தேசிய கல்விக் கொள்கையின் (2020) தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஒரு உயர்கல்வி கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்குவதற்கு கவனமாக திட்டமிடல் தேவைப்படும்.
தேசிய கல்விக் கொள்கை, பெரிய பல்துறை கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் இந்தியாவின் மந்தமான உயர்கல்வி முறையை மாற்ற முன்மொழிகிறது. தொடர்பு, கலந்துரையாடல், விவாதம், ஆராய்ச்சி மற்றும் சிந்தனைக்கான வாய்ப்புகள் மற்றும் பல்துறை மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்த நோக்கங்களை அடைய இந்தியாவில் தற்போதுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை எவ்வாறு மாற்றுவது? என்ற கேள்விக்கு பதில்: படிப்படியாக முன்னேறுவதாகும். பல பாடங்களை வழங்கும் வளாகங்களைக் கொண்டிருப்பதில் இருந்து (பல துறைகள்), பாடங்கள் ஒன்றிணைந்து செயல்படும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தல், இறுதியாக சிக்கல்களைத் தீர்க்க பாடங்களை முழுமையாக இணைப்பது (இடைநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி) போன்றவை இதில் அடங்கும்.
பல்துறை என்பது ஒரு திட்டத்தில் வெவ்வேறு பாடங்கள் அல்லது துறைகளைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. ஆனால், அவை கருத்துக்களை கலக்காமல் தனித் தனியாக செயல்படுகின்றன. துறைகள் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளன. ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த ஒழுங்கு முறைகள் மற்றும் கண்ணோட்டங்களைப் பயன்படுத்துகின்றன மற்றும் எல்லைகளைப் பராமரிக்கின்றன. பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை, அறிவு ஒருங்கிணைப்பை வலியுறுத்தாமல், பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை பன்முக அணுகுமுறை எதிர்பார்க்கிறது. இது அவற்றுக்கிடையே தொடர்புகள் மற்றும் விவாதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, இந்தக் கட்டுரையில் ஒரு கல்வி நிபுணரும் ஒரு பொருளாதார நிபுணரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். இருப்பினும், ஒரு பல்துறை அணுகுமுறை, நிஜ உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க வெவ்வேறு பாடங்களிலிருந்து வரும் கருத்துக்கள், முறைகள் மற்றும் அறிவைக் கலக்கிறது. இது ஒத்துழைப்பைத் தாண்டி, துறைசார் எல்லைகளைக் கடந்து பல்வேறு துறைகளின் கருத்துக்களை ஒருங்கிணைக்கிறது
பல்துறை வளாகம்
ஒற்றைப் பிரிவு உயர்கல்வி நிறுவனங்களை (single stream institutes) படிப்படியாக நீக்கி, பல்துறை வளாகத்தை நிறுவுவது இரண்டு வழிகளில் செயல்படலாம். முதலாவதாக, முக்கிய பாடங்களை விரிவுபடுத்த புதிய துறைகளைச் சேர்க்கலாம். உதாரணமாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல்களைச் சேர்த்து, பொருளாதாரம் மற்றும் தொடர்புடைய பாடங்களில் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளை வழங்குகின்றன. இரண்டாவதாக, வெவ்வேறு கல்லூரிகளை இணைப்பதன் மூலம் நாம் பல்கலைக்கழகக் குழுக்களை உருவாக்க முடியும். உதாரணமாக, ஒரு வணிகக் கல்லூரி ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து ஒரு பெரிய பல்கலைக்கழகத்தை உருவாக்க முடியும். இதற்கு கல்வி குழுப்பணி மட்டும் அல்லாமல் சிறந்த மேலாண்மை தேவைப்படுகிறது. ஒற்றைப் பாடக் கல்லூரிகளை தொகுப்பாக்குவது பெரிய, பல்துறை நிறுவனங்களை உருவாக்குவது செலவு குறைந்த மற்றும் விரைவான வழியாகும். இருப்பினும், 2020-21ஆம் ஆண்டு அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (All India Survey of Higher Education (AISHE)) பல கல்லூரிகள் இளங்கலைப் படிப்புகளை மட்டுமே வழங்குகின்றன என்றும், இவற்றில் 35% ஒற்றைப் பாடக் கல்லூரிகள் என்றும், பல கல்லூரிகள் பி.எட் (B.Ed) படிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்றும் காட்டுகிறது. இதனால் ஒரு திரளான குழுக்களை (clustering) உருவாக்குவதற்கு ஒரே பகுதியில் வெவ்வேறு பாடங்களின் நல்ல கலவையைக் கண்டுபிடிப்பது கடினமாகிறது.
2030-ஆம் ஆண்டுக்குள் "ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது அதற்கு அருகிலும் குறைந்தது ஒரு பல்கலைக்கழகம்" என்ற இலக்கை அடைய, ஏற்கனவே உள்ளவற்றை மறுபயன்பாடு செய்வதோடு கூடுதலாக, புதிய பல்துறை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும். பல மாவட்டங்களில் ஒரு பல்கலைக்கழகம் பரவியிருப்பதை விட, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழக வளாகத்தை உருவாக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுப் பல்கலைக்கழகங்கள் கல்வியில் மிகவும் திறமையானவை என்றாலும், பல கல்லூரிகளை நிர்வகிப்பது ஆராய்ச்சி செயல்திறனை குறைக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
பல்துறை கற்றல் மற்றும் பயிற்சி (Cross-disciplinary learning)
எதிர்காலப் பல்கலைக்கழகம் என்பது தனித்தனி துறைகளின் கலவையாக மட்டும் இருக்கக்கூடாது. ஒன்றாக வேலை செய்யத் திறந்திருக்கும், வெவ்வேறு கண்ணோட்டங்களை மதிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதில் அனுபவம் உள்ள ஒரு ஆசிரியர் இதற்குத் தேவைப்படுவர். இதைச் சாத்தியமாக்க, மாணவர்கள் (எதிர்கால ஆசிரியர்கள்) மற்றும் தற்போதைய ஆசிரியர்கள் இருவரும் வெவ்வேறு பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் முக்கியத் துறையைத் தாண்டி, பிற துறைகளிலிருந்து பாடங்களை தேர்ந்தெடுக்கும் போது இந்த பல்துறை கற்றல் தொடங்குகிறது. அடுத்த கட்டம், சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பல்வேறு துறை ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை ஊக்குவிப்பதும் எளிதாக்குவதும் ஆகும்.
இந்த கட்டத்தில், ஆசிரியர்களும் மாணவர்களும் வெவ்வேறு பாடங்களிலிருந்து தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு பாடங்களை இணைக்கும் படிப்புகளை உருவாக்க வழிவகுக்கும். உதாரணமாக, "இந்திய சினிமாவில் பொருளாதார மாற்றங்கள் மற்றும் வர்க்க கட்டமைப்புகள்" ("Economic Changes and Class Structures in Indian Cinema") என்ற பாடநெறி, பொருளாதாரம், சமூகவியல் மற்றும் திரைப்படப் படிப்புகளைச் சேர்ந்த ஆசிரியர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இது போன்ற பல்வேறு துறை சார்ந்த படிப்புகள், திட்டங்கள் அல்லது மையங்களை ஊக்குவிப்பதற்கு, அவற்றை பல ஆண்டுகளாக நிலைநிறுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (National Science Foundation’s (NSF)) ஒருங்கிணைந்த பட்டதாரி கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி (Integrative Graduate Education and Research Traineeship (IGERT)) திட்டம், "ஒரு பெரிய துறையில் ஆழமான அறிவுடன் நன்கு அடித்தளமாக இருக்கும் அதே வேளையில், ஒரு துறைகளுக்கு இடையேயான சூழலில் பணியாற்றுவதற்கான திறன்கள், பலங்கள் மற்றும் புரிதலின் தாக்கம்" கொண்ட எதிர்கால ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டிருப்பதில் கணிசமான முதலீட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
துறைகளுக்கு இடையேயான சிந்தனை குறித்து
துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை பல்வேறு துறைகள் சார்ந்த கற்றல் மற்றும் பயிற்சி எதிர்பார்க்கிறது. மறுபுறம், துறைகளுக்கு இடையேயான சிந்தனை மற்றும் ஆராய்ச்சிக்கு துறைகளுக்கு இடையே ஆழமான தொடர்புகளை உருவாக்குவதும் ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை உருவாக்குவதும் தேவைப்படுகிறது. துறைகளுக்கு இடையேயான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி உண்மையில் இந்த இலட்சியத்தை அடைய முடியுமா? ஒருங்கிணைந்த பட்டதாரி ஆராய்ச்சி பயிற்சி (IGERT) திட்டத்தில் எழுத்தாளர்களின் அனுபவத்தின் அடிப்படையில், உயிரி தொழில்நுட்பம், மருத்துவம், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற துறைகளில் பல்துறைப் பணிகள் வெற்றிகரமாக இருந்தன.
ஆனால், பொறியியல் மற்றும் கட்டிடக்கலை போன்ற துறைகளில், மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர். அவர்களின் படைப்புகள் ஒரு பாடப் பகுதியில் தெளிவாகப் பொருந்தாததால், அவர்களின் ஆராய்ச்சியை வெளியிடுவது, கல்வி வேலைகளைப் பெறுவது அல்லது அவர்களின் வாழ்க்கையில் வளர்வது அவர்களுக்கு கடினமாக இருந்தது. பல்துறைப் பணிகள் மீண்டும் பழைய வழிகளில் செல்வதைத் தடுக்க, ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் விதம், வெளியிடும் விதம் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு பணியமர்த்தப்படுகிறார்கள் மற்றும் பதவி உயர்வு பெறுகிறார்கள் என்பதில் மாற்றங்கள் தேவைப்படுகிறது.
இந்த மாற்றங்கள் அனைத்தையும் செய்ய அதிக பணம் செலவாகும் மற்றும் முழுமையாக செயல்படுத்த பல ஆண்டுகள் ஆகும். அரசாங்கம் பொது நிதியை எவ்வாறு செலவிடுகிறது என்பதை சரி செய்ய வேண்டும். விதிகள் மற்றும் நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றங்களும் கவனமாக திட்டமிடப்பட வேண்டும். அடிப்படையில், மிகவும் திறந்த மற்றும் போட்டி நிறைந்த சூழலில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையாகவே வளர்ந்த அமெரிக்க மாதிரியின் சிறந்த பதிப்பைப் போன்ற ஒரு உயர் கல்வி முறையை உருவாக்க முயற்சிக்கிறோம்.
தேவயானி தீர்த்தலி ஒரு கல்வி ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி வடிவமைப்பு ஆலோசகர் ஆவார். பராக் வக்னிஸ் டெல்லியில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பிக்கும் ஆசிரியராக உள்ளார்.