சுற்றுச்சூழல் அனுமதிக்காக தற்போது சராசரியாக 451 நாட்கள் எடுக்கப்படுகிறது. இது 255 நாட்களின் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவைவிட 196 நாட்கள் அதிகம். இந்த அறிக்கையின்படி, சுமார் 90% திட்டங்கள் தாமதங்களை எதிர்கொள்கின்றன.
அரசாங்க சிந்தனைக் குழுவான (government think-tank) நிதி ஆயோக் வியாழக்கிழமை முக்கிய சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது. இரசாயன உற்பத்தித் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று அது கூறியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இருந்து ஆறு மாதங்களாகக் குறைப்பதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
நிதி ஆயோக் அதிகாரத்துவ தாமதங்களை ஒரு முக்கிய பிரச்சினையாக சுட்டிக்காட்டியது. இந்த தாமதங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஊக்கப்படுத்துவதில்லை என்று அது கூறியது.
தற்போது, சராசரியாக அனுமதி 451 நாட்கள் ஆகும். இது பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவான 255 நாட்களைவிட 196 நாட்கள் அதிகம். 90% திட்டங்கள் தாமதங்களை எதிர்கொள்வதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகளை நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் மற்றும் துணைத் தலைவர் சுமன் பெரி ஆகியோர் டெல்லியில் பகிர்ந்து கொண்டனர்.
இந்த தாமதங்கள் திட்ட செலவுகளை அதிக அளவில் அதிகரிக்கின்றன என்று அறிக்கை கூறியது. அவை தொழில்துறை வளர்ச்சியையும் குறுக்கிடுகின்றன. இந்தியாவின் ஒப்புதல் செயல்முறை மற்ற பிராந்தியங்களைவிட அதிக நேரம் எடுக்கும் என்று அது சுட்டிக்காட்டியது. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா சுமார் ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் முக்கியத் திட்டங்களுக்கு சுமார் 12 முதல் 18 மாதங்கள் வரை எடுத்துக்கொள்கிறது.
இந்த அறிக்கை “வேதியியல் தொழில்: உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்களிப்பை மேம்படுத்துதல்” (Chemical Industry: Powering India’s participation in Global Value Chains) என்ற தலைப்பில் உள்ளது. தாமதங்களுக்கான முக்கிய காரணங்களை இது பட்டியலிடுகிறது. இதில் நீண்ட பொது ஆலோசனைகள், சீரற்ற ஆவணங்கள் மற்றும் ஒழுங்குமுறை வளங்களின் பற்றாக்குறை ஆகியவை அடங்கும்.
2026-ம் ஆண்டுக்குள் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு சிறப்பு மேற்பார்வைக் குழுவை உருவாக்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இந்தக் குழு திட்டத்தின் மீதான தாமதங்களை 10%-க்கும் குறைவாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான தாமதங்களை ஏற்படுத்தும் சிக்கல்களைக் கண்டறிய சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து இது செயல்படும். மேலும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகளை வெளியிடும்.
முக்கிய சீர்திருத்தங்களில் இறுதி முடிவுகளை எடுக்க நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிற்கு முழு அதிகாரம் வழங்குவதும் அடங்கும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் (Environmental Impact Assessment Authority (EIAA)) சரிபார்ப்பு தேவையை அவர்கள் நீக்க விரும்புகிறார்கள், இது 45 நாட்களை மிச்சப்படுத்தும். மாற்றாக, நிறுவனங்கள் விரைவாகச் செல்ல தற்காலிக, "கருதப்பெறும்" (deemed) சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறலாம்.
தற்போது, ஒப்புதல் செயல்முறை பல படிகளைக் கொண்டுள்ளது. விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல், திரையிடல் மற்றும் வகைப்பாடு, பொது ஆலோசனை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டைச் சரிபார்த்தல், நிபுணர் மதிப்பீடு மற்றும் அதிகாரசபையால் இறுதி முடிவு போன்றவை ஆகும். திரையிடல், நிபுணர் மதிப்பீடு மற்றும் இறுதி முடிவின்போது பெரும்பாலான தாமதங்களும் நிகழ்கின்றன.
நிறுவனங்கள் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கும்போது, அவற்றின் சொந்த ஆபத்தில் சில கட்டுமான நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது. மூலதன விரிவாக்கம் தொடர்பான சிவில் கட்டுமானம் அல்லது பொதுவிசாரணைகள் தேவையில்லாத தயாரிப்பு கலவையில் ஏற்படும் மாற்றங்களுக்கு இது பொருந்தும்.
இரசாயன பூங்காக்கள் தொழில்களுக்கு முன் சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை முன்மொழிகிறது. தயாரிப்புக்கான கலவை மாற்றங்கள் அதிகரித்த மாசுபாட்டிற்கு வழிவகுக்காதபோது புதிய அனுமதிகள் தேவையில்லை என்றும் அது மேலும் பரிந்துரைக்கிறது.
சுற்றுச்சூழல் அனுமதி (environmental clearance (EC)) செயல்முறையை எளிதாக்குவது ஒழுங்குமுறை சூழலை மேம்படுத்தலாம் என்று அறிக்கை முடிவு செய்கிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இதைச் செய்ய முடியும் என்றும், எளிதாக வணிகம் செய்வதில் இந்தியாவின் தரவரிசையை மேம்படுத்த இது உதவக்கூடும் என்றும் அது மேலும் கூறுகிறது.