தமிழ் நாடு அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செப்டம்பர் 2022 இல் தொடங்கப்பட்டது. இது ஆரம்பப்பள்ளி வகுப்புகளில் இடைநிற்றலைக் குறைத்து பள்ளிகள் மற்றும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் (Self Help Groups (SHGs)) உறுப்பினர்கள் DT Next - இடம் பேசினர். உணவு ஒருபோதும் வீணாகாது என்று குறிப்பிட்டுள்ளனர். மாறாக காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் பிற வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உணவை விநியோகம் செய்கின்றனர்.
குறிப்பாக வடசென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பல சமயங்களில் பள்ளியில் காலை உணவை சாப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இதே போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தமிழக மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையின் உயர் விகிதங்களை நிவர்த்தி செய்ய மாநில அரசு இந்த திட்டத்தை மே 2022 இல் அறிமுகப்படுத்தியது. பின்னர், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை சேர்க்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.
இத்திட்டம் தற்போது 1,545 அரசுப் பள்ளிகளில் 1.14 லட்சம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குச் உணவளித்து வருகிறது. இதற்கு ரூ.33.56 கோடி செலவாகும். இந்த திட்டத்தை படிப்படியாக மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆசிரியர்கள் ஏற்கனவே அதன் நேர்மறையான விளைவுகளை கவனித்து வருகின்றனர்.
கொருக்குப்பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கிய பின்னர், காலை உணவை தவறவிட்ட மற்ற வகுப்பு மாணவர்களை சரிபார்த்து, அவர்களுக்கும் உணவு வழங்குகிறோம். இந்த நடைமுறை இங்கும், பிற இடங்களிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டை அரசுப் பள்ளியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது தாயார் வேலைக்குச் சீக்கிரமாகச் சென்றுவிடுவதாகக் குறிப்பிட்டார், அதனால் பள்ளித் தலைமையாசிரியரின் உதவியால் பள்ளியில் காலை உணவை உண்கிறார். இவரைப் போன்று பல மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக காலை உணவு இல்லாமல் பள்ளிக்கு வருகின்றனர். எனவே, இத்திட்டத்தை அனைத்து வகுப்பினருக்கும் விரிவுபடுத்துவது முக்கியம்.
இந்த முயற்சிகள் சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நகரத்தைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஒருவர் விளக்கினார். அவற்றின் தாக்கத்தை எண்களைக் கொண்டு கணக்கிடுவது கடினம் என்றாலும், அவை பெரும் மதிப்பைக் கொண்டுள்ளன மற்றும் சமூகத்தில் ஒரு சக்திவாய்ந்த விளைவை உருவாக்குகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் உணவு வழங்குவது முக்கியமானது, குறிப்பாக, பல்வேறு காரணங்களுக்காக அதை வாங்க முடியாத பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது. மேல்நிலை வகுப்புகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும்.