நிலையான வளர்ச்சி அறிக்கை 2025 -குஷ்பு குமாரி

 தற்போதைய செய்தி:


ஐ.நா நிலையான வளர்ச்சி தீர்வுகள் வலையமைப்பு (UN Sustainable Development Solutions Network) வெளியிட்ட நிலையான வளர்ச்சி அறிக்கை (Sustainable Development Report (SDR))  2025-ன் படி, இந்தியா முதல்முறையாக நிலையான வளர்ச்சிக் குறியீட்டில் (Sustainable Development Index) முதல் 100 இடங்களுக்குள் 99-வது இடத்தையும், 67 மதிப்பெண்ணையும் பெற்றுள்ளது. நிலையான வளர்ச்சி அறிக்கை ஆனது 193 ஐ.நா உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals (SDGs)) ஒவ்வொரு ஆண்டும் அடையப்படும் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்கிறது. இந்த ஆண்டின் SDG குறியீட்டில் 193 ஐ.நா உறுப்பு நாடுகளில் 167 நாடுகள் இடம் பெற்றுள்ளன.


இந்த ஆண்டு SDG-கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 10-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. SDR-ன் இந்த 10-வது பதிப்பு "2030 மற்றும் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிதியுதவி" (Financing the SDGs by 2030 and Mid-Century) என்பதில் கவனம் செலுத்துகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. 2025 நிலையான வளர்ச்சி அறிக்கையின் (Sustainable Development Report (SDR)) படி, 17 உலகளாவிய இலக்குகளில் எதுவுமே 2030-க்குள் முழுமையாக அடையக்கூடிய பாதையில் இல்லை. மேலும், நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals (SDGs)) 17 சதவீதம் மட்டுமே திட்டமிட்டபடி முன்னேறி வருகின்றன. மோதல்கள், கட்டமைப்பு பாதிப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி வசதி ஆகியவை உலகின் பல பகுதிகளில் SDG முன்னேற்றத்தைத் தடுக்கின்றன.


2. இந்த ஆண்டு, ஒட்டுமொத்த SDG முன்னேற்றத்தைக் கண்காணிக்க, SDGக்கு ஒன்று என 17 தலைப்பு குறிகாட்டிகளைப் பயன்படுத்தும் நெறிப்படுத்தப்பட்ட SDG குறியீடு (SDGi) என்று முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. காலப்போக்கில் சில நாடுகளிலிருந்து தரவு காணாமல் போவதால் ஏற்படும் பிழைகளைக் குறைப்பதே இதன் இலக்காகும்.


3. நிலையான வளர்ச்சி அறிக்கையின் (Sustainable Development Report (SDR))  படி, "நிலையான வளர்ச்சி இலக்கு-2 பசியின்மையின் (Zero Hunger) கீழ் தரவுத்தொகுப்பில் '6 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளிடையே குறைந்தபட்ச உணவு வகைபாடு' குறித்த ஒரு புதிய குறிகாட்டி சேர்க்கப்பட்டுள்ளது."


4. அறிக்கையின் படி, உலகளாவிய அளவில், நிலையான வளர்ச்சி இலக்கு-2 பசியின்மை, நிலையான வளர்ச்சி இலக்கு-11, நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள் (Sustainable Cities and Communities), நிலையான வளர்ச்சி இலக்கு-14 நீருக்கடியில் உயிரினங்கள் (Life Below Water), நிலையான வளர்ச்சி இலக்கு-15 நிலம்வாழ் உயிரினங்கள்  (Life on Land) மற்றும்  நிலையான வளர்ச்சி இலக்கு-16 அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள்  (Peace, Justice and Strong Institutions) ஆகியவை பாதையில் இருந்து விலகி, பெரும் சவால்களை எதிர்கொண்டு (டாஷ்போர்டுகளில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு) 2015-ஆம் ஆண்டு இருந்து எந்த விதமான முன்னேற்றத்தையும் அடையவில்லை அல்லது மிகக் குறைந்த முன்னேற்றத்தை எட்டியதாகக் சுட்டிக்காட்டுகின்றது."


5. நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு மதிப்பெண் 0 முதல் 100 வரையிலான அளவில் வழங்கப்படுகிறது. மேலும், இது SDG-களில் உகந்த செயல்திறனை நோக்கிய சதவீதமாக விளக்கப்படலாம். ஒரு நாட்டின் மதிப்பெண்ணுக்கும் 100-க்கும் இடையிலான இடைவெளி, இலக்குகளை முழுமையாக அடைய எவ்வளவு முன்னேற்றம் தேவை என்பதைக் காட்டுகிறது.


 

6. ஃபின்லாந்து (Finland) இம்முறை 87 மதிப்பெண்ணுடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும், குறியீட்டில் முதல் 20 நாடுகளில் 19 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன. இந்தியா 67 மதிப்பெண்ணுடன் 99-வது இடத்தில் உள்ளது. முதல்முறையாக முதல் 100 நாடுகளுக்குள் இடம்பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது. இந்தியா கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேறி வருகிறது, 2024-ஆம் ஆண்டில் 109-வது இடத்திலிருந்து, 2023-ஆம் ஆண்டில் 112-வது இடத்திலும், 2022-ஆம் ஆண்டில் 121-வது இடத்திலும் மற்றும் 2021-ஆம் ஆண்டில், 120-வது இடத்திலிருந்து முன்னேற்ற பாதையை நோக்கி சென்றுள்ளது.



7. பிராந்திய ஒப்பீட்டில், இந்தியா அதன் பல அண்டை நாடுகளை விட பின்தங்கி உள்ளது. பூட்டான் 70.5 மதிப்பெண்களுடன் 74-வது இடத்தில் உள்ளது. நேபாளம் 68.6 புள்ளிகளுடன் 85-வது இடத்தில் உள்ளது. மாலத்தீவுகள் 53-வது இடத்தில் உள்ளது. இலங்கை 93-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 114-வது இடத்திலும், பாகிஸ்தான் 140-வது இடத்திலும் உள்ளன.


2025-ஆம் ஆண்டு தரவரிசை

நாடு

2025- ஆம் ஆண்டு  மதிப்பெண்

1

பின்லாந்து

87.0

2

ஸ்வீடன்

85.7

3

டென்மார்க்

85.3

4

ஜெர்மனி

83.7

5

பிரான்ஸ்

83.1


98

பெலிஸ்

67

99

இந்தியா

67

100

மங்கோலியா

66.7


159

நைஜர்

50.3

158

மடகாஸ்கர்

51.0


நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDGs))


ஐக்கிய நாடுகள் சபை நிலையான வளர்ச்சியை "எதிர்கால தலைமுறைகள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை பாதிக்காமல், தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வளர்ச்சி" என்று வரையறுக்கிறது. நிலையான வளர்ச்சிகள் 2000-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் 2015-ஆம் ஆண்டிற்குள் அடையப்பட வேண்டிய மில்லினியம் வளர்ச்சி இலக்குகளின் (Millennium Development Goals (MDGs)) அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.


sdgs, agenda 2030


2030-ஆம் ஆண்டிற்கான கொள்கை

2030-ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சிக்கான கொள்கை, 2030 கொள்கை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையால்  உருவாக்கப்பட்டது. இதில் 2030-ஆம் ஆண்டுக்குள் நாடுகள் அடைய விரும்பும் 17 இலக்குகள் அடங்கும்.


நிதி ஆயோக்- நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு (NITI Aayog- SDG Index)


நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீடு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அளவுருகளில் மதிப்பீடு செய்கிறது. டிசம்பர் 2018-ல் முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்த குறியீடு இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான முதன்மைக் கருவியாக மாறியுள்ளது.


நிலையான வளர்ச்சி இலக்கு இந்தியா குறியீடு மதிப்பெண்கள் 0-100 இடையே உள்ளன. மாநிலம்/யூனியன் பிரதேசங்களின் மதிப்பெண் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக இலக்கை அடைந்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவற்றின் நிலையான வளர்ச்சி இலக்கு இந்தியா குறியீடு மதிப்பெண்ணின் அடிப்படையில் நான்கு வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன — ஆர்வலர்கள் (aspirant): 0–49 என்று மதிப்பெண்களை அடைந்துள்ளனர் என்று பொருள்; செயல்பாட்டாளர்கள் (performer): 50–64 என்று மதிப்பெண்களை அடைந்துள்ளனர் என்று பொருள்; முன்னோடிகள் (front-runner): 65–99 என்று மதிப்பெண்களை அடைந்துள்ளனர் என்று பொருள், சாதனையாளர்கள் (achiever): 100 என்று மதிப்பெண்களை அடைந்துள்ளனர் என்று பொருள். நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டின் படி, 2023-24-ஆம் ஆண்டிற்க்கான இந்தியாவின் மதிப்பெண் 71 -ஆக இருந்தது.


எதிர்காலத்திற்கான ஐ.நா உச்சிமாநாடு (UN Summit for the Future)


1. 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், நடைபெற்ற எதிர்காலத்திற்கான ஐ.நா உச்சிமாநாட்டில் ஐ.நா உறுப்பு நாடுகள் நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் பயனுள்ள பலதரப்புவாதத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. எதிர்காலத்திற்கான ஒப்பந்தம் (Pact for the Future), உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தம் (Global Digital Compact) மற்றும் எதிர்கால தலைமுறைகள் பற்றிய பிரகடனம் (Declaration on Future Generations) ஆகியவை ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.


2. எதிர்காலத்திற்கான உச்சிமாநாடு (Summit of the Future (SoTF)) செப்டம்பர் 22-23 அன்று, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (United Nations General Assembly (UNGA)) முன்னதாக நடைபெற்றது. உச்சிமாநாட்டின் கருப்பொருள் சிறந்த நாளைக்கான பலதரப்பு தீர்வுகள் (multilateral solutions for a better tomorrow) ஆகும்.


3. ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த உச்சிமாநாட்டை "ஒரு தலைமுறையில் ஒருமுறை நடைபெறும் ஐ.நா உச்சிமாநாடு" என்று அழைத்துள்ளார். இந்த ஆண்டு ஐ.நா. நிறுவப்பட்ட 80வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால், இது அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

4. 2025-ஆம் ஆண்டுக்கான ஐ.நா-பன்முகத்தன்மை குறியீட்டில், பார்படோஸ் 92 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், ஜமைக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 63.8 மதிப்பெண்களுடன் 113-வது இடத்திலும் உள்ளது. இந்த குறியீடு ஐக்கிய நாடுகள் சபை இணைந்து செயல்படுவதற்கு எந்தளவு நாடுகள் ஆதரவளிக்கின்றன என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், பிராந்திய மற்றும் இருதரப்பு மன்றங்களில் அல்லது BRICS, G20, G7, OECD மற்றும் பிற குழுக்களுக்குள் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கருத்தில் கொள்ளப்படவில்லை.


"பலதரப்புவாதம் என்பது வெவ்வேறு கருத்துகள் மற்றும் இலக்குகளைக் கொண்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திரத்தை குறிக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு நாடுகள் உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிணையும் முதன்மை பலதரப்பு மன்றமாகும்." என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


5. நிலையான வளர்ச்சி அறிக்கையின் (Sustainable Development Report (SDR)) படி, இந்த ஒப்பந்தம் நாடுகள் 56 வெவ்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இந்த நடவடிக்கைகள் வளர்ச்சி இலக்குகளை அடையவும், அமைதியை உருவாக்கவும், அனைவரையும் ஒன்றாகப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும். உலகளவில் நாடுகள் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதை மாற்றுவது மற்றும் உலகின் நிதி அமைப்புகளை மேம்படுத்துவதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று 2024-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை  தெரிவித்தது.



Original article:

Share: