சமீபத்தில், பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)) ஒரு விரிவான ஆய்வை நடத்தியது. தொலைத்தொடர்புத் துறைக்கான பேரிடர் ஆபத்து மற்றும் மீள்தன்மை மதிப்பீட்டு கட்டமைப்பை (Disaster Risk and Resilience Assessment Framework (DRRAF)) உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது. இந்த ஆய்வு, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி வலைத்தளத்தின்படி, “இந்தியாவில், 58%-க்கும் அதிகமான நிலம் நிலநடுக்கங்களால் ஆபத்துகளை எதிர்கொள்வதாகவும், 12% வெள்ளத்தால் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும், 15% நிலச்சரிவுகளால் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் மற்றும் 10% க்கும் அதிகமானவை காட்டுத் தீயால் பாதிப்புகளை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் 7,516 கி.மீ கடற்கரையில், 5,700 கி.மீ. கடற்கரை பகுதிகள் புயல்கள் மற்றும் சுனாமிகளால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. தொலைத்தொடர்பு முறை நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு முக்கியமான உட்கட்டமைப்பை கொண்டுள்ளது. இது இயற்கை பேரிடர்களால் கடுமையான பாதிப்புகளை சந்திக்கிறது.
முக்கிய அம்சங்கள்:
1. பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)) என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும். 2019-ஆம் ஆண்டில் இதை அமைக்க இந்தியா முயற்சி எடுத்தது. CDRI-ல் தேசிய அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை திட்டங்கள் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் மற்றும் நிதி வழிமுறைகள், தனியார் துறை மற்றும் அறிவுசார் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டாண்மை ஆகும். இது நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள உட்கட்டமைப்பு அமைப்புகளின் காலநிலை மற்றும் பேரிடர் அபாயங்களுக்கு எதிர்ப்புத் திறன்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. CDRI என்பது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் ஒன்றிணைந்து செயல்படும் நாடுகளின் குழுவாகும். சாலைகள், ரயில்வேக்கள், மின் நிலையங்கள், தகவல் தொடர்பு இணைப்புகள், நீர் அமைப்புகள் மற்றும் வீடுகள் போன்ற முக்கியமான கட்டமைப்புகளை பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பதே அவர்களின் குறிக்கோளாகும்.
3. பேரிடர் தயார்நிலை மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும். இருப்பினும், நவீன உள்கட்டமைப்பு எல்லைகளுக்கு அப்பால் இணைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வேக்கள் இப்போது பல நாடுகளை இணைக்கின்றன. மேலும், மின்சார பரிமாற்ற முறைகள் தேசிய எல்லைகளைக் கடக்கின்றன. ஆறுகள் மற்றும் அவற்றின் வளங்கள் வெவ்வேறு நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த வலையமைப்பின் ஒரு பகுதி சேதமடைந்தால், அது முழு அமைப்பையும் பாதிக்கலாம். இது பேரிடர் நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் வேலை இழப்புகள் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
4. இந்தியாவின் CDRI முன்முயற்சியின் முக்கிய குறிக்கோள் உள்கட்டமைப்பு வலையமைப்புகளை வலுப்படுத்துவதாகும். இருப்பினும், CDRI உட்கட்டமைப்பு திட்டங்களைத் திட்டமிடவோ அல்லது கட்டமைப்பிற்காகவோ உருவாக்கப்படவில்லை. இது உறுப்பு நாடுகளில் உள்ள திட்டங்களுக்கு நிதியுதவியும் வழங்குவதில்லை. அதற்கு பதிலாக, CDRI சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இது பயிற்சி மூலம் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. உட்கட்டமைப்பு மேம்பாட்டில் வடிவமைப்புகள், செயல்முறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கான பொதுவான தரநிலைகளை அமைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
5. மீள்தன்மை உட்கட்டமைப்பில் $1 முதலீடு செய்வதன் மூலம் பேரிடர் இழப்புகளில் $4-க்கும் அதிகமாக சேமிக்க முடியும் என்று CDRI மதிப்பிடுகிறது. இது குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு பொருந்தும். உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது பேரிடர்களின் போது ஏற்படும் சேதத்தையும் செலவுகளையும் குறைக்க உதவும்.
உட்கட்டமைப்பு (Infrastructure) என்பது சொத்துக்களை உருவாக்குவது மற்றும் முதலீட்டில் நீண்டகால வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்ல. இது எண்களைப் பற்றியது மட்டுமல்ல. இது மக்களைப் பற்றியது. மக்களுக்கு உயர்தர, நம்பகமான மற்றும் நிலையான சேவைகளை சமமான முறையில் வழங்குவதாகும்.
26-வது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக சிறிய தீவு நாடுகளில் முக்கியமான உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியை இந்தியா தொடங்கியது.
CDRI-ன் முக்கிய முயற்சிகளில் ஒன்று நெகிழ்திறன் கொண்ட தீவு நாடுகளுக்கான உள்கட்டமைப்பு (Infrastructure for Resilient Island States (IRIS)) வழங்குவதாகும். பிரதமர் நரேந்திர மோடி இதை 2021-ஆம் ஆண்டில் 26-வது காலநிலை மாற்ற மாநாட்டில் தொடங்கி வைத்தார். கடல் மட்டம் உயர்ந்து வருவதால் அவற்றின் இருப்பு அச்சுறுத்தப்படுகிறது. சிறிய தீவு நாடுகள் காலநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் உள்ளன. சில தீவுகள் இதன் காரணமாக அழிந்துபோகக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக, பல சிறிய தீவு நாடுகள் ஒரே பேரழிவில் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% இழந்துள்ளதாக CDRI தெரிவித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு எகிப்தில் நடந்த காலநிலை மாற்ற மாநாட்டில் CDRI, உட்கட்டமைப்பு மீள்தன்மை விரைவுபடுத்தும் நிதியை (Infrastructure Resilience Accelerator Fund (IRAF)) அறிவித்தது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme (UNDP)) மற்றும் பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (United Nations Office for Disaster Risk Reduction (UNDRR)) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த நிதி உருவாக்கப்பட்டது. உட்கட்டமைப்பு அமைப்புகளில் பேரிடர் மீள்தன்மையை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். வளரும் நாடுகள் மற்றும் சிறு தீவு வளரும் நாடுகளுக்கு (Small Island Developing States (SIDS)) உதவுவதில் IRAF கவனம் செலுத்துகிறது.
பேரிடர் மேலாண்மை மசோதா (Disaster Management Bill), 2024
1. கடந்த ஆண்டு டிசம்பரில், மக்களவை பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, 2024-ஐ நிறைவேற்றியது. இந்த மசோதா தற்போதுள்ள பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ஐ மாற்றியது. இந்தச் சட்டம் இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கு ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை செயல்படுத்த, பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA) மற்றும் மாநில முதலைமைச்சர்களின் தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் (State Disaster Management Authorities (SDMAs)) ஆகிய பேரிடர் மேலாண்மைக்கான ஒரு சட்டப்பூர்வ அமைப்பை உருவாக்கியது.
2. பேரிடர் மேலாண்மை சட்டம் 2004-ஆம் ஆண்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமிக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் மாநில அளவில் NDMA, SDMA, தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force (NDRF)) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management (NIDM)) ஆகியவற்றை உருவாக்க வழிவகுத்தது. இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து 2009-ல் தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கையும் (National Disaster Management Policy) 2016-ல் தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டமும் (National Disaster Management Plan) உருவாக்கப்பட்டது.
3. பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா (Disaster Management (Amendment) Bill, 2024) நகர்ப்புற பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை உருவாக்க முன்மொழிகிறது. இவை நகராட்சி ஆணையரால் வழிநடத்தப்படும். பெருநகரங்களுக்கு சிறப்பு பேரிடர் மேலாண்மை தேவைகள் உள்ளன. அவற்றில் பல மாவட்டங்கள் இடம்பெற்றிருக்கும். நகர அளவிலான பேரழிவுகளுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. இது நகர்ப்புற வெள்ளம் போன்ற பிரச்சினைகளை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும்.
4. 2005 சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாநில பேரிடர் நிவாரண நிதி (State Disaster Relief Fund (SDRF)) இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவிற்கு (National Crisis Management Committee) சட்ட அங்கீகாரத்தை வழங்குகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பேரிடர் மதிப்பீடுகள், நிதி ஒதுக்கீடுகள், செலவுகள் மற்றும் தயார்நிலை மற்றும் தணிப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட தேசிய பேரிடர் தரவுத்தளத்தை உருவாக்கி பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச நிவாரணத்திற்கான வழிகாட்டுதல்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் இந்த மசோதா முன்மொழிகிறது.