தற்போதைய செய்தி:
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில், இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்த பாலம் ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது. இது "தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் இணைந்ததை குறிக்கிறது" என்று அவர் கூறினார்.
முக்கிய அம்சங்கள்:
தொடக்க விழாவிற்கு பிறகு பிரதமர் ஆற்றிய உரையில், தமிழக அரசை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் "மும்மொழிக் கொள்கை" மீதான விவாதம் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில், மோடி "தமிழ்ப் பெருமை"யை எடுத்துரைத்தார். தமிழ் மொழியின் முக்கியத்துவம் மற்றும் அதன் வளமான பாரம்பரியம் குறித்து அவர் பேசினார். மேலும், தமிழில் மருத்துவப் படிப்புகளைத் தொடங்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டார்.
உலகெங்கிலும் அதிகமான மக்கள் இந்தியா மீது ஆர்வம் காட்டி வருவதாகவும், அவர்கள் நாட்டைப் பற்றி அறிந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் கலாச்சாரமும், மென்மையான சக்தியும் இதில் ஒரு முக்கியப் பகுதியாகும். தமிழ்மொழி மற்றும் பாரம்பரியத்தை உலகம் முழுவதும் பரப்ப அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகிறது என்றார்.
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) பயன்படுத்துவதை மாநில அரசு எதிர்ப்பதால் மோடி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
முன்னதாக, மோடி ₹8,300 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல ரயில் மற்றும் சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) எக்ஸ்பிரஸ் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும், பாலத்தின் அடியில் செல்லும், கடலோர காவல்படை கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி வரையிலான 29 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலை, பூண்டியாங்குப்பத்திலிருந்து சட்டநாதபுரம் வரையிலான 56.8 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலை, சோழபுரத்திலிருந்து தஞ்சாவூர் வரையிலான 48 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலை உள்ளிட்ட சில சாலைத் திட்டங்களையும் மோடி திறந்து வைத்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
1914ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழைய பாலத்திற்குப் பதிலாக புதிய பாம்பன் பாலம் கட்டப்படுகிறது. இது டிசம்பர் 2022ஆம் ஆண்டு செயல்படுவதை நிறுத்தியது. இது பழைய பாலத்திற்கு அடுத்ததாக கட்டப்பட்டுள்ளது மற்றும் ரூ.700 கோடி செலவிடப்பட்டது. புதிய பாலம் 2.08 கி.மீ நீளம் கொண்டது மற்றும் நடுவில் 17 மீட்டர் உயரம் உயரக்கூடிய ஒரு சிறப்புப் பகுதியைக் கொண்டுள்ளது. இது ரயில்கள் தொடர்ந்து சீராக இயங்கும்போது கப்பல்கள் அடியில் எளிதாகக் கடந்து செல்ல அனுமதிக்கிறது.
இந்தப் புதிய பாலம் 100 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை மாற்றும். இது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது ஒரு பெரிய பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது. கடல் வானிலையிலிருந்து பாதுகாக்க வலுவான துருப்பிடிக்காத எஃகு மற்றும் சிறப்பு வண்ணப்பூச்சுடன் இந்தப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது 58 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல்கள் எளிதாகக் கடந்து செல்லும் வகையில் பாலத்தை 17 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தும் தானியங்கி அமைப்பும் இதில் உள்ளது.
இந்தப் பழைய பாலம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகத்திற்காக பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. 1964ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் அடித்துச் செல்லப்பட்டபோதும்கூட, அது வலுவாக இருந்தது. இந்தப் புதிய பாலம் இந்திய ரயில்வேயின் உயர் மட்ட பொறியியல் திறமையைக் காட்டுகிறது என்றும், நாட்டின் உள்கட்டமைப்பிற்கு ஒரு புதிய தரத்தை அமைக்கிறது என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
டிசம்பர் 23, 1964 அன்று இரவு, பாம்பன் தீவை ஒரு வலுவான பேரலை (சுனாமி) கடுமையாகத் தாக்கியது. இரவு 11 மணியளவில், 653 பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயிலின் ஆறு பெட்டிகள் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்குச் சென்று கொண்டிருந்தது.
தனுஷ்கோடி, இந்திய-இலங்கை போக்குவரத்திற்கான ரயில் நிலையமாக இருந்தது. இந்நிலையம் தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் நீராவி (படகு) சேவை மூலம் பயணிகளை இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லும். தனுஷ்கோடி ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ளது. இத்தீவை அடைய, மக்கள் பாம்பன் பாலத்தில் கடலைக் கடந்து மண்டபத்திலிருந்து பயணிக்கின்றனர். அங்கு ரயில் பாதை இரண்டு திசைகளில் பிரிகிறது. ஒன்று வடகிழக்கே ராமேஸ்வரத்திற்கும், மற்றொன்று கிழக்கே தனுஷ்கோடிக்கும் செல்கிறது. தனுஷ்கோடியின் தெற்கே மன்னார் வளைகுடா அமைந்துள்ளது. புயல் வந்தபோது ரயில் அதன் இலக்கை அடைய முடியவில்லை. அது கடலில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது, காலையில், இயந்திரத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.
டெல்லி மெட்ரோவிற்காகப் பிரபலமடைவதற்கு முன்பு, இந்தியாவின் மெட்ரோ நாயகன் என்று அழைக்கப்படும் இ. ஸ்ரீதரன் தனது முதல் பெரிய திட்டங்களில் ஒன்றான பாம்பன் பாலத்தை மீட்டெடுப்பதில் பணியாற்றினார்.