வீடுகளில் உள்ள பெண்களும் சிறுமிகளும் பொதுவாக தண்ணீர் சேகரிக்க அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.
வீடுகளுக்கு தண்ணீர் வழங்குவதில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், 2020-21 காலக்கட்டத்திற்கான, தேசிய மாதிரி ஆய்வு 78வது சுற்றில் (National Sample Survey 78th round (2020-21)) நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 41%க்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு இன்னும் வீட்டில் பாதுகாப்பான குடிநீர் இல்லை என்று தெரியவந்துள்ளது. பாதுகாப்பான நீருக்கான அணுகல் வெவ்வேறு பகுதிகளில் மாறுபடும். ஆனால், ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருகிறது. இருப்பினும், சில குடும்பங்கள் இன்னும் 0.2 முதல் 1.5 கிமீ அல்லது அதற்கு மேல் பயணித்து சுத்தமான தண்ணீரை பெற வேண்டியுள்ளது. உலக மக்கள் தொகையில் 18% உள்ள இந்தியா, உலகின் நீர் வளத்தில் 5%க்கும் குறைவாகவே உள்ளது.
தண்ணீர் வசதி இல்லாதது குடும்பங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் அல்லது முக்கிய ஆதாரம் தொலைவில் உள்ள பகுதிகளில், தண்ணீர் எடுப்பது பொதுவாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு வேலையாக பார்க்கப்படுகிறது. இது அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் குடும்பங்களைப் பாதிக்கிறது. இதனால் பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், கல்வியில் தேர்ச்சி பெறுவதும் கடினமாகிறது. தண்ணீரை எடுக்க செல்லும் போது பெண்கள் வன்முறையைச் சந்திக்க நேரிடும், இது அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
போதுமான தண்ணீர் இல்லாததால் மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக (open defecation) ஆய்வுகள் காட்டுகின்றன. இது பெண்கள் மீது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் காலரா போன்ற உடல்நலப் பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் உள்ளன. உடல்நலப் பிரச்சினைகள் தவிர, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பெண்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் சமூகவிரோதிகளிடமிருந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அபாயமும் அதிகம் உள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission (JJM)) மற்றும் தேசிய தண்ணீர் திட்டம் ( National Water Mission) ஆகியவை நாம் தண்ணீரை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதில் பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன. ஜல் ஜீவன் மிஷன் மக்கள் தங்கள் வீடுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் குடிநீர் பெற உதவுகிறது. இதனால் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது, பிற பணிகளுக்கு அவர்களின் நேரத்தை பயன்படுத்தலாம்.
சமூக நடவடிக்கைகளில் அதிகமான பெண்கள் பங்கேற்க்க வைப்பதன் மூலம் அவர்களை வெற்றியடைய வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் சுயஉதவி குழுக்களுடன் இணைந்து செயல்படுவது அடங்கும். பெண்களை அதிக சக்தி வாய்ந்தவர்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தண்ணீர் குழுக்களில் சேர அவர்களை ஊக்குவிக்கிறது.
இந்தக் குழுக்கள் தங்கள் கிராமங்களில் பணிகளைத் திட்டமிடுதல், மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. ஜல் ஜீவன் மிஷன் வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஐந்து பெண்களுக்கு தண்ணீரின் தரத்தை தவறாமல் சரிபார்க்க பயிற்சி அளிக்க பரிந்துரைக்கின்றன. இதற்கு இரண்டு முக்கிய இலக்குகள் உள்ளன. இந்த பெண்கள் அதிக அதிகாரம் பெற உதவுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்கிறது.
தமிழ்நாட்டில், மூன்று மாவட்டங்களின் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த இலக்குகளைப் பார்த்தோம். ஜல் ஜீவன் மிஷன் மூலம், குடும்பங்கள் வீட்டில் பாதுகாப்பான குடிநீரைப் பெறுகின்றன, பெண்கள் தண்ணீர் எடுக்க செலவிடும் நேரத்தை குறைக்கின்றன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இது வீட்டு வேலைகளை நிர்வகிக்கவும், குழந்தைகளின் பள்ளிக்கு அனுப்புவதர்க்கும் உதவும், குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும் அவர்களுக்கு அதிக நேரம் தருகிறது. ஒட்டுமொத்தமாக பெண்கள் தண்ணீர் எடுப்பதில் குறைந்த நேரத்தை செலவிட்டனர் மற்றும் சிறந்த மன ஆரோக்கியத்தைக் கொண்டிருந்தனர். தண்ணீரை அணுகுவது சுகாதாரத்தை அணுகுவதோடு இணைக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தண்ணீர் மற்றும் சுகாதாரம் வழங்குவதில் இந்தியா முன்னேறி வரும் நிலையில், தண்ணீர் அணுகலில் பாலினப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. தண்ணீர் அணுகல் அல்லது தரத்தில் மேம்பாடுகளைப் பார்ப்பது மட்டும் போதாது. பாலினம் தொடர்பான இலக்குகளை அடைய இந்த முயற்சிகள் எவ்வாறு உதவுகின்றன என்பதையும் நாம் சரிபார்க்க வேண்டும். பள்ளிக்குச் செல்வதை நிறுத்தும் சிறுமிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், கிராமப்புறப் பெண்கள் செய்ய வேண்டிய கடின உழைப்பைக் குறைப்பதும் இதில் அடங்கும். இந்த மாற்றங்கள் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை எவ்வாறு மேம்படுத்த உதவுகின்றன என்பதைப் பார்ப்பது முக்கியம்.
சுஜாதா சீனிவாசன், க்ரியா பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் அபர்ணா ஆனந்த் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளர்.