துணிச்சலான கொள்கைகளுடன் இந்தியப் பெண்களுக்கு அதிகாரமளித்தல். -நடாஷா ஜா பாஸ்கர்

 அரசாங்கத்தின் கொள்கைகள், பெண்களுக்கு சுகாதாரம், சுத்தமான நீர், நிதி உள்ளடக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை அணுகுவதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது கவனம் இந்த உந்துதலைத் தக்கவைத்துக்கொள்வதில் இருக்க வேண்டும்.


மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுகாதாரம், சுத்தமான நீர், நிதி உள்ளடக்கம் மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றைப் பெண்கள் அணுகுவதில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கக் கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இந்த முயற்சிகள், பரந்த சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களுடன் இணைந்து, நாடு முழுவதும் நிர்வாகத்திலும், பணியாளர்களிலும், சமூகத் தலைமையிலும் பெண்களின் பங்கை மறுவடிவமைத்து வருகின்றன.


சுகாதாரம் மற்றும் சுத்தமான நீர் பணிகள் குறித்து


பெண்கள் அதிகாரமளித்தல் இந்தியாவின்  பயணம், தூய்மை இந்தியா இயக்கம் (Clean India Mission) மூலம் ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்தது. இந்த முயற்சி கழிப்பறைகள் கட்டுவதில் மட்டுமல்ல, பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது. குறிப்பாக, கிராமப்புறங்களில் பெண்கள் அதிக ஆபத்தை எதிர்கொண்டதால் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 116 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission (SBM)) மூலம் பயனடைந்ததாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன. இது பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உருவாக்கியது மற்றும் பெண்களுக்கு அதிக சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அளித்தது.


ரூர்கேலாவில், மா தாரிணி சுய உதவி குழு (Self-Help Group (SHG)) புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளுக்கு, சிறந்த நீர் வசதியுடன் கூடிய சமூக கழிப்பறைகளைக் கட்டுவதன் மூலம் உதவியது. இது பெண்களைப் பாதுகாப்பானதாக்கியது. மேலும், மாதவிடாய் காலத்தில் அவர்களின்  சுகாதாரத்தை மேம்படுத்தியது மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்தியது. இந்த முயற்சியில் உரம் தயாரிக்கும் நடவடிக்கைகள் அடங்கும். இது சமூகத்திற்கு வருமானத்தை ஈட்ட உதவியது.  இது நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளையும் ஊக்குவித்தது.


தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission (SBM)) வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஜல் ஜீவன் திட்டம் (Jal Jeevan Mission (JJM)) தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது. ஜல் ஜீவன் திட்டத்திற்கு முன்பு, இந்தியாவில் 17% கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருந்தன. பெண்கள் தண்ணீர் எடுக்க நீண்ட நேரம் செலவிட வேண்டியிருந்தது. இது கல்வி, வேலை அல்லது பிற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய நேரத்தை எடுத்துக்கொண்டது. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம், 150 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு இப்போது குழாய் நீர் கிடைக்கிறது.  இது பெண்கள் எதிர்கொள்ளும் தினசரி சுமைகளை குறைத்துள்ளது.


ஜல் ஜீவன் திட்டத்தின் (Jal Jeevan Mission (JJM)) நன்மைகள் வசதிக்கு அப்பாற்பட்டவை. தேவையான நீர் கிடைப்பதால் விவசாயம் மற்றும் அது தொடர்பான பணிகளில் பெண்களின் பங்களிப்பு 7.4% அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த மாற்றம் பீகார் மற்றும் ஜார்க்கண்டில் தெளிவாகத் தெரிகிறது. இந்த மாநிலங்களில் பெண் தொழிலாளர் பங்களிப்பு வரலாற்று ரீதியாக குறைவாகவே இருந்தது. 2017 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடையில், கிராமப்புற பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு 24.6% இலிருந்து 41.5% ஆக வளர்ந்தது. இந்த முன்னேற்றத்தில் ஜல் ஜீவன் திட்டம் முக்கிய பங்கு வகித்தது. பெண்கள் தினசரி தண்ணீர் சேகரிக்கும் நேரத்தைக் குறைப்பதன் மூலம், ஜல் ஜீவன் திட்டம் பொருளாதார சுதந்திரத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்துவதோடு வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிறது.


இலக்கு கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் இந்தியா பெண்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. இந்த முயற்சிகள் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதோடு எதிர்கால முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளத்தையும் உருவாக்குகின்றன. அணுகக்கூடிய வளங்களை வழங்குவதிலும் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. சமூகத் தடைகளை உடைப்பதும் ஒரு முக்கிய நோக்கமாகும். இந்த நடவடிக்கைகளின் மூலம், வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் பெண்கள் வழிநடத்தி வெற்றி பெற இந்தியா வாய்ப்புகளை உருவாக்குகிறது.


பெண்கள் தலைமையிலான வணிகங்கள், நிதி உள்ளடக்கம்


பெண் தொழில்முனைவோர் மற்றும் நிதி உள்ளடக்க முயற்சிகள் இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை ஊக்குவித்தன. இந்த மாற்றம் சிறந்த டிஜிட்டல் அணுகல், வலுவான கொள்கைகள் மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.


 இந்தியா புத்தொழில் நிறுவனங்கள் (startups) முன்முயற்சியின் கீழ், குறைந்தது ஒரு பெண் இயக்குநரையாவது கொண்ட 73,000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது வணிகத் தலைமையில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கைக் காட்டுகிறது. அரசாங்க ஆதரவுடன் கூடிய நிதித் திட்டங்கள் இந்த வளர்ச்சியை ஆதரித்தன. இந்திய புத்தொழில் நிறுவனங்கள் திட்டம் (Stand-Up India Scheme) 2.36 லட்சம் (236,000) தொழில்முனைவோருக்கு ₹53,609 கோடி மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் (Pradhan Mantri Mudra Yojana) 51.41 கோடி கடன்களுக்கு ₹32.36 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. இதில் 68% கடன்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


டிஜிட்டல் இணைப்பின் விரைவான வளர்ச்சி, அதிகமான மக்கள் நிதி சேவைகளை பெற உதவுகிறது. BharatNet மற்றும் PM-WAN (Prime Minister Wi-Fi Access Network Interface (PM-WANI)) ஆகியவை அதிவேக இணையத்தை விரிவுபடுத்தியுள்ளன. அவை 1,99,000 கிராமங்களையும் 2,14,000 கிராம பஞ்சாயத்துகளையும் அடைந்துள்ளன. 2,47,000-க்கும் மேற்பட்ட Wi-Fi hotspots அமைக்கப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் முன்னேற்றங்கள் பெண்களுக்கு பல வழிகளில் பயனளித்து வருகின்றன. அவர்கள் இப்போது வங்கி சேவைகள், மின் வணிக தளங்கள் மற்றும் வணிக வாய்ப்புகளை சிறப்பாக அணுகியுள்ளனர். பிரதம மந்திரி ஜன் தன் யோஜனாவின் (Pradhan Mantri Jan Dhan Yojana) கீழ், பெண்களுக்காக 300 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் நிதி சுதந்திரத்தையும் பொருளாதார பங்கேற்பையும் அதிகரித்துள்ளது.


பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மின் வணிகம் மற்றும் அரசு கொள்முதலிலும் கால் பதித்து வருகின்றன. அரசு மின் சந்தை (Government e-Marketplace (GeM)) போர்ட்டலில், பெண் தொழில்முனைவோர்கள் இப்போது மொத்த விற்பனையாளர்களில்  8%  உள்ளனர். அவை  1,00,000 க்கும் மேற்பட்ட உதயம்-சரிபார்க்கப்பட்ட குறு மற்றும் சிறு நிறுவனங்கள் (Udyam-verified micro and small enterprises (MSEs)) ₹46,615 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.


டிஜிட்டல் தளங்கள் சிறு அளவிலான பெண் தொழில்முனைவோருக்கு ஒரு திருப்புமுனையாக மாறி வருகின்றன. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரான ரீனா கிரார் என்பவர் ஆடை, உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் சுய உதவிக் குழுவான கிர்ஜா தேவி ஜன் கல்யாண் சமிதியை நடத்தி வருகிறார். GeM போர்ட்டலைப் பயன்படுத்துவதன் மூலம், அவரது வணிகம் உள்ளூர் சந்தைகளுக்கு அப்பால் விரிவடைந்தது, தொழில்நுட்பம் சிறு நிறுவனங்களுக்கும் தேசிய வாய்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளியை எவ்வாறு குறைக்கிறது என்பதை இது விளக்குகிறது. இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், பெண்கள் தலைமையிலான வணிகங்கள் தொழில்முனைவோரில் மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மறுவடிவமைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன.


நிர்வாகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம்


அரசியல் முடிவெடுப்பதில் பெண்களின் பிரதிநிதித்துவம் பல ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தைக் கண்டுள்ளது.  அதாவது, சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை செயல்படுத்துதல், இது அதிகாரத்தின் பாகுபாட்டை மறுவரையறை செய்யும். இன்று, பெண்கள் வெறும் பங்கேற்பாளர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் முக்கிய முடிவெடுப்பவர்களாகவும் உள்ளனர். மேலும், உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழிநடத்துகிறார்கள்.


அடிமட்ட அளவில், பெண்கள் வளர்ச்சிக்கான முக்கிய நபர்களாக மாறியுள்ளனர். பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் (PRIs) தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் சுமார் 46% பேர் உள்ளனர்.  1.4 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் கிராமப்புற நிர்வாகப் பணிகளில் பணியாற்றுகின்றனர். இந்த மாற்றம் வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல. தலைமைத்துவத்தில் அதிகமான பெண்கள் இருப்பதால், கொள்கைகள் இப்போது குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் தேவைகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. பெண் தலைவர்கள் பல துறைகளில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். 

சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பொதுப் பாதுகாப்பு அனைத்தும் அவர்களின் தனித்துவமான கண்ணோட்டங்கள் மற்றும் தீர்வுகள் காரணமாக மேம்பட்டுள்ளன. தலைமைத்துவத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்துகிறது. பெண்கள் தலைமை தாங்கும்போது, ​​சமூகங்கள் செழித்து வளரும். நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க இந்தியா உறுதியாக உள்ளது. இந்த முயற்சி ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், நிலையான வளர்ச்சி மற்றும் சமூகம் சமத்துவத்தை அடையவும் உதவுகின்றன.


அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (science, technology, engineering, and mathematics (STEM)) மற்றும் விளையாட்டு முதல் நிர்வாகம் மற்றும் தொழில்முனைவு வரை பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இன்று, STEM பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 43% பெண்கள். இந்தியாவின் தொழில்நுட்ப பணியாளர்களை வலுப்படுத்துவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 2023-ஆம் ஆண்டில், பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த G-20 அமைச்சர்கள் மாநாட்டில் "பெண்கள் வளர்ச்சி பெறும்போது, ​​உலகம் வளர்ச்சியடையும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். 


தொழில்முனைவு, கல்வி மற்றும் நிதி உள்ளடக்கம் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், வளர்ச்சி, புதுமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கிறோம். உலகளாவிய மாற்றத்தை இயக்குகிறோம். பெண்கள் தலைமையிலான வணிகங்களை ஆதரிக்கும் கொள்கைகள், அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை தொடர்ந்து வடிவமைக்கின்றன. இந்த உந்துதலைத் தக்கவைத்துக்கொள்வதிலும், முன்னேற்றம் எதிர்கால சந்ததியினருக்கு நீடித்த மாற்றமாக மாறுவதை உறுதி செய்வதிலும் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது.


நடாஷா ஜா பாஸ்கர், இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவன ஆலோசனை நிறுவனமான நியூலேண்ட் குளோபல் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார் மற்றும் UN பெண்கள் ஆஸ்திரேலியா மற்றும் தலைமை நிர்வாக பெண் அறிஞர் ஆவார்.



Original article:

Share: