தற்போதைய நிகழ்வு : உலக வங்கியின் இந்திய இயக்குநர் அகஸ்டே டானோ கோமேவின் கூற்றுப்படி, காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் திறம்பட முதலீடு செய்ய இந்திய நகரங்களுக்கு சில சுயாட்சி தேவைப்படும். இந்த நடவடிக்கைகளில் தழுவல் மற்றும் தணிப்பு ஆகிய இரண்டும் அடங்கும்.
முக்கிய அம்சங்கள் :
சரியான முடிவுகளை எடுக்க அதிக அதிகாரம் கொண்ட நகரங்கள் மற்றவைகளை விட சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. மேலும், நகர்ப்புற காலநிலை மீள்தன்மையை (urban climate resilience) வலுப்படுத்துவது குறித்த அறிக்கையை வெளியிடும்போது செவ்வாய்க்கிழமை அன்று உலக வங்கியின் இந்திய இயக்குநர் அகஸ்டே டானோ கோமே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கையை உலக வங்கியானது, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை உருவாக்க இந்திய நகரங்களுக்கு 2050-ம் ஆண்டுக்குள் 2.4 டிரில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று கூறுகிறது.
1992-ம் ஆண்டின் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், உள்ளூர் சுயாட்சியை வலுப்படுத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (Urban Local Bodies (ULB)) அரசியலமைப்புக்கான தரநிலையை வழங்கியது. இருப்பினும், 2022-ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ தணிக்கைகள், பல மாநிலங்கள் அதன் விதிகளை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்பதைக் காட்டுகின்றன.
உலக வங்கிக்கு இது குறித்து அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்றாலும், 74வது திருத்தத்தின் "சில பதிப்பு" (some version) பரிசீலிக்கப்படலாம் என்று கோமே (Kouame) கூறினார். "இது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக செயல்படுத்தப்பட வேண்டியதில்லை. இதற்கான அணுகுமுறையானது, உள்ளூர் நிலைமைகள் மற்றும் பல காரணிகளைப் பொறுத்தது," என்று அவர் மேலும் கூறினார்.
உங்களுக்குத் தெரியுமா? :
2050-ம் ஆண்டில் நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகையானது கிட்டத்தட்ட இரு மடங்காக, அதாவது 951 மில்லியனாக உயரும் என்றும், 2030-ம் ஆண்டளவில், உருவாக்கப்படும் அனைத்து புதிய வேலைவாய்ப்புகளில் 70 சதவிகிதத்திற்கும் மேல் நகரங்கள்தான் முக்கிய பங்களிக்கும் என்றும், இந்தியாவில் மீள்தன்மை மற்றும் வளமான நகரங்களை நோக்கி என்ற தலைப்பில் அறிக்கை கூறுகிறது. இந்திய நகரங்கள் வேகமாக நகரமயமாக்கப்படுகின்றன. இந்த வேகமான வளர்ச்சியுடன், வழக்கம்போல் விஷயங்கள் தொடர்ந்தால் அவை இரண்டு பெரிய தாக்கங்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த தாக்கங்கள் வெள்ளம் மற்றும் கடுமையான வெப்பம் சார்ந்தது. இதை, நட்சுகோ கிகுடகேவுடன் இணைந்து அறிக்கையை எழுதிய அஸ்மிதா திவாரி கூறினார்.
அறிக்கையின்படி, கனமழையால் ஏற்படும் வெள்ளத்தால் ஏற்படும் இழப்புகள் 2030-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் $5 பில்லியனை எட்டும் என்று அறிக்கை கூறுகிறது. அதனைத் தொடர்ந்து 2070-ம் ஆண்டுக்குள், நகரங்கள் மாற்றியமைக்கும் வழிகளில் முதலீடு செய்யாவிட்டால் இந்த இழப்புகள் ஒவ்வொரு ஆண்டும் $30 பில்லியனாக அதிகரிக்கும். அடுத்த 15 ஆண்டுகளில் 60 சதவீதம் அதிக ஆபத்துள்ள நகரங்கள் வெள்ளத்திற்கு சிறப்பாக தயாராக உதவுவதற்கு சுமார் $150 பில்லியன் செலவாகும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.
வெப்பம் தொடர்பான இறப்புகள் 2050-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்திற்கும் அதிகமாக இரட்டிப்பாகும் என்று அறிக்கை கூறியது. இந்த அதிகரிப்பு புவி வெப்பமடைதல் மற்றும் நகர்ப்புற வெப்ப தீவு விளைவு (heat island effect) காரணமாகும். சில நடவடிக்கைகள் 1.3 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் அது கூறியது. வேலை நேரத்தை அதிகாலை மற்றும் பிற்பகலுக்கு மாற்றுதல், நகர்ப்புற பசுமையை அதிகரித்தல், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் குளிர் கூரைகளை (cool roofs) நிறுவுதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்த அறிக்கை தேசிய மற்றும் மாநில அளவிலான தலையீடுகளுக்கு பல பரிந்துரைகளை வழங்குகிறது. இதில் தனியார்துறை ஈடுபாட்டை அதிகரிப்பது, நிதியளிப்புக்கான திட்டத்தை உருவாக்குதல் மற்றும் நகராட்சி திறன்களை மேம்படுத்துவதற்கான தரநிலைகளை அமைத்தல் ஆகியவை அடங்கும். நகரங்களைப் பொறுத்தவரை, அபாயங்களை மதிப்பிடுதல் மற்றும் நிதி திரட்டுதல் ஆகியவற்றை இது பரிந்துரைக்கிறது. பேரிடர் தடுப்புக்கு உதவ தனியார் முதலீட்டை ஈர்ப்பது மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.