G7 உச்சி மாநாடு -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி: 


ஜூன் 15-17 வரை ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் கனடாவால் நடத்தப்படும் G7 உச்சிமாநாடு தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்தக் கூட்டத்திற்கான அழைப்பை இந்தியா இன்னும் பெறவில்லை.

முக்கிய அம்சங்கள்:


* இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டால், 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாதது இதுவே முதல் முறையாகும். 2020ஆம் ஆண்டு அமெரிக்கா கூட்டத்தை ரத்து செய்ததைத் தவிர, 2019 முதல் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு உச்சிமாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார்.


* இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே பதட்டமான உறவுகள் இருந்தன. 2023ஆம் ஆண்டில், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசாங்க முகவர்கள் ஈடுபட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்தக் கூற்றை இந்தியா பொய்யானது என்றும் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியது. இதன் பின்னர், இரு நாடுகளும் தங்கள் இராஜதந்திர உறவுகளைக் குறைத்துக் கொண்டன.


* G7 மாநாட்டை நடத்தும் நாடுகள் பெரும்பாலும் மற்ற நாடுகளை விருந்தினர்களாக அழைக்கின்றன. இதுவரை, கனடா உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியாவை அழைத்துள்ளது. ஆனால், இன்னும் எந்த விருந்தினர் நாடுகளையும் அறிவிக்கவில்லை.


* 2019ஆம் ஆண்டு G7 உச்சிமாநாட்டை பிரான்ஸ் நடத்தியது. மேலும் 2014ஆம் ஆண்டில் மோடி பிரதமரான பிறகு முதல் முறையாக அவரை அழைத்தது.


* அதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2004 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடையில் ஐந்து முறை G8 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். கிரிமியாவை கைப்பற்றியதற்காக ரஷ்யா நீக்கப்பட்ட பிறகு, 2014ஆம் ஆண்டில் அந்தக் குழு G7 ஆனது.


* 2020ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் G7 காலாவதியானது என்று கூறி, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் ரஷ்யாவை சேர்க்க விரும்பினார். அதை G10 அல்லது G11 என மறுபெயரிட அவர் பரிந்துரைத்தார். மேலும், அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு கூட்டத்தை நடத்த விரும்பினார். ஆனால், அது தொற்றுநோய் மற்றும் அமெரிக்க தேர்தல்கள் காரணமாக நடக்கவில்லை.


* மோடி 2021ஆம் ஆண்டு G7 உச்சிமாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். ஜெர்மனி (2022), ஜப்பான் (2023) மற்றும் இத்தாலி (2024) ஆகிய நாடுகளில் நடந்த உச்சிமாநாட்டில் நேரில் கலந்து கொண்டார்.


உங்களுக்குத் தெரியுமா?:


* ஏழு நாடுகள் குழு (G7) என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு பணக்கார மற்றும் வளர்ந்த நாடுகளின் முறைசாரா குழுவாகும்.


* சமீபத்திய ஆண்டுகளில், பிற நாடுகள் மற்றும் சர்வதேச குழுக்களின் தலைவர்களும் சில கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். அவர்கள் பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் பாலின சமத்துவம் போன்ற பல உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுகின்றனர்.


* முதல் G7 கூட்டம் 1975ஆம் ஆண்டு பிரான்சில் ஆறு நாடுகளுடன் நடைபெற்றது. கனடா 1976ஆம் ஆண்டில் இணைந்தது, இது ஏழாவது இடத்தைப் பிடித்தது. ரஷ்யா பின்னர் 1998ஆம் ஆண்டில் இணைந்து G8 ஐ உருவாக்கியது. ஆனால், அது கிரிமியாவைக் கைப்பற்றிய பிறகு 2014ஆம் ஆண்டில்நீக்கப்பட்டது.


* காலப்போக்கில், G7 பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டும் விவாதிப்பதில் இருந்து உலகளாவிய பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கும் மாறியது. அதற்கு நிரந்தர அலுவலகம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும், ஒரு வித்தியாசமான நாடு தலைவராகி கூட்டங்களை கையாளுகிறது.


* G7 கூட்டம் ஒரு கூட்டு அறிக்கையுடன் முடிவடைகிறது. அங்கு தலைவர்கள் பகிரப்பட்ட இலக்குகள் மற்றும் கொள்கைகளில் உடன்படுகிறார்கள். இந்த கூட்டங்கள் உலகளாவிய விவாதங்கள் மற்றும் முடிவுகளை வடிவமைக்க உதவுகின்றன.


* 2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின் போது உருவாக்கப்பட்ட G20 அமைப்பு, அதிக நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய குழுவாகும். G7 நவீன உலகளாவிய பிரச்சினைகளை தனியாகக் கையாள முடியாததால் இது உருவாக்கப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், G20 மிகப் பெரியதாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருப்பதால், பெரிய நெருக்கடி இல்லாதபோது முடிவுகளை எடுக்க அது போராடுகிறது.


G7 குழுவின் புதிய பதிப்பை உருவாக்க அவர்கள் பரிந்துரைத்தனர். இந்தப் புதிய குழுவில் யூரோ மண்டலத்திற்கு ஒரு பிரதிநிதி இருப்பார். மேலும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இதில் இடம் பெறும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இன்றைய உலகப் பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்துவதே இதன் குறிக்கோள் ஆகும்.


Original article:
Share: