ஒன்றிய அரசு மற்ற ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவைவிட 17 மடங்கு அதிகமாக செலவிட்டது.
2014-15 மற்றும் 2024-25-ஆம் ஆண்டிற்க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு ரூ.2532.59 கோடியை செலவிட்டுள்ளது, இது மற்ற ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றிற்கான மொத்த செலவான ரூ. 147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) விண்ணப்பம் மற்றும் பொது பதிவுகளிலிருந்து இந்துஸ்தான் டைம்ஸ் பெற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.
இது சமஸ்கிருதத்திற்கு ஆண்டுக்கு (சராசரியாக) ₹230.24 கோடி மற்றும் மற்ற ஐந்து மொழிகளுக்கு ஆண்டுக்கு ₹13.41 கோடி என்று கணக்கிடப்படுகிறது.
ஐந்து செம்மொழி இந்திய மொழிகளில் அதிக நிதியுதவி பெறும் தமிழ் மொழி, சமஸ்கிருதத்தின் மொத்த நிதியில் 5%-க்கும் குறைவாகப் பெற்றது. கன்னடம் மற்றும் தெலுங்கு ஒவ்வொன்றும் 0.5%-க்கும் குறைவாகப் பெற்றன மற்றும் ஒடியா மற்றும் மலையாளம் ஒவ்வொன்றும் சமஸ்கிருதத்தின் மொத்த ஒதுக்கீட்டில் 0.2%-க்கும் குறைவாக நிதி பெற்றன.
2004-ஆம் ஆண்டில் "செம்மொழி" என்று முதலில் அங்கீகாரத்தை பெற்ற தமிழ், இந்திய மொழிகள் மேம்பாட்டு மானியம் திட்டத்தின் (Grants for Promotion of Indian Languages (GPIL)) கீழ் ₹113.48 கோடி பெற்றது. இது 2005-ஆம் ஆண்டில் அதே அங்கீகாரம் பெற்ற சமஸ்கிருத மேம்பாட்டிற்காக செலவிடப்பட்ட தொகையை விட 22 மடங்கு குறைவானதாகும். 2008 மற்றும் 2014-ஆம் ஆண்டிற்கு இடையில் செம்மொழி அங்கீகாரத்தை பெற்ற மீதமுள்ள நான்கு மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியாவின் ஒருங்கிணைந்த நிதி ₹34.08 கோடியாக இருந்தது.
நிச்சயமாக, சமஸ்கிருதத்திற்கான செலவு உருது, இந்தி மற்றும் சிந்திக்கான செலவையும் விஞ்சியது (இருப்பினும் இவற்றில் எதுவும் செம்மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை). 2014-15 மற்றும் 2024-25-ஆம் ஆண்டிற்கு இடையில் இந்தி, உருது மற்றும் சிந்திக்கான ஒருங்கிணைந்த நிதி ₹1,317.96 கோடியாக இருந்தது. இது சமஸ்கிருதத்திற்காக செலவிடப்பட்ட தொகையில் தோராயமாக 52.04% ஆகும். இந்த காலகட்டத்தில், உருது தனித்தனியாக ₹837.94 கோடி, இந்தி ₹426.99 கோடி மற்றும் சிந்தி ₹53.03 கோடியையும் பெற்றன.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் கன்னடம் பேசுபவர்கள் ஒன்றாக இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 1.2 பில்லியனில் 21.99%-ஆக இருந்தனர். சமஸ்கிருதம் பேசுபவர்களின் விகிதம் மிகக் குறைவாக இருந்தது. இந்தி பேசுபவர்கள் (அந்த மொழியை தங்கள் தாய்மொழியாகக் குறிப்பிடுபவர்கள்) 43.63% ஆகவும், உருது பேசுபவர்கள் 4.19% ஆகவும் இருந்தனர்.
மார்ச் மாதத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநிலத்தில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ் கலாச்சாரத்தை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார். "..நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவுவதை விட, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருந்து இந்தியை அகற்றுங்கள். வெற்று புகழ்ச்சிகளுக்கு பதிலாக, தமிழை இந்தியுடன் சமமான அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்குங்கள் மற்றும் சமஸ்கிருதம் போன்ற இறந்த மொழியைவிட தமிழுக்கு அதிக நிதி ஒதுக்குங்கள்," என்று முதலமைச்சர் கூறினார்.
அக்டோபர் 2024-ஆம் ஆண்டில் ஐந்து மொழிகள் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிய மற்றும் பெங்காலி ஆகியவை அரசிதழில் அறிவிப்பு மூலம் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. இதனால் செம்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. இந்த மொழிகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
"செம்மொழிகள் (Classical languages) இந்தியாவின் பண்டைய மற்றும் ஆழமான கலாச்சார மரபின் பாதுகாவலர்களாக கருதப்படுகின்றன. அவற்றின் அந்தந்த சமூகங்களின் வளமான வரலாறு, இலக்கியம் மற்றும் மரபுகளை பாதுகாக்கின்றன. இந்த அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம், அரசாங்கம் பாரதத்தின் பன்முக கலாச்சார நிலப்பரப்பின் மொழிவியல் சாதனைகளை கௌரவிக்கவும் பாதுகாக்கவும் முயல்கிறது, வருங்கால சந்ததியினர் இந்த மொழிகளின் ஆழமான வரலாற்று வேர்களை அணுகி பாராட்ட முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று ஒன்றிய அரசு அக்டோபர் 2024--ஆம் ஆண்டில் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)) ஆரம்பத்தில் 2004 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் முறையே தமிழ் மற்றும் சமஸ்கிருதத்திற்கு செம்மொழி அங்கீகாரத்தை வழங்கினாலும், கலாச்சார அமைச்சகம் மேலும் செயல்படுத்தல் மற்றும் செம்மொழிகளின் எதிர்கால அங்கீகாரத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டது. கல்வி அமைச்சகம் (Ministry of Education (MoE)) பல்வேறு கவுன்சில்கள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் இந்த மொழிகளின் மேம்பாட்டிற்கு பொறுப்பாகும்.
கல்வி அமைச்சகம் இந்தி, உருது மற்றும் சிந்தி போன்ற அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளின் மேம்பாட்டையும் ஆதரிக்கிறது. மத்திய பட்ஜெட் 2025-26-ஆம் ஆண்டுகளில், அரசாங்கம் பாரதிய பாஷா புஸ்தக் திட்டத்தை (Bharatiya Bhasha Pustak Scheme (BBPS)) அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் பள்ளி மற்றும் உயர்கல்வியின் ஒவ்வொரு நிலையிலும் கற்பிக்கப்படும் பாடப்புத்தகங்களை 22 இந்திய மொழிகளில் டிஜிட்டல் வடிவத்தில் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 9 செம்மொழிகள் உட்பட 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகள் உள்ளன. பாலி மற்றும் பிராகிருதம் மட்டும் அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில் இல்லாத இரண்டு செம்மொழிகள் ஆகும்.
இந்துஸ்தான் டைம்ஸ் கல்வி அமைச்சகத்தை தொடர்பு கொண்டது. ஆனால், திங்கள் மாலை வரை பதில் கிடைக்கவில்லை.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (Aligarh Muslim University (AMU)) மொழியியல் துறையின் சமூக மொழியியல் ஓய்வுபெற்ற பேராசிரியர் சையத் இம்தியாஸ் ஹஸ்னைன், "சமஸ்கிருதம் பெரும்பாலும் மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது ஆனால் அது பொதுமக்களின் பரந்த கற்பனையில் ஒரு புனிதமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது," இது "விகிதாசார நிதியீட்டிற்கு" ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்,.
ஒன்றிய சமஸ்கிருத பல்கலைக்கழகச் சட்டம், 2020-ன் கீழ் நிறுவப்பட்ட மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் (Central Sanskrit Universities (CSU)) மூலம் அரசாங்கம் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கிறது. புது டெல்லி மற்றும் திருப்பதியில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருத மொழியில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கு நிதி வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு பட்டம், டிப்ளமோ, சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் (Central Institute of Indian Languages (CIIL)), கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய நான்கு பாரம்பரிய மொழிகள் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது. நாடு முழுவதும் ஏழு பிராந்திய மொழி மையங்களைக் கொண்ட இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், ஒன்றிய அரசின் மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் உதவுகிறது மற்றும் பல்வேறு மொழிகளின் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சித் திட்டங்களை நடத்துகிறது.