மத்திய அரசு AI தரவுத்தொகுப்புகளுக்கான தளமான AIKosha மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான ஒரு கணினி போர்ட்டலையும் அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சிகள் 14,517 GPU-களுடன் இந்தியாவில் AI வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
வியாழக்கிழமை, ஒன்றிய அரசு அதன் IndiaAI திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு புதிய தளங்களை அறிமுகப்படுத்தியது. இந்த தளங்கள் IndiaAI தரவுத்தொகுப்புகள் தளம் (AIKosha என அழைக்கப்படுகிறது) மற்றும் IndiaAI கணினி வலைவாயில் (போர்ட்டல்) (IndiaAI Compute Portal) ஆகும்.
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகளை உருவாக்க AIKosha பல தரவுத்தொகுப்புகள் மற்றும் மாதிரிகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த கணினி போர்டல் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் 10 நிறுவனங்களிலிருந்து 14,000க்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (graphics processing units (GPUs)) மூலம் மானிய விலையில் கிடைக்கக்கூடிய சக்திவாய்ந்த கணினி வளங்களை அணுகக் கோர அனுமதிக்கிறது.
AIKosha போர்ட்டலில், தரவுத்தொகுப்புகள் மற்றும் மாதிரிகள் பொது சேவைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் காட்ட 8 பயன்பாட்டு நிகழ்வுகளை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளிலிருந்து குரல் மாதிரிகளைப் பயன்படுத்தி கிராமப்புற குடிமக்களுக்காக AI குரல் உதவியாளர்களை உருவாக்க முடியும். இந்த உதவியாளர்கள் அரசாங்கத் திட்டங்களுக்கு மக்கள் விண்ணப்பிக்க உதவலாம். மானியம் கோருவதில் நகல் விண்ணப்பங்கள் (duplicate applications) மற்றும் மோசடிகளைத் தடுக்க குரல் சரிபார்ப்பையும் அவர்கள் பயன்படுத்தலாம்.
புதன்கிழமை தொடங்கப்பட்ட AI கணினி போர்டல், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு 14,517 வரிசையாக பட்டியலில் சேர்க்கப்பட்ட GPUகளுக்கான அணுகலை வழங்கும். முன்னதாக, மக்கள் கணினி வளங்களுக்கான கோரிக்கைகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு (MeitY) மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டியிருந்தது. இப்போது, இந்த கோரிக்கைகள் போர்ட்டல் மூலம் செயல்படுத்தப்படும், இது சில நாட்களில் முழுமையாக செயல்படும்.
IndiaAI திட்டம் மார்ச் 7, 2024 அன்று ₹10,371.92 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது. இந்தத் தொகையில், 44% (₹4,563.36 கோடி) 10,000 GPUகள் மூலம் கணினியின் திறனை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. இது, திட்டத்தின் ஏழு தூண்களில் (seven pillars) மிகப்பெரியது.
கணினி திறனுக்காக ஏலம் எடுக்கும் குழுக்கள் ஒவ்வொரு காலாண்டிலும் அதிக GPU களைச் சேர்ப்பதாகக் கூறியுள்ளன என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் கூறினார்.
யோட்டாவின் (Yotta) தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான சுனில் குப்தா, நிறுவனம் 9,216 GPUகளை வழங்குவதாகக் கூறினார். இது முதல் கட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து GPUகளில் சுமார் 63% ஆகும். ஏப்ரல் 30-ம் தேதி முடிவடையும் இரண்டாவது ஏலச் சுற்றிலும் யோட்டா (Yotta) விண்ணப்பிக்கும்.
"இந்தியாவின் அடித்தள மாதிரிகளை உருவாக்குவதில் நம்முடைய முன்னேற்றம் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது" என்று வைஷ்ணவ் குறிப்பிட்டார். "நாம் 67 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம்." இவற்றில் 22 பெரிய மொழி மாதிரிகளை உருவாக்குவதற்கானவை, மீதமுள்ளவை சிறிய மொழி மாதிரிகளுக்கானவை. மேலும் அவர் குறிப்பிட்டதாவது, "கணினி திறனில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி நம் சொந்த அடித்தள மாதிரிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும்." இந்த மாதிரிகள் பல AI பயன்பாடுகளுக்கு சக்தி அளிக்கின்றன.
பெரும்பாலான நாடுகளில், தனியார் நிறுவனங்கள் AI-ல் பெரும்பாலான முதலீடுகளைச் செய்கின்றன என்று தகவல் தொழில்நுட்ப செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறினார். ஆனால், இந்தியாவில், அரசாங்கம் முன்னிலை வகித்துள்ளது. 7 பிரத்யேக தூண்கள் மூலம் நாடு முழுவதும் AI ஐ ஏற்றுக்கொள்ள ஒரு கவனம் செலுத்தும் திட்டத்தை அது தொடங்கியுள்ளது. அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் பகிரப்பட்ட கணினித் திறனை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இந்த அமைப்பின் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் குறைவு.
வெவ்வேறு GPU-களுக்கான மிகக் குறைந்த ஏலங்கள் ஏற்கனவே சந்தை விகிதத்தைவிட சராசரியாக 40%-க்கும் குறைவாக இருந்தன. ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் அவற்றை அணுக உதவும் வகையில் அரசாங்கம் 40% வரை கூடுதல் மானியங்களை வழங்கும்.
தரவுத்தளங்களின் களஞ்சியம்
தற்போது, AIKosha 315 தரவுத்தொகுப்புகளையும் 12 நிறுவனங்களிலிருந்து 84 மாதிரிகளையும் வழங்குகிறது. இது பல கருவிகளையும் வழங்குகிறது. இந்தத் தளம் தனிப்பட்ட தரவு அல்லாத தரவை மட்டுமே உள்ளடக்கும் என்று வைஷ்ணவ் குறிப்பிட்டார். ஒரு தரவுத்தொகுப்பு டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவிலிருந்து (Digital India Bhashini division) வருகிறது. இது 12 இந்திய மொழிகளில் 1,684 மணிநேர தொடர்புகொண்ட பேச்சுத் தரவைக் (labeled speech data) கொண்டுள்ளது. இந்தத் தரவு தானியங்கி பேச்சு அங்கீகாரத்திற்கான கருவிகளை உருவாக்க உதவும்.
தெலுங்கானா அரசாங்கத்தின் மற்றொரு தரவுத்தொகுப்பில் மாநிலத்தின் நியாய விலைக் கடைகளிலிருந்து (fair price shops) பரிவர்த்தனைத் தரவு உள்ளது.
IndiaAI-ன் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங், AIKosha ஒரு குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பாக (minimum viable product(MVP)) வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான தரவுத்தொகுப்புகளுடன் தொடங்கப்பட்டது என்றார். மேலும், அவர் கூறியதாவது, "தளம் உள்ளது, ஆனால் அதை வளப்படுத்த வேண்டும்" (The platform exists, but it will need to be enriched) என்று கூறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பிரிவு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களிடமிருந்து சிக்கல் நிறைந்த அறிக்கைகளை சேகரித்து வருகிறது. இவை அடுத்த சுற்றில் ஆராய்ச்சியாளர்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்கு சவால்களாக முன்வைக்கப்படும்.
இதற்கான தளத்தைத் தொடங்க, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் விண்ணப்பங்களில் கோரிய தரவுத்தொகுப்புகளில் கவனம் செலுத்தியது. இந்த விண்ணப்பங்கள் வெவ்வேறு IndiaAI திட்டத் தூண்களின் (IndiaAI Mission pillars) கீழ் செய்யப்பட்டன என்று பெயர் தெரியாத நிலையில் HT உடன் பேசிய ஒரு அதிகாரி தெரிவித்தார்.
அமைச்சகம் தற்போதுள்ள திறந்த அரசாங்கத் தரவு (Open Government Data (OGD)) களஞ்சியத்திலிருந்து அனைத்து தரவுத்தொகுப்புகளையும் மாற்றவில்லை. AIKosha AI-தயாரான தரவுத்தொகுப்புகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். மேலும், அதிகாரி குறிப்பிட்டதாவது, "நாங்கள் பொருத்தமான மற்றும் AI-தயாரான தரவுத்தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கிறோம். இதில் தரவுக்கான தரம், தரப்படுத்தல் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொள்வதும் அடங்கும்."
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) மற்ற அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. அவர்களின் தரவுத் தொகுப்புகளை எவ்வாறு சுத்தம் செய்வது மற்றும் பொது சேவை பயன்பாடுகளை உருவாக்க அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்களுக்குக் கற்பிக்கிறார்கள்.
AIKosha இந்திய மொழிகளில் உரையிலிருந்து பேச்சு மற்றும் மொழிபெயர்ப்பிற்கான பல்வேறு மாதிரிகளை வழங்குகிறது. இந்த மாதிரிகள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) பாஷினி பிரிவிலிருந்து (Bhashini Division) வருகின்றன.
Sarvam AI மற்றும் Ola Krutrim போன்ற தனியார் நிறுவனங்களும் AIKosha-ல் தங்கள் மாதிரிகளைச் சேர்த்துள்ளன. Sarvam AI-ன் ஷுகா (Shuka) இந்திய மொழிகளில் ஆடியோ அடிப்படையிலான கேள்வி-பதில் கருவிகளை உருவாக்க உதவுகிறது. க்ருத்ரிமின் சித்ரார்த் (Krutrim’s Chitrarth) ஆங்கிலத்துடன் சேர்த்து 10 இந்திய மொழிகளில் உள்ள உரை விளக்கங்களிலிருந்து படங்களை உருவாக்க முடியும்.
தரவுத் தொகுப்புகளைப் பதிவிறக்க, பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி DigiLocker-ல் பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்கள் ஆதார் பயன்படுத்தி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) நிறுவன லாக்கர் மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்த செயல்முறை தளத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் தரவுத்தொகுப்புகள் பொருத்தமானவை என்பதை உறுதி செய்கிறது. மேலும், இது தொடர்பாக ஒரு அதிகாரி குறிப்பிட்டதாவது, "இது ஒரு அரசாங்க தளம். யாராவது பொருத்தமற்ற படங்களுடன் தரவுத் தொகுப்பைப் பதிவேற்றினால், நாங்கள் பொறுப்பேற்க வேண்டும்." பங்களிப்பாளர்கள் தாங்கள் பதிவேற்றும் தரவுத்தொகுப்புகள் மற்றும் மாதிரிகளுக்கான அணுகல் கட்டுப்பாடுகளை அமைக்க தளம் அனுமதிக்கிறது.
AIKosha இல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) 8 பயன்பாட்டு நிகழ்வுகளை கோடிட்டுக் காட்டியுள்ளது. தளத்தில் உள்ள வெவ்வேறு மாதிரிகள் மற்றும் தரவுத்தொகுப்புகள் எவ்வாறு பொது சேவைகளை வழங்க முடியும் என்பதைக் காட்டுகிறது. ஒரு உதாரணம் கிராமப்புற மக்கள் பேச்சுவழக்குகளைப் புரிந்துகொள்ள உதவும் குரல் உதவியாளர்கள் போன்று. இதற்கு பாஷினி (Bhashini) மற்றும் ப்ராஜெக்ட் வாணியிலிருந்து (Project Vaani) தரவுத்தொகுப்புகள் தேவை. இவை 54 இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளை உள்ளடக்கியது. இதற்கு பிராந்திய பேச்சு முறைகள் பற்றிய தகவல்களுடன் E-Shram மற்றும் MNREGA போன்ற அரசாங்கத் திட்டங்களிலிருந்து தரவுகளும் தேவை.
IndiaAI பயன்பாட்டு மேம்பாட்டு முயற்சியின் கீழ் 30 அணிகளுக்கு விருது வழங்கப்பட்டது. விவசாயம், காலநிலை மாற்றம், சுகாதாரப் பாதுகாப்பு, கற்றல் குறைபாடுகள் மற்றும் நிர்வாகம் ஆகிய ஐந்து முக்கிய பகுதிகளுக்கு அவர்கள் AI அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கினர். கருத்தியல் நிலையில் யோசனைகளைக் கொண்ட அணிகளுக்கு ₹5 லட்சம் வழங்கப்பட்டது. தயாராக முன்மாதிரிகளைக் கொண்ட அணிகளுக்கு ₹25 லட்சம் வழங்கப்பட்டது.
திறனை வளர்ப்பதற்கான முயற்சிகள்
பொதுத்துறை அதிகாரிகளுக்கான AI திறன் கட்டமைப்பை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இது அரசு ஊழியர்களிடையே திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது AI மேம்பாடு மற்றும் செயல்படுத்தலின் வாழ்க்கைச் சுழற்சியில் கவனம் செலுத்துகிறது.
அமைச்சகம் அரசாங்கத்தின் இணையவழி பாடத் தளமான iGOT கர்மயோகியில் (iGOT Karmayogi) AI கூறுகளையும் சேர்த்தது. இந்தத் தளம் அரசு ஊழியர்களுக்கு 1,900-க்கும் மேற்பட்ட இணையவழி படிப்புகளை வழங்குகிறது. புதிய iGOT AI, உள்ளூரில் உருவாக்கப்பட்ட AI மாதிரிகளைப் பயன்படுத்தும். இந்த மாதிரிகள், அரசு ஊழியரின் அமைச்சகம், பங்கு மற்றும் தலைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பாடநெறி பரிந்துரைகளைத் தனிப்பயனாக்கும்.
iGOT-ஐப் பயன்படுத்துவதை எளிதாக்குவதே இதன் குறிக்கோள் என்று அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அடில் ஜைனுல்பாய் கூறினார். அதிகாரிகள் கேள்விகளை உள்ளிட முடியும். மேலும், இந்தத் தளம் மிகவும் பொருத்தமான படிப்புகளை பரிந்துரைக்கும்.
1.3 மில்லியன் அரசு ஊழியர்கள் AI பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 9,40,000 பேர் இந்தப் பாடத்திட்டத்தை முடித்துள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் குறைந்தது ஒரு AI பாடத்திட்டத்தையாவது எடுக்க வேண்டும் என்பதே இந்த ஆணையத்தின் குறிக்கோள் என்று ஜைனுல்பாய் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து அரசு ஊழியர்களையும் "அதில் உரையாடுபவர்களாக" மாற்றுவதே அவர்களின் முக்கிய நோக்கமாகும்.
IndiaAI புத்தொழில் குளோபல் ஆக்சலரேஷன் திட்டத்திற்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பையும் வைஷ்ணவ் அறிவித்தார். பிரான்சின் ஸ்டேஷன் F மற்றும் HEC பாரிஸுடன் இணைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க நிறுவனங்கள் ஸ்டேஷன் F-ன் முடுக்கி திட்டத்தில் நான்கு மாதங்கள் செலவிடுவார்கள். இந்த நேரத்தில், அவர்கள் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைகளை அணுகுவார்கள்.
AI மூன்று முக்கிய சவால்களை எதிர்கொள்கிறது என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் சூட் கூறினார். இவை திறன் மேம்பாடு, கணினி திறன் மற்றும் தர தரவுத்தொகுப்புகள் ஆகும். வியாழக்கிழமை அறிவிப்புகள் மூலம் இந்த சவால்கள் தீர்க்கப்பட்டன.
“AI மற்றும் தரவுகளுடன் இந்தியா சரியான பாதையில் உள்ளது” என்று அவர் கூறினார். AI தொடர்பான தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் நெறிமுறை கவலைகளையும் அஜய் சூட் ஒப்புக்கொண்டார். AI நிர்வாகம் குறித்த இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஆலோசனைக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கருத்துகளையும் மதிப்பாய்வு செய்த பிறகு இது நடக்கும்.
AI ஐ ஒழுங்குபடுத்துவதற்கான "தொழில்நுட்ப-சட்டக் கட்டமைப்பை" (techno-legal framework) இந்தியா பங்களிக்கும் என்று அஜய் சூட் மேலும் கூறினார். இது ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உலகளாவிய தரவுக் கட்டமைப்பின் கீழ் இருக்கும். இது இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தில் (Digital Personal Data Protection Act) உள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்ததாக இருக்கும்.