மேற்கு ஆப்பிரிக்கா மீது இந்தியாவின் இராஜதந்திர கவனம் -ஹர்ஷ் வி.பந்த், சமீர் பட்டாச்சார்யா

 நிதியளிப்பு மற்றும் உட்கட்டமைப்பை உருவாக்குவதில் சீனாவின் ஆர்வம் அதிகரித்துள்ள போதிலும், இந்தியா இன்னும் நைஜீரியாவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக உள்ளது.


கடந்த மாதம், G-20 உச்சி மாநாட்டிற்காக பிரேசில் செல்லும் வழியில் நைஜீரியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு இராஜதந்திர பயணத்தை மேற்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் இரண்டு பதவிக் காலத்தில் உகாண்டா உட்பட 10 ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றார். உகாண்டாவில், ஆப்பிரிக்கா மீதான இந்தியாவின் பார்வையை கோடிட்டுக் காட்டும் வரலாற்று உரையை நிகழ்த்தினார். இருப்பினும், அவரது நைஜீரியா பயணம் மிகவும் முக்கியமானது. அவர் மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும்போது ஆப்பிரிக்காவுக்குச் செல்வது இதுவே முதல் முறை. மேலும், 17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

 

அபுஜா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிபர் போலா அகமது டினுபு வரவேற்றபோது நைஜீரியா இந்தியாவுக்கு மரியாதை காட்டியது. பின்னர், மோடிக்கு நைஜீரியாவின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (Grand Commander of the Order of the Niger) விருது வழங்கப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பிறகு, 1969 முதல் இந்த விருதைப் பெறும் இரண்டாவது வெளிநாட்டுத் தலைவர் ஆவார். இது இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய முக்கியத்துவத்தையும், உலகளாவிய தெற்கின் ஆதரவிற்காக பிரதமர் மோடி பெற்றுள்ள நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

 

இந்தியா-நைஜீரியா உறவு 


நைஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். இது மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பெரிய சக்தி மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நைஜீரியா ஒரு ஜனநாயகத் தலைமையாகக் கருதப்படுகிறது மற்றும் ஆப்பிரிக்காவில் மோதல்களைத் தீர்க்க உதவியது. நைஜீரியாவுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவது நைஜீரியாவைத் தாண்டி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

அதிபர் டினுபுவுடனான தனது கலந்துரையாடலில், நைஜீரியாவுடனான தனது கூட்டாண்மைக்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தினார். பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார். பயங்கரவாதம், பிரிவினைவாதம், கடற்கொள்ளையர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுடன் நைஜீரியாவின் சவால்களைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். குறிப்பாக, போகோ ஹராம் போன்ற குழுக்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் இணைந்து செயல்படுவது ஆகியவை இதில் அடங்கும்.


பிரதமர் மோடியின் பயணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாகோஸுக்கு இந்திய பாதுகாப்புத் துறைக் குழுவின் வருகையைத் தொடர்ந்து வருகிறது. அந்த பயணத்தின் போது, ​​அதிபர் டினுபு இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினார். எகிப்து, அல்ஜீரியா, மொராக்கோ, தான்சானியா மற்றும் மொசாம்பிக் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ஆப்பிரிக்காவிற்கான முக்கியமான பாதுகாப்பு சப்ளையராக இந்தியா மாறி வருகிறது.


இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான 60 ஆண்டுகால நெருக்கமான கூட்டுறவில், நைஜீரியாவின் வளர்ச்சிக்கு இந்தியாவும் இரண்டு முக்கிய வழிகளில் ஆதரவளித்துள்ளது. இந்தியா $100 மில்லியன் மதிப்பிலான சலுகைக் கடன்களை வழங்கியுள்ளது மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை வழங்கியுள்ளது. இந்த கூட்டாண்மை இந்தியாவின் தனித்துவமான அணுகுமுறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது "இந்திய வழி" (India Way) என்று அழைக்கப்படுகிறது.


நைஜீரியாவின் சீன தொடர்பு 


நைஜீரியா 200க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களைக் கொண்டுள்ளது மற்றும் சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தை மற்றும் ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய வர்த்தக நட்புநாடாகும். நைஜீரியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் சீனா உள்ளது. நைஜீரியாவில் 22 பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு $47 பில்லியன்களுக்கு மேல் சீனா நிதியளித்துள்ளது. மார்ச் 31, 2020 நிலவரப்படி, நைஜீரியாவிற்கான சீனக் கடன்கள் மொத்தம் $3.121 பில்லியன் ஆகும். இது நைஜீரியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனான $27.67 பில்லியனில் 11.28% ஆகும். நைஜீரியா தேசிய பொது பாதுகாப்பு தகவல் தொடர்பு அமைப்பு, அபுஜா லைட் ரயில் மற்றும் விமான நிலைய முனைய விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு சீன நிதியைப் பயன்படுத்தியுள்ளது.


2023ஆம் ஆண்டில், சரக்கு நெரிசலைக் குறைத்து 170,000-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மேற்கு ஆபிரிக்காவின் மிகப்பெரிய லெக்கி ஆழ்கடல் துறைமுகத்திற்கு சீனா நிதியளித்தது. இந்த துறைமுகம் நைஜீரியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei நைஜீரியாவில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. 2019 முதல், Huawei 2,000 நைஜீரிய இளைஞர்கள் மற்றும் 1,000 ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும், சைபர் பாதுகாப்பில் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. Huawei நைஜீரியாவில் 27,500 மொபைல் போன் டவர்களையும் 10,000 கிமீ ஃபைபர் ஆப்டிக் கேபிளையும் அமைத்துள்ளது. கூடுதலாக, நாட்டின் நில எல்லைகளில் மின்னணு கண்காணிப்பு அமைப்பை நிறுவ நைஜீரியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


நைஜீரியாவின் சுரங்கத் துறையில் சீனாவும் ஈடுபட்டுள்ளது. பிப்ரவரியில், கடுனா, நைஜீரியாவின் முதல் லித்தியம் செயலாக்க ஆலையை உருவாக்க சீனாவின் மிங் சின் மினரல் செப்பரேஷன் நிக் லிமிடெட் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது. இது மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், நாட்டிலிருந்து கச்சா லித்தியம் வாங்கும் டெஸ்லாவின் திட்டத்தை நைஜீரியா சமீபத்தில் நிராகரித்தது. சீனா சினோமா சர்வதேச பொறியியல்  மற்றும் நைஜீரியாவின் டாங்கோட் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை ஒகுன் மாநிலத்தில் ஆண்டுக்கு 6 மில்லியன் டன் திறன் கொண்ட சிமென்ட் ஆலையை உருவாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


நைஜீரியாவின் உட்கட்டமைப்பில் வளர்ந்துவரும் சீன ஈடுபாடு இருந்தபோதிலும், இந்தியா நைஜீரியாவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான வர்த்தகம் 2021-22-ல் $14.95 பில்லியலிருந்து 2023-24-ல் $7.89 பில்லியகக் குறைந்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் இறக்குமதி செய்வதே இதற்கு முக்கிய காரணம். இருந்த போதிலும், இந்தியாவும் நைஜீரியாவும் பல விஷயங்களில் தொடர்ந்து இணைந்து செயல்படுகின்றன. உலகளவில் தெற்கின் தலைவர்களாக, விளங்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவு, உலகளாவிய தெற்கிற்கு அதிகம் பயனளிக்கும்.


பிரதமர் மோடியின் நைஜீரியா பயணம் நாட்டை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இருப்பினும், நல்லெண்ணத்தை உண்மையான முடிவுகளாக மாற்ற நிறைய தொடர்ச்சியான முயற்சிகள் இன்னும் தேவைப்படுகிறன.


ஹர்ஷ் வி பந்த், புது தில்லியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆய்வுகளுக்கான துணைத் தலைவர்; சமீர் பட்டாச்சார்யா, இணை ஆய்வாளர், ஆப்பிரிக்கா, அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன், புது தில்லி 




Original article:

Share: