வர்த்தகப் போர்களும், வரிவிதிப்புகளும் நேரடியாக இந்திய விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இராஜதந்திரப் பாதுகாப்புகள் மற்றும் உள்நாட்டு சீர்திருத்தங்கள் இல்லாமல், இந்திய விவசாயிகள் உயிர்வாழும் விளிம்பில் இருந்து செழிப்பான, வர்த்தகம் சார்ந்த எதிர்காலத்தின் மையத்திற்கு செல்ல முடியாது.
உலகளாவிய வர்த்தகம் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகும்போது, விவசாயம் பல சர்ச்சைகளின் மையமாக உள்ளது. அதிகரித்து வரும் வர்த்தகப் போர்கள், பதிலடியான வரிகள், காலநிலை தொடர்பான வர்த்தக நிலைமைகள் மற்றும் பிரிக்கப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) ஆகியவை விவசாய ஏற்றுமதிகளின் எதிர்காலத்தை மாற்றுகின்றன. 100 மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகள் மற்றும் உலகின் மிகப்பெரிய கிராமப்புற பணியாளர்களைக் கொண்டது. இதிலும் குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த மாற்றங்கள் வெறும் புவிசார் அரசியல் பிரச்சினைகள் மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான விஷயங்களும் அடங்கும்.
இந்தியா இரண்டு மடங்கு சவாலை எதிர்கொள்கிறது. அவை, பிளவுபட்ட உலகில் வர்த்தக கூட்டாண்மைகளைத் தேடும் அதே வேளையில், அதன் பலவீனமான விவசாயப் பொருளாதாரத்தைப் பாதுகாத்தல் போன்றவை முக்கிய சவாலாக உள்ளது. சமீபத்திய அமெரிக்க வரிகள், EU FTA நிபந்தனைகள் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் கவலைகளை எழுப்புகின்றன. அதன் தற்போதைய வர்த்தகக் கொள்கைகள் அதன் விவசாய நலன்களைப் பாதுகாக்க போதுமானதா என்று இந்தியா கேட்க வேண்டும்.
2024-ம் ஆண்டில், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, பல்வேறு நாடுகள்மீது புதிய வரிகளை விதித்தது. வரிகள் 10 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை இருந்தன. இந்தியா 27 சதவீதம் வரி விகிதத்தைக் கொண்டிருந்தது. இது 54 சதவீத வரியை எதிர்கொண்ட சீனாவை விடவும், 46 சதவீத வரியுடன் வியட்நாமை விடவும் சிறப்பாக இருந்தது. இருப்பினும், இந்தியா குறிப்பிடத்தக்க விளைவுகள் இல்லாமல் இல்லை.
இந்தியாவின் விவசாயிகள் மீதான தாக்கம்
வர்த்தகப் போர்களும், வரி விதிப்புகளும் வெறும் அரசியல் உத்திகள் மட்டுமல்ல. அவை இந்திய விவசாயத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. இறால், பாசுமதி அரிசி மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற முக்கிய இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 27 சதவீத வரியை விதித்துள்ளது. இது மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. விவசாயத் துறை முக்கியமாக குறைந்த அரசாங்க ஆதரவுடன் சிறு விவசாயிகளால் ஆனது. இந்த வரிகள் லாப வரம்புகளை அழித்து உலகளாவிய போட்டித்தன்மையை விரைவாகக் குறைக்கின்றன. உதாரணமாக, இறால் ஏற்றுமதியில் 35 சதவீதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. இப்போது, இந்த ஏற்றுமதிகள் பெரும் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. இது கடலோர விவசாயிகள் மற்றும் பதப்படுத்துபவர்கள் இருவரையும் பாதிக்கிறது.
மறுபுறம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நியூசிலாந்து போன்ற தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) புதிய சந்தைகள் பற்றிய நிபந்தனைகளுடன் அணுகலை வழங்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் (EU) பூச்சிக்கொல்லி எச்சங்கள், கார்பன் லேபிளிங் மற்றும் கண்டறியக்கூடிய தன்மை ஆகியவற்றில் வரம்புகளை விரும்புகிறது. இந்த நடவடிக்கைகள் நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், அவை இந்தியாவின் துண்டு துண்டான விவசாய முறைகளுடன் பொருந்தவில்லை. இந்த விதிகள் ஆதரவு இல்லாமல் செயல்படுத்தப்பட்டால், அவை இந்திய விவசாயிகளை மதிப்புமிக்க EU சந்தைகளில் இருந்து விலக்கி வைக்கக்கூடும். இதேபோல், நியூசிலாந்தின் திறமையான பால் தொழிலை இந்தியாவிற்குள் அனுமதிப்பது உள்ளூர் பால் கூட்டுறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த கூட்டுறவுகள் மில்லியன் கணக்கான கிராமப்புற குடும்பங்களை ஆதரிக்கின்றன.
இறுதியில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) மற்றும் வரி விதிப்புகள் வர்த்தக நிலைமைகளை மறுவடிவமைக்கின்றன. ஆனால் உண்மையான கேள்வி என்னவென்றால், அவை இந்திய விவசாயிகளுக்கு உதவுமா அல்லது அவர்களை வணிகத்திலிருந்து வெளியேற்றுமா? சரியான பாதுகாப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் இல்லாமல், அபாயங்கள் நன்மைகளைவிட அதிகமாக இருக்கும்.
பசி, விரக்தி மற்றும் இழந்த வாய்ப்பு
2024 உலகளாவிய பசி குறியீட்டில் (Global Hunger Index (GHI)) 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது. இது 27.3 மதிப்பெண்களுடன் "கடுமையான" பசியைக் குறிக்கிறது. கடந்த ஆண்டுகளைவிட சற்று சிறப்பாக இருந்தாலும், இந்தியா இன்னும் அதன் தெற்காசிய அண்டை நாடுகளைவிடக் குறைவாகவே உள்ளது. இது நாம் புறக்கணிக்க முடியாத ஒரு முக்கியமான பிரச்சினை. குறிப்பாக இந்தியாவின் மக்கள்தொகையில் 42.3 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயத்தை ஆதரிக்கும்போது மற்றும் தற்போதைய விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.2 சதவீதத்தை பங்களிக்கிறது. (நிதி அமைச்சகம், 2024)
இந்த முக்கியமான துறை ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது. கடந்த பத்தாண்டுகளில், குறைந்தது 1,12,000 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 2022-ம் ஆண்டில் மட்டும், தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (National Crime Records Bureau) 11,290 தற்கொலைகளைப் பதிவு செய்துள்ளது. இது இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தில் உள்ள ஆழமான மன அழுத்தத்தின் தெளிவான அறிகுறியாகும்.
இப்போது, ஒரு ஒப்பீட்டைப் பார்ப்போம். இந்த அட்டவணை வருமான வேறுபாடுகளை மட்டும் காட்டவில்லை. உலகளாவிய விவசாயத்தில் உள்ள நியாயமற்ற தன்மையை இது எடுத்துக்காட்டுகிறது. மேற்கத்திய நாடுகளின் விவசாயிகள் பெரிய அளவிலான பொது மானியங்கள், காப்பீட்டு ஆதரவு, தொழில்நுட்பத்திற்கான அணுகல் மற்றும் சிறந்த சந்தை இணைப்புகளைப் பெறுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, இந்திய விவசாயிகள் சிறிய நில உடைமைகள், கணிக்க முடியாத விலைகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகளின் சோர்வு ஆகியவற்றைக் கையாளுகின்றனர்.
இந்தியா என்ன மேற்கொள்ள வேண்டும்?
இந்தியாவின் விவசாயிகள் ஒரு சவாலை எதிர்கொள்கின்றனர். அவர்கள் உலகளாவிய இலக்குகளுக்கும் உள்ளூர் தாமதங்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் செழிக்க, இந்தியா தனது விவசாய உத்தியை மாற்ற வேண்டும். உலகளாவிய வர்த்தகம் உயர் தரங்களை நோக்கி நகர்கிறது. இவற்றில் நிலைத்தன்மை, கண்டறியக்கூடிய தன்மை மற்றும் அதிக மதிப்பைச் சேர்ப்பது ஆகியவை அடங்கும். இந்திய விவசாயம் இன்னும் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட சிறிய வேளாண்மையைச் சார்ந்துள்ளது. அது பின்தங்க முடியாது. இதனால் உள்கட்டமைப்பை உருவாக்குதல், அறுவடைக்குப் பிந்தைய அமைப்புகளில் முதலீடு செய்தல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை விருப்பத்திற்குரியவை அல்ல. அவை அவசியமானவை.
அதே நேரத்தில், மாநில அரசுகள் தங்கள் அரசியலமைப்புக்கான பொறுப்பை அங்கீகரிக்க வேண்டும். விவசாயம் ஒரு மாநிலப் பிரச்சினையாகும். இருப்பினும், பல மாநிலங்கள் தொடர்ந்து மிகக் குறைவாகவே முதலீடு செய்கின்றன அல்லது தங்கள் விவசாய முறைகளை நவீனமயமாக்கத் தவறிவிடுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த விவசாய தொலைநோக்கு பார்வையை உருவாக்க வேண்டும். இந்த தொலைநோக்கு உள்ளூர் பலங்கள், காலநிலை நிலைமைகள் மற்றும் சந்தை வாய்ப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். வலுவான தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) மற்றும் உலகளாவிய ஒப்பந்தங்களை ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடியும். இருப்பினும், மாநிலங்கள் தங்கள் விவசாயிகள் போட்டியிடத் தயாராக இருப்பதை உறுதி செய்யாவிட்டால், நன்மைகள் நிறைவேறாமல் இருக்கும்.
விவசாயத்தை ஒரு நலன்சார்ந்த பிரச்சினையாகக் காண்பதை இந்தியா நிறுத்த வேண்டும். அது விவசாயத்தை ஒரு வணிகமாகக் கருத வேண்டும். இதன் பொருள் உலக வர்த்தக அமைப்பு (WTO) இணக்க ஊக்கத்தொகைகள், ஏற்றுமதி காப்பீடு மற்றும் உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்ய நிறுவன ஆதரவை வழங்குவதாகும். அப்போதுதான் இந்திய விவசாயிகள் போராடுவதிலிருந்து வர்த்தகத்தால் இயக்கப்படும் எதிர்காலத்தில் செழிக்க முடியும்.
டிரம்பின் வரி விதிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமை விதிகளும் வெறும் வர்த்தக இடையூறுகள் மட்டுமல்ல; அவை ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பு ஆகும். இந்தியாவின் விவசாய ஏற்றுமதி மாதிரி எவ்வளவு பலவீனமானது என்பதைக் காட்டுகின்றன. இந்தியா ஒரு சில சந்தைகளை அதிகமாக நம்பியுள்ளது மற்றும் திடீர் மாற்றங்களுக்குத் தயாராக இல்லை. ஆனால், இந்த சவால்கள் இந்தியாவை விரைவாகச் செயல்படத் தூண்டுகின்றன. இந்தியா ஏற்கனவே ஒரு விவசாய ஏற்றுமதிக் கொள்கையை-2018 (Agricultural Export Policy) கொண்டுள்ளது. ஆனால், இப்போது அதைச் செயல்படுத்த வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில், சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டிய நேரம் இது.
கட்டணங்கள் மாறிக்கொண்டே இருக்கும் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் அடிக்கடி நிலைமைகளைக் கொண்டிருக்கும் உலகில், உள்ளே வலுவாகவும் வெளியே புத்திசாலியாகவும் இருக்கும் நாடுகள் மட்டுமே வெற்றிபெறும். இந்தியா போட்டியிட முடியுமா என்பது அல்ல, ஆனால் அது வேகமாக செயல்படுமா என்பதுதான் கேள்வி. உண்மையான பிரச்சினை என்னவென்றால், உலகளாவிய வர்த்தகத்தில் வலுவான இடத்தைப் பெறுவதற்கு இந்தியா தனது விவசாய வலிமையைப் பயன்படுத்துமா அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயம் மற்றும் நவீன விவசாய தொழில்நுட்பம் இல்லாததால் பணக்கார நாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமா?
எழுத்தாளர் புது தில்லியில் உள்ள IIFT-ல் வர்த்தகம் மற்றும் விவசாயக் கொள்கையில் கவனம் செலுத்தும் மூத்த ஆராய்ச்சி உறுப்பினராக உள்ளார்.