இந்தியாவில் சரியான நேரத்தில் நீதி : செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வாக இருக்க முடியுமா? -புனர்ஜித் ராய்சௌத்ரி

 AI அமைப்பில் உள்ள திறமையின்மைகளை நிவர்த்தி செய்யவும், செயல்முறைகளை எளிதாக்கவும் மற்றும் நீதி வழங்கலை விரைவாக நியாயமாக மாற்றவும்  முடியும்.


இந்தியாவின் சட்ட அமைப்பு ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது. 45 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது, ஒரு மில்லியன் மக்களுக்கு 21 நீதிபதிகள் மட்டுமே உள்ளதால், நீதித்துறையில் போதுமான நீதிபதிகள் இல்லை. இந்தப் பற்றாக்குறையானது நீதிமன்றங்களை அவற்றின் திறனுக்கு அப்பால் நீட்டிக்கிறது மற்றும் பெரிய தாமதங்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு தாமதமான வழக்கும் உண்மையான விளைவுகள் மற்றும் செலவுகளை அதிகரிக்கின்றன. இதனால், உற்பத்தித்திறனைக் குறைக்கின்றன. மேலும், ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதை கடினமாக்குகின்றன. இது முதலீட்டை ஊக்கப்படுத்துவதில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஏற்கனவே சட்ட பிரதிநிதித்துவத்திற்காக போராடி, சுமைகளைத் தாங்கி, நீதிக்காக பல ஆண்டுகள் காத்திருக்கின்றன.


இருப்பினும், நம்பிக்கை உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) செயல்திறன் மற்றும் அணுகலை மேம்படுத்துவதன் மூலம் உலகம் முழுவதும் தொழில்களை மாற்றி வருகிறது. இந்தியாவின் சட்ட அமைப்பிற்கு AI-ஐ பெரிய அளவில் கொண்டு வர வேண்டிய நேரம் இது. AI திறமையின்மையைக் குறைக்கவும், செயல்முறைகளை விரைவுபடுத்தவும், நீதியை நியாயப்படுத்தவும் முடியும். செயற்கை நுண்ணறிவு பல துறைகளை மாற்றி வரும் அதே வேளையில், சட்ட சீர்திருத்தத்தில் அதன் ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்திய உச்சநீதிமன்றம் நீதித்துறையின் ஆவணங்களை மொழிபெயர்ப்பது மற்றும் வாய்வழி வாதங்களை எடுத்தெழுதுவது போன்ற பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. மேலும், வழக்குகளை நிர்வகித்தல், சட்ட ஆராய்ச்சி மற்றும் நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு பெரிய பங்கை வகிக்க முடியும் என்பதை இந்த தொடக்க கால நிலைகள் காட்டுகின்றன.


இந்தியாவில் மில்லியன் கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு கண்காணிப்பு (case tracking), திட்டமிடல் (scheduling) மற்றும் ஆவண செயலாக்கத்தை (document processing) நிர்வகிப்பதன் மூலம் AI உதவ முடியும். இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing (NLP)) வகைப்படுத்தலை தானியங்குபடுத்தி வழக்கு கோப்புகளிலிருந்து முக்கிய தகவல்களைப் பிரித்தெடுக்க முடியும். இது நீதிபதிகள் மற்றும் எழுத்தர்கள் தொடர்புடைய ஆவணங்களை விரைவாக அணுக அனுமதிக்கிறது. இதற்கான தாமதங்கள் மற்றும் மனித பிழைகளைக் குறைக்கிறது. 'ரோபோ-நீதிபதிகள்' (Robo-Judges) போன்ற AI கருவிகள் வழக்கமான பணிகளைக் கையாள முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது மிகவும் சிக்கலான வழக்குகளுக்கு நீதித்துறை வளங்களை விடுவிக்கிறது. வரலாற்றுத் தரவைப் பயன்படுத்தி முடிவுகளைக் கணிக்கவும் AI-யால் முடியும். தீர்வு காணக்கூடிய வழக்குகளைக் கண்டறிவதன் மூலம் தேக்கநிலையை நிர்வகிக்க இது உதவுகிறது. சீனாவின் 'ஸ்மார்ட் கோர்ட்' (Smart Court) மாதிரி வழக்கு தாக்கல், ஆதாரச் செயலாக்கம் மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை தானியங்குபடுத்துகிறது. இது இந்தியாவிற்கு ஒரு பயனுள்ள வரைபடத்தை வழங்குகிறது.


இந்தியாவில் நீதிக்கான ஒரு பெரிய தடையாக சமமற்ற அணுகல் உள்ளது. நீதிமன்றத்தில் வாதாடக்கூடிய சட்ட சேவைகள் பலருக்கு மிகவும் விலை உயர்ந்தவையாகும். இந்தச் சிக்கலை தீர்க்க AI உதவும். சாட்பாட்கள் (chatbots) மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் (virtual assistants) போன்ற கருவிகள் குறைந்த விலையில் சட்ட ஆலோசனையை வழங்க முடியும். அவை, மக்கள் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்ளவும் சட்ட செயல்முறைகளை வழிநடத்தவும் உதவும். எடுத்துக்காட்டாக, இந்திய ஸ்டார்ட்அப் லீகல்விஸ் (Indian startup LegalWiz) வணிகப் பதிவு மற்றும் அறிவுசார் சொத்துரிமை தாக்கல் ஆகியவற்றை எளிதாக்க AI-ஐப் பயன்படுத்துகிறது. குடும்பச் சட்டம், குத்தகை தகராறுகள் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு இதே போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களுக்கு சட்ட சேவைகள் எளிதாக அணுகக்கூடியதாக இருக்கும். அமெரிக்காவில், DoNotPay போன்ற தளங்கள் ஏற்கனவே மில்லியன் கணக்கானவர்களுக்கு பார்க்கிங் டிக்கெட்டுகளை எதிர்த்துப் போராடவும் சிறிய கோரிக்கைகளை தாக்கல் செய்யவும் உதவியுள்ளன. இந்தியாவும் இதுபோன்ற ஒன்றிலிருந்து பயனடையலாம்.


LegalWiz : சட்ட மற்றும் வணிக தொழில்முறை சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.


AI சட்ட ஆராய்ச்சி மற்றும் நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை பெரிதும் மேம்படுத்த முடியும். இது மில்லியன் கணக்கான ஆவணங்களை விரைவாக ஆராய்ந்து, வழக்கறிஞர்கள் சரியான முன்னுதாரணங்களைக் கண்டறிய உதவுகிறது. இது காகித வேலைகளைவிட உத்தியில் அதிக கவனம் செலுத்த அனுமதிக்கிறது. ஒரு விசாரணையின்போது எடுக்கப்பட்ட ஒவ்வொரு செயலையும் பதிவு செய்வதன் மூலமும் AI வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த முடியும். இது நிகழ்நேரத்தில் சட்ட ஆவணங்களுக்கான பொது அணுகலை வழங்க முடியும். பிளாக்செயின் தொழில்நுட்பம் (Blockchain technology) இந்த பதிவுகள் சேதப்படுத்த முடியாதவை என்பதை மேலும் உறுதிசெய்து, நீதித்துறை அமைப்பை பொதுமக்களுக்கு பொறுப்புவகிக்க வைக்கிறது.

AI ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கும் அதே வேளையில், நீதித்துறை அமைப்புக்காக இந்தியா தனது தனிப்பட்ட முறையில் AI மூலம் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். மேலும், வெளிநாட்டு தீர்வுகளை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது, வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பிழை-திருத்தும் செயல்முறைகளை நேரடியாக தொழில்நுட்பத்தில் இணைக்க முடியும். இது, இந்தியாவின் தனித்துவமான சட்ட மரபுகள் மற்றும் பல்வேறு மொழிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. நீதி அனைத்து சமூகங்களுக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது. இது வழக்கு நிர்வாகத்தில் ஏற்படும் தாமதங்களைக் குறைப்பது மட்டுமல்ல, நீதித்துறை முடிவுகளை வழிநடத்தும் குறியீட்டில் இந்தியாவின் மதிப்புகள் மற்றும் சட்ட முன்மாதிரிகளை இணைப்பது இதன் நோக்கமாகும்.


மேலும், இந்தியா தனது சொந்த AI அமைப்பை உருவாக்குவதன் மூலம், நமது நீதித்துறை செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் முக்கியமான தரவை இந்தியா பாதுகாக்கிறது. நீதித்துறை பதிவுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் கடுமையான தரவு தனியுரிமை மற்றும் வலுவான சைபர் பாதுகாப்பு தேவைப்படும் தகவல்களை வைத்திருக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமைப்பானது, இந்தத் தரவை தேசிய கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை உறுதி செய்கிறது. இது வெளிநாட்டு கண்காணிப்பு அல்லது தற்செயலான தரவு கசிவுகளிலிருந்து வரும் அபாயங்களைத் தடுக்கிறது. நீண்டகால பொருளாதார நன்மைகளில் குறைந்த நிர்வாக செலவுகள், சிறந்த செயல்திறன் மற்றும் உள்ளூர் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். இது இஸ்ரோ மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வரலாற்று முதலீடுகளைப் போன்ற ஒரு உத்தியின் முதலீடாகும்.


சுருக்கமாக, AI இந்திய நீதித்துறை அமைப்பை மாற்ற முடியும். இருப்பினும், இதை செயல்படுத்த, இந்தியா அதன் சொந்த AI சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும். முன்னணி நாடுகள் AI-யில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்கின்றன. ஆனால், இந்தியாவின் நிதிக்கான உறுதிப்பாடு இன்னும் குறைவான அளவாகவே உள்ளது. IndiaAI திட்டத்தின் கீழ் ₹10,371 கோடி ($1.25 பில்லியன்) என்பது ஒரு நல்ல தொடக்கமாகும். ஆனால் அது அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியைவிட மிகக் குறைவு. இந்தியா தனது சட்ட மரபுகளை மதிக்கும் மற்றும் தரவு இறையாண்மையைப் பாதுகாக்கும் வலுவான AI-அடிப்படையிலான நீதித்துறை அமைப்பை விரும்பினால், அது தனது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இந்தியாவின் நீதித்துறையின் எதிர்காலம் இந்தியாவிற்காக, AI-ஐ மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டும்.


புனர்ஜித் ராய்சவுத்ரி ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் பொருளாதாரத் துறையின் தலைவராகவும் உள்ளார். ஆன்ஷி சர்மா ஒரு சுதந்திரமான ஆராய்ச்சியாளர் ஆவார்.


Original article:
Share: