இந்தியாவின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான திறன், வளம் மற்றும் அர்ப்பணிப்பு ஆஸ்திரேலியாவிடம் உள்ளது.
ஆஸ்திரேலியா இந்தியாவை நம்புகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக வளரும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளரும்போது, அதன் அரசியல் செல்வாக்கும் அதிகரிக்க வேண்டும். இது போன்ற காரணிகளால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் (United Nations Security Council) இடம் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சியை ஆஸ்திரேலியா ஆதரிக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சியில் ஆஸ்திரேலியா ஒரு இயற்கையான பங்குதாரராக உள்ளது. இரு பொருளாதாரங்களும் ஒன்றையொன்று ஆதரிக்கின்றன. இந்தியாவுக்குத் தேவையானதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது, ஆஸ்திரேலியாவுக்குத் தேவையானதை இந்தியா உற்பத்தி செய்கிறது. இருநாடுகளும் பொதுவான ராஜதந்திர நலன்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். புவியியல் ரீதியாக, இருநாடுகளும் இந்தியப் பெருங்கடலில் நெருங்கிய அண்டை நாடுகளாக உள்ளன.
புதிய சாலை வரைபடம், உறவுகளின் அடுத்த கட்டம்
இந்தக் காரணங்களுக்காக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கடந்த வாரம் இந்தியாவுடனான ஆஸ்திரேலியாவின் பொருளாதார ஈடுபாட்டிற்கான புதிய திட்ட வரைபடத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியா வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா எவ்வாறு உதவ முடியும் என்பதையும், அதிலிருந்து எவ்வாறு பயனடைய முடியும் என்பதையும் இந்த திட்ட வரைபடம் விளக்கியது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஆஸ்திரேலியா நம்பிக்கை கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் திறன்கள், வளங்கள் மற்றும் அர்ப்பணிப்பு இந்த வளர்ச்சியை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை இந்த திட்ட வரைபடம் எடுத்துக்காட்டுகிறது.
இந்த வழிகாட்டுதல் ஆஸ்திரேலியாவின் 2018-ஆம் ஆண்டு பொருளாதார உத்தியின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், அதன் பின்னர் பல விஷயங்கள் மாறிவிட்டன.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Economic Cooperation and Trade Agreement (ECTA)) மூலம் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவு வலுவாக வளர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 35% அதிகரித்துள்ளது. மோசமாக இல்லை? ஆனால், ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 66% அதிகரித்துள்ளது. இது உலகின் பிற பகுதிகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதியைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அதற்குக் காரணம், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்துக்கு இணையாக இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவையானதை ஆஸ்திரேலியா வழங்குகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் ஆற்றலை வழங்குகிறது. இந்தியாவின் உற்பத்திக்கு முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட வளங்களை வழங்குகிறது. இது அடுத்த தலைமுறை இந்திய நிபுணர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உதவுகிறது.
ஆஸ்திரேலியா-இந்தியா கூட்டாண்மையின் அடுத்த கட்டத்தை இந்த சாலை வரைபடம் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை இது வெளிக்காட்டுகிறது. இது "அதிவிரைவான வளர்ச்சி" (Superhighways of growth) என்று அழைக்கப்படும் நான்கு முக்கிய துறைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தத் துறைகள் சுத்தமான எரிசக்தி, கல்வி மற்றும் திறன்கள், வேளாண் வணிகம் மற்றும் சுற்றுலா ஆகியவை ஆகும்.
பகிரப்பட்ட வளர்ச்சிக்கான ஏழு முக்கிய பகுதிகளையும் இந்த வழிகாட்டுதல் எடுத்துக்காட்டுகிறது. அவை முதலீடு, தொழில்நுட்பம், விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் கலைகள், வளங்கள், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் சுகாதாரம் ஆகும். இவை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இணைந்து சிறப்பாகப் செயல்படக்கூடிய துறைகளாகும்.
ஆஸ்திரேலியா கூட்டாண்மையை கட்டமைப்பதில், இந்தியாவின் லட்சியங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இந்தியா தனது மின்சார வாகனத் துறையை வளர்க்க விரும்புகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். முக்கிய பொருட்களை வழங்குவதன் மூலம் ஆஸ்திரேலியா உதவ முடியும். இது உலகின் மிகப்பெரிய லித்தியம் உற்பத்தியையும், நிக்கல் மற்றும் கோபால்ட்டின் 2-வது பெரிய இருப்புக்களையும் கொண்டுள்ளது. மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு இந்த தாதுக்கள் மிகவும் முக்கியமானவை.
இந்தியாவின் திறன் தேவைகளுக்கான ஆதரவு
இந்தியாவின் திறன் தேவைகளில் ஆஸ்திரேலியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா தனது வளர்ச்சியை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் உயர்தர பயிற்சியை வழங்குவதன் மூலம் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. அவர்கள் ஏற்கனவே குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப (Gujarat International Finance Tech (GIFT)) நகரில் ஒரு வளாகத்தை நிறுவியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் விரைவில் ஒரு புதிய வளாகம் திறக்கப்படும். வரும் ஆண்டுகளில், இந்தியா முழுவதும் மேலும் வளாகங்கள் அமைக்கப்படவுள்ளது.
இந்தியாவுடனான பொருளாதார உறவுகளில் ஆஸ்திரேலியா முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. அதை உறுதிசெய்யும் வகையில் இந்திய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, 10 லட்சமாக உள்ளது. இது ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை குழுவாகும். பல இந்திய-ஆஸ்திரேலியர்கள் வணிகம், அரசாங்கம் மற்றும் சமூகத்தில் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர். இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்த, ஆஸ்திரேலியா-இந்தியா உறவுகளுக்கான மையத்தை அமைத்துள்ளது. இந்த முயற்சியில் அரசாங்கம் ₹132 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த மையத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு புகழ்பெற்ற ஆஸ்திரேலியர்கள் வழி நடத்துகின்றனர். அவர்களில் ஒருவர் திட்ட வரைபடத்தை வெளியிடும் போது பிரதமர் அந்தோணி அல்பானீஸு அருகில் நின்று திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஒரு இணைப்பாக
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் ஒரு விலைமதிப்பற்ற சொத்தாக கருதப்படுகின்றனர். இரு நாடுகளும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறார்கள். அவர்கள் புதிய வணிக வாய்ப்புகளையும் உருவாக்குகிறார்கள். ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த வலுவான தொடர்பை மதிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இதை "மனிதப் பாலம்" (human bridge) என்று அழைக்கிறார். இதை வலுப்படுத்த, ஆஸ்திரேலியா மைத்ரி மானியத் திட்டத்தில் (Maitri grants program) மேலும் ₹22 கோடியை முதலீடு செய்கிறது. இந்த திட்டம் நமது புலம்பெயர்ந்தோர் தொடர்புகளின் திறனை அதிகரிக்க உதவுகிறது.
இந்த வழிகாட்டுதல் ஆஸ்திரேலிய வணிகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற அதிக வாய்ப்புகளைக் கண்டறிய ஊக்குவிக்கிறது. இந்தக் கூட்டாண்மைகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும்.
இதை ஆதரிக்க, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (Comprehensive Economic Cooperation Agreement (CECA)) முன்னெடுப்பது முக்கியம். இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.
இந்தியாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவு முன்பைவிட வலுவாக உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். இருப்பினும், இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது. இரு நாடுகளும் இப்போதே சரியான முடிவுகளை எடுத்தால், எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். திட்ட வரைபடத்துடன், முன்னோக்கி செல்லும் பாதை மிகவும் தெளிவாக உள்ளது.
பிலிப் கிரீன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையராக உள்ளார்.