குற்றவியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) என்ன கூறுகிறது? அரசியலை குற்றமற்றதாக்குவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் என்ன? தண்டனை பெற்ற நபர்கள் தேர்தலில் போட்டிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதற்கான வழக்கு என்ன?
சட்ட விதிகள் என்ன கூறுகிறது?
1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3), ஒரு நபர் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றால், அவரைத் தகுதி நீக்கம் செய்ய வழிவகை செய்கிறது. தண்டனைக் காலம் மற்றும் விடுதலையான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இந்தச் சட்டம் குற்றவாளிகளை அரசியலில் இருந்து விலக்கி வைக்க உதவுகிறது மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்கிறது.
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(1)-ன் படி, ஒருவர் பாலியல் வன்கொடுமை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (Protection of Civil Rights (PCR)) கீழ், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention (UAPA)) கீழ் அல்லது ஊழல் போன்ற கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டால், அந்த காலம் முடிந்த பிறகும் மற்றும் தண்டனைக் காலம் மற்றும் விடுதலையான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
கடந்த கால தீர்ப்புகள் என்ன சொல்கிறது ?
அரசியலை குற்றமற்றதாக்குவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட சில தீர்ப்புகளை வழங்கியுள்ளது. 2002-ஆம் ஆண்டு ஜனநாயக சீர்திருத்த சங்க (Association for Democratic Reforms (ADR)) தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் குற்றப் பதிவுகளை வெளியிடுவதை நீதிமன்றம் கட்டாயமாக்கியது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner of India (CEC)) VS ஜான் சவுகிதார் (Jan Chaukidar case, 2013) வழக்கில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் குறித்த பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஒருவர் தேர்தலில் போட்டியிட “வாக்காளராக” இருக்க வேண்டும். பிரிவு 62(5) சிறையில் உள்ள ஒருவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று கூறுகிறது. வாக்களிப்பது போட்டியிடுவதற்கான தகுதி என்பதால், சிறையில் உள்ள ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது. இருப்பினும், 2013-ஆம் ஆண்டில், விசாரணைக் கைதிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் வகையில் நாடாளுமன்றம் சட்டத்தைத் திருத்தியது.
இருப்பினும், 2013-ஆம் ஆண்டு, லில்லி தாமஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4)-ஐ ரத்து செய்தது. இந்தப் பிரிவு, தண்டனை விதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் பதவியில் நீடிக்க அனுமதித்தது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் அரசியல் நீதிக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, எந்தவொரு பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினரும் தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 11, தண்டனை பெற்ற நபரின் தகுதி நீக்கக் காலத்தை நீக்கவோ அல்லது குறைக்கவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரத்தை வழங்குகிறது. செப்டம்பர் 2019-ல், சிக்கிம் முதல்வராக இருந்த பிரேம் சிங் தமாங்கின் தகுதி நீக்கக் காலத்தைக் குறைக்க தேர்தல் ஆணையம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அவரது தகுதி நீக்கக் காலம் ஆறு ஆண்டுகள். ஆனால், அது 13 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை இடைத்தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்தது.
அரசியலை குற்றமாக்குவதைத் தடுப்பதற்கான பல்வேறு பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) கீழ் தண்டனை பெற்ற ஒருவரின் தகுதி நீக்கக் காலத்தை குறைத்த தேர்தல் ஆணையத்தின் முடிவு கேள்விக்குரிய முடிவாக பார்க்கப்பட்டது.
தற்போதைய மனுவில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
தற்போதைய மனுவில், தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்ற ஒருவர் இளநிலை அரசு வேலைக்கு (junior-grade government job) கூட தகுதியற்றவர் என்றால், தண்டனை அனுபவித்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எப்படி சட்டமியற்றுபவர்களாக முடியும் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், 2020-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர்களைப் போல எந்த “சேவை நிபந்தனைகளுக்கும்” கட்டுப்படவில்லை என்றும், எனவே தண்டனை அனுபவித்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுள்ள தகுதி நீக்கக் காலம் போதுமானது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை தற்போதைய மனுவுக்கு பதிலளிக்குமாறு கேட்டுள்ளது.
முன்னோக்கி செல்லும் வழி எவ்வாறு இருக்க முடியும்?
2024ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 251 (46%) பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், 171 (31%) பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி மற்றும் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் உள்ளதாகவும், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு 15.4% ஆகவும், எந்த விதமான குற்றத்தில் ஈடுபடாத பின்னணி கொண்ட வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு 4.4% ஆக உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்க (Association for Democratic Reforms (ADR)) அறிக்கை கூறுகிறது. 1999 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் சட்ட ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை அரசியலில் குற்றச் செல்வாக்கைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தின. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் குற்றத்திற்காக நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
இருப்பினும், இந்தப் பரிந்துரை தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற அபாயத்தைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகளிடையே இதற்கு ஒருமித்த கருத்து இல்லை. தற்போதைய மனு தண்டனை பெற்ற அனைத்து நபர்களையும் தேர்தலில் போட்டியிட நிரந்தரமாக தடை செய்வது பற்றிய கவலைகளை எழுப்புகிறது. அதற்காக நிரந்தர தகுதி நீக்கம் பொருத்தமற்றதாகவும் விகிதாசாரமற்றதாகவும் இருக்கும். கொடூரமான குற்றங்கள் (கொலை அல்லது பாலியல் வன்கொடுமை போன்றவை) (heinous crimes) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தல்களில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்படலாம். ஏனெனில், இந்தக் குற்றங்கள் பொது வாழ்வில் நேர்மையை பாதிக்கின்றன.
இதற்கிடையில், உச்சநீதிமன்றம் தண்டனை பெற்ற நபரின் தகுதி நீக்க காலத்தை குறைக்க அல்லது நீக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ரங்கராஜன். ஆர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் “‘Polity Simplified” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.