ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு: எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய முடியுமா?

 நாடாளுமன்றத்தில் இன்று வெடித்த மோதல் குறித்தும், அதன் விளைவாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியவை. 


நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 19) ஏற்பட்ட மோதல் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது  முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் மீது பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 


மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பி.ஆர்.அம்பேத்கரின் சிலை அருகே இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை எதிர்ப்பு பேரணி நடத்தினர்.

 

காலை 11.30 மணியளவில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிங் சாரங்கி சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவதைக் காண முடிந்தது. நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளுக்கு அருகில் நின்றபோது மற்றொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை (முகேஷ் ராஜ்புத்) ராகுல் தன் மீது தள்ளியதாக சாரங்கி கூறினார். சாரங்கி மற்றும் ராஜ்புத் இருவரும் ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இருப்பினும், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவரின் நுழைவை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தடுத்ததாக ராகுலும் காங்கிரஸும் கூறுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது உங்கள் கேமராவில் பதிவாகி இருக்கலாம், நான் நாடாளுமன்ற நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன், அப்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னைத் தடுக்கவும், தள்ளவும், அச்சுறுத்தவும் முயன்றனர் என்றார். 


அதற்கு பின்பு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தள்ளிவிட்டதாகவும், எண்பது வயதானவரை காயப்படுத்தியதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ‘இந்த நுழைவாயில் வழியே உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். அவர்கள் அரசியலமைப்பை முறையை மாற்ற முயல்கின்றனர் மற்றும் அம்பேத்கரின் நினைவகத்தை அவமதிக்கிறார்கள் என்பதே இங்கு மைய பிரச்சினையாக உள்ளது’ என்று ராகுல் கூறினார். 


இந்த மோதலைத் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கூற்றுக்களை முன்வைத்தனர். பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கினாலும், இரு தரப்பு உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 


இந்த மோதல் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க அனுராக் தாக்கூர், பன்சூரி சுவராஜ் உள்ளிட்ட 3 தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றனர். சில மணி நேரம் கழித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காவல் நிலையத்திற்கு சென்று பா.ஜ.க.வுக்கு எதிராக புகார் அளித்தனர். 


நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராகுல் மற்றும் பிற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது டெல்லி போலீசார் வியாழக்கிழமை மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸிடம் தெரிவித்தார். 


பாரதிய நியாய சன்ஹிதா (2023), (Bharatiya Nyaya Sanhita (BNS)) சட்டத்தின் பின்வரும் பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது: 


பிரிவு 117 (தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்): இந்த குற்றத்திற்கான தண்டனை ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கிறது. 


பிரிவு 115 (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்): இந்த குற்றத்திற்கான தண்டனை ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் ஆகும்.


பிரிவு 125 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்): இந்த குற்றத்திற்கான தண்டனை மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 வரை அபராதம் ஆகும். 


பிரிவு 131 (தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்): இந்த குற்றத்திற்கான தண்டனை மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் ஆகும்.


பிரிவு 351 (கிரிமினல் மிரட்டல்): இந்த குற்றத்திற்கான தண்டனை ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம்.

 

பிரிவு 3(5) (பொதுவான நோக்கம்): ஒரு பொதுவான நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல நபர்களால் ஒரு குற்றச் செயல் செய்யப்படும்போது, "அத்தகைய நபர்கள் ஒவ்வொருவரும் அந்த செயலுக்கு அவர் மட்டுமே செய்ததைப் போலவே பொறுப்பாவார்கள்" என்று இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது. 


ராகுல் காந்தியை கைது செய்ய முடியுமா? 


ஆம், கைது செய்ய முடியும். பிரிவு 117 மற்றும் 125 ஆகியவை அறியக்கூடிய குற்றங்களாக கருதப்படுகிறது. அதாவது நீதிமன்றத்தின் வாரண்ட் இல்லாமல் காவல்துறை ஒருவரைக் கைது செய்யலாம். மாறாக, அடையாளம் காண முடியாத குற்றங்களுக்கு கைது செய்ய வாரண்ட் தேவைப்படுகிறது.


இருப்பினும், கைது செய்வது கட்டாயமில்லை. 2014-ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்வது கட்டாயமில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 


மேலும், இந்த குற்றங்கள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடியவை, அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை என்ற வகையில் ஜாமீன் வழங்கப்பட வேண்டிய குற்றங்கள் ஆகும். எனவே, ராகுல் கைது செய்யப்பட்டாலும், அவர் ஜாமீனில் வெளியே வர வாய்ப்புள்ளது. 


ராகுலை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியுமா? 


அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், (1951) பிரிவு 8(3)-ன் படி: "எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர் அத்தகைய தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும், அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்." 


இந்த விதியின் கீழ் கடந்த ஆண்டு சூரத் நீதிமன்றத்தால் அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களை நீக்கி, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.




Original article:

Share: