இரசாயன மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கான புதிய விதிகள் என்ன? -ஜேக்கப் கோஷி

 தொழில்துறை மாசுபாடு மேலாண்மைத் திட்டத்திற்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (Capacity Building Program for Industrial Pollution Management Project) கீழ் என்ன பணிகள் இருந்தன?


தற்போதைய செய்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் (Environment Protection Act) கீழ்,  புதிய விதிகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இரசாயன மாசுபாடு உள்ள தளங்களை நிவர்த்தி செய்வதற்கான செயல்முறையை வகுக்கிறது. 2025-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுபட்ட இடங்களின் மேலாண்மை) விதிகள் (Environment Protection (Management of Contaminated Sites) Rules, 2025) என்று அழைக்கப்படும் இந்த விதிகள், இரசாயன மாசுபாட்டை கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்குகின்றன. நாடு முழுவதும் இதுபோன்ற பல தளங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரை சரியான அமைப்பு எதுவும் இல்லை.


மாசுபட்ட இடங்கள் (contaminated sites)  என்றால் என்ன?


மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் (Central Pollution Control Board) கூற்றுப்படி, மாசுபட்ட இடங்கள் என்பது ஆபத்தான மற்றும் பிற கழிவுகள் வரலாற்று ரீதியாக கொட்டப்பட்ட பகுதிகளாகும். இது பெரும்பாலும் மண், நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் மாசுபாட்டிற்கு காரணமாகி, மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சில இடங்கள் ஆபத்தான கழிவு மேலாண்மைக்கு எந்த விதிமுறையும் இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்டன. சில சூழல்களில், மாசுபாட்டிற்குக் காரணமான மாசுபடுத்துபவர்கள் தங்கள் செயல்பாடுகளை செய்ய தவறிவிட்டனர் அல்லது மறுசீரமைப்பு செலவு அவர்களின் திறனைவிட அதிகமாக உள்ளது. இவற்றில், குப்பைக் கிடங்குகள், கழிவு சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு தளங்கள், கசிவு தளங்கள் மற்றும் ரசாயனக் கழிவுகளைக் கையாளுதல் மற்றும் சேமிப்பு தளங்கள் ஆகியவை அடங்கும். நாடு முழுவதும் இதுபோன்ற 103 தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 7 இடங்களில் மட்டுமே சீரமைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாசுபட்ட மண், நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர் மற்றும் வண்டல் ஆகியவற்றை தேவையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் அடங்கும்.


இந்த விதிகள் ஏன் முக்கியமானது?


மாசுபட்ட இடங்களை சீரமைப்பு (Remediation) செய்வதற்கான தேசிய திட்டத்தை உருவாக்குவதற்காக, சுற்றுச்சூழல் அமைச்சகம் 2010-ஆம் ஆண்டில் தொழில்துறை மாசு மேலாண்மை திட்டத்திற்கான (Industrial Pollution Management Project) திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. சாத்தியமான மாசுபட்ட தளங்களின் பட்டியலை உருவாக்குதல்; மாசுபட்ட தளங்களின் மதிப்பீடு மற்றும் சரிசெய்தலுக்கான வழிகாட்டுதல் ஆவணத்தை உருவாக்குதல்; மற்றும் மாசுபட்ட தளங்களின் சரிசெய்தலுக்கான சட்ட, நிறுவன மற்றும் நிதிக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற மூன்று பரந்த பணிகளைக் கொண்டிருந்தது. முதல் இரண்டு படிகள் நடைமுறையில் இருந்தபோதிலும், சட்டக் குறியீட்டு முறை தொடர்பான கடைசி படி நிறைவேற்றப்படாமல் இருந்தது. ஜூலை 25 அன்று பொது வெளியில் வெளியிடப்பட்ட விதிகள் இந்த சட்டக் குறியீட்டு செயல்முறையின் (codification process) ஒரு பகுதியாகும்.


இந்த விதிகளின் கீழ், மாவட்ட நிர்வாகம் "சந்தேகத்திற்கிடமான மாசுபட்ட இடங்கள்" (suspected contaminated sites) பற்றிய அரையாண்டு அறிக்கைகளை தயார் செய்யும். மாநில வாரியம் அல்லது 'குறிப்பு அமைப்பு' (reference organisation) இந்த இடங்களை ஆராய்ந்து இவ்வாறு தகவல் அளிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் "ஆரம்ப மதிப்பீடு" வழங்கும். இதைத் தொடர்ந்து, விரிவான ஆய்வு செய்வதற்கும் இந்த இடங்கள் உண்மையில் 'மாசுபட்டவை' என்பதை உறுதி செய்வதற்கும் மேலும் மூன்று மாதங்கள் இருக்கும். இதில் சந்தேகத்திற்குரிய அபாயகரமான இரசாயனங்களின் அளவை நிறுவுவது அடங்கும் — ஆபத்தான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் நாடுகடந்த இடமாற்றம்) விதிகள், 2016 (Hazardous and Other Wastes (Management and Transboundary Movement) Rules, 2016) பிரிவுகளின் கீழ் தற்போது 189 குறிக்கப்பட்டவை உள்ளன. இந்த இடங்கள் பாதுகாப்பான அளவுகளை மீறினால், இந்த இடங்களின் இருப்பிடம் பகிரங்கப்படுத்தப்பட்டு அதை அணுகுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பின்னர், நிபுணர்களின் குழுவாக இருக்கும் 'குறிப்பு அமைப்பு', ஒரு சீரமைப்பு திட்டத்தை குறிப்பிடும் பணியை மேற்கொள்ளும். மாசுபாட்டிற்கு காரணமான நபரைகளை அடையாளம் காண மாநில வாரியத்திற்கும் 90 நாட்கள் இருக்கும். பொறுப்பானவர்கள் தளத்தின் சீரமைப்பு செலவை செலுத்த வேண்டும். இல்லையெனில் ஒன்றிய அரசும் மாநில அரசும் சுத்தம் செய்வதற்கான செலவுகளை ஏற்பாடு செய்யும். அத்தகைய மாசுபாடு உயிர் இழப்பு அல்லது தீங்கு விளைவித்ததாக நிரூபிக்கப்பட்டால், 2023ஆம் ஆண்டு, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், குற்றவியல் குற்றச்சாட்டுகள் கையாளப்படும் என்று ஒரு அதிகாரி The Hindu-விடம் தெரிவித்தார்.


விலக்குகள் எதுவும் உள்ளனவா?


கதிரியக்கக் கழிவு, சுரங்க நடவடிக்கைகள், எண்ணெயால் ஏற்படும் கடல் மாசுபாடு மற்றும் கொட்டும் இடங்களில் இருந்து வரும் திடக் கழிவுகள் (solid waste) ஆகியவற்றால் ஏற்படும் மாசுபாடு இந்த சட்டங்களின் பிரிவுகளின் கீழ் கையாளப்படாது. ஏனெனில், அவை தனி சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. விதிகளில் உள்ள மற்றொரு பெரிய சிக்கல் என்னவென்றால், மாசுபட்ட தளம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் எவ்வளவு விரைவாக அதை சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை.



Original article:

Share: