உக்ரைன் மற்றும் காசா போர்கள் எந்த அளவிற்கு, அமெரிக்காவின் தேர்தல் ஆண்டு அரசியலால் (U.S. election-year politics) இயக்கப்படும் அல்லது அவர்களின் சொந்த எதிர்கால போக்கால் எவ்வளவு செல்வாக்கு செலுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்க செனட் (United States Senate) அவையின், பெரும்பான்மை தலைவரான சக் சூமர் (Chuck Schumer), இஸ்ரேலில் ஒரு புதிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்து ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டார். இந்த நடவடிக்கை, ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் ஒரு பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சி செனட்டரின் யூதர் (Jewish) மற்றும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுடன் மிக நீண்ட உறவைக் கொண்டவர். அவர், இப்போது காஸாவில் "பொதுமக்களின் எண்ணிக்கையை பொறுத்துக்கொள்ள தயாராக இல்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மார்-ஏ-லாகோவில் சந்தித்த பிறகு, ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், தான் ஆட்சிக்கு வந்ததும் உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்துவதாக திரு டிரம்ப் தன்னிடம் கூறியதாகக் கூறினார். ரஷ்யா - உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதே டிரம்பின் நோக்கமாகும். இரு நாடுகளின் மோதல் செலவுகளுக்கு ஐரோப்பா அதிக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று டிரம்ப் நம்புவதாகவும் தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான மோதல்கள் மற்றும் உக்ரைன் மீதான போர் ஆகியவை முக்கிய உலகளாவிய பிரச்சினைகளாகும். இவை, எட்டு மாதங்களில் அமெரிக்கா ஒரு குறிப்பிடத்தக்க அதிபர் தேர்தலை நெருங்குகையில் இந்த மோதல்கள் எதிர்பாராத வழிகளில் கட்டவிழ்ந்து வருகின்றன. இந்த பிரச்சினைகள் எவ்வாறு உருவாகும், அவை தேர்தலுக்கான ஆண்டு அரசியலால் இவை பாதிக்கப்படுமா அல்லது தங்கள் சொந்த பாதைகளைப் பின்பற்றுமா என்பது நிச்சயமற்றது. இந்த மோதல்களில் அமெரிக்காவின் ஈடுபாடு முக்கியமானது. மேலும், நவம்பர் 2024 இல் தேர்தலில் வெற்றி பெற்றவரைப் பொருட்படுத்தாமல், இவற்றின் முடிவுகள் நாட்டின் நிலையை கணிசமாக பாதிக்கும்.
பிப்ரவரி 2022 முதல், அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் 75 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. இந்த பணம் ஆயுதங்கள் வாங்குவதற்கும், அரசாங்கத்தை ஆதரிப்பதற்கும், மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த இராணுவ உதவியின் பெரும்பகுதி அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். அவர்கள், ஸ்டிங்கர் ஏவுகணைகள் (Stinger missiles), உயர் நகரும் பீரங்கி ராக்கெட் அமைப்புகள் (High Mobility Artillery Rocket Systems (HIMARS)) மற்றும் பீரங்கி வெடிமருந்துகள் (artillery ammunition) போன்ற உபகரணங்களை வாங்கியுள்ளனர்.
இருப்பினும், கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, அமெரிக்க காங்கிரஸுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கூடுதலாக 60 பில்லியன் டாலர் உதவியானது தாமதமாக கிடைத்தது. இந்த நிலைமை, நிர்வாகத்தையும், பென்டகனையும் (Pentagon) உக்ரேனுக்கு இராணுவ உபகரணங்களை தொடர்ந்து வழங்குவதற்கான நிதியைத் தேட வைத்துள்ளது. இந்த, விநியோகம் விரைவில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு சுமார் 144 பில்லியன் யூரோ, உதவியை உறுதியளித்துள்ளது. இதில் நிதி மற்றும் பொருளாதார உதவிக்கான 93 பில்லியன் யூரோ, இராணுவ உதவிக்கான 33 பில்லியன் யூரோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அகதிகள் உதவிக்கான 17 பில்லியன் யூரோ, பல்வேறு வகையான உதவிகளுக்காக தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்து கூடுதலாக 12 பில்லியன் யூரோ ஆகியவை உள்ளடங்கும். ஆயினும்கூட, ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவ உதவியின் அளவு அமெரிக்காவுடன் பொருந்தவில்லை. மேலும், 2024 இல், அமெரிக்கா அதிக இராணுவ உதவியை அனுப்பாது. செனட் அவை, ஒரு புதிய தொகுப்புக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், அது இன்னும் பிரதிநிதிகள் சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைமை சிக்கலானது. அமெரிக்கா, ரஷ்யாவின் வெற்றியை விரும்பவில்லை. ஆனால் போர் பெரிதாகி நீண்ட காலம் நீடிப்பதையும் அது விரும்பவில்லை. சபாநாயகர் மைக் ஜான்சன், செனட் மசோதாவை பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கக் கொண்டுவந்தால், அது பாரம்பரிய குடியரசுக் கட்சியினரின் உதவியுடன் நிறைவேறும் என்பதை அறிவார். இருப்பினும், இந்த நடவடிக்கை ’அமெரிக்காவை மறுபடியும் மிகப்பெரியதாக மாற்றுவோம்’ (Make America Great Again (MAGA)) என்ற கொள்கையுடைய குடியரசுக் கட்சியினரிடமிருந்து பின்னடைவுக்கு வழிவகுக்கும். பின்னர், அவர்கள் அவரை அகற்றுவதற்கு வாக்களிப்பார்கள். தற்போது, உக்ரைனுக்கு நிலைமை சவாலானது. ரஷ்யர்களுக்கு எதிராக ஒரு பயனுள்ள இராஜதந்திர நிலைமையை உருவாக்கத் தவறி, நாடு கடந்த ஆண்டு அதன் கோடைகால தாக்குதலுடன் போராடியது. இது அவ்டிவ்காவில் (Avdiivka) நடந்தது போன்ற குறிப்பிடத்தக்க தோல்விகளுக்கு வழிவகுத்தது. அங்கு, பற்றாக்குறைகள் மற்றும் மோசமான உத்திகள் குறிப்பிடத்தக்க காரணிகளாக இருந்தன.
மறுபுறம், உக்ரைன் மீதான ஆரம்ப படையெடுப்பிலிருந்து ரஷ்யா தனது இராணுவ அணுகுமுறையை மேம்படுத்தியுள்ளது. எண்ணிக்கையிலும், தளவாடங்களிலும் உள்ள சாதகங்களுடன், உக்ரைன் படைகளை ரஷ்யா திறம்பட எதிர்த்து வருகிறது. மின்னணு போர் மற்றும் பீரங்கிகளில் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மை உள்ளது. ரஷ்யாவும் தனது ஒருங்கிணைந்த கிளைடிங் மற்றும் கரெக்ஷன் மாட்யூல் (Unified Gliding and Correction Module (UMPK)) கிளைட் குண்டுகளை (Glide bombs) மோதலில் திறம்பட பயன்படுத்தி வருகிறது. இதற்கிடையில், உக்ரைன் முக்கியமான பீரங்கி வெடிமருந்துகளுக்கு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறை ஓரளவு காரணம், அதில் கணிசமான அளவு கடந்த அக்டோபரில் அமெரிக்கர்களால் இஸ்ரேலிய பயன்பாட்டிற்கு திருப்பி விடப்பட்டது.
இஸ்ரேலும் அதன் காஸா நடவடிக்கைகளும்
ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்த பிரச்சினை பெரிய அளவில் சர்ச்சைக்குரியதாகி வருகிறது. அமெரிக்கா, ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ், இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. ஆனால், இதன் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. ஜோ பிடென் மற்றும் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகரான சக் சூமர் (Mr. Schumer) ஆகியோர் கூட இஸ்ரேலின் இராணுவ உத்திகள் அல்லது வெளிப்படையாக இல்லாதது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிகாரியும், யூதருமான ரிச்சர்ட் என்.ஹாஸ் (Richard N. Haass), தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் (The Wall Street Journal) இஸ்ரேலை விமர்சித்தார். இஸ்ரேலின் நடவடிக்கைகள் அதன் சொந்த நலன்களையும், அமெரிக்காவுடனான அதன் உறவையும் சேதப்படுத்தியுள்ளன மற்றும் அப்பாவி பாலஸ்தீனர்களுக்கு தீங்கு விளைவித்துள்ளன என்று அவர் கூறினார். இந்த விமர்சனங்கள் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் தாராளவாத யூத-அமெரிக்க சமூகத்தின் மத்தியில் இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகு மீதான பொது உணர்வில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கின்றன.
இஸ்ரேலிய இராணுவம் காசாவின் பெரும்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதுடன், இப்போது எஞ்சியிருக்கும் கடைசி பகுதியான ரஃபா (Rafah) மீது திரும்பியுள்ளது. ரஃபா மீது தாக்குதல் நடத்துவது அமெரிக்காவின் "சிவப்புக் கோட்டை" (redline) தாண்டும் என்று பைடன் எச்சரித்துள்ளார். ஏனெனில் அது நிச்சயமாக ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தும். இருப்பினும், நெதன்யாகு முக்கியமாக அரசியல் சுய லாபத்திற்காக உந்தப்பட்டதாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் இராணுவ வலிமை இருந்தபோதிலும், நெதன்யாகுவின் வலதுசாரி தலைமையின் கீழ், பாலஸ்தீனியர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை முன்மொழியவில்லை. நாட்டில் நீடித்த அமைதியை அடைவதற்கும் பாலஸ்தீனியர்களுடன் சமரசம் செய்வதற்கும் இஸ்ரேல் தனது எதிர்கால திட்டங்களை வகுக்க வேண்டும். மேலும், பாலஸ்தீன அரசை உருவாக்குவது, அதன் அதிகாரத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூட, இந்த இலக்கை அடைய ஒரே வழி ஆகும். ஹமாஸை ஆதரிக்கும் நெதன்யாகுவின் கடந்தகால உத்தியானது பாலஸ்தீனியர்களின் கருத்தைப் பிளவுபடுத்துவதையும், அச்சத்தின் மூலம் இஸ்ரேலிய மக்களின் உணர்வில் செல்வாக்கு செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
உக்ரைன் மற்றும் இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு நிச்சயமற்றது. ஜோ பைடனின் கொள்கையானது ஓரளவு தெளிவாக இருந்தாலும், முந்தைய இருகட்சி அணுகுமுறையிலிருந்து விலகுவதால் எதிர்காலத்தில் அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையை கணிப்பது சவாலானது. அமெரிக்க அரசியல் மற்றும் மக்கள்தொகை நிலப்பரப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் சர்வதேச பிரச்சினைகள் குறித்த உணர்வுகளை பாதிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் பழைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது இளைய தலைமுறையினர் இஸ்ரேலுக்கு குறைந்த ஆதரவைக் காட்டுகிறார்கள். கடந்த அக்டோபரில் YouGov நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று 18 முதல் 29 வயது வரையிலான அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களை விட பாலஸ்தீனியர்களுடன் அதிக நெருக்கத்தை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியது.
டிரம்ப்பின் போக்கு
ஆனால் இங்கே முக்கிய அம்சம் என்னவென்றால், அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. இப்போதைக்கு, அமெரிக்காவோ அல்லது உக்ரைனோ கைவிடப் போவதில்லை. இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் தேவையின் அடிப்படையில், உறுதியுடன் இருக்கிறார்கள். ஆயுதங்கள் மட்டுமின்றி, ரஷ்ய துருப்புக்கள் இருக்கும் இடம் பற்றிய நிகழ்நேர தகவல்களிலும் உக்ரைன் அமெரிக்காவிடமிருந்து நிறைய உதவிகளைப் பெறுகிறது. இது ரஷ்யாவை பலவீனப்படுத்துகிறது என்று அமெரிக்கர்கள் நினைப்பது உக்ரைனுக்கு நல்லது. பணியாளர்கள் மற்றும் உபகரணங்களின் பெரிய இழப்பு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO)) தொடர்பான மாஸ்கோவின் எதிர்கால கொள்கைகளை சந்தேகத்திற்கு இடமின்றி குறைக்கும்.
ஆனால், சந்தேகத்திற்கு இடமின்றி, திரு.டிரம்பின் வெற்றி பெரும் சீர்குலைவை ஏற்படுத்தும். இது உக்ரைன் மீதான அமெரிக்காவின் கொள்கையை நிச்சயம் பாதிக்கும். இஸ்ரேலைப் பொறுத்தவரை, திரு. டிரம்ப் எப்போதும் இருந்த ஒரு வலுவான ஆதரவாளராக இருக்க வாய்ப்புள்ளது. டெல் அவிவ் இடத்தில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடிவு செய்தவர் அவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால் வாஷிங்டன் டிசியில் (Washington DC) அரசியல் கணக்கை மாற்றும் டிரம்ப்பின் வெற்றியானது, உக்ரைன் மற்றும் NATO கூட்டணி மீது தாக்கங்களை ஏற்படுத்தும். ஐரோப்பா, அமெரிக்கா இல்லாததை ஈடுசெய்ய முயற்சிக்கிறது, ஆனால் அது போதுமானதாக இருக்காது. தற்போது, போரின் வேகம் இப்போது ரஷ்யர்களிடம் உள்ளது மற்றும் உக்ரைன் அதை மீண்டும் பெற முடியாவிட்டால், அமெரிக்கா பின்வாங்கினால் உக்ரேனிய சரிவுக்கான எல்லா சாத்தியங்களும் உள்ளன.
இது ஐரோப்பிய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பவராக அமெரிக்காவின் பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது போன்ற பரந்த விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் நம்பகத்தன்மையின்மை தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவுடனான அதன் வளர்ந்து வரும் கூட்டாண்மை மற்றும் இந்தோ-பசிபிக்கில் அதன் கூட்டணி உறவுகளையும் பாதிக்கும்.
மனோஜ் ஜோஷி, Observer Research Foundation அமைப்பில் பணியாற்றுகிறார்.