார்: நாம் சாதித் தரவைப் பற்றி கேள்விகளை எழுப்பினால், மற்ற தகவல்களின் சேகரிப்பைப் பற்றியும் கேள்விகளை எழுப்பலாம். மக்கள் தங்கள் சொத்துக்கள், வயது, பாலினம், மற்றும் கல்வி பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தால், சாதி பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பதில் ஏன் சிரமம் இருக்க வேண்டும்?
இருப்பினும், பயிற்சி முக்கியம் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாம் எங்கள் எண்ணிக்கையாளர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்க முடிந்தால், பதிலளிப்பவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். கணக்கெடுப்பாளர்கள் வர்மா (Varma) போன்றவை குடும்பப்பெயர் என்றும், சாதி அல்ல என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பதிலளிப்பவர் இந்த குடும்பப்பெயரை தங்கள் சாதியாக குறிப்பிட்டால், எண்ணிக்கையாளர்கள் ஒரு தொடர் கேள்வி கேட்க வேண்டும்.
பூனம் முத்ரேஜா: ஒரு நபரின் சாதியைப் பற்றி கேட்பது கடினமாக இருக்காது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance (UPA)) அரசு கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், தரவை வெளியிடவில்லை. சாதி தரவைச் சேகரிக்கும்போது நல்ல சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கணக்கெடுப்பாளர்கள் அனைத்து சாதி பற்றிய துணைப்பிரிவுகளையும் (caste sub-categories) புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் குடும்பப்பெயரை தங்கள் சாதியாகக் குறிப்பிட்டால், கணக்கெடுப்பாளர்கள் அடுத்த கேள்வியைக் கேட்க வேண்டும்.
ஒரு நாட்டிற்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏன் முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பூனம் முத்ரேஜா: உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது மற்றும் பல விவகாரங்கள் கணிக்கமுடியாததாக உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், திட்டமிடல் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் மட்டுமல்லாமல், வளங்களின் ஒதுக்கீட்டிலும் கருத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான அம்சம் மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். காலநிலை மாற்றம் நம்மை எவ்வாறு பாதிக்கிறது, மக்கள்தொகை இயக்கவியல் மாறுதல் (changing population dynamics), மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் முறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது. இந்தியாவில், நகரமயமாக்கலின் வேகமான அதிகரிப்பு மற்றும் இடம்பெயர்வு முறைகளைப் புரிந்துகொள்ள, நமக்கு கணிசமான தரவுகள் தேவை. இந்தியா வயதான சமூகம் (ageing society) என்பதையும் நாம் அறிவோம். வயதானவர்களின் எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் இரண்டுமடங்காகப் போகிறது. மக்களை வயதானவர்களாக மாற்றிவிட்டு பின்னர் திட்டமிட முடியாது. எனவே, வேகமாக மாறும் சூழலைக் கொண்டு, திட்டமிடல், வளங்களின் ஒதுக்கீடு, ஏழைகளை இலக்காகக் கொள்வது மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை இலக்காகக் கொள்வது ஆகியவை அனைத்தும் நோக்கங்கள். உண்மையில், சாதிவாரி கணக்கெடுப்பின் முழு நோக்கமும் மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களில் முதலீடு செய்வதாகும்.
சமூகத்தில் இந்த மாற்றங்களைப் பற்றி வேகமான மற்றும் மிகவும் துல்லியமான தரவைப் பெறுவதற்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான 10 ஆண்டு காலத்தை குறைப்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சஞ்சய் குமார்: மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது ஒரு கடினமான, நேரத்தைச் செலவழிக்கும் (time-consuming) செயல்முறையாகும். இதை ஒரே இரவில் நடக்க முடியாது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது மட்டுமல்ல. அரசின் கொள்கை உருவாக்கம் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் தகவல்களைப் பொறுத்து இருக்கும். சேகரிக்கப்படும் பெரிய அளவிலான தகவல்கள் பல்வேறு வகையான கொள்கைகளை செயல்படுத்த அரசுக்கு அவை மிகவும் முக்கியமானவை. அரசாங்கம் இதை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் செய்ய முடியும் என்று நாம் நினைக்கலாம். இருப்பினும், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு சரியான நேரத்தில் நடைபெறுவதையும், இடையில் இடைவெளி இல்லாமல் இருப்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
புது தில்லியில் உள்ள வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சித் திட்டமான லோக்நிதியின் இணை இயக்குநர் சஞ்சய் குமார்; இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பூனம் முத்ரேஜா.