போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத்தால் அஸ்ஸாம் மாநிலம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. மாநில அரசு இயற்க்கை மீது பழி போடுவதை விடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
கடந்த அக்டோபரில், அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நதிகளின் பாதிப்பைக் குறைக்க 54 திட்டங்களை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார். இந்த திட்டங்கள் வெள்ளம் இல்லாத அஸ்ஸாமை உருவாக்க வழிவகுக்கும் என்று அவர் நம்பினார். இருப்பினும், மாநில அரசு இன்னும் மக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களை வெள்ள நீரில் இருந்து திறம்பட பாதுகாக்கவில்லை. இந்த ஆண்டு, அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தரவுகலின் படி, வெள்ளம் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 360,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 40,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் திப்ருகர் மற்றும் கவுகாத்தியின் குறிப்பிடத்தக்க பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட புவியியல் காரணிகளால் வெள்ளம் ஏற்பட்டது என்று கூறினார்.
மாநிலத்தில் 120க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளன. இவற்றில் பல ஆறுகள் அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா, சீனா மற்றும் பூட்டானில் உள்ள மலைகளில் இருந்து உருவாகின்றன.
இருப்பினும், ஏறக்குறைய 70-ஆண்டுகளாக, இந்த நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய
மற்றும் அசாம் அரசு முறையான வழிகளைக் கண்டுபிடிக்கவில்லை. அணையை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் சிக்கல்களை மீண்டும் மீண்டும் வெள்ளம் ஏற்படும் போதும் மாநில அதிகாரிகள் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்த வெள்ளக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளில் பெரும்பாலானவை 1960-கள் மற்றும் 1970-களில் உருவாக்கப்பட்டவை. அந்த நேரத்தில், பிரம்மபுத்திரா உட்பட அசாம் நதிகளின் வழித்தடங்கள் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை.
வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையிலான வீடுகளை கட்டுவதற்கு உள்நாட்டு அறிவைப் பயன்படுத்துதல், ஆறுகளை துார்வாருதல், மண்அரிப்பைத் தடுத்து நிறுத்துதல் அல்லது அதிக மீள்கரைகளை அமைத்தல் போன்ற தீர்வுகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. பல யோசனைகள் தீர்வுகாணப்படாமல் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளன.
2021-ஆம் ஆண்டில், நாடாளுமன்றக் குழு, வடகிழக்கு அணைகளின் மேல் நீரோடை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நவீன வானிலை நிலையங்களை அமைக்கவும், வெள்ளம் அதிகமாக ஏற்பட்டால் எச்சரிக்கும் எச்சரிக்கை கருவிகளை நிறுவவும் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது. இருப்பினும், இப்பகுதியில் இன்னும் எச்சரிக்கை அமைப்புகள் சரியாக உருவாக்கப்படவில்லை.
குவகாத்தி, கிண்ண வடிவிலான தாழ்வான பகுதியாகும், எனவே மழைநீர் தேங்குவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறது. வரலாற்று ரீதியாக, சதுப்பு நிலங்கள் மற்றும் நீர் வழித்தடங்கள் நகரத்தை நிலைநிறுத்த உதவியது. கடந்த 70 ஆண்டுகளில், கட்டுமானத் திட்டங்கள் இந்த முக்கிய சுற்றுச்சூழல் அம்சங்களை கணிசமாகக் குறைத்துள்ளன. பல இந்திய நகரங்களைப் போலவே, குவகாத்தியின் வடிகால் அமைப்பு மோசமடைந்து வருகிறது. அருகிலுள்ள மேகாலயா மற்றும் சுற்றியுள்ள மலைகளில் இருந்து வரும் மழைநீர் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது. வடகிழக்கு மற்றும் மத்திய அரசுகள் வெள்ள சேதங்களை நிவர்த்தி செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்று பத்தாண்டு காலமாக கோரிக்கை உள்ளது. அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மக்களுக்கு பயனுள்ள நிர்வாக தீர்வுகள் தேவை, வெள்ளத்திற்கு கூறப்படும் புவியியல் காரணங்கள் மட்டுமல்ல.