உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனம் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களுடன், உத்தரப்பிரதேச காவல்துறை இப்போது குடிமை சார்ந்த பிரச்சனைகளை கையாளும்போது அதிக எச்சரிக்கையுடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றத்தின் தெளிவான கூறுகள் இல்லாத வரை, குடிமை சார்ந்த வழக்குகளை குற்றவியல் வழக்குகளாக மாற்றக்கூடாது என்று சட்டத்தில் விதி உள்ளது. உத்தரபிரதேசத்தில், இந்த நடைமுறையை உச்சநீதிமன்றம் இப்போது ரத்து செய்துள்ளது. அதே, நேரத்தில் இது சட்டத்தின் ஆட்சியின் முழுமையான சீர்குலைவு என்று கூறியுள்ளது.
ஏப்ரல் 7 அன்று, தேபு சிங் மற்றும் மற்றொருவர் VS உத்தரப்பிரதேச மாநிலம் (Debu Singh and Anr vs State of Uttar Pradesh) என்ற வழக்கில், நீதிமன்றம் மாநிலத்தின் காவல் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தது. மனுதாரர்கள் தேபு சிங் மற்றும் தீபக் சிங் ஆகியோர் நம்பிக்கை மோசடி, குற்றவியல் மிரட்டல் மற்றும் குற்றவியல் சதி ஆகியவற்றின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். தலைமை நீதிபதி சஞ்சிவ் கன்னா தலைமையிலான அமர்வு, "இது தவறு! உத்தரப்பிரதேசத்தில் என்ன நடக்கிறது? ஒவ்வொரு நாளும் குடிமை வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன. அது சரியானது அல்ல! இது சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்த நிலையாகும்!" என்று தனது கண்டனத்தை பதிவு செய்தது.
அறிக்கைப்படி, அமர்வு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தது மற்றும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தொடக்கலாம் என்று வாய்மொழியாக குறிப்பிட்டது. அவ்வாறு செய்யும்போது, அமர்வு ஷரீஃப் அகமது மற்றும் மற்றவர்கள் VS உத்தரப்பிரதேச மாநிலம் (Sharif Ahmed and Ors vs State of Uttar Pradesh) என்ற வழக்கை குறிப்பிட்டது. இதன் வழிகாட்டுதல்கள் குற்றம் குறித்து மாஜிஸ்திரேட் அறிந்துகொள்ள குற்றப்பத்திரிகையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. குற்றபத்திரிகையில் அனைத்து கட்டங்களின் தெளிவான மற்றும் முழுமையான பதிவுகள் இருக்க வேண்டும். இதனால் குற்றவாளியால் எந்த குற்றம் செய்யப்பட்டது மற்றும் அதற்கான சாட்சியம் என்ன என்பதை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் புரிந்துகொள்ள முடியும் என்று அது தீர்மானித்தது.
தேபு சிங் வழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரபிரதேச மாநில காவல்த்துறை தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கின் புலனாய்வு அதிகாரி ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, ஷெரீப் அகமது வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவுகளின்படி இணக்கம் செய்யப்பட்டதா என்பதைக் குறிப்பிடும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
நீதிமன்றங்கள் அரசாங்கத்தை எச்சரிப்பது இது முதல் முறையல்ல. உத்தரபிரதேச மாநிலத்திற்கு எதிராக ரிக்காப் பிரினி வழக்கில், பல்வேறு மாநிலங்களில் உள்ள குடிமை வழக்குகளை குற்றவியல் வழக்குகளாக மாற்றும் "நடைமுறை" குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 420, 406, 354, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் விசாரித்தது. வித்தியாசமாக, அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்து, "விண்ணப்பதாரர்களுக்கு எதிராக எந்த குற்றமும் செய்யப்படவில்லை என்று கூற முடியாது" என்று கூறியது.
மற்றொரு வழக்கில், ரந்தீர் சிங் vs உத்திரபிரதேச மாநிலம் (Randheer Singh vs State of Uttar Pradesh), சொத்து வாங்குபவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை தள்ளுபடி செய்து, குடிமை வழக்கிற்கு பதிலாக குற்றவியல் வழக்கு என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்றும், குற்றத்திற்கு உண்மையான காரணம் உள்ளதா இல்லையா என்பதை அதிகாரிகள் அளவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. மேலும், ஜெய் ஸ்ரீ vs ராஜஸ்தான் மாநிலம் (Jay Shri vs State of Rajasthan) வழக்கில், குற்றவியல் வழக்கு மூலம் அழுத்தம் கொடுத்து குடிமை வழக்குகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒப்பந்தத்தை மீறுவது என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) கீழ் ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மீறல் போன்ற குற்றத்தைச் செய்ததாகக் அர்த்தமல்ல என்று கூறியது. அது ஒரு குற்றமாக இருக்க மோசடி அல்லது நேர்மையற்ற நோக்கத்திற்கான தெளிவான அறிகுறிகள் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் விளக்கியது.
இறுதியாக, சையத் யாஸீர் இப்ராஹிம் vs உத்தரப்பிரதேச மாநிலம் (Syed Yaseer Ibrahim vs State of Uttar Pradesh) வழக்கில், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நடவடிக்கைகளை தொடர்வது செயல்முறையின் துஷ்பிரயோகமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தது. நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையிலே குற்றப்பத்திரிகையிலோ (chargesheet) பிரிவு 420 (Section 420 -ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற தூண்டுதல்)-ன் அடிப்படை தேவைகள் குறித்த எந்த குறிப்பும் இல்லை என்று கண்டறிந்தது. எனவே, "மேல்முறையீட்டாளருக்கு (appellant) எதிரான வழக்கைத் தொடர்வது, சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகும். ஏனெனில், அது ஒரு எளிய குடிமை பிரச்சனையை ஒரு குற்றவியல் குற்றமாக நடத்த முயற்சிக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனம் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களுடன், உத்தரப்பிரதேச காவல்துறை இப்போது குடிமை சர்ச்சைகளை கையாளும்போது அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. ஷரீஃப் அகமது வழக்கிற்கு நீதிமன்றம் குறிப்பிடுவது, குற்றப்பத்திரிகைகள் (chargesheets) கவனமாக தயாரிக்கப்பட வேண்டும். உண்மையான குற்றங்கள் மட்டுமே விசாரணைக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாக இருக்கிறது. தலைமை காவல் இயக்குனர் மற்றும் விசாரணை அதிகாரி (investigating officer) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் (affidavits) நீதித்துறை ஆணைகளுக்கு இணங்குவதில் மாநிலம் தீவிரமாக உள்ளதா என்பதை வெளிப்படுத்தும். இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் (contempt proceedings) மற்றும் பண அபராதங்களை (monetary penalties) எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. இப்போதைக்கு, அனைத்து செயல்முறைகளும் உத்தரப்பிரதேச காவல்துறையின் கைகளில் உள்ளது. அவர்கள் மாற்றம் செய்வார்களா அல்லது உச்ச நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனினும், குடிமை சர்ச்சைகளை (civil feuds) குற்றவியல் வழக்குகளாக (criminal cases) மாற்றும் நடைமுறை முடிவுக்கு வர வேண்டும். உச்ச நீதிமன்றம் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
அரீப் உதீன் அகமது, எழுத்தாளர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.