இந்தியாவின் டிஜிட்டல் பயணம் ஆப்பிரிக்காவிற்கு எவ்வாறு ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும்? -சமீர் பட்டாச்சார்யா

 இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான டிஜிட்டல் ஒத்துழைப்பின் இலக்கானது, உள்ளடக்கிய மேம்பாடு, பரஸ்பர திறன்-வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப சுதந்திரம் ஆகியவற்றிற்கான பகிரப்பட்ட இலக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கூட்டு டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் (joint digital innovation) உலகளாவிய தெற்கில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை உண்டாக்க முடியுமா?


ஜூலை 1 2025 அன்று, இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் (Digital India initiative) பத்து ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்தக் காலகட்டத்தில், இந்தத் திட்டம் இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவை வழங்கலை கணிசமாக மேம்படுத்தியது. இணைய பயனர்களின் எண்ணிக்கை, 2014-ல் 251 மில்லியனிலிருந்து 2024-ல் கிட்டத்தட்ட 970 மில்லியனாக அதிகரித்தது. 2,18,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிவேக இணைய வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்டன. டிஜிட்டல் பொருளாதாரம் இப்போது தேசிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பங்களிக்கிறது மற்றும் 2022–23 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.74 சதவீதமாக உள்ளது.


டிஜிட்டல் இந்தியாவை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்க்கம், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு, உள்ளடக்கம், மலிவு மற்றும் பொது சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகும். பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் டிஜிட்டல் மாற்றத்திற்கு தயாராக இருப்பதால், இந்திய அனுபவம் அவர்களுக்கு செலவு குறைந்த மற்றும் நடைமுறைக்கு ஏற்ற மாதிரியை வழங்க முடியும். இந்த மாதிரியானது, தங்கள் டிஜிட்டல் பிளவுகளை நிவர்த்தி செய்யவும் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் நிர்வாகத்தை மேம்படுத்தவும் விரும்பும் ஆப்பிரிக்க அரசாங்கங்களுக்கு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.


ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் விருப்பங்களில் இந்தியாவின் பங்கு


டிஜிட்டல் மாற்றத்தில் ஆப்பிரிக்கா பல சவால்களை எதிர்கொள்கிறது. இந்தச் சவால்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எதிர்கொண்டதைப் போலவே உள்ளன. இதில் குறைந்த இணைய ஊடுருவல், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பிரிவினையான பொது சேவை வழங்கல் ஆகியவை அவற்றில் அடங்கும். நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி, விரைவாகச் செல்ல ஆப்பிரிக்கா டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்த வேண்டும்.


எனவே, இந்தச் சூழலில், இந்தியாவின் டிஜிட்டல் பயணத்திலிருந்து ஆப்பிரிக்கா கற்றுக்கொள்ளலாம். அளவிடக்கூடிய கொள்கை கட்டமைப்புகள் மற்றும் செலவு குறைந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எவ்வாறு கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கிறது. 


இந்தியாவின் பயோமெட்ரிக் டிஜிட்டல் அடையாளத் திட்டமான ஆதார் ஒரு வலுவான உதாரணம். இது, ஒரு அடையாளத்திற்கு தோராயமாக USD 1 செலவில் ஒரு பில்லியன் நபர்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது. இந்த டிஜிட்டல் அடையாள உள்கட்டமைப்பு, நேரடிப் பலன் பரிமாற்றங்கள், நிதிச் சேர்த்தல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் உள்ளிட்ட பரந்த அளவிலான சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இப்போது உள்ளடக்கிய மற்றும் திறமையான நிர்வாகத்திற்கான உலகளாவிய மாதிரியாகக் காணப்படுகிறது.


நீண்ட கால தொழில்நுட்ப மற்றும் கல்வி ஒத்துழைப்பு 


ஆப்பிரிக்காவுடன் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் மீண்டும் காட்டியுள்ளது. இந்த முயற்சிகள் ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு (India-Africa Forum Summit (IAFS)) மூலம், ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த இந்தியா பல்வேறு திட்டங்கள் மற்றும் தலையீடுகளைத் தொடங்கியுள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் (information and communications technology (ICT)) உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிப்பதற்கான இருதரப்பு நிதி உதவி, மானியங்கள் மற்றும் கடன் வரிகள் (Lines of Credit (LoCs)) ஆகியவை இதில் அடங்கும்.


சில உதாரணங்களை மேற்கோள் காட்ட, கென்யா, போட்ஸ்வானா, உகாண்டா, தான்சானியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களை நிறுவுவதற்கு இந்தியா உதவியுள்ளது. இது பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேம்பட்ட கணினி உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது மற்றும் மொரிஷியஸில் உள்ள சைபர் டவர் மற்றும் கானாவில் உள்ள ICT இன் கோஃபி அன்னான் மையம் (Kofi Annan Centre) போன்ற முதன்மை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பங்களித்தது. எகிப்தில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில், இளைஞர்களிடையே டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்காக, தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த மையத்தை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளித்தது.


2023-ம் ஆண்டில் தான்சானியாவின் சான்சிபாரில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology (IIT)) முதல் வெளிநாட்டு வளாகத்தை இந்தியா நிறுவியபோது குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. இந்த வளாகம் மேம்பட்ட தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை வழங்குகிறது. இது நீண்ட கால கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஆப்பிரிக்க இளைஞர்களுக்கான டிஜிட்டல் திறன் மேம்பாட்டிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை குறிக்கிறது.


இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பயன்பாடு 


2009-ம் ஆண்டில், இந்தியாவானது பான் ஆப்ரிக்கா இ-வலையமைப்பை (Pan Africa e-Network) அறிமுகப்படுத்தியது. இது தொலைதூரக் கல்வி மற்றும் தொலைதூர மருத்துவ சேவைகளை எளிதாக்கும் ஒரு கண்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். 2019ஆம் ஆண்டில், இந்த முயற்சி e-VidyaBharti (தொலைதூரக் கல்வி) மற்றும் e-ArogyaBharti (தொலைதூரக் மருத்துவம்) திட்டத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட்டது, இது e-VBAB என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் ஆப்பிரிக்க மாணவர்களையும் நோயாளிகளையும் இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டது.


e-VBAB திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுகளில், இந்தியப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்காக ஆப்பிரிக்க மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியானது ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள குடிமக்கள் தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை அணுக உதவியது மற்றும் இந்திய மற்றும் ஆப்பிரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை எளிதாக்கியுள்ளது. குறைந்த விலையில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மாதிரியானது (low-cost, high-impact model) ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் பயணத்தை ஆதரிப்பதில் இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பயன்பாட்டை நிரூபிக்கிறது.


இந்தியா-ஆப்பிரிக்கா டிஜிட்டல் ஈடுபாட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் தனியார் துறையும் முக்கிய பங்கு வகித்துள்ளது. உதாரணமாக, பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான Xtelify, சமீபத்தில் நைஜீரியா அரசாங்கத்துடன் பல ஆண்டு, பல மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நைஜீரியாவின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த, 14 ஆப்பிரிக்க சந்தைகளில் செயல்பாட்டு திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை வழங்கலை மேம்படுத்த, AI-இயக்கப்பட்ட தளங்களைப் பயன்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது.


இந்தியாவின் டிஜிட்டல் நிர்வாகத்தில் ஆர்வம் அதிகரித்து வருகிறது 


மேலும், ஆப்பிரிக்க அரசாங்கங்கள் அதிகளவில் இந்திய ஆட்சிமுறை மற்றும் நிதி உள்ளடக்கத்தை பிரதிபலிக்கின்றன. அதாவது நமீபியா, இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு முறைகளைப் (India’s electronic voting systems) பயன்படுத்துவதை ஆராய்ந்து வருகிறது. அதே நேரத்தில், கானா உஜ்வாலா எல்பிஜி (Ujjwala LPG) விநியோக கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் பொது விநியோக முறைகள் செயல்படுத்தப்படுவதைப் புரிந்துகொள்வதற்காக பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு ஆய்வுச் சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவின் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் நிர்வாக வழிமுறைகளில் அதிகரித்து வரும் ஆர்வத்தை இந்த ஈடுபாடுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


பயனுள்ள டிஜிட்டல் ஆளுகை, பொது சேவைகளுக்கான அணுகலை செயல்படுத்துதல், பாதுகாப்பான நிதி பரிவர்த்தனைகள் மற்றும் எல்லை தாண்டிய மின் வணிகம் ஆகியவற்றிற்கு டிஜிட்டல் அடையாள அமைப்புகள் அவசியம். இந்தியாவின் ஆதார் அமைப்பு, சேவை வழங்கலை மேம்படுத்தவும், திறமையின்மையை குறைக்கவும், நிதி மற்றும் சமூக உள்ளடக்கத்தை மேம்படுத்தவும் விரும்பும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு குறிப்பிட்ட மாதிரியை வழங்குகிறது.


ஏறக்குறைய 19 சராசரி வயதுடன், ஆப்பிரிக்கா உலகளவில் இளைய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த மக்கள்தொகை நன்மையைப் பயன்படுத்த, டிஜிட்டல் திறன் மேம்பாட்டில் கணிசமான முதலீடு தேவைப்படும். திறன் இந்தியா (Skill India), டிஜிட்டல் சக்சர்தா அபியான் (Digital Saksharta Abhiyan) மற்றும் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (Indian Technical and Economic Cooperation (ITEC)) திட்டம் போன்ற முன்முயற்சிகளுடன் இந்தியாவின் அனுபவம் ஆப்பிரிக்க சூழல்களில் தனிப்பயனாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு உத்திகளை உருவாக்க மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.


ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வேகமாக வளர்ந்துவரும் விரிவாக்கம்


இந்த வளர்ச்சி நிலையானதாக இருக்க, புதுமை மற்றும் தொழில்முனைவோரை ஆதரிக்க உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகள் கட்டமைக்கப்பட வேண்டும். இந்தியாவின் வளர்ந்து வரும் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு (startup ecosystem), குறிப்பாக நிதி-தொழில்நுட்பம் (fintech), சுகாதார-தொழில்நுட்பம் (health-tech) மற்றும் வேளாண்மை-தொழில்நுட்பம் (agri-tech) ஆகியவற்றில், வளர்ந்து வரும் சந்தைகளில் நிலையான, தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை வளர்ப்பதற்கான போதனை மாதிரிகளை வழங்குகிறது.


ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் பொருளாதாரம் இன்னும் தொடக்கமாக இருந்தாலும், அது வேகமாக வளர்ந்துவரும் விரிவாக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இணைய ஊடுருவல் 2005-ல் 2.1 சதவீதத்திலிருந்து 2024-ல் தோராயமாக 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023-ல், மொபைல் துறையானது துணை-சஹாரா ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $140 பில்லியன் அல்லது 7 சதவீதமாக பங்களித்தது. இது 2030-ல் எந்த எண்ணிக்கை $170 பில்லியனாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆப்பிரிக்க கண்டத்தின் தடையில்லா வர்த்தகப் பகுதி (African Continental Free Trade Area (AfCFTA)) ஆப்பிரிக்கா முழுவதும் ஒற்றை சந்தையை உருவாக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையை நிஜமாக்க, ஆப்பிரிக்கா டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்த வேண்டும். அது வலுவான புதுமை சுற்றுச்சூழல் அமைப்புகளையும் உருவாக்க வேண்டும் மற்றும் தரவு நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த மாற்றியமைக்கும் செயல்முறைக்கு பங்களிக்க நல்ல நிலையில் உள்ளனர்.


முன்னோக்கி வழி


இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான டிஜிட்டல் ஒத்துழைப்பானது, உள்ளடக்கிய மேம்பாடு, பரஸ்பர திறன்-வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப சுதந்திரம் ஆகியவற்றிற்கான பரந்த அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நான்காவது தொழில்துறை புரட்சியின் சிக்கல்களை இரு பிராந்தியங்களும் வழிநடத்தும் போது, ​​அவர்களின் கூட்டமைப்பு டிஜிட்டல் யுகத்தில் தெற்கிலிருந்து தெற்கிற்கான ஒத்துழைப்பு South-South cooperation) ஒரு வலுவான கட்டமைப்பை வழங்குகிறது.


உள்ளடக்கிய நிர்வாகத்தை ஊக்குவிக்க இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த அனுபவம் ஆப்பிரிக்க நாடுகள் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியை வழங்குகிறது. வலுவான அரசியல் விருப்பம், நெகிழ்வான கொள்கை கட்டமைப்புகள் மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பு ஆகியவற்றுடன், இந்தியாவும் ஆப்பிரிக்காவும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் உலகளாவிய தெற்கில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இணைந்து செயல்பட வேண்டும்.



Original article:

Share: