இந்தியாவில் கூட்டாட்சி ஆட்சி (federal structure) முறை என்ன? சட்டப்பிரிவு 355 மற்றும் 356 கூட்டாட்சியை எவ்வாறு பாதிக்கின்றன?
கூட்டாட்சி அமைப்பு (federal set-up) என்றால் என்ன?
இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பு கொண்ட நாடு. ஒன்றிய மற்றும் மாநிலங்கள் என இரண்டு நிலை அரசாங்கங்களைக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையில் அதிகாரத்தைப் பிரிக்கிறது. இதன் படி, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் கடமையாகும்.
அவசரகால விதிகள் (emergency provisions) என்றால் என்ன?
அரசியலமைப்பின் XVIII பகுதியில் அவசரகால விதிகள் இடம்பெற்றுள்ளன. சட்டப்பிரிவுகள் 355 மற்றும் 356 ஆகியவை அவசர காலங்களில் மாநில அரசு விவகாரங்களில் கவனம் செலுத்துகின்றன. சட்டப்பிரிவு 355, ஒவ்வொரு மாநிலத்தையும் வெளிப்புற ஆக்கிரமிப்புகள் மற்றும் உள்நாட்டுப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பது குறித்த ஒன்றிய அரசின் கடமைகளை சுட்டிக்காட்டுகிறது. அனைத்து மாநில அரசுகளும் அரசியலமைப்பை பின்பற்றுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
356-வது சட்டப்பிரிவு ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைப் போல இல்லாமல், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உதவுகிறது. ஆனால், மாநில அரசாங்கங்களை அகற்றுவதற்கான விதிகள் அரசியலமைப்பில் இல்லை.
356-வது பிரிவின் கீழ் மாநில நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிட வேண்டுமானால், அது அரசியலமைப்புச் சட்டம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டிருக்கும் சில கடமைகளின் கீழ் இருக்க வேண்டும் என்று நமது அரசியலின் கூட்டாட்சித் தன்மையை மனதில் வைத்து, 355-வது பிரிவின் நோக்கத்தை பி.ஆர். அம்பேத்கர் விளக்கினார். எனவே, சட்டப்பிரிவு 356 முறையான அதிகாரம் இல்லாமல் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக 355 சேர்க்கப்பட்டது.
நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பு வழங்கியுள்ளன?
டாக்டர் அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையின்போது, 355 மற்றும் 356 வது பிரிவுகள் ஒருபோதும் பயன்படுத்தப்படாது மற்றும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் என்று நம்பினார். இருப்பினும், பிரிவு 356 பல முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டது. மக்களவைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் அல்லது மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் அகற்றப்பட்டன.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் (1994) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகுதான் இதுபோன்ற தவறான பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கு சாதாரண சீர்குலைவில் இருந்து வேறுபடுத்தி, அரசியலமைப்பு இயந்திரம் செயலிழந்தால் மட்டுமே 356-வது பிரிவு அமல்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்றும், அரசியல் காரணங்களுக்காக அதை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக பிரிவு 355-ன் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் எதிர் இந்திய ஒன்றிய அரசு (the State of Rajasthan vs Union of India case) வழக்கில் (1977), நீதிமன்றம் பிரிவு 355-ஐ சுருக்கமாக விளக்கியது. அவசர காலங்களில் 356-வது பிரிவைப் பயன்படுத்துவதை மட்டுமே நியாயப்படுத்தியது. இருப்பினும், நாகா மக்கள் மனித உரிமைகள் இயக்கம் எதிர் இந்திய ஒன்றியம் (Naga People’s Movement of Human Rights vs Union of India) (1998) வழக்கில், சர்பானந்தா சோனோவால் எதிர் இந்திய ஒன்றியம் (2005), மற்றும் எச்.எஸ்.ஜெயின் எதிர் இந்திய ஒன்றியம் (1997) போன்ற பிற்கால நிகழ்வுகளில், இந்த விளக்கம் மாறியது. நீதிமன்றம் பிரிவு 355-ன் நோக்கத்தை விரிவுபடுத்தியது. இப்போது, பிரிவு 355-ன் கீழ், ஒன்றிய அரசு சட்டபூர்வமாகவோ அல்லது அரசியலமைப்பு ரீதியாகவோ எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். அரசைப் பாதுகாப்பதும், அதன் நிர்வாகம் அரசியலமைப்பை பின்பற்றுவதை உறுதி செய்வதும் இதில் அடங்கும்.
பரிந்துரைகள் என்ன?
ஒன்றிய-மாநில உறவுகளுக்கான சர்க்காரியா ஆணையம் (1987), அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கான தேசிய ஆணையம் (2002), மற்றும் ஒன்றிய -மாநில உறவுகளுக்கான புஞ்சி ஆணையம் (2010) ஆகிய அனைத்தும் பிரிவு 355, மாநிலங்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் கடமை மற்றும் அதிகாரம் ஆகிய இரண்டையும் ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அனுமதிக்கும் பிரிவு 356, மிகவும் தீவிரமான மற்றும் அவசரமான சூழ்நிலைகளில் கடைசி முயற்சியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினார்.
மணிப்பூரில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக பெரிய அளவிலான வன்முறை நடந்துள்ளது. காவல்துறை ஆயுதக்கிடங்குகளில் இருந்து வெடிமருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பாவி மக்களின் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதை சாதாரண சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று பார்க்க முடியாது. இருப்பினும் பிரிவு 356 அமல்படுத்தப்படவில்லை. இது அரசியல் காரணங்களால் இருக்கலாம். குறிப்பாக ஒரே கட்சி ஒன்றிய மற்றும் மாநில இரண்டையும் ஆட்சி செய்வதால் இது போன்ற சூழல் ஏற்படும். இருப்பினும், பிரிவு 355-ன் கீழ், தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இந்த முயற்சிகள் விரைவில் இயல்புநிலையை மீட்டெடுக்க உதவும்.
ரங்கராஜன் ஆர்.முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, ‘Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்.