வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கான மகாத்மா காந்தியின் அழைப்பு ஏராளமான இளைஞர்களை போரட்டங்களில் பங்கேற்கத் தூண்டியது மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் தேசியவாத ஆர்வத்தின் மையமாக மாறியது. தேசிய தலைநகரில் தெருக்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்தனர். அரசாங்கத்தின் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சாதாரண குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 8, 1942-ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி பம்பாயில் தனது உரையில், 'செய் அல்லது செத்துமடி' எனக் குறிப்பிட்டார். இது இந்தியாவின் மிக முக்கியமான வெகுஜன போராட்டங்களில் ஒன்றான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அடுத்த நாளில், காந்தியும் பிற மூத்த தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த இயக்கம் வேகம் பெற்று, 'ஆகஸ்ட் புரட்சியாக' மாறியது. இது 1857-ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்குப் பிறகு மிகவும் கணிசமான கிளர்ச்சியாகும். இந்த இயக்கம் குறிப்பாக இளைஞர்களை உற்சாகப்படுத்தியது. பல மாணவர்கள் போராட்டத்தில் சேர தங்கள் படிப்பை கைவிட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், டெல்லி பல்கலைக்கழகம் தேசியவாத ஆர்வத்தின் மையமாக மாறியது. மாணவ, மாணவிகள் முன்னணியில் இருந்தனர். தேசிய தலைநகரில் தெருக்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்தனர்.
டெல்லி பல்கலைக்கழக செயல்பாட்டின் வேர்கள்
1930-ஆம் ஆண்டுகளில், டெல்லி பல்கலைக்கழகம் காஷ்மீரிலிருந்து அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. வைஸ் ரீகல் லாட்ஜ் (Viceregal Lodge), பல்கலைக்கழக அலுவலகங்கள் மற்றும் நூலகம் ஆகியவை அதன் முக்கிய கட்டிடங்களாக இருந்தன. பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவியலில் ஹானர்ஸ் மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கத் தொடங்கியது. பின்னர் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸை ( Delhi School of Economics) நிறுவிய வி.கே.ஆர்.வி.ராவ், முதல் முழுநேர பொருளாதார பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில், டி.எஸ்.கோத்தாரி இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
வரலாற்றாசிரியர் அமர் ஃபரூக்கி, ஒரு நேர்காணலில், "1942-ஆம் ஆண்டுகளில், பல்கலைக்கழகம் இன்னும் துண்டு துண்டாக இருந்தது. இன்று நமக்குத் தெரிந்த வளாகம் இன்னும் நிறுவப்படவில்லை. செயின்ட் ஸ்டீபன்ஸ், இந்து கல்லூரி, ராம்ஜாஸ் கல்லூரி, இந்திரபிரஸ்தா கல்லூரி (IP College) மற்றும் இப்போது ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி ஆகியவை அப்போது நிறுவனங்களில் அடங்கும். முதுகலை மட்டத்தில் சுமார் மூன்று பெண்கள் உட்பட மிகக் குறைந்த மாணவர்களே இருந்தனர். இருப்பினும், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (All India Students’ Federation (AISF)) டெல்லியில் ஒரு பிரிவை நிறுவியதன் மூலம் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்கள். 1940-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் டெல்லியில் ஒரு அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு அமர்வை வழி நடத்தியபோது ஒரு முக்கிய தருணம் வந்தது, இது மாணவர்களின் செயல்பாட்டை கணிசமாக உயர்த்தியது.
அகில இந்திய பெண்கள் மாநாடு (All India Women’s Conference) மற்றும் டெல்லி மகிளா சங்கம் (Delhi Mahila Sangh) போன்ற பிற அமைப்புகளும் தோன்றின. இது சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதற்கு வழிவகுத்தது.
மாணவர் கிளர்ச்சி
காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டது முதல் பெரிய மாணவர் வேலைநிறுத்தத்தைத் தூண்டியது. செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் இந்து கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு பேரணியை ஏற்பாடு செய்தனர். இதில் பேராசிரியர் ராவ் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிற ஆசிரிய உறுப்பினர்கள் அடங்குவர். வளாகத்திலிருந்து சாந்தினி சவுக் வரை சென்றனர். இது அலிப்பூர் சாலை மற்றும் இந்திரபிரஸ்தா கல்லூரி (IP College) வழியாக சென்றது, அங்கு பெண்கள் மாணவர்களை வெளியே நிறுத்த அதிகாரிகள் வாயில்களை பூட்டியிருந்தனர். மனம் தளராத அந்தப் பெண்கள் ஊர்வலத்தில் கலந்துகொள்ள சுவர்கள் ஏறிக் குதித்தனர்.
இந்திரபிரஸ்தா கல்லூரி (IP College), மாணவர்கள் தேசிய இயக்கங்களில் ஆழமாக ஈடுபட்டிருந்தனர் என்று காப்பக சான்றுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தலைவர்களின் உரைகளில் கலந்து கொண்டனர். மறியல் அணிவகுப்புகளில் இணைவதற்காக வகுப்புகளைப் புறக்கணித்தனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை விவாதிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் கல்லூரி புல்வெளிகளில் கூடினர். பல்கலைக்கழகத்திற்குள்ளேயே கதரை ஊக்குவிப்பதற்கான தீவிர பிரச்சாரமும் இருந்தது. வரலாற்றாசிரியர் மீனா பார்கவா சொல்வது போல், "நீங்கள் இதை தேசிய உணர்வு, பகிரப்பட்ட தேசபக்தி மற்றும் அவர்களின் தலைவர்களுடன் ஒற்றுமையின் வலுவான உணர்வு ஆகியவற்றின் பின்னணியில் பார்க்க வேண்டும்."
இந்திரபிரஸ்தா கல்லூரி (IP College) இதழின் 1974-ஆம் ஆண்டு பதிப்பான கோல்டன் ஓரியோல் (Golden Oriole), 1942 முதல் 1946-ஆம் ஆண்டு வரை கல்லூரியில் படித்த சுசரிதா சென்குப்தா பின்வருமாறு எழுதினார், "திரும்பிப் பார்க்கும்போது, கல்லூரியில் கழித்த ஆண்டுகள் மிகவும் பரபரப்பானவை என்று நான் நினைக்கிறேன். நாங்கள் '42 புரட்சியில்' அரசியல் ரீதியாக ஈடுபட்டிருந்தோம், கோஷங்களை எழுப்பினோம், நீண்ட கூட்டங்களை நடத்தினோம், எண்ணற்ற தேசபக்தி பாடல்களைப் பாடினோம். எங்கள் தலைவர்களின் வார்த்தைகளால் எங்கள் மனங்கள் உற்சாகமடைந்தன. ஆங்கிலேயே ஆட்சி வகுத்த விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறுவதற்கான எந்த வாய்ப்பையும் நாங்கள் ஒருபோதும் தவறவிடவில்லை. எங்கள் மீது முழு அனுதாபம் கொண்டிருந்த கல்லூரி அதிகாரிகள், பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற பயத்தின் காரணமாக புரட்சியில் முனைப்புடன் பங்கு கொள்ள முடியவில்லை. இந்திய தேசிய ராணுவம் விசாரணைகள் மீண்டும் எங்கள் உற்சாகத்தைத் தூண்டின. 'கடம் கடம் பதாயே ஜா' (Kadam Kadam Badhaye Ja) பாடல் அனைவரின் உதடுகளிலும் இருந்தது. ஒவ்வொரு செய்திக்காகவும் மூச்சு விடாமல் காத்திருந்தோம். மாவீரர்கள் விடுதலை செய்யப்பட்டபோது எத்தகைய மகிழ்ச்சி அடைந்தோம்!"
1942-ஆம் ஆண்டில் பாட்டியாலாவில் 10 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தியது. இதில் இந்திரபிரஸ்தா கல்லூரி (IP College) மாணவர்களுடான வலைப்பந்து போட்டியும் அடங்கும். இரண்டாம் இடத்தைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், பெண்கள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் காந்தி மற்றும் பிற தலைவர்களின் கைது பற்றி அறிந்ததும், அவர்கள் ஆங்கிலேய எதிர்ப்பு கோஷங்களை எழுப்ப இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினர்.
அருணா ஆசப் அலி
"லேடி லின்லித்கோ (Lady Linlithgow), விசரின் (Vicerine), இந்த நிகழ்வில் குறிப்பிடத்தக்க வகையில் கலந்து கொண்டார். 1939-ஆம் ஆண்டில் கல்லூரிக்காக அலிப்பூர் ஹவுஸ் (Alipore House) என்ற புதிய கட்டிடத்தை வாங்குவதில் இவர் முக்கியப் பங்காற்றினார். கல்லூரி அதே கட்டிடத்தில் தொடர்ந்து அமைந்துள்ளது. மானியங்களை இழக்கும் அபாயம் மற்றும் அவர்களின் கொள்கைகளில் எச்சரிக்கைகள் போன்ற சாத்தியமான விளைவுகள் இருந்தபோதிலும், மாணவர்கள் தடையின்றி இருந்தனர். மாணவர்கள் சுதந்திர இயக்கத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டனர், விசரினின் அதிகாரம் அவர்களைத் தடுக்கவில்லை" என்று பார்கவா கூறுகிறார்.
பல இளம் பெண்களும் அருணா ஆசப் அலி போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டனர். அருணா இன்குலாப் உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டார். அருணா ஆசப் அலி, ராம் மனோகர் லோகியாவுடன் இணை ஆசிரியராக இருந்தார். டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தலைநகர் முழுவதும் பிரிட்டிஷ் எதிர்ப்பு சுவரொட்டிகளை ஒட்ட உதவுவதன் மூலம் அவரது முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர். "அருணா ஆசப் அலியின் போராட்டங்கள் டெல்லியில் மாணவர்களை அணிதிரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தன" என்று பேராசிரியர் ஃபரூக்கி கூறுகிறார்.
அரசின் பின்னடைவு
மாரிஸ் லின்போர்ட் குவயர் (Maurice Linford Gwyer) 1938 முதல் 1950 வரை டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். இவர், பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பை மாற்றியமைக்கும் அதேவேளையில், ஆங்கிலேய ஆட்சியுடனான அவரது தொடர்பு இந்த சீர்திருத்தங்களை மாணவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆக்கியது. இதனால் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக, பட்டங்களை பறிமுதல் செய்தல், போராட்டங்களின் போது கண்ணீர் புகை மற்றும் தடியடி உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்தது. இதில், ராம்ஜாஸ் கல்லூரி (Ramjas College) மாணவர்கள் தீ வைப்பு மற்றும் நாசவேலைக்கு பொறுப்பேற்றனர்.
மாணவர்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறினால், மத்திய வருவாய்த் துறையிடமிருந்து மானியங்களை இழக்க நேரிடும் என்று இந்து, ராம்ஜாஸ் மற்றும் ஐபி கல்லூரியின் நிர்வாக அமைப்புகளுக்கு கல்வித் துறை எழுதிய கடிதங்கள் எச்சரிக்கை விடுத்தன. "இந்த அச்சுறுத்தல் நிர்வாக அமைப்புகள் (governing bodies) மற்றும் முதல்வரைக் (principals) கவலையடையச் செய்திருந்தாலும், அது மாணவர்களைத் தடுக்கவில்லை. தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும், மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்" என்று பார்கவா கூறுகிறார்.
பெண்கள், கல்வி மற்றும் அரசியல் : பெண்கள் இயக்கம் மற்றும் டெல்லியின் இந்திரபிரஸ்தா கல்லூரி-2005 (Women, Education and Politics: The Women’s Movement and Delhi’s Indraprastha College) என்ற புத்தகத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சாதாரண குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அவர் கூறுகிறார். இதில் இந்து கல்லூரியைச் சேர்ந்த 16 மாணவர்கள், இந்திரபிரஸ்தாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள், ராம்ஜாஸ் கல்லூரியைச் சேர்ந்த இருவர் மற்றும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரி (Shri Ram College of Commerce(SRCC)) சேர்ந்த ஒருவர் அடங்குவர். இந்த கடுமையான நடத்தைக்குப் பிறகும், அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றுவது மற்றும் டெல்லி சிறைக்குள் கூட்டங்களை நடத்துவது உட்பட குறிப்பிட்ட செயல்பாட்டைத் தொடர்ந்தனர். பின்னர் ஆங்கிலேய அரசாங்கம் அவர்களை லாகூர் சிறைக்கு மாற்றியதுடன், மேலும், அங்கு அவர்களின் போராட்டங்கள் தொடர்ந்தன. இவர்களை விடுவிக்கப்பட்ட பிறகு, அரசு உத்தரவுப்படி மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் துணைவேந்தரிடம் முறையிட்டனர், அவர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்வதாக உறுதியளித்த நிபந்தனையின் பேரில் உத்தரவை நீக்க ஒப்புக்கொண்டனர்.
மாணவர்களின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் அரசு அடக்குமுறைக்கு மற்றொரு உதாரணம் செப்டம்பர் 1942-ல் கோதுமை உணவுகள் ரத்து செய்யப்பட்டது. இது இந்துக் கல்லூரி, ராம்ஜாஸ் கல்லூரி (Ramjas College) மற்றும் ஐபி கல்லூரியில் உள்ள விடுதிகளைப் பாதித்தது. முஸ்லீம் வீரர்களுக்கு ராக்கிகளை அனுப்பும் இந்திரபிரஸ்தா கல்லூரியின் (IP College) முயற்சிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஓரளவு எடுத்துள்ளது. இந்த முயற்சி ஒற்றுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்க ஏற்கனவே பணியாற்றிய அரசாங்கம் அதை எதிர்மறையாகப் பார்க்கிறது. மாணவர்கள் சவால்களை எதிர்கொண்டாலும், சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினர். 1943-ம் ஆண்டில், அவர்களின் வருடாந்திர நாள் கொண்டாட்டங்களுக்கு கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது. அவர்கள் ஒன்று திரண்டு நன்கொடைகளை சேகரித்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
இந்திரபிரஸ்தா கல்லூரியின் (IP College) மாணவர் சங்கமும் அரசாங்கத்தின் பின்னடைவு குறித்து முதல்வரின் (principals) எச்சரிக்கைகளை மீறி சர்க்கா சங்கத்தை (Charkha Association) நிறுவியது. நூற்பு மற்றும் நெசவு கற்பிக்க அவர்கள் சர்க்கா வகுப்புகளை ஏற்பாடு செய்தனர். 1944 வாக்கில், சங்கம் பல சர்க்காக்களைப் பெற்றது. இந்த சர்க்காக்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து நன்கொடைகள் மூலம் பெறப்பட்டது. இது இப்போது தேசிய சேவைத் திட்டம் என்று அழைக்கப்படும் சமூக சேவை கழகத்தின் கீழ் செய்யப்பட்டது.
கோல்டன் ஓரியோலில் (Golden Oriole) ஒரு முன்னாள் மாணவர் குறிப்பிட்டது போல, "முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு வகுப்புகளில், விளையாட்டுகள், விவாதங்கள், நாட்டுப்புற நடனம் போன்றவை போதுமானதாக இருந்தன. இருப்பினும், 1942 இல் தொடங்கி, கூடுதல் பாடநெறி நடவடிக்கைகள் வளர்ந்தன. இந்த விரிவாக்கம் தேசிய உணர்வுகளாலும், ‘சர்க்கா’ இயக்கத்தாலும் உந்தப்பட்டது. சிறந்த தேசியவாதிகளின் செய்திகளைப் பற்றி விவாதிக்கவும் புரிந்துகொள்ளவும் ஆய்வு வட்டாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கூடுதலாக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் (Quit India Movement) போது மறியல் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதற்காக சில சமகாலத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திரபிரஸ்தா கல்லூரி (IP College) முதல்வர் கலாவதி குப்தா, கல்லூரி திறந்திருந்தாலும், மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு பதிலாக ஹர்த்தால்களில் (hartals) பங்கேற்பது, கூட்டங்களை ஏற்பாடு செய்வது மற்றும் மறியல் செய்வதில் ஈடுபடுவது குறித்து பெற்றோர்களுக்கு தெரிவித்ததாக காப்பக சான்றுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். இந்திரபிரஸ்தா கல்லூரியில் (IP College) திருமணமான உளவியல் பேராசிரியரான நிர்மலா ஷெர்ஜுங், திருமணமாகாதவர் என்ற போர்வையில் போராட்டங்களில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பங்கேற்பது குறித்து புகார்கள் எழுந்தபோது, அவர் அங்கு இல்லை என்று மறுக்கப்பட்டார். மேலும் முதல்வர், ஆதாரங்கள் இருந்தபோதிலும், அவரை நம்ப முடிவு செய்தார். பார்கவாவின் கூற்றுப்படி, கல்லூரி முதன்மையாளரின் பதில் உண்மையான நோக்கத்தை விட நெறிமுறையைப் பின்பற்றுவதைப் பற்றியது. ஏனெனில், அவர் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் அடிப்படை ஒற்றுமையைப் பேணும் போது அரசாங்க அழுத்தத்தின் கீழ் செயல்பட வேண்டியிருந்தது. கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்விப் பொறுப்புகளை சமநிலைப்படுத்தும் அதே வேளையில், மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்த்து, அரசாங்கத்தைத் தூண்டிவிடக்கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது என்று ஃபரூக்கி மேலும் கூறுகிறார்.
"1942 ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்டத்திற்கான அழைப்பு இளைஞர்களால் எதிர்க்க முடியாத அளவுக்கு வலுவாக இருந்தது. வகுப்பறைகள் காலியாக இருந்தன, அதற்கு பதிலாக முக்கியமாக மாணவர்கள் தலைவர்களால் உரையாற்றப்பட்ட மாணவர் கூட்டங்கள் இந்திரபிரஸ்தா கல்லூரி (IP College) புல்வெளிகளில் வழக்கமாக நடத்தப்பட்டன. அவரது மாணவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றால் மானியம் நிறுத்தப்படும் என்று தலைமையாசிரியர் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தார். அதற்கு பதிலுக்கு அவர், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகையை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை மிரட்டினார். ஆனால், அவரது மிரட்டல்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. நாங்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டோம், தெரு வீதியாக சென்று கோஷங்களை எழுப்பினோம், கைது செய்யப்பட்டோம். கல்லூரி முதல்வரும், அலுவலக ஊழியர்களும் குழப்பமடைந்தனர். ஏனென்றால் நாங்கள் யாரையும் இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்கவில்லை."
ஒரு நாள் மதியம், இருபது பேர் கொண்ட குழு, அடுத்த நாளுக்கான திட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தது. ஊழியர்களில் ஒருவர் அமைதியாக அவர்களுடன் சேர்ந்து தேசிய நோக்கத்திற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டத் தொடங்கியபோது அவர்கள் தங்கள் விவாதங்களில் முழுமையாக உள்வாங்கப்பட்டனர். ஏகாதிபத்திய சக்திகளைக் கண்டித்தும், இயக்கத்திற்கு அகிம்சை அணுகுமுறையைப் பரிந்துரைத்தும் ஏறக்குறைய ஒரு மணி நேரம் வேட்டி மற்றும் குர்தா (அவரது வழக்கமான உடை, ஆண்டு முழுவதும்) அணிந்திருந்தார். பின்னர் இறுதிக் குறிப்பு வந்தது, மாணவர்கள் முழு மனதுடன் சுதந்திரப் போராட்டத்தில் மூழ்கும் முன் படிப்பை முடிப்பதே சிறந்த பாடமாகும், அது குடும்பங்களையும் நிறுவனங்களையும் பேரழிவிலிருந்து காப்பாற்றும். அவரது முறைசாரா பேச்சு எங்கள் இளம் மனதில் விரும்பிய தாக்கத்தை உருவாக்கியது, நாங்கள் அவரது ஆலோசனைகளை சிறிய குழுக்களாகவும் பின்னர் பெரிய குழுக்களாகவும் விவாதித்தோம். தேவையானவை செய்யப்பட்டுள்ளன, வகுப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பியது, எங்கள் கணித ஆசிரியர் கோஸ்வாமி அவர்களுக்கு நன்றி. அவர் மீதான எங்கள் மரியாதை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்திரபிரஸ்தா கல்லூரியின் வரலாறுகள்: ஒரு புதிய பார்வை என்ற கட்டுரையில், ஆராய்ச்சியாளரும் ஐபி கல்லூரி முன்னாள் மாணவருமான நிவேதிதா துலி, கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் அரசியல் ஈடுபாட்டை ஊக்கப்படுத்தவில்லை. அதே நேரத்தில், கல்வி அரசியலில் இருந்து தனித்து இருக்க வேண்டும் என்ற கருத்தை ஊக்குவிக்கிறது என்று வாதிடுகிறார்.
"ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில், முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட நிலைப்பாடு, அவர்கள் மாணவர்களுக்கு அனுதாபம் காட்டினார்களா அல்லது ஆங்கிலேயருடன் இணைந்தார்களா என்பது பற்றிய எந்தவொரு ஊகமும் முற்றிலும் ஊகமானது" என்று அவர் indianexpress.com-ல் கூறுகிறார்.
மிராண்டா ஹவுஸின் இணை பேராசிரியர் அபா தேவ் ஹபீப், 1942-ல் அரசியல் செயல்பாடுகளை முழுமையாக ஆதரிப்பதில் தயக்கம் இருந்தது என்று கூறுகிறார். நிறுவனம் மூடப்படும் என்ற அச்சம் காரணமாக இந்த தயக்கம் ஏற்பட்டது. வரையறுக்கப்பட்ட மானியங்களை இழப்பது பற்றிய கவலையும் இருந்தது. நிர்வாகிகள் தேசியப் பொறுப்புகளையும், புதிதாக நிறுவப்பட்ட கல்லூரி குறித்த கவலைகளையும் சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது. ஐபி கல்லூரி போன்ற நிறுவனங்களின் சிறுபான்மை நிலை எச்சரிக்கையான நடத்தைக்கு வழிவகுத்தது. ஏனெனில், அரசாங்கத்தின் பழிவாங்கல் இந்தியாவில் பெண்களின் கல்வியின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்று அவர்கள் கவலைப்பட்டனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அபா கூறுகையில், "உதவித்தொகை மற்றும் கட்டணம் போன்ற பிரச்சினைகள் தொடர்பான சமீபத்திய வேலைநிறுத்தங்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைப் போலவே குறிப்பிடத்தக்கவை. மக்கள்தொகையில் பாதி பேர் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கும் ஒரு நாட்டில், நாடு பலவீனமடைவதைத் தடுக்க சுகாதாரம் மற்றும் கல்வி பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது முக்கியம். கல்லூரி விழாக்களின் போது துன்புறுத்தலுக்கு எதிராக இந்திரபிரஸ்தா கல்லூரி (IP College) மற்றும் மிராண்டா ஹவுஸைச் (Miranda House) சேர்ந்த பெண்கள் நடத்திய போராட்டங்கள் போன்ற கடந்த போராட்டங்களின் போது நிர்வாக எதிர்ப்பை எதிர்கொண்டாலும், மாணவர் செயல்பாடு இன்றியமையாததாக உள்ளது. தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தி, தங்கள் இடத்தைப் பாதுகாக்கும் இளம் பெண்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அத்தகைய மீறல்களை ஒடுக்குவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை அவர்களின் நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன."
காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கவில்லை என்றாலும், டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் தலைநகரில் உள்ள பிற உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்து வந்தன. எந்தவொரு தேசத்தின் எதிர்காலமும் அதன் இளைஞர்களிடம்தான் உள்ளது. இது 82 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மாணவர்கள் இந்த உண்மையை தெளிவாக நிரூபித்தனர்.
சுசரிதா சென்குப்தாவின் பதிவு இந்த உணர்வை எடுத்துக் காட்டுகிறது என்று அவர் எழுதுகிறார். மீண்டும் 1945-ல், சிறையில் இருந்த எங்கள் தலைவர்கள் விடுவிக்கப்பட்டபோது, நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் கலந்து கொள்ள திட்டமிட்டோம். இருப்பினும், நாங்கள் கல்லூரியை விட்டு வெளியேறியபோது, ஏறக்குறைய போக்குவரத்து வசதி இல்லாததைக் கண்டோம். என்றாலும், போக்குவரத்து வசதி இல்லாததால் எங்கள் உற்சாகம் குறையவில்லை. ராம்லீலா மைதானத்தை நோக்கி நடந்தோம். பண்டிட் நேரு, மௌலானா ஆசாத், திருமதி நாயுடு, சர்தார் படேல் மற்றும் ஆசப் அலி உள்ளிட்ட எங்கள் அன்பான தலைவர்களைப் பார்க்கவும் கேட்கவும் முடிந்ததால் எங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது.