நகர்ப்புற நிர்வாகத்தில் பாலின சமத்துவத்தின் தேவை -கார்த்திக் சேஷன்

 இந்தியாவில், அடிமட்ட அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள நிலையில், நிர்வாகப் பிரிவுகள் வேறுபட்ட கதையைச் சொல்கின்றன.


அதிகமான மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதால் இந்தியா பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 2050-ஆம் ஆண்டுக்குள், 800 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், மக்கள்தொகையில் பாதிப் பேர், நகரங்களில் வசிப்பார்கள். இது இந்தியாவை உலகளாவிய நகர்ப்புற வளர்ச்சியின் மிகப்பெரிய இயக்கியாக மாற்றும். நகரங்கள் இடம் சார்ந்த, பொருளாதார மற்றும் மக்கள்தொகை அளவில் விரிவடையும்போது, அவை நவீன இந்தியாவின் சமூக ஒப்பந்தத்தை (social contract) மீண்டும் எழுதி, அதன் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.


கடந்த 30 ஆண்டுகளில், முற்போக்கான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பாலின சமத்துவத்தை முன்னேற்றியுள்ளன. 73-வது மற்றும் 74வது திருத்தங்கள் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் (Panchayati Raj Institutions (PRIs)) மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (Urban Local Governments (ULGs)) பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்குகின்றன. மேலும், 17 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தால் இது 50%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று, மேயர்கள் மற்றும் கவுன்சிலர்களின் அதிகரித்து வரும் இருப்பு காரணமாக, உள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் 46%-க்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர் என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், 2024-ஆம் ஆண்டில் தெரிவித்தது. 

எனினும், அவர்களின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்துவ அமைப்பு பெரும்பாலும் ஆண்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அடிமட்ட அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள அதே வேளையில், நிர்வாகப் பிரிவுகள் (நகர மேலாளர்கள், திட்டமிடுபவர்கள், பொறியாளர்கள், காவல்துறை போன்ற பணிகளில்) கடுமையான ஏற்றத்தாழ்வை எதிர்கொள்கின்றனர். இது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக பதிலளிக்கும் நகரங்களின் திறனை குறைக்கிறது. நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் மற்றும் பொலிவுறு நகரங்களில் முதலீடு செய்யும்போது, நாம் உள்ளடக்கிய வளர்ச்சியின் (inclusive development) அடிப்படை அம்சமான அதிகாரத்துவத்தில் பாலின சமத்துவத்தை கவனிக்காமல் விடுகிறோம்.


அதிகாரத்துவ பாலின இடைவெளி


அதிகமான பெண்கள் குடிமை சேவைகளில் நுழைந்தாலும், நகர்ப்புற நிர்வாக கட்டமைப்பு ஆண் ஆதிக்கத்தில் உள்ளது. 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, பெண்கள் இந்திய ஆட்சிப்பணியில் (Indian Administrative Service) 20% மட்டுமே உள்ளனர் என்று 2022-ஆம் ஆண்டில் IndiaSpend தெரிவித்தது. நகர்ப்புற திட்டமிடல், நகராட்சி பொறியியல் மற்றும் போக்குவரத்து அதிகாரசபைகளில் இன்னும் குறைவான பிரதிநிதித்துவத்துடன் உள்ளனர். காவல்துறையில், தேசிய படையில் வெறும் 11.7% பெண்கள் மட்டுமே உள்ளனர் என்று 2023-ஆம் ஆண்டில் Bureau of Police Research and Development தெரிவித்தது. மேலும் அவர்கள் பெரும்பாலும் மேசைப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்.


இந்த இடைவெளி மிகவும் கவலைக்குரியதாகும். நகரங்களில், பெண்களின் ஈடுபாடு வேறுபட்டது. அவர்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் நம்பியிருக்கிறார்கள். வேலை மற்றும் பராமரிப்புக்காக பல இடங்களுக்குச் செல்கிறார்கள் மற்றும் பகுதி-அளவிலான உள்கட்டமைப்பை சார்ந்துள்ளார்கள். Institute for Transportation and Development Policy மற்றும் Safetipin ஆய்வு ஒன்றில், டெல்லி மற்றும் மும்பையில் 84% பெண்கள் பொது அல்லது பகிர்வு போக்குவரத்தைப் பயன்படுத்தியது தெரிய வந்தது; ஆண்களுக்கு இது 63%-ஆக இருந்தது. எனினும், நகர்ப்புற திட்டமிடல் பாதுகாப்பான, அணுகக்கூடிய, பகுதி-அளவிலான இயக்கத்தைவிட பெரிய-திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. 2019-ஆம் ஆண்டு Safetipin தணிக்கை 50 நகரங்களில் நடத்தப்பட்டதில், 60%-க்கும் மேற்பட்ட பொது இடங்கள் மோசமாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது. காவல்துறையில் குறைவான பெண்கள் இருப்பதால், சமுதாய பாதுகாப்பு முயற்சிகள் பெரும்பாலும் பெண்களுடன் இணைப்பு ஏற்படுத்த தவறிவிடுகின்றன.


இந்த குறைவான பிரதிநிதித்துவம் மேலோட்டமானது அல்ல; இது முடிவுகளைப் பாதிக்கிறது. பெண் அதிகாரிகள் வாழ்க்கை அனுபவங்களால் வடிவமைக்கப்பட்ட பார்வைகளைக் கொண்டு வருகிறார்கள். சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (International Economic Relations) மற்றும் ஐ.நா. பெண்கள் (UN Women) நடத்திய ஆய்வுகள், அவர்கள் தண்ணீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்துவதாகவும், அமலாக்கம் மூலம் சட்ட அமலாக்கத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதாகவும் காட்டுகின்றன. பாலின உணர்திறன் வடிவமைப்பிற்கு  பாலின-பன்முகத்தன்மை (gender-diverse institutions) கொண்ட நிறுவனங்கள் தேவை.


பாலின பட்ஜெட்டில் தவறவிட்ட வாய்ப்பு


பாலின-பதிலளிப்பு பட்ஜெட் (Gender-responsive budgeting (GRB)) என்பது இந்தியாவின் நகர்ப்புற நிர்வாகத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய ஆனால் பயன்படுத்தப்படாத கருவியாகும். 1990-களில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பாலின-பதிலளிப்பு பட்ஜெட், பட்ஜெட்டுகள் நடுநிலையானவை அல்ல என்பதையும், கட்டுப்படுத்தப்படாவிட்டால் சமத்துவமின்மையை வலுப்படுத்தும் என்பதையும் அங்கீகரிக்கிறது.


இந்தியா 2005-06-ஆம் ஆண்டுகளில் பாலின பட்ஜெட் அறிக்கையை ஏற்றுக்கொண்டது. டெல்லி, தமிழ்நாடு மற்றும் கேரளா முன்னணி முயற்சிகளில் இருந்தன. டெல்லி பெண்களுக்கு மட்டுமான பேருந்துகள் மற்றும் பொது வெளிச்சத்துக்கு நிதியளித்தது; தமிழ்நாடு 2022-23-ஆம் ஆண்டில் 64 துறைகளில் பாலின-பதிலளிப்பு பட்ஜெட்டைப் பயன்படுத்தியது மற்றும் கேரளா அதன் மக்கள் திட்ட இயக்கத்தின் மூலம் பாலின இலக்குகளை சேர்த்துள்ளது. இருப்பினும், ஐ.நா.-பெண்கள் மற்றும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் அறிக்கைகள் இந்த முயற்சிகள் பெரும்பாலும் சிக்கல்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. பெரும்பாலான இத்தகைய முயற்சிகள் பலவீனமான கண்காணிப்பு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நிறுவன திறன்களால், குறிப்பாக சிறிய நகரங்களில் பாதிக்கப்படுகின்றன. பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பாலின-பதிலளிப்பு பட்ஜெட் அடையாள அளவிலேயே உள்ளது. மேலும், நகர திட்டமிடலில் பாதுகாப்பான நடைபாதைகள் அல்லது குழந்தை பராமரிப்பு போன்ற முக்கியமான தேவைகளை தவறவிடுகிறது.


மாறாக, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் உள்ளூர் பட்ஜெட்டில் 5% பாலின திட்டங்களுக்கு கட்டாயமாக்குகின்றன; ருவாண்டா உள்ளாட்சி அமைப்பை மேற்பார்வை அமைப்புகளுடன் தேசிய திட்டமிடலில் ஒருங்கிணைக்கிறது; உகாண்டா நிதி ஒப்புதல்களுக்கு பாலின சமத்துவ சான்றிதழ்களை கட்டாயமாக்குகிறது; மெக்சிகோ உள்ளாட்சி அமைப்பை முடிவு-அடிப்படையிலான பட்ஜெட்டுடன் இணைக்கிறது; மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளாட்சி அமைப்பை வாழ்க்கை உண்மைகளில் பங்கேற்பு உறுதியான திட்டமிடலை சோதனை முறையில் செய்கிறது. இவை வெறும் நிதி சீர்திருத்தங்கள் மட்டுமல்ல, நகரங்களில் குடிமக்கள்-மையப்படுத்திய ஆட்சியின் மறு கற்பனையும் கூட.


அதிகாரத்துவத்தில் பெண்களின் இருப்பை உறுதி செய்வதற்காக, அரசியல் ஒதுக்கீட்டைத் தாண்டி உள்ளடக்கிய நகரங்களைக் கட்டமைக்க வேண்டும். இது நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பாத்திரங்களில் ஆட்சேர்ப்பு, தக்கவைத்தல் மற்றும் பதவி உயர்வில் முறையான சீர்திருத்தங்களை கோருகிறது. திட்டமிடல் மற்றும் பொறியியலில் ஒதுக்கீடுகள் மற்றும் உதவித்தொகைகள் மூலமான உறுதிப்படுத்தல் நடவடிக்கை, கட்டமைப்பு தடைகளை அகற்றுவதற்கு முக்கியமானது.


உலகளவில், ருவாண்டா, பிரேசில், மற்றும் தென் கொரியா போன்ற பல்வேறு நாடுகள் பிரதிநிதித்துவத்தின் தாக்கத்தைக் சுட்டிகாட்டுகின்றன. ருவாண்டா தாய்மைக்கால உடல்நலம் மற்றும் கல்வி செலவினங்களை அதிகரித்தது; பிரேசில் சுகாதாரம் மற்றும் முதன்மை சுகாதார பராமரிப்புக்கு முன்னுரிமை அளித்தது; தென் கொரியாவின் பாலின தாக்க மதிப்பீடுகள் போக்குவரத்து மற்றும் பொது இடங்களை மறுவடிவமைத்தன மற்றும் துனிசியாவின் சமத்துவ சட்டங்கள் பெண்களுக்கு அதிக தொழில்நுட்ப பாத்திரங்களை வழங்கி, பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தில் கவனத்தை மேம்படுத்தின. பிலிப்பைன்ஸ் பாலின-அடிப்படையிலான வன்முறை தங்குமிடங்கள் மற்றும் குழந்தை பராமரிப்புக்கு நிதியளிக்க பாலின-குறிக்கப்பட்ட பட்ஜெட்டைப் பயன்படுத்துகிறது. பாலின-சமநிலை அதிகாரத்துவங்கள் வெறும் நியாயம் மட்டுமல்ல. அவை பாதுகாப்பான, சமமான நகரங்களை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமானவை.


நாம் கொண்டிருக்க வேண்டிய நகரங்கள்


இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர விரும்பும்போது, அதன் நகரங்களும் பொருளாதார வளர்ச்சி இயந்திரங்களாக மட்டுமல்லாமல், மேலும் உள்ளடக்கம் மற்றும் நீதியை உள்ளடக்கிய இடங்களாக உயர வேண்டும். பாலினம், திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் முக்கிய இடம் பெற வேண்டும், இதற்கு கட்டாய தணிக்கைகள், பங்கேற்பு பட்ஜெட் மற்றும் இணைக்கப்பட்ட மதிப்பீடு மூலம் அடையப்பட வேண்டும். GRB, உள்ளூர் அரசு நிறுவனங்களில் (ULGs) நிறுவனமயமாக்கப்பட வேண்டும், இதற்கு குறிவைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு ஆதரவு தேவை.


பிரதிநிதித்துவம், முகமைத்துவமாகவும் மாற வேண்டும் மற்றும் கண்ணாடி உச்சவரம்புகளை உடைக்க உதவ வேண்டும். உள்ளூர் பாலின நீதி கவுன்சில்கள் மற்றும் குடும்பஶ்ரீ போன்ற மாதிரிகள், குறிப்பாக சிறிய மற்றும் மாற்றத்திற்கு உட்பட்ட நகரங்களுக்கு வார்ப்புருக்களை வழங்குகின்றன. பெண்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களாக ஆளுமையை மாற்றி வருகின்றனர். இப்போது அவர்கள் நகரங்கள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன, சேவைகள் வழங்கப்படுகின்றன மற்றும் ஆளப்படுகின்றன என்பதை வடிவமைக்க வேண்டும். பெண்களின் வாழ்ந்த அனுபவங்களை நகரங்கள் பிரதிபலிக்கும்போது, அவை அனைவருக்கும் சிறப்பாக செயல்படுகின்றன. பெண்களுக்கான நகரங்களை உருவாக்க, முதலில் பெண்களுடன் இணைந்து நகரங்களை உருவாக்க வேண்டும்.



Original article:

Share: