இன்று ஜனவரி 11 ஆம் தேதி லால் பகதூர் சாஸ்திரியின் 59 வது நினைவு தினத்தைக் குறிக்கிறது. அவர் இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பதவி வகித்தவர்.
இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, அக்டோபர் 2, 1904 அன்று, முன்னர் முகல்சராய் என்று அழைக்கப்பட்ட பண்டிட் தீன் தயாள் உபாத்யாய நகரில் பிறந்தார். தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்ட மறுநாளே, ஜனவரி 11, 1966 அன்று உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் காலமானார். அவரது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படாததால், அவரது மரணத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன.
முக்கிய அம்சங்கள்:
1. லால் பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் ஒரு எளிய பின்னணியைச் சேர்ந்தவர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது இளமை வாழ்க்கையை அர்ப்பணித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் உத்தரபிரதேச மாநில அரசாங்கத்திலும் ஒன்றிய அரசாங்கத்திலும் பணியாற்றினார். பிரதமர் ஜவஹர்லால் நேருவின் (1889-1964) மறைவுக்குப் பிறகு 1964 இல் அவர் பிரதமரானார்.
2. அவரது குழந்தைப் பருவப் பெயர் லால் பகதூர் ஸ்ரீவஸ்தவா. இருப்பினும், அவர் சாதி அமைப்பை எதிர்த்தார். மேலும், தனது குடும்பப் பெயரைக் கைவிடத் தேர்ந்தெடுத்தார். 1925 ஆம் ஆண்டில் வாரணாசியில் உள்ள காசி வித்யாபீடத்தில் பட்டம் பெற்ற பிறகு அவருக்கு 'சாஸ்திரி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. “சாஸ்திரி” என்ற பட்டப்பெயர் புனித நூல்களில் அறிஞர் (scholar) அல்லது நிபுணர் என்று பொருள்.
3. ஆகஸ்ட் 15, 1947 அன்று, அவர் காவல்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சரானார். அவரது காலத்தில், முதல் பெண் பேருந்து நடத்துனர்கள் நியமிக்கப்பட்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த லத்திகளுக்குப் பதிலாக நீர்த்தாரைப் (jets of water) பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார்.
4. 1952 ஆம் ஆண்டில், சாஸ்திரி ஒன்றிய ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சரானார். ஆகஸ்ட் 1956 ஆம் ஆண்டில், தெலுங்கானாவின் மெஹபூப்நகரில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அதில் 112 பேர் இறந்தனர். இந்த துயரத்தால் சாஸ்திரி மிகவும் பாதிக்கப்பட்டு விபத்துக்கு பொறுப்பேற்றார். அவர் தனது ராஜினாமாவை பிரதமரிடம் வழங்கினார். ஆனால், பிரதமர் நேரு ராஜினாமாவை ஏற்கவில்லை.
5. நவம்பர் 1956 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அரியலூரில் மற்றொரு விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து 144 பயணிகளின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. சாஸ்திரி தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மீண்டும் ராஜினாமா செய்தார்.
லால் பகதூர் சாஸ்திரி: A Life of Truth in Politics என்ற சுயசரிதையில் "ஒரு அமைச்சரவை அமைச்சர் தனது அமைச்சகத்திற்குள் ஏற்பட்ட ஒரு விபத்துக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்த முதல் நிகழ்வு இது என்று எழுத்தாளரும் ஓய்வுபெற்ற அதிகாரியுமான சி.பி. ஸ்ரீவஸ்தவா (சாஸ்திரியுடன் பணிபுரிந்தவர்) எழுதினார்.
"இவரை விட சிறந்த நண்பர் அல்லது சக ஊழியரை யாராலும் எதிர்பார்க்க முடியாது. சாஸ்திரி மிகுந்த நேர்மை, விசுவாசம், வலுவான மதிப்புகள், தெளிவான மனசாட்சி மற்றும் கடின உழைப்பு கொண்ட மனிதர்." என்று ஜவஹர்லால் நேரு சாஸ்திரியைப் பற்றி குறிப்பிட்டார்.
6. ராஜினாமா செய்த ஒரு வருடத்திற்குள், லால் பகதூர் சாஸ்திரி மீண்டும் ஒன்றிய அமைச்சரவைக்குத் திரும்பினார். அவர் உள்துறை அமைச்சர் மற்றும் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். உள்துறை அமைச்சராக, அரசாங்கத்தின் அலுவல் மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்க அவர் உதவினார். தென் மாநிலங்கள் இந்தி ஆதிக்கம் குறித்து கவலைப்பட்டபோது, இந்திக்கு இணையாக ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.
7. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மே 27, 1964 ஆம் ஆண்டு அன்று இறந்த பிறகு, ஜூன் 9, 1964 அன்று சாஸ்திரி பிரதமராகப் பதவியேற்றார். 1966 ஆம் ஆண்டு வரை 581 நாட்கள் அவர் பிரதமராகப் பணியாற்றினார். 1960 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, சாஸ்திரி நாட்டை வழிநடத்தி புதிய யோசனைகளை அறிமுகப்படுத்தினார். உற்பத்தியாளர்களுக்கான உணவு தானிய விலைகளை அவர் நிர்ணயித்தார். இது குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support price (MSP)) என்று அழைக்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலையை பரிந்துரைக்கும் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices (CACP)) என்று அழைக்கப்படும் விலை ஆணையத்தை அமைத்தார்.
தாஷ்கண்ட் பிரகடனம் (Tashkent Declaration)
1. 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர், ஆகஸ்ட் 1965 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் அறிவிக்கப்படாத போரை தொடங்கியது. 1962 ஆம் ஆண்டில் சீனாவிடம் தோல்வியடைந்த பிறகு இந்தியா மீண்டும் போராடாது என்று பாகிஸ்தான் நம்பியது. செப்டம்பர் 1 ஆம் தேதி, ஜம்முவுக்கு அருகிலுள்ள அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்கியது.
2. பதிலுக்கு, இந்திய இராணுவம் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையைத் தாண்டி தாக்குதலைத் தொடங்கியது. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இதற்கு ஒப்புதல் அளித்தார். ஐக்கிய நாடுகள் சபை இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவிக்க ஊக்குவிக்க முயன்றது. இறுதியில், சோவியத் பிரதமர் அலெக்ஸி கோசிகின் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கானை உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டிற்கு அழைத்தார்.
3. தாஷ்கண்டில், ஜனவரி 10, 1966 ஆம் ஆண்டு அன்று, தாஷ்கண்ட் பிரகடனம் கையெழுத்தானது. இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகால அமைதி ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த பிரகடனத்தில் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தானின் ஜெனரல் அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர். சோவியத் யூனியன் மத்தியஸ்தம் செய்தது. இரு தரப்பினருக்கும் தெளிவான வெற்றி இல்லாமல் போர் முடிந்தது.
4. மறுநாள், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். அவருடன் தாஷ்கண்டில் இருந்த சி.பி. ஸ்ரீவஸ்தவா, சாஸ்திரிக்கு முன்னர் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதால், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று எழுதினார்.
5. அவரது வாழ்க்கை வரலாற்றின் முடிவுரையில், ஸ்ரீவஸ்தவா சாஸ்திரியின் மரணம் குறித்த வதந்திகளைப் பற்றி குறிப்பிட்டார். சிலர் சாஸ்திரி தனது விருப்பத்திற்கு மாறாக தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட சோவியத் தலைவர்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினர். ஸ்ரீவஸ்தவா இதை மறுத்தார். சாஸ்திரி அதில் சுதந்திரமாக கையெழுத்திட்டதாகவும், ஒரு பெரிய சாதனை உணர்வை உணர்ந்ததாகவும் கூறினார். பிரேத பரிசோதனை நடத்தப்படாததால் இந்த சந்தேகங்கள் எழுந்தன என்றும் அவர் கூறினார்.
6. 1965 ஆம் ஆண்டு அலகாபாத் மாவட்டத்தில் உள்ள உருவா கிராமத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தின் போது சாஸ்திரி "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" (Jai Jawan, Jai Kisan”) என்ற முழக்கத்தை உருவாக்கினார். பாகிஸ்தானுடனான நடந்து வரும் போர் மற்றும் இந்திய-சீனப் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட கடுமையான உணவுப் பற்றாக்குறையின் போது இது நடந்தது. எல்லைகளைப் பாதுகாக்கும் இந்திய வீரர்களை "ஜெய் ஜவான்" என்று கூறி அவர்களை கௌரவித்தார். அதே நேரத்தில் "ஜெய் கிசான்" விவசாயிகள் தங்கள் சொந்த போராட்டங்களை எதிர்கொண்டதை அங்கீகரித்தார்.
7. தனது குறுகிய பதவிக்காலத்தில், சாஸ்திரியின் தலைமையின் கீழ், இந்திய வீரர்கள் எல்லையைப் பாதுகாத்தனர். விவசாயிகள் நாட்டிற்கு உணவளிக்க கடுமையாக உழைத்தனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு இரண்டையும் சாஸ்திரி முக்கியமானதாகக் கருதினார்.
8. இந்தியாவை அணுசக்தி சக்தியாக மாற்றிய 1998 ஆம் ஆண்டு போக்ரான் அணுசக்தி சோதனைகளுக்குப் (Pokhran nuclear tests) பிறகு, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் "ஜெய் விஞ்ஞான்" அல்லது "அறிவியல் வாழ்க" (hail science) என்ற முழக்கத்தை சேர்த்தார். இது இந்தியாவின் தேசிய நல்வாழ்வுக்கு அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு படி மேலே சென்று, ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த "ஜெய் அனுசந்தன்" அல்லது "அறிவியல் ஆராய்ச்சி" (hail research) என்ற வார்த்தையைச் சேர்த்தார்.