சர்க்கரை பானங்கள் மீது தீவினை வரி (Sin tax), விதிப்பது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. -அஞ்சு விர்மணி ரேகா ஹரிஷ்டிசிஏ அவ்னி

 இந்த வரி, அடையாள குறியீடுகளில் ஊட்டச்சத்து எச்சரிக்கைகள் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் மீதான வரம்புகளுடன் இணைந்து, பொது நல்வாழ்வை மேம்படுத்த உதவும்.


இந்தியாவில் வாழ்க்கை முறை நோய்களை எதிர்த்துப் போராட உதவும் வகையில், அதிக பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் மீதான வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் அதிகரித்துள்ளது. சர்க்கரை கொண்ட காற்றூட்டப்பட்ட பானங்கள், பழங்களை அடிப்படையாகக் கொண்ட கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் கலந்த பானங்கள் மீதான ஜிஎஸ்டி 28% இலிருந்து 40% ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் மற்ற மது அல்லாத பானங்கள் இப்போது 18% க்கு பதிலாக 40% வரி விதிக்கப்படுகின்றன.  அதிக வரிகள் போன்ற நிதி நடவடிக்கைகள் "தேர்வு தண்டிப்பு" (punishing choice) பற்றியது அல்ல, மாறாக நுகர்வுக்கான உண்மையான சமூக செலவுகள் பெரும்பாலும் மறைக்கப்படும் சந்தையின் ஏற்றத்தாழ்வை சரிசெய்வது ஆகும். சோடாக்கள், குளிர்ந்த தேநீர், புத்துணர்ச்சி பானங்கள் மற்றும் அதுபோன்ற தயாரிப்புகள் மீது "தீவினை வரிகளை" (sin taxes) விதிப்பதன் மூலம், அரசாங்கம் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் ஆரோக்கியம் முதன்மையானதாக உள்ளது.


சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் தொழில்களை ஒழுங்குபடுத்துவது எப்போதும் கடினம். பண விளையாட்டு தளங்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 2025 தொடர்பான விவாதங்கள் இந்த சவாலை காட்டுகின்றன. இது அரசாங்கத்தின் அத்துமீறல் என்றும், வேலை இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறைந்த வளர்ச்சி கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் வாதிட்டனர். இருப்பினும், போதைப்பொருள், நிதி இழப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற கட்டுப்பாடற்ற சந்தைகளின் கடுமையான தீங்குகளை அவர்கள் பெரும்பாலும் கவனிக்கவில்லை.


சர்க்கரை பானங்கள் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கின்றன. இருப்பினும், அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 2019ஆம் ஆண்டு BMJஇல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது இறப்பு அபாயத்தை 62 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு லான்செட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சர்க்கரை பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு முக்கிய பங்களிப்பதாக காட்டப்பட்டுள்ளது. சர்க்கரை போதைப்பொருள், மேலும் வலுவான விளம்பரங்களுடன் இணைந்து, சர்க்கரை பானங்கள் மீண்டும் மீண்டும் உட்கொள்வதை ஊக்குவிக்கின்றன. இயற்கை உணவுகளைப் போலல்லாமல், இந்த தயாரிப்புகள் குறிப்பாக கவர்ச்சிகரமானதாகவும் எதிர்க்க கடினமாகவும் இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.


உடல் பருமன் அதிகரிக்கும்


அதிகரித்து வரும் உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் ஆரம்பகால இறப்புகள் ஆகியவற்றுக்கான செலவுகளை நிறுவனங்கள் ஏற்கவில்லை. மாறாக குடும்பங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகளே ஏற்கின்றன. அதிகரித்து வரும் உடல் பருமனால், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே, இந்தியா கடுமையான உடல்நலம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அதன் விளைவுகளைக் கையாள முடியாத ஏழை சமூகங்களிடையே இந்தப் பிரச்சினை மோசமாக உள்ளது. 


ICMR-NIN உணவுமுறை வழிகாட்டுதல்கள் (2024) படி, இந்தியாவின் நோய் சுமையில் 56 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆரோக்கியமற்ற உணவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த காரணத்திற்காக, பொது சுகாதார நிபுணர்கள் நீண்ட காலமாக தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் மீதான "விரும்பதாகத வரிகளை" ஆதரித்து வருகின்றனர். அவை சிறிய ஊட்டச்சத்தை வழங்குகின்றன. ஆனால், பெரும் தீங்கு விளைவிக்கின்றன. மக்களுக்கு ஊட்டச்சத்துக்காக சேர்க்கப்பட்ட சர்க்கரை தேவையில்லை என்றும், சர்க்கரை பானங்களின் விலையை குறைந்தது 20 சதவீதம் அதிகரிப்பது அவர்களின் நுகர்வைக் குறைக்கும் என்றும் WHO குறிப்பிட்டுள்ளது.


சமீபத்திய தரவுகள் அவசர நடவடிக்கை தேவை என்பதைக் காட்டுகின்றன. பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கை, வீட்டுச் செலவினங்களை பகுப்பாய்வு செய்து, அனைத்து வருமானப் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அதிக அளவில் பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதாகக் கண்டறிந்துள்ளது. கிராமப்புறங்களில், கீழ்மட்ட 20% குடும்பங்கள் 2011-12ஆம் ஆண்டில் 3.2%ஆக இருந்த செலவினத்தை 2022-23ஆம் ஆண்டில் 5.5% ஆகவும், மேல்மட்ட 20% குடும்பங்கள் 4.7% இலிருந்து 6.9% ஆகவும் அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில், கீழ்மட்ட 20% குடும்பங்கள் 3.7% இலிருந்து 6.4% ஆகவும், மேல்மட்ட 20% குடும்பங்கள் 6.1% இலிருந்து 8.2% ஆகவும் உயர்ந்துள்ளன. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளின் இந்த வளர்ந்து வரும் நுகர்வு கவலைக்குரியது. ஏனெனில், இது குடும்ப ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது, சுகாதாரச் செலவுகளை அதிகரிக்கிறது மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கிறது.


GST கவுன்சிலின் சமீபத்திய துணிச்சலான நடவடிக்கை இந்தியாவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார உத்திகளை ஆதரிக்கிறது. அத்தகைய உணவுகள் மீதான வரிகளை உயர்த்துவது முக்கியமாக வருவாய்க்காக அல்ல. இது ஒரு பொது சுகாதார தலையீடாகும். தொழில்துறை எதிர்ப்பை எதிர்பார்த்த போதிலும், குறுகிய கால நிறுவன லாபத்தை விட குடிமக்களின் நீண்டகால ஆரோக்கியத்தை அரசாங்கம் மதிப்பதாகக் காட்டியுள்ளது. இது பிரதமர் மோடியால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்துடன் (Swasth Bharat mission) ஒத்துப்போகிறது. இது ஆரோக்கியமான உணவு முறைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் வலுப்படுத்துகிறது. இது தினை மற்றும் பிற கரிமப் பொருட்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிக்கிறது.


சர்க்கரை அட்டவணைகள்


போஷன் 2.0, பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM-POSHAN)), மற்றும் ”சரியாக சாப்பிடுங்கள் என்ற இந்தியாவின் பிரச்சாரம்” (Eat Right India campaign) போன்ற முதன்மைத் திட்டங்கள், சத்தான உணவுக்கான அணுகலை விரிவுபடுத்தவும், சமச்சீர் உணவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மிகவும் பாதிக்கப்படக்கூடிய வயதினரிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வை உறுதி செய்வதற்காக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் சர்க்கரை தொடர்பான அட்டவணைகளை கட்டாயமாக்கியது. அனைத்து பள்ளிகளிலும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பிற பொதுவான இடங்களில் தகவல் காட்சிகள், அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கும், ஆரோக்கியமான மாற்று வழிகளை பரிந்துரைப்பதற்கும் நோக்கமாக உள்ளது. சுகாதார கல்வியறிவை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான விருப்பங்களை மலிவு விலையில் ஆக்குவதன் மூலம், மற்றும் தீங்கு விளைவிக்கும் UPF நுகர்வுகளை ஊக்கப்படுத்துவதன் மூலம், இந்தியா ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குகிறது.


இந்தப் பின்னணியில், வரிவிதிப்பு என்பது, சர்க்கரை கலந்த பானங்களின் (SSB) உண்மையான சமூகச் செலவை அவற்றின் விலையில் இணைத்து, ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்வதற்கும், சந்தைகளை அதிகப் பொறுப்பான தயாரிப்பு கண்டுபிடிப்புகளை நோக்கித் தள்ளுவதற்கும் அதிகாரம் அளிக்கிறது. எவ்வாறாயினும், பொதுவாக UPF-ஐச் சமாளிக்க கூடுதல் அழுத்தம் தேவைப்படுகிறது. இதில், கவலைக்குரிய பிற ஊட்டச்சத்துக்களான உப்பு மற்றும் கொழுப்பை, குறிப்பாக முன்-தொகுப்பு செய்யப்பட்ட உணவுகளில் (pre-packaged foods) பாதுகாப்பான நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சமையல் எண்ணெயை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு மோடி அறிவுறுத்தியது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். NAPi ஆனது, மொழித் தடைகளை மிஞ்சும் கடுமையான முன்-தொகுப்பு அடையாள குறியீடுகள் (Front-of-Package Labelling (FOPL)) ஊட்டச்சத்து எச்சரிக்கைகள் மற்றும் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரித்ததன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.


உணவுகள் மீதான வரி நடவடிக்கைகள் வளர்ந்த நாடுகளில் செயல்படுத்துவது மிகவும் கடினம். அதிக வருமானம் உள்ள நாடுகளில் கூட கடினம்; இந்தியாவில், சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பாதிக்கும் என்ற கவலைகள் காரணமாக இது இன்னும் கடினமாக உள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை, FOPL எச்சரிக்கைகள், நுகர்வோர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துதல், சந்தைப்படுத்தல் விதிமுறைகளை கடுமையாக்குதல் மற்றும் குறிப்பாக குழந்தைகளை இலக்காகக் கொண்ட தவறான விளம்பரங்களுக்கு வலுவான தடைகளை பரிந்துரைக்கிறது.


சிலி முதல் மெக்சிகோ வரையிலான சர்வதேச அனுபவம், தெளிவான எச்சரிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான கல்வியுடன் இணைந்தால் வரிகள் சிறப்பாக செயல்படும் என்பதைக் காட்டுகிறது. பலதரப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சீர்திருத்தம், இந்தியாவின் உணவு மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களில் ஒரு தலைமுறை மாற்றத்தைத் தொடங்கக்கூடும்.


விர்மானி புது தில்லியில் உள்ள மேக்ஸ் ஸ்மார்ட் & ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில் குழந்தை மருத்துவ உட்சுரப்பியல் இயக்குநராக உள்ளார். ஹரிஷ் பொது நலனுக்கான ஊட்டச்சத்து  உறுப்பினராகவும், ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னாள் பேராசிரியராகவும், குழந்தை மருத்துவத் தலைவராகவும் உள்ளார். அவ்னி இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் உதவி ஊடக ஆலோசகராக உள்ளார்.



Original article:

Share: