இந்திய வேளாண்மைத் துறையின் 2047-ஐ நோக்கிய பாதை - சூர்யபிரதா மொஹாபத்ரா, சஞ்சீப் போஹித்

 பல சவால்கள் உள்ளன. ஆனால், மேம்படுத்தப்பட்ட வாய்ப்புகளும் உள்ளன. 


இந்தியாவின் நூற்றாண்டு சுதந்திர தினம் 2047-ஆம் ஆண்டில் வரவிருக்கிறது. அதற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய தனிநபர் மொத்த தேசிய வருமானத்தில் (Gross National Income (GNI)) தற்போதைய அளவை விட ஆறு மடங்கு அதிகமாக அதிகரிக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்துவதில் வலுவான கவனம் செலுத்தி, வளர்ச்சிக்கான முழுமையான திட்டம் தேவைப்படுகிறது.


இந்திய விவசாயத்தை மேம்படுத்த, சுற்றுச்சூழலுக்கும் உற்பத்தித்திறனுக்கும் ஏற்ற முறைகளைப் பயன்படுத்த வேண்டும். துல்லியமான விவசாயம், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் சொட்டுநீர் மற்றும் தெளிப்பான் அமைப்புகள் போன்ற நவீன நீர்ப்பாசனம் ஆகியவை முக்கிய அணுகுமுறைகள் ஆகும். உதாரணமாக, பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY)) 78 லட்சம் ஹெக்டேர்களில் நீர் பயன்பாட்டை மேம்படுத்தியுள்ளது மற்றும் 2021 முதல் 2026-ஆம் ஆண்டு வரை ₹93,068 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நீர் மேலாண்மையில் அரசாங்கத்தின் கவனத்தைக் காட்டுகிறது.


இந்தியாவின் விவசாயம் பருவநிலை மாற்றம், நில சேதம் மற்றும் சந்தை அணுகல் சிக்கல்கள் (market access issues) போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)), பயிர் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவி செய்கிறது. 


49.5 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில், ₹1.45 லட்சம் கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் உள்ளதால், விவசாய அபாயங்களை நிர்வகிப்பதற்கான முக்கிய ஆதரவு இதுவாகும்.


2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தை (Electronic National Agriculture Market (eNAM)), தற்போதுள்ள சந்தைகளை மின்னணு தளம் மூலம் இணைக்கிறது. செப்டம்பர் 2023-க்குள், 1,361 மண்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.  1.76 மில்லியன் விவசாயிகள் பயனடைந்தனர் மற்றும் ₹2.88 லட்சம் கோடி மதிப்புள்ள வர்த்தக பரிமாற்றம் நடந்தது. இத்திட்டம் விவசாயிகள் சந்தைகளை எளிதில் அணுகவும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் உதவுகிறது.


ஒரு ஏற்றத்தாழ்வு 


ஏறக்குறைய 46% மக்கள் விவசாயத்தில் வேலை செய்தாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மட்டுமே பங்களிக்கிறது. இது ஏற்றத்தாழ்வுகள்  இருப்பதை வெளிக் காட்டுகிறது. வளர்ச்சிப் போக்குகள் ஒரே மாதிரியாக இருந்தால், இந்த இடைவெளி மோசமாகிவிடும்: ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1991-92-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 6.1% வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3% மட்டுமே வளர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 5.9% ஆகவும், விவசாய உற்பத்தி 3.6% ஆகவும் வளர்ந்தது. 


ஆனால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறைக்கு இந்த வளர்ச்சி விகிதம் போதாது. 2047-ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 7%-8% ஆகக் குறையக்கூடும். இருப்பினும் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படாவிட்டால், அது இன்னும் 30% தொழிலாளர்களுக்கு வேலைகளை வழங்கக்கூடும். தற்போதைய வளர்ச்சி விகிதங்களை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது என்பதை இது காட்டுகிறது. 2023-24-ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  விவசாய வளர்ச்சி 7.6%-ஆக இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வழக்கத்திற்கு மாறான மழை காரணமாக விவசாயத்தில் 0.7% மிகக் குறைந்த வளர்ச்சி இருந்தது.


இந்தியாவின் மக்கள்தொகை 2030-ல் 1.5 பில்லியனாகவும், 2040-ல் 1.59 பில்லியனாகவும் இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் (United Nations) சபை கணித்துள்ளது. 

இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மிக முக்கியமானதாக இருக்கும். 0.85% மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தின் காரணமாக உணவுத் தேவை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.85% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் உண்மையான தனிநபர் வருமானம் 2011-12 முதல் 2021-22 வரை 41% அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2023-க்குப் பிறகு, செலவின நெகிழ்ச்சித்தன்மை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தனிநபர் செலவினத்தில் 5% அதிகரிப்பு தேவையின் 2% வளர்ச்சியுடன் தொடர்புடையது. இறைச்சி தேவை 5.42 சதவீதமும், அரிசி தேவை 0.34 சதவீதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள, உணவு மற்றும் உர மானியங்களை குறைப்பதும், சேமிப்பை விவசாய ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படுத்துவதும் முக்கியம்.


 சில முயற்சிகள் 


நிலையான விவசாய வளர்ச்சியை மேம்படுத்த பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2019-ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)), விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 மூன்று தவணைகளில் வழங்குகிறது. இந்த திட்டம் 11.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கிறது.  மற்றொரு முக்கிய திட்டம்  மண் வள அட்டை (Soil Health Card (SHC)) திட்டம், மண்ணின் ஊட்டச்சத்து பயன்பாட்டை மேம்படுத்துவதையும், விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


23-கோடிக்கும் அதிகமான  மண் வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மண் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த முக்கிய நுண்ணறிவுகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. அரசாங்கம் 2023-ஆம் ஆண்டில் சர்வதேச சிறுதானியங்கள் (International Year of Millets) ஆண்டை ஊக்குவித்தது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சத்தான சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது.


வேளாண் உள்கட்டமைப்பு நிதி, ₹1 லட்சம் கோடி நிதி நிதியுதவியுடன், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் உதவுகிறது. 


மூன்று ஆண்டுகளுக்குள், வேளாண் உள்கட்டமைப்பு துறையில் ரூ.30,030 கோடி திரட்டும் 38,326 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டங்கள் 5.8 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நல்ல விலையின் காரணமாக விவசாயிகளின் வருமானத்தை 20%-25% அதிகரித்துள்ளது.


கூடுதலாக, கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராமங்களின் களஆய்வு மற்றும் வரைபடமிடல்  (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas (SVAMITVA)) முன்முயற்சி கிராமப்புறங்களில் வெளிப்படையான சொத்து உரிமையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2023-ல் 1.6 கோடிக்கும் அதிகமான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டு, நிலப் பாதுகாப்பை மேம்படுத்தி, விவசாயிகள் கடன் பெற உதவுகின்றன.

 

ராஜதந்திர (Strategic planning) திட்டமிடல் 


2047 வரையிலான விவசாயத்திற்கான அரசாங்கத்தின் திட்டம் பல முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது: 2047-48-ல், உணவு தானிய தேவை 402 மில்லியன் டன்கள் முதல் 437 மில்லியன் டன்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்த தேவையை விட உற்பத்தி 10%-13% அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவையை நிலையான முறையில் பூர்த்தி செய்ய, விவசாய ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் கொள்கைகளில் பெரிய முதலீடுகள் தேவைப்படுகின்றன, பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்காக ₹20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாய கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.


இருப்பினும், இந்த தேவையை நிலையான முறையில் பூர்த்தி செய்ய, விவசாய ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை ஆதரவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் அவசியம். 

2024-25-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், இலக்கு விவசாயக் கடனுக்காக ₹20 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும் வேளாண் நிதியைத் அறிமுகப்படுத்துகிறது. இது விவசாய வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவைக் காட்டுகிறது.



2047-ஆம் ஆண்டுக்கான பாதை இந்திய வேளாண்மைத் துறைக்கு சவால்களையும் வாய்ப்புகளையும் அளிக்கிறது. நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், புத்திசாலித்தனமான உத்திகளைச் செயல்படுத்துவதன் மூலமும், இந்தியா விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை (sustainable development) அடையவும் முடியும்.


சௌர்யபிரதா மொஹாபத்ரா மற்றும் சஞ்சிப் போஹித், புது தில்லியின் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி குழுவில் (National Council of Applied Economic Research (NCAER)) உள்ளனர்.



Original article:

Share: