இந்தியாவின் ஏழ்மைக்கு எதிரான பல்பரிமாண போராட்டத்தை வடிவமைத்தல் -பரிக்ரமா சௌத்ரி

 ஒன்றிய அரசின் உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டம் (Samaveshi Aajeevika) போன்ற உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்கள் மாநிலங்களுக்கு பாதிப்பு மையங்களை கண்டறிந்து அவற்றை இலக்காகக் கொள்ள உதவும்.


வறுமையைக் குறைக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன்களை அளித்துள்ளன. உலக வங்கியின் திருத்தப்பட்ட வறுமைக் கோட்டின் படி, 2011 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கு இடையில், சுமார் 270 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளனர். இது ஜெர்மனி மற்றும் ரஷ்யாவின் மக்கள்தொகையை விட அதிகமானதாகும். இந்தக் காலத்தில் ஏழ்மையான, சாதி மற்றும் மதக் குழுக்கள் மிக வேகமாக முன்னேறின.

வறுமை என்பது பல பரிமாணங்களைக் கொண்டது என்றும், அது வெறும் பணப் பற்றாக்குறையை விட அதிகமானது என்றும் இப்போது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் பற்றாக்குறைகளும் அடங்கும்.


இந்தியாவின் பல்பரிமாண வறுமைக் குறியீடு (Multidimensional Poverty Index (MPI)) பல வழிகளில் வறுமையை அளவிடுகிறது. இது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் உள்ள 12 அடிப்படைத் தேவைகளைப் பார்க்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளில் எவ்வாறு பற்றாக்குறையை அனுபவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு நபர் அடிப்படைத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பூர்த்தி செய்யாவிட்டால் அவர் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர் என்று கருதப்படுகிறார்.


இந்த அணுகுமுறையின் அடிப்படையில், நிதி ஆயோக்கின் விவாதக் கட்டுரை இந்தியாவில் ஏறக்குறைய 200 கோடி மக்கள் இன்னும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. வறுமை கடுமையாக உள்ளது. மிக ஏழ்மையானவர்கள் தங்கள் 12 அடிப்படைத் தேவைகளில் பாதி தேவையைப் பூர்த்தி செய்ய போராடுகிறார்கள். இந்த மக்கள் பெரும்பாலும் மண் வீடுகளில் வசிக்கிறார்கள், அங்கு குழாய் நீர் மற்றும் சரியான சுகாதாரம் இன்னும் ஆடம்பரமாகக் கருதப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் உணவைத் தவிர்க்கிறார்கள், மேலும் ஒரு நோய் அல்லது திடீர் வாழ்க்கை நிகழ்வு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


மக்கள் ஒரே நேரத்தில் பல இன்னல்களை எதிர்கொள்ளும்போது, குறிப்பாக நிதி சாராத இன்னல்களை எதிர்கொள்ளும்போது, இந்தப் பிரச்சினைகள் ஒன்றையொன்று மோசமாக்கி, அவர்களை வறுமையில் சிக்க வைக்கும்.


உதாரணமாக, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் இரண்டிலும் பின்தங்கிய மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உலகெங்கிலும் வறுமையில் வாடும் மக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும், வறுமை ஒழிப்புக் கொள்கைகள் இந்த ஒன்றோடொன்று தொடர்புகளை மனதில் வைத்து வடிவமைக்கப்படுவதில்லை.

படிப்படியான அணுகுமுறை (Graduation Approach)


வறுமையை அளவிடுவதற்கும் ஆய்வு செய்வதற்குமான இந்த பல்முனை வழி வறுமை எதிர்ப்பு திட்டங்களை வடிவமைக்க ஒரு புதிய அணுகுமுறையையும் கோருகிறது. அரசாங்கங்களைப் பொறுத்தவரை, இது தீவிர வறுமையில் வாடும் மக்களுக்கு வறுமையில் இருந்து தப்பிப்பதற்கான கருவிகளை வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்வதாகும். வங்கதேசத்தை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான வங்காளதேச கிராமப்புற முன்னேற்றக் குழுவின் (Bangladesh Rural Advancement Committee (BRAC) படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை அதைச் செய்வதற்கான ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது.


படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை ஏழ்மையானவர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் உதவிகரமான தொகுப்பை வழங்குகிறது. இதில் கால்நடைகள் அல்லது வர்த்தகத்திற்கான சிறிய பொருட்கள் போன்ற உற்பத்தி சொத்து, அவற்றை நிர்வகிப்பதற்கான பயிற்சி, அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு வருடம் வரை பணம் மற்றும் அவர்களின் வருமானம் மற்றும் சேமிப்பை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும்.


இந்த திட்டம் இப்போது உலகளவில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இது நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டுஃப்லோ உள்ளிட்ட அப்துல் லத்தீஃப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்துடன் இணைந்த ஆராய்ச்சியாளர்களின் சீரற்ற மதிப்பீடுகளை பின்பற்றி, 43 நாடுகளில் மில்லியன் கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது.


உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள், படிப்படியாக முன்னேறும் அணுகுமுறையின் பல-கூறு ஆதரவு தொகுப்பைப் பெற்றுள்ளன. அவை அனைத்து முக்கிய பல்பரிமாண வறுமைக் குறிகாட்டிகளாலும் (Multidimensional Poverty Index (MPI)) குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெற்றன.



அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


வாழ்க்கைத் தரம்: இந்த மாதிரி உணவு, எரிபொருள் மற்றும் சொத்துக்களுக்கான வீட்டுச் செலவினங்களை அதிகரித்தது - இவை அனைத்தும் பல்பரிமாண வறுமைக் குறிகாட்டிகளின் வாழ்க்கைத் தர பரிமாணத்தின் முக்கிய கூறுகளாகும். வங்கதேசத்தில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கிராமங்களில் நடுத்தரக் குடும்பங்களைப் போலவே, பலர் நிலத்தையும் கடையையும் வைத்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஏமனில் கூட, மக்கள் தங்கள் வீடுகளைப் புதுப்பிப்பதில் அதிக செலவு செய்தனர். இது அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு அவர்களிடம் மிச்சப்படுத்த பணம் இருப்பதாகக் கூறியது. குடும்பங்கள் சிறந்த நிதிப் பாதுகாப்பையும் குழந்தைகளுக்கு அதிகம் செலவளித்ததாக தெரிவித்தன. இந்தியாவில், குடும்பங்கள் அதிக சொத்துக்களை வைத்திருந்தன மற்றும் முறைசாரா கடனைச் சார்ந்திருப்பதைக் குறைத்தன.


சுகாதாரம்: உணவில் படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை மக்களுக்கு அதிக உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பைப் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இது சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ஆப்கானிஸ்தானில், இந்தத் திட்டம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை 8% குறைத்தது. பாகிஸ்தான், இந்தியா, ஹோண்டுராஸ், கானா, எத்தியோப்பியா மற்றும் பெருவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், மக்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்ததாகக் கண்டறிந்துள்ளன. இந்தியாவில், இந்தத் திட்டம் உணவுப் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவியது என்றும், இந்தத் திட்டத்தில் 99% குடும்பங்கள் உணவைத் தவிர்க்கவில்லை என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.


கல்வி: படிப்படியாக முன்னேறும் அணுகுமுறையின் சில மாற்றங்கள் குழந்தைகளிடையே பள்ளி சேர்க்கை விகிதங்களையும் அதிகரித்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 2016 மற்றும் 2018 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு 7 சதவீத புள்ளிகள் மற்றும் பெண்களுக்கு 5 சதவீத புள்ளிகள் பள்ளி சேர்க்கை அதிகரித்தது கண்டறியப்பட்டது.

படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை இந்தியாவின் வறுமை அளவீடுகளுடன் நன்றாகப் பொருந்துகிறது. இது மாநில மற்றும் மத்திய அரசுகள் பல வழிகளில் வறுமையை எதிர்த்துப் போராட சிறந்த திட்டங்களை உருவாக்க உதவுகிறது.


பொதுவான பற்றாக்குறைகள்


இது கொள்கை வகுப்பாளர்களுக்கு அவசர கவனம் தேவைப்படும் முக்கியப் பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. உதாரணமாக, இந்தியாவில் மிகவும் பொதுவான பற்றாக்குறை தொகுப்பு நான்கு பிரிவுகளில் உள்ளது: ஊட்டச்சத்து, வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் சுத்தமான சமையல் எரிபொருள் அடங்கும். இந்தியாவில் 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இவற்றைப் பெறுவதில்லை. இந்த பகுதிகளை சரிசெய்யும் கொள்கைகள் வறுமை ஒழிப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.


கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா குழந்தைகளின் ஊட்டச்சத்து, தாய்மார்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மற்றும் வறுமையில் வாழும் மக்களுக்கான நிதி உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்த பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அது வெற்றிகரமாகவும் இருந்துள்ளது. ஊட்டச்சத்து இயக்கம் (Poshan Abhiyan) போன்ற முன்முயற்சிகள் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில், குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) மலிவு வீட்டுவசதி மூலம் மில்லியன் கணக்கானவர்களை அடைந்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் வெவ்வேறு அமைச்சகங்களால் வழிநடத்தப்படுகின்றன. படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை போன்ற பல்முகத் திட்டம் கொள்கைத் திட்டமிடுபவர்களுக்கு இந்த இலக்குகளை ஒரு ஒருங்கிணைந்த உத்தியின் மூலம் அடைவதை எளிதாக்குகிறது.


2024-ஆம் ஆண்டில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், BRAC, The Nudge Institute மற்றும் Abdul Latif Jameel Poverty Action Lab தெற்காசியா உள்ளிட்ட கூட்டாளர்களின் கூட்டமைப்புடன் 11 மாநிலங்களில் உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்ட முன்முயற்சியை முன்னோடியாகக் கொண்டு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்தது. படிப்படியாக முன்னேறும் அணுகுமுறை மாதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திட்டம், கிராமப்புற பெண்கள் தொழில்முனைவோராக மாற்றி, அவர்களை தன்னிறைவுப் பாதையில் கொண்டு செல்ல உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மாநிலங்கள் பல பரிமாண வறுமை குறியீட்டை பயன்படுத்தி அதிக வறுமை நிலைகள் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, கூட்டுறவு கூட்டாட்சிக்கு இணங்க, வறுமை மற்றும் அதன் பல்வேறு பரிமாணங்களை திறம்பட எதிர்த்துப் போராட உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டம் (Samaveshi Aajeevika) போன்ற ஒருங்கிணைந்த தீர்வுகளுடன் அவற்றை நிவர்த்தி செய்யலாம்.


பரிக்ரம சவுத்ரி, J-PAL தெற்காசியாவின் கொள்கைப் பணிகளின் தலைவராக உள்ளார்.



Original article:

Share: