பீகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு மற்றும் தெலுங்கானாவின் 2025-ஆம் ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்புகள் வெளிப்படைத்தன்மை கொண்டுள்ளனவா? சமூக மேலாண்மை அணுகுமுறை மேல்-கீழ் நல மாதிரிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? சாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகப் பிளவை ஆழப்படுத்தி தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்குமா? ஜனநாயக பொறுப்புணர்வை பற்றிய பார்வை?
தற்போதைய செய்தி: பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகார அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Political Affairs), வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 246-ன் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு 7-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு ஒன்றிய உட்பொருளாகும். சாதிவாரிக் கணக்கெடுப்பை "ஆதரவு அல்லது எதிர்ப்பு" என்ற இருவேறு நிலைகளை தாண்டி பார்க்க வேண்டும். இது மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு யோசனையாக கற்பனை செய்ய வேண்டும். இது நிர்வாகத்திற்கான சமூக மேலாண்மை அணுகுமுறை (social management approach) என்று அழைக்கப்படக்கூடிய ஒரு அடிப்படை கருவியாகும்.
மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் என்ன?
2023-ஆம் ஆண்டு, பீகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBCs)) மற்றும் பொருளாதார பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Economically Backward Classes (EBCs)) சேர்ந்து 63% மக்கள் தொகையை உருவாக்குவதைக் கண்டறிந்தது. இதில் EBCs மட்டும் 36.01% ஆகும். பட்டியல் சாதியினர் 19.65% ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 1.68% ஆகவும் உள்ளனர். பொதுப் பிரிவில் 15.52% மட்டுமே உள்ளனர். கூடுதலாக, பீகாரின் 34%-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரு நாளைக்கு ₹200-க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர். 44% பட்டியல் சாதி குடும்பங்கள் இன்னும் குறைவாகவே சம்பாதிக்கின்றன.
2025-ஆம் ஆண்டு, தெலங்கானாவின் சாதி கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மக்கள் தொகையில் 56.33% ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் 10.08% ஆகவும் உள்ளனர். இந்த எண்கள் இந்தியாவின் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் பெரும்பான்மையாக உள்ளன. ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நிர்வாகத்தில் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன என்ற உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி இணை அமைச்சர் பகிர்ந்த தரவின் படி, 45 ஒன்றிய பல்கலைக்கழகங்களில் 4% பேராசிரியர்களும் 6% இணைப் பேராசிரியர்களும் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் 85% பொது வகுப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒன்றிய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியில் இடஒதுக்கீடு) சட்டம், 2019 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இந்த ஏற்றத்தாழ்வு உள்ளது.
இருப்பினும், நம்பகமான தரவுகளின் இல்லாததால் கொள்கை ரீதியான பதில் தடைபடுகிறது. 1931-க்குப் பிறகு இந்தியா முழுமையான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவில்லை. 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (1 Socio-Economic and Caste Census (SECC)) தரவு முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டது மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. புதுப்பித்த சாதி தரவு இல்லாமல், உறுதியான நடவடிக்கை மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் யுகமாகவே உள்ளன.
சமூக மேலாண்மை அணுகுமுறை (social management approach) என்றால் என்ன?
இந்தியாவில் மேலிருந்து கீழான நலன் மாதிரிகள் (Top-down welfare models) சாதி, பாலினம் மற்றும் வர்க்கத்தின் அடுக்கடுக்கான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன. சமூக மேலாண்மை அணுகுமுறை எதிர்மாறாக செயல்படுகிறது: இது தரவுகளுடன் தொடங்குகிறது. தேவை அடிப்படையிலான தலையீடுகளை இலக்காகக் கொள்கிறது மற்றும் சாதியை களங்கமாக அல்லாமல் வளர்ச்சி மாறியாக கருதுகிறது. யாருக்கு உதவி தேவை என்பதையும், கடந்த கால பாகுபாட்டால் அவர்களின் தேவைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும் நாம் புரிந்துகொண்டால், நியாயமான மற்றும் மிகவும் பயனுள்ள கொள்கைகளை உருவாக்க முடியும். சாதி தரவுகள், தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாக இல்லாமல், கட்டமைப்பு ரீதியாக சமத்துவமின்மையை புரிந்து கொள்வதற்கான முக்கிய காரணியாக மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, இடஒதுக்கீடு, உதவித்தொகை மற்றும் அரசு திட்டங்களை மேம்படுத்த தமிழ்நாடு தரவைப் பயன்படுத்துகிறது. கல்வி மற்றும் வேலை இடஒதுக்கீட்டை சரி செய்ய கர்நாடகாவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தரவைப் பயன்படுத்துகிறது.
தேசிய சாதிவாரிக்கணக்கெடுப்பு இத்தகைய முறைகளை பெரிய அளவில் செயல்படுத்த உதவும். சாதி தரவுகள், எந்தெந்த சாதிக் குழுக்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு, பள்ளிகள் அல்லது சாலைகள் போன்ற வசதிகள் இல்லை என்பதைக் காட்டுவதன் மூலம் வரவு செலவு அறிக்கையை சிறப்பாகத் திட்டமிட உதவும். இதன் மூலம் நிறுவனங்களில் பன்முகத்தன்மை தணிக்கைகளை செயல்படுத்த முடியும், யார் அதிகாரத்தை வகிக்கிறார்கள், யார் அதிகாரத்தை வகிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா அல்லது திறன் இந்தியா (Skill India) போன்ற திட்டங்கள் சாதிக் குழுக்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பதையும் சாதிவாரிக் கணக்கெடுப்பால் கண்காணிக்க முடியும், இது ஓரங்கட்டப்பட்டவர்கள் விட்டுவிடப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது.
உலகளாவிய முன்னுதாரணங்கள் (global precedents) உள்ளனவா?
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பிளவுகளை அதிகரிக்கும் என்றும் தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், உண்மை என்னவென்றால் சாதி எண்ணப்படுவதால் அல்ல, மாறாக வாய்ப்பு மற்றும் செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை பொறுத்து நிலைத்து நிற்கிறது. சாதியை புறக்கணிப்பது அதை அழிப்பதில்லை. அது அறியாமையின் பின்னால் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வை மறைக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு சாதியமைப்பை உருவாக்குவதில்லை; அது அதை வெளிப்படுத்துகிறது. மற்ற ஜனநாயக நாடுகள் அடையாள அடிப்படையிலான தரவுகளை வெளிப்படுத்த தயங்குவதில்லை. அமெரிக்கா ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இனம் மற்றும் இனத்தன்மை தரவுகளை சேகரித்து அதை குடிமை உரிமைகளை செயல்படுத்துவதற்காக பயன்படுத்துகிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் இனம் மற்றும் மொழி வகைகளை கண்காணிப்பதன் மூலம் அதையே செய்கின்றன. இந்த நாடுகள் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய இத்தகைய தரவுகளைப் பயன்படுத்த முடிந்தால், உலகின் மிகவும் நீடித்த மற்றும் படிநிலை சாதி அமைப்பைக் கொண்ட இந்தியாவும் அதைப் பயன்படுத்த வேண்டும்.
வெளிப்படைத் தன்மை பற்றி என்ன?
சாதிவாரிக் கணக்கெடுப்பின் மதிப்பு கொள்கை உருவாக்கத்தை தாண்டி நீண்டுள்ளது. இது ஜனநாயக பொறுப்புக்கூறலின் முக்கிய கருவியாகும். பிரிவுபடுத்தப்பட்ட தரவுகள் குடிமை சமூகம், ஊடகங்கள் மற்றும் குடிமக்கள் பொது வளங்கள் சமமாக பகிரப்படுகின்றனவா என்பதை அறிய உதவுகின்றன. பொதுவில் அணுகக்கூடிய சாதிவாரிக் கணக்கெடுப்பு குடிமக்கள் வெளிப்படைத்தன்மையைக் கோருவதற்கு அதிகாரம் அளிக்கும். இது சாதிக்குள் இருக்கும் சமத்துவமின்மையையும் (intra-caste inequalities), நலத்திட்ட பலன்களை உயர்அடுக்குகளில் இருக்கும் உட்பிரிவுகள் (elite sub-groups) ஏகபோகமாக்குகின்றன என்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இதன் மூலம் சமூகத்தில் பின்தங்கியவர்கள் விடுபட்டுப் போகின்றனர்.
இறுதியில், சாதிவாரிக் கணக்கெடுப்பு சாதியை எண்ணுவது பற்றியது அல்ல. இது அநீதியை அங்கீகரித்து அதை சரிசெய்வது பற்றியது. எனவே, சமூக மேலாண்மையில் வேரூன்றிய சாதிவாரிக் கணக்கெடுப்பு சமூக விடுதலையின் பரந்த கொள்கையுடன் இணைக்கப்படும். இதில் அரசியலமைப்பு கல்வியறிவு, நில உரிமைகள், வீட்டுவசதி, தொழிலாளர் பாதுகாப்புகள் மற்றும் குறுக்கீட்டு சுரண்டலை எதிர்கொள்ளும் தலித், பகுஜன் மற்றும் ஆதிவாசி பெண்களுக்கான நீதி ஆகியவை அடங்கும். சரியாக செய்யப்படும் சாதி கணக்கெடுப்பு இந்தியாவுக்கு தரவு சார்ந்த ஜனநாயக உருமாற்றத்தை வழங்கும்.
பேராசிரியர் சோனி குஞ்சப்பன் குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் சமூக மேலாண்மை ஆய்வுத் துறையின் தலைவர். அமல் சந்திரா ஒரு எழுத்தாளர், கொள்கை ஆய்வாளர் மற்றும் கட்டுரையாளர்.