பருவநிலை மாற்றம் தொடர்பான அழுத்தங்களின் பின்னணியில், தண்ணீர் பகிர்வு தொடர்பாக மேம்பட்ட ஒத்துழைப்பை உலகம் வளர்க்க வேண்டியது அவசியம்.
உலகளவில் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் இன்னும் சுத்தமான தண்ணீரைப் பெற போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தண்ணீரின் தேவை அதிகரித்து கொண்டு செல்கிறது. இந்த பற்றாக்குறை அடிப்படை மனித தேவைகளை மட்டும் அச்சுறுத்தாமல், நமது ஒட்டுமொத்த செழிப்பு மற்றும் அமைதியை பாதிக்கிறது.
இன்று மார்ச் 22, 2024, அது 31வது உலக தண்ணீர் தினம் (World Water Day). இந்த ஆண்டின் கருப்பொருள் "அமைதிக்காக தண்ணீரை மேம்படுத்துதல்" (“Leveraging water for peace”) என்பதாகும். யுனெஸ்கோ, உலக நீர் மதிப்பீட்டு திட்டத்தின் மூலம் (World Water Assessment Programme), 2024 ஐக்கிய நாடுகளின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கையை (United Nations World Water Development Report) "வளர்ச்சி மற்றும் அமைதிக்கான தண்ணீர்" (“Water for Prosperity and Peace”) என்ற தலைப்பில் வெளியிடுகிறது. 35 ஐக்கியநாடுகளவையின் நிறுவனங்கள் மற்றும் 48 பிற சர்வதேச பங்குதாரர்கள் குழு தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்து வருகிறது.
சிந்து, நைல், டைகிரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு அருகில் உள்ள பல புகழ்பெற்ற நாகரிகங்களுக்கு தண்ணீர் இன்றியமையாததாக இருந்துள்ளது. இருப்பினும், மெசபடோமிய (Mesopotamian) நகரங்களான லாகாஷ் (Lagash) மற்றும் உம்மா (Umma) இடையே நன்கு அறியப்பட்ட பதட்டங்களைப் போலவே இந்த நாகரிகங்களிலும் தண்ணீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் நிகழ்ந்துள்ளன. வரலாற்றின் மிகப் பழமையான போர்களில் ஒன்றான இந்த மோதல் வளமான நிலம் மற்றும் நீர்வளங்களை மையமாகக் கொண்டது. சுவாரஸ்யமாக, மெசிலிம் ஒப்பந்தம் (Treaty of Mesilim), உலகின் முதல் அமைதி ஒப்பந்தத்திற்கு (first peace treaty) வழிவகுத்தது. இது மனிதகுலத்தின் பழமையான சட்ட ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கடினமான காலகட்டத்தில் தண்ணீர் இராஜதந்திரம்
இன்று, கடுமையான வெப்ப அலைகள் முதல் கடுமையான வெள்ளம் போன்ற பல தீவிர வானிலை நிகழ்வுகளை உலகம் எதிர்கொண்டுவருகிறது. இது காலநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையில் அதன் தாக்கம் குறித்து மக்களை அதிகம் கவலைப்பட வைக்கிறது. உதாரணமாக, இந்தியாவில், பருவமழை காலப்போக்கில் கணிக்க முடியாததாகிவிட்டது, இது இந்தியாவின் $3 டிரில்லியன் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான துறையான விவசாயத்திற்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கூடுதல் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, நீர் பகிர்வு மற்றும் சர்வதேச நீர் சட்டத்திற்கான உலகளாவிய கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் சிறந்த ஒத்துழைப்பு தேவை. பகிரப்பட்ட நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதன் மூலமும், நிலையான நீர் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், நீரை அமைதிக்கான கருவியாகப் பயன்படுத்தி, மேம்பட்ட நீர் ராஜதந்திரத்தை நாம் நோக்கமாகக் கொள்ள முடியும். நீர் இன்றியமையாதது, ஆனால் தரம் மற்றும் கிடைக்கும் தன்மையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை அங்கீகரித்து, நாடுகளிடையே நியாயமான மற்றும் திறமையான நீர் விநியோகத்தை உறுதி செய்ய கூட்டு முயற்சி அவசியம். இது பிராந்திய ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் நீர், காலநிலை மற்றும் சர்வதேச ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு இடையிலான சிக்கலான உறவுகளைப் பற்றிய புரிதலை வளர்க்கிறது.
தண்ணீர் இராஜதந்திரம் எல்லைகளைக் கடந்து தொடர்புகளைக் கொண்ட பழங்குடி மற்றும் உள்ளூர் சமூகங்கள் உட்பட அனைவரையும் ஈடுபடுத்த வேண்டும். நீர் பங்கீடு பிரச்னைகளை தடுக்கவும், குறைக்கவும், தீர்க்கவும் குடுமையியல் சமூகம் மற்றும் கல்வி கூட்டமைவுகளும் முக்கியம். இந்த ஆண்டு தண்ணீர் அறிக்கை உலகளவில் நீரின் தர தரவு பற்றாக்குறை பற்றி பேசுகிறது. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான பெரிய வித்தியாசத்தையும் சுட்டிக்காட்டுகிறது, "அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லாமல் ஐந்து பேரில் நான்கு பேர் கிராமப்புறங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்”.
இந்தியாவில், கிராமப்புறங்களில் உள்ள 70% மக்கள் தங்கள் வீடுகளுக்கு தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக, விவசாயம் அவர்களின் முக்கிய வேலை. இது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் விவசாயம் உலகின் மொத்த நன்னீரில் 70% பயன்படுத்துகிறது. மேலும், கிராமப்புறங்களில் தண்ணீர் கிடைப்பதை எளிதாக்கினால், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தண்ணீரில் அதிக முதலீடு செய்வதன் மூலம் சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, அடிப்படை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் நேர்மறையான முடிவுகளைக் கொண்டுவர முடியும்.
விவசாயத்தில், செயற்கை நுண்ணறிவு (artificial intelligence AI)) போன்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பயிர் மற்றும் உணவு கழிவுகளைக் குறைப்பதன் மூலமும், ரசாயன பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும் தண்ணீரைச் சேமிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தியா உட்பட நாடுகளுக்கு இடையே பகிரப்படும் எல்லை தாண்டிய நீர் பற்றி இந்த அறிக்கை பேசுகிறது.
எல்லை தாண்டிய நீர் பிரச்சினை
இந்தியா, பரந்த நிலப்பரப்புடன், பல நீண்ட நதிகளைக் கொண்டுள்ளது. அவை அதன் சொந்த மற்றும் அதன் அண்டை நாடுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இருப்பினும், தெற்காசியாவில், குறிப்பாக மேக்னா, பிரம்மபுத்திரா, கங்கை மற்றும் சிந்து போன்ற நதிகளில் நீர் மாசுபாடு சமீபத்திய ஆண்டுகளில் மோசமாகியுள்ளது என்று 2024 ஆண்டு அறிக்கை எச்சரிக்கிறது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, உலகிற்கு மேம்பட்ட எல்லை தாண்டிய நீர் மேலாண்மை தேவைப்படுகிறது. இதன் பொருள் நீர் வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிடையே நீர் நியாயமான மற்றும் பயனுள்ள விநியோகத்தை உறுதி செய்வதாகும். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரஅமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) 194 உறுப்பு நாடுகள் மற்றும் 12 இணை உறுப்பினர்களில், 153 நாடுகள் நீர் வளங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இது உலகின் நன்னீர் ஓட்டத்தில் 60% ஆகும். இந்த 153 நாடுகளில், 24 நாடுகள் மட்டுமே பகிரப்பட்ட நீரில் ஒத்துழைப்பதில் முழுமையாக உடன்பட்டுள்ளன என்று, "எல்லை கடந்த நீர் ஒத்துழைப்பில் முன்னேற்றம்" (“Progress on transboundary water cooperation”) என்ற தலைப்பில் யுனெஸ்கோ வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு காட்டி 6.5.2 2021 (Sustainable Development Goal indicator 6.5.2) அறிக்கை தெரிவிக்கிறது.
காலத்தின் தொடக்கத்திலிருந்து, அமைதியை உருவாக்குவதில் நாம் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஆனால், நன்னீர் தீர்ந்துவிட்டால், அது நம் நல்வாழ்வுக்கும் அமைதிக்கும் தீங்கு விளைவிக்கும். 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (Sustainable Development Goal (SDGs)) அடைய இது முக்கியமானது. எல்லைகளைத் தாண்டி தண்ணீரை நிலையான முறையில் நிர்வகிக்க ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், சிறந்த ஆரோக்கியம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பு, கல்வி, மேம்பட்ட வாழ்க்கை நிலைமைகள், வேலைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள் போன்ற பலன்களை நாம் அனுபவிக்க முடியும்.
டிம் கர்டிஸ் (Tim Curtis) ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரஅமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) தெற்காசியாவிற்கான புது தில்லி பிராந்திய அலுவலகத்தின் இயக்குநராகவும், இந்தியாவுக்கான யுனெஸ்கோ பிரதிநிதியாகவும் உள்ளார்.