2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)), கல்வி கற்பதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகளை சுட்டிக்காட்டுகிறது. அதைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, அதில் ஏற்படிக்கும் சிக்கல்களை வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் சரி செய்ய வேண்டும்.
2023 ஆண்டிற்கான வருடாந்திர கல்வி நிலை அறிக்கை ஜனவரியில் வெளியிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டு முதல், COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்டுகளைத் தவிர, ஒவ்வொரு வருடமும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை நிறைய கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக 14-18 வயதுடையவர்களின் அடிப்படைத் திறன்கள் குறித்து மிகவும் ஆழமாக தனது கருத்தை அறிக்கையின் மூலம் வெளிக்காட்டியுள்ளது. கற்றல் விளைவுகளின் தரவு கவலையளிக்கும் அதே வேளையில் பயிற்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் இளம் பருவத்தினர், இளைஞர்களுக்கான கல்வியை மேம்படுத்துவதற்கான நடைமுறை வழிகளைக் கண்டறிய அதை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
அடிப்படை கற்றல் பாதைகளில்
2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கல்வி நிலை அறிக்க இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் உள்ள 28 கிராமப்புற மாவட்டங்களில் நடத்தப்பட்டது. மாதிரியானது முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றாலும், இது மாவட்ட அளவிலான சூழ்நிலையைப் பிரதிபலிக்கிறது மற்றும் 14-18 வயதுடையவர்களுடன் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கோடிட்டு காட்டுகிறது. இந்த பதின்ம வயதினரில் 26% பேர் தங்கள் பிராந்திய மொழியில் அடிப்படை உரையைப் படிக்க சிரமப்படுகிறார்கள் என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. ஆனால், கடந்த கால நிகழ்வுகளால் இது எதிர்பாராதது அல்ல. 2023 இல் 18 வயது நிரம்பியவர் 2018 இல் 13 வயதுடையவராக இருந்திருக்க வேண்டும். இது ஏழு அல்லது எட்டாவது வகுப்பில் இருக்கலாம். 2018 ஆம் ஆண்டில், ஏழாம் வகுப்பில் சுமார் 32% மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27% பேர் அடிப்படை உரையைப் படிக்க தெரியவில்லை. கற்றல் முன்னேற்றம் மெதுவாக இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் உயர் வகுப்புகளுக்கு முன்னேறும்போது தெளிவாகத் தெரிகிறது. குழந்தைகள் ஆரம்பத்திலேயே அடிப்படைத் திறன்களைப் புரிந்து கொள்ளவில்லை. எனவே, இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, 14-18 வயதுடையவர்களில் கால் பகுதியினர் வாசிப்பில் சிரமப்படுவதைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டுமா?
குழந்தைகளின் கடந்த கால தவறுகளை எவ்வாறு சரி செய்வது? வருடாந்திர கல்வி நிலை அறிக்கை 14-18 வயதுடையவர்கள் மற்றும் எத்தனை பேர் படிக்க முடியும் என்பதைப் பற்றியத் தரவை வழங்குகிறது. இந்தத் தரவைப் பார்க்கும்போது, நன்றாகப் படிக்கத் தெரியாதவர்களில் 57% பேர் 10ஆம் வகுப்பு அல்லது அதற்குக் கீழே படித்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். மேலும் 28% பேர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவில்லை.
இந்திய பதின்ம வயதினரின் கைபேசிகளைக் கொண்டு அவர்களின் கல்வி இடைவெளிகளை நிரப்ப உதவ முடியுமா?
வருடாந்திர கல்வி நிலை அறிக்கை உயர்நிலைப் பள்ளி வருகையை பற்றி சரியாக ஆய்வு செய்ய வில்லை. ஆனால் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office (NSSO) 75 வது சுற்று 2017-18 இல் அதனைச் செய்தது. கிராமப்புற இந்தியாவில், ஒன்பது மற்றும் பத்து ஆம் வகுப்பு மாணவர்களில் 60% பேர் மட்டுமே பள்ளிக்குச் செல்வதாக அது கண்டறிந்தது. நன்றாக வாசிக்கத் தெரியாத 14-18 வயதுடையவர்களில் கூட, சிலர் சேர்க்கப்படலாம். ஆனால், பலர் ஆர்வம் காட்டவில்லை. இந்தக் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல உதவாமல் பள்ளி வாசிப்புத் திட்டங்களில் கவனம் செலுத்துவது எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது.
2022 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கை, குழந்தைகள் நன்றாகப் படிக்கக் கற்றுக்கொள்வதில் எந்த இடத்தில் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி கூடுதல் தகவலை வழங்குகிறது. 2022 ஆம் ஆண்டில், இரண்டாம் வகுப்பு உரையை சரளமாக படிக்க முடியாத எட்டாம் வகுப்பு குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதி பேர் அடிப்படை பத்தி போன்ற எளிய உரையைப் படித்தனர். பலர் எழுத்துக்கள் அல்லது எளிய வார்த்தைகளை படிப்பதில் சிரமப்படவில்லை. அவர்களுக்கு தேவைப்படுவது சிறந்த வாசகர்களாக மாறுவதற்குவதற்கான உதவி, பயிற்சி மற்றும் ஆதரவு. கிண்டல் மற்றும் அவமானம் காரணமாக, இந்த குழந்தைகளில் பலர் முயற்சி செய்வதை நிறுத்திவிட்டு வேறு வேலைக்குச் செல்கின்றனர்.
குழந்தைகளை வாசிக்க வைக்க புத்தகங்களை வைத்திருப்பது மிகவும் முக்கியம். 2022 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கை மற்றும் சம்போதி, மேம்பாட்டு நுண்ணறிவு பிரிவின் அறிக்கை, பெரும்பாலான கிராமப்புற வீடுகளில் பள்ளி புத்தகங்களைத் தாண்டி அதிக வாசிப்பு பொருட்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது. நூலகங்கள் வாசிப்பையும் சிந்தனையையும் ஊக்குவிப்பதில் சிறந்ததாக இருக்கும். அவை அக்கறை கொண்டவர்களால் நன்றாக இயக்கப்பட வேண்டும். மேலும், அவை உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்த குழந்தைகள் மட்டுமல்ல, அனைவரையும் ஈர்க்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் தொழில்கள்
2023 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கை கணக்கெடுப்பின் நுண்ணறிவுகள், கிராமப்புறங்களில் உள்ள இளம் பருவத்தினரின் கல்வி, தொழில் மற்றும் தொழிற்கல்வி குறித்த அவர்களின் உணர்வுகள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. கணக்கெடுக்கப்பட்ட இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள் கல்லூரிக் கல்வியைத் தொடர விரும்புவதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது. சிறுவர்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் உயர் கல்வியில் சற்று அதிக விருப்பத்தைக் காட்டுகிறார்கள். இது இளைஞர்களிடையே அவர்களின் எதிர்கால வாய்ப்புகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து வளர்ந்து வரும் விழிப்புணர்வைப் பிரதிபலிக்கிறது.
2023 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கை, 14 முதல் 18 வயதுடையவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிய முடிவுகளை வெளியிட்டது. கணக்கெடுப்பில், அவர்களின் கல்வி மற்றும் வேலை இலக்குகள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. மூன்று மாவட்டங்களில் உள்ள இந்த வயதினரைச் சேர்ந்த குழந்தைகளுடனும் வருடாந்திர கல்வி நிலை அறிக்கை தயாரிப்பாளர்கள் பேசினார். அவர்களில் 60% க்கும் அதிகமானோர் கல்லூரிக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆண்களை விட (59%) அதிகமான பெண்கள் (65%) கல்லூரிக்கு செல்ல விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு ஐந்தில் ஒருவரும் தங்கள் தொழில் இலக்குகளைப் பற்றிக் கேட்டபோது தெளிவாகப் பதிலளிக்கவில்லை. சிறுவர்கள் பெரும்பாலும் காவல்துறை அல்லது பாதுகாப்புப் படைகளில் சேர வேண்டும் என்று கூறினார். அதே சமயம் பெண்கள் பெரும்பாலும் ஆசிரியர் அல்லது மருத்துவராக வேண்டும் என்று கூறினார். இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்ப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்க்கு அவர்களுக்கு ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் உத்வேகம் தேவை. சிறந்த-பொருத்தமான விருப்பத்தேர்வுகள் இருந்தால் அவற்றைக் கண்டறிதல் மற்றும் அவர்களின் இலக்குகளை அடையத் தயாராகுதல் ஆகியவை இதில் அடங்கும். வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின் படி, கணக்கெடுக்கப்பட்ட 14-18 வயதுடையவர்களில் ஏறக்குறைய பாதி பேருக்கு தொழில் ஆர்வமுள்ளவர்கள் அந்தத் தொழிலில் பணிபுரியும் வேறு யாரையும் தெரியாது.
2023 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கை கணக்கெடுப்பில் மூன்று மாவட்டங்களில் கணக்குக்கேடுப்பு எடுப்போர் மாணவர்களுடன் கலந்துரையாடி, தொழிற்கல்வி பற்றி 14-18 வயதுடையவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசினர். சீதாபூர் (Sitapur) மற்றும் தாம்தாரியில் (Dhamtari), அலுவலக வேலைகள் கிடைக்காவிட்டால், மாணவர்கள் தொழிற்கல்வியை கடைசி வாய்ப்பாக பார்க்கின்றனர். ஆனால் சோலனில், விஷயங்கள் வேறு விதமாக இருந்தது. ஒன்பதாம் வகுப்பிலிருந்து சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை போன்ற தொழிற்கல்விப் படிப்புகளைக் படிக்க விரும்புகின்றனர். அங்குள்ள மாணவர்கள் இந்தப் படிப்புகளை உற்சாகமூட்டுவதாகக் கண்டறிந்து, அதில் பணியைத் தொடர விரும்பினர். பணியிடத்தில் பயிற்சி, முடித்தவுடன் பெற்ற சான்றிதழ்கள் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அவர்களுக்குப் பிடித்திருந்தது.
தொழில்நுட்ப பயன்பாடு
2023 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கை மற்றும் கிராமப்புற இந்தியாவில் தொடக்கக் கல்வியின் நிலை அறிக்கை (Elementary Education in Rural India) அதிகமான இளைஞர்கள் கைப்பேசி பயன்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் பெரும்பாலும் இந்த தொலைபேசிகளை கற்றலுக்கு பதிலாக வேடிக்கை மற்றும் சமூகவலைதளங்களில் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கற்றுக்கொள்ள உதவ, அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் செவிலியராக விரும்பினால், பள்ளியில் இருக்கும்போதே இணையவழி நர்சிங் படிப்புகளை தேர்ந்து எடுக்கலாம். இதற்கு கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களுக்கு இடையே குழுப்பணி தேவைப்படுகிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் இந்த வாய்ப்புகளை நோக்கி மாணவர்களை வழிநடத்த வேண்டும்
வருடாந்திர கல்வி நிலை அறிக்கை தரவு போன்ற தரவு, கடுமையாகவும் சரியான நோக்கத்துடன் சேகரிக்கப்படும் போது, சிக்கல்களைக் காண்பிக்கும் மற்றும் தீர்வுகளைப் பரிந்துரைக்கும். பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, எங்கு, எப்படி, யாரால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டறிய தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
நீரஜ் திரிவேதி (Neeraj Trivedi) பிரதம் கல்வி அறக்கட்டளையில் நிறுவன செயல்திறன் தலைவராக உள்ளார். வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)) மையத்தில் கணக்கெடுப்பு பிரிவை ஸ்வேதா பூட்டாடா வழிநடத்துகிறார்.