29-வது காலநிலை மாநாடு முடிவுகள் எவ்வாறு இந்தியா போன்ற நாடுகளை தங்கள் காலநிலை இலக்குகளை மறுமதிப்பீடு செய்ய கட்டாயப்படுத்துகின்றன? -அபினவ் ராய்

 இந்தியாவில் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDCs)) மற்றும் எதிர்கால காலநிலை செயல் திட்டங்களுக்கு போதுமான காலநிலை நிதி இல்லாததால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?


உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதன் மூலம் காட்டப்பட்ட சர்வதேச காலநிலை முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதற்கான அமெரிக்காவின் முடிவு ஒரு முக்கியப் பிரச்சினையாகும். சமீபத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட இழப்பு மற்றும் சேத நிதியத்தின் வாரியம் தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. காலநிலை பேச்சுவார்த்தை, புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார உண்மைகளைப் பற்றி நிறைய பேசுகிறது.


காலநிலை மாநாடு (COP29) முடிவுகள் வளரும் பொருளாதாரங்களை ஏமாற்றமடையச் செய்துள்ளன. பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகள் பலவீனமடைந்தன. ஏனெனில், காலநிலை நிதிக்கு $300 பில்லியன் மட்டுமே வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும், காலநிலை சவால்களைச் சமாளிக்க ஆண்டுக்கு $1 டிரில்லியனுக்கும் அதிகமாகத் தேவைப்படுவதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.


வளர்ந்த நாடுகளிடமிருந்து போதுமான நிதி உதவி தேவை என்பதை இந்தியா பலமுறை வலியுறுத்தியுள்ளது. வளரும் நாடுகள் தங்கள் காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்ற இந்த ஆதரவு மிக முக்கியமானது. இருப்பினும், நிதிப் பற்றாக்குறை இந்தியாவையும் பிற வளரும் நாடுகளையும் தங்கள் காலநிலை இலக்குகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்களை மறுமதிப்பீடு செய்ய கட்டாயப்படுத்தக்கூடும்.


2035 வரையிலான காலக்கெடுவிற்கு தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (Nationally Determined Contributions (NDCs)) சமர்ப்பிக்க பிப்ரவரி 10-ஆம் தேதி கடைசி தேதியை இந்தியாவும் பல நாடுகளும் தவறவிட்டன. டிசம்பர் 2024-ல், இந்தியா தனது முதல் ஈராண்டு வெளிப்படைத்தன்மை அறிக்கையை (Biennial Transparency Report (BTR)) சமர்ப்பிக்கவில்லை. BTR என்பது ஒரு புதிய அறிக்கை வடிவமாகும். இதில் நாடுகள் உமிழ்வுகள் குறித்த விரிவான தரவை வழங்க வேண்டும். இந்தியா இப்போது இந்த அறிக்கையை 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கூடுதலாக, ரிசர்வ் வங்கி அறிக்கை, இந்தியா அதன் பசுமை மாற்ற இலக்குகளை அடைய 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2.5%-ஐ காலநிலை நிதிக்காக செலவிட வேண்டும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்த முன்னேற்றங்கள், காலநிலை நிதி, இந்தியாவின் காலநிலை உறுதிமொழிகள் மற்றும் அவற்றை அடைவதற்கான அதன் திட்டங்களைப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதைக் காட்டுகிறது.


காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்ற, இந்தியா போன்ற நாடுகள் பசுமை உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு, நிறைய நிதி தேவைப்படுகிறது. தகவமைப்பு மேம்படுத்த, தணிப்பை வலுப்படுத்த மற்றும் உமிழ்வைக் குறைக்க காலநிலை நிதியில் பெரிய முதலீடுகள் அவசியம்.


காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)), காலநிலை நிதி என்பது காலநிலை மாற்றத்தை சமாளிக்கப் பயன்படுத்தப்படும் நிதியாகும். இது உள்ளூர், தேசிய அல்லது சர்வதேச மட்டங்களில் பொது, தனியார் மற்றும் பிற மூலங்களிலிருந்து வருகிறது. இந்த நிதி தணிப்பு (காலநிலை தாக்கத்தைக் குறைத்தல்) மற்றும் தழுவல் (காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப சரிசெய்தல்) ஆகியவற்றை ஆதரிக்கிறது.


2021-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடந்த 26-வது காலநிலை மாநாட்டில், இந்தியா தனது பஞ்சாமிருத காலநிலை செயல் திட்டத்தை (Panchamrit climate action plan) அறிவித்தது. இந்தத் திட்டம் குறுகிய மற்றும் நீண்ட கால காலநிலை இலக்குகளை நிர்ணயித்தது. இந்தியாவின் பஞ்சாமிருத காலநிலை செயல் திட்டத்தில் பின்வரும் இலக்குகள் உள்ளன:


2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


2030-ஆம் ஆண்டிற்குள் சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து குறைந்தபட்சம் 50% ஆற்றலைப் பெறுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.


2030-ஆம் ஆண்டிற்குள் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை 1 பில்லியன் டன் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


2005-ஆம் ஆண்டு அளவை விட, 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் தீவிரத்தை 45% குறைக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது.


2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது.


2024-ஆம் ஆண்டு அக்டோபரில், இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 200 GW-ஐத் தாண்டியது.  இது நாட்டின் மொத்த மின் திறனில் 46.3% ஆகும். இந்த முன்னேற்றம் 2030-ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து 500 GW ஐ அடையும் இந்தியாவின் இலக்கை ஆதரிக்கிறது. இந்தியாவின் 200 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மைல்கல்லிற்கு பங்களிக்கும் முக்கிய ஆதாரங்கள்:


. சூரிய சக்தி - 92.12 கிகாவாட் 

. காற்றாலை சக்தி - 47.72 கிகாவாட் 

          . பெரிய நீர் மின் திட்டங்கள் - 46.93 கிகாவாட் 

          . சிறிய நீர் மின் உற்பத்தி - 5.07 கிகாவாட் 

           . உயிரி ஆற்றல் - 11.32 கிகாவாட் 

           . அணுசக்தி திறன் - 8,180 மெகாவாட் 


2030-ஆம் ஆண்டிற்குள் 20 GW அணுசக்தியை உற்பத்தி செய்வதையும், 2047-ஆம் ஆண்டிற்குள் மொத்த மின்சாரத் தேவையில் அணுசக்தியை 9%-ஆக அதிகரிப்பதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அணுசக்திச் சட்டத்தைத் திருத்துவதற்கான திட்டம் உள்ளது. இந்த மாற்றம் தனியார் நிறுவனங்கள் சிறிய அணு உலைகளை உருவாக்க அனுமதிக்கும். இது இந்தியாவின் பசுமை மாற்றத்தை விரைவுபடுத்த உதவும்.


புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு இந்தியா மாறுவதை ஆதரிப்பதற்காக நிதிநிலை ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திற்கு ₹26,549.38 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ₹17,298.44 கோடியுடன் ஒப்பிடும்போது இது 53.48% அதிகமாகும். 2021-ஆம் நிதியாண்டு முதல், அமைச்சகத்தின் நிதி 904% அதிகரித்துள்ளது.


இந்த ஆண்டு அணுசக்தி திட்டத்திற்காக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ₹20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்-இயக்க முயற்சிகளுக்கான நிதி 2025-நிதியாண்டில் ₹4,435 கோடியிலிருந்து (திருத்தப்பட்ட மதிப்பீடுகள்) நிதியாண்டு 2026-ஆம்  நிதியாண்டில் ₹5,322 கோடியாக அதிகரிக்கும்.


இந்தியாவின் பசுமை எரிசக்தி மாற்றத்திற்கு நிதி உதவி வழங்குவதன் மூலமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலமும் பல திட்டங்கள் உதவுகின்றன. இவற்றில் பின்வருவன:


பிரதம மந்திரி  சூரிய சக்தி மூலம் வீடுகளுக்கு இலவச மின்சார திட்டம் (PM Surya Ghar Muft Bijli Yojana)


பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் திட்டம் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) 


  • மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்களை விரிவுபடுத்துதல்.


  •  சூரிய மின்சக்தி கூரை கட்டம் II-சூரிய மின் பலகை பயன்பாட்டை    

  ஊக்குவித்தல்.


  • ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களை ஊக்குவித்தல்.


  •  தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கான நிதியை அதிகரித்தல்.


இருப்பினும், நிதியுதவி ஒரு பெரிய சவாலாகும். 29-வது காலநிலை மாநாடு முடிவுகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை ஏமாற்றமடையச் செய்தன. வளர்ந்த நாடுகள் 2035ஆம் ஆண்டு முதல் காலநிலை நிதிக்கு $300 பில்லியன் வழங்குவதாக மட்டுமே உறுதியளித்தன. அதே நேரத்தில் உண்மையான தேவை ஆண்டுக்கு $1 டிரில்லியன் ஆகும். 2024-25-ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வு இதை பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதில் பெரும் தோல்வி என்று கூறியது.


பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தங்கள் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை புதுப்பிக்க வேண்டும். 2025-ஆம் ஆண்டில், பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் 2035 வரையிலான காலத்திற்கான தங்கள் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தியா உட்பட பல நாடுகள் இந்த காலக்கெடுவைத் தவறவிட்டன. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பங்களிப்புச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, 2028-ஆம் ஆண்டில் COP33 காலநிலை மாநாட்டை நடத்த இந்தியா திட்டமிட்டிருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மாநாட்டை நடத்தும் நாடுகள் வழக்கமாக மாநாட்டிற்கு முன்னதாக புதிய காலநிலை முயற்சிகளை அறிவிக்கின்றன. அவை தங்கள் தலைமையை நிரூபிக்கவும், மிகவும் அர்த்தமுள்ள விளைவுக்கான உத்வேகத்தை உருவாக்கவும் உதவுகின்றன. இந்தியாவும் அதன் 2030 காலநிலை இலக்குகளை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உலக நிலைமைகளுக்கு ஏற்ப இந்தியா தனது காலநிலை உத்தியை சரி செய்து வருகிறது. பல நாடுகளைப் போல உமிழ்வைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்தியா தகவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. வளங்கள் குறைவாக உள்ள வளரும் நாடான இந்தியா, உமிழ்வைக் குறைப்பதை விட தகவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தகவமைப்பு என்பது காலநிலை மாற்றத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு சமூகங்கள் வலுவாகவும் சிறப்பாகவும் தயாராகவும் இருக்க உதவுவதாகும்.


காலநிலை நிதி வகைப்பாட்டின் தேவை


இந்த மாற்றத்துடன் இணைந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 2024-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை உரையில், "காலநிலை தழுவல் மற்றும் தணிப்புக்கான மூலதனத்தின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதற்காக காலநிலை நிதிக்கான வகைப்பாட்டை நாங்கள் உருவாக்குவோம். இது இந்தியாவின் காலநிலை இலக்குகள் மற்றும் பசுமை மாற்றத்தை ஆதரிக்கும் என்று கூறினார்.


காலநிலை நிதி வகைப்பாடு (Climate finance taxonomies) என்பது எந்தெந்த பொருளாதார நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு நிலையானவை என்பதை வரையறுக்கும் விதிகள் ஆகும். அவை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த முதலீடுகளைச் செய்ய உதவுகின்றன. இருப்பினும், இந்தியாவின் வகைப்பாடு இன்னும் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், இறுதி பதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. 2024 ஏப்ரல் நிலவரப்படி, உலகளவில் இதுபோன்ற 47 வகைப்பாடுகள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா முன்னணியில் இருந்தன. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர், தாய்லாந்து, தென் கொரியா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் தங்கள் சொந்த வகைபிரித்தல்களை உருவாக்கியுள்ளன அல்லது உருவாக்கி வருகின்றன.


காலநிலை மாற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவாக வேகமாக நிகழ்ந்து வருகிறது. உமிழ்வை மாற்றியமைக்கவும், குறைக்கவும் இந்தியா எடுக்கும் முயற்சிகள் அதன் பொருளாதார நிலைத்தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்தும். இருப்பினும், இலட்சிய இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம், இந்தியா தனது வளங்களை எவ்வாறு ஒதுக்குவது என்று முடிவு செய்துள்ளது.



Original article:

Share: