1909 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஒரு முக்கிய பெண் சுதந்திரப் போராட்ட வீரரான அருணா ஆசப் அலி பிறந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது அவர் எப்படி பிரபலமடைந்தார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவரது பங்களிப்பு என்ன?
ஆகஸ்ட் 8, 1942 அன்று, பம்பாயில் உள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில் (தற்போது ஆகஸ்ட் கிராந்தி மைதானம்) மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற "செய் அல்லது செத்து மடி" (Do or Die) உரையை நிகழ்த்தினார். ஒரு முக்கிய பெண் புரட்சியாளரான அருணா ஆசப் அலி அங்கு மூவர்ணக் கொடியை ஏற்றி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் தொடங்கிவைத்தார்.
ஜூலை 16 அருணா ஆசப் அலி பிறந்தநாள், மூவர்ணக் கொடியை உயர்த்திய அவரது துணிச்சலான செயலுக்காகக் கொண்டாடப்படுகிறது. 1940களில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் பற்றிய எந்த விவாதமும் அவரது பெயரை உள்ளடக்கியது. அவரது பங்களிப்புகளை ஆராய்வதற்கு முன், அவர் கலந்துகொண்ட முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு கடும் கோடை காலத்தில், தில்லியில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையிலான ஒரு அமைச்சரவை தூது குழுவுடன் கலந்துரையாடினர். அப்போதைய இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்திற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த தூதுக்குழுவை அனுப்பியிருந்தார்.
கிரிப்ஸ் தூது குழுவிற்கு முன், இந்தியாவின் வைஸ்ராய், லின்லித்கோ பிரபு, 1940 இல் 'ஆகஸ்ட் சலுகை' (August offer) என்று அழைக்கப்பட்ட ஒரு சலுகையை வழங்கினார். அது இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்தை வழங்க முன்மொழிந்தது, ஆனால் முஸ்லீம் லீக் மற்றும் பிற மதவாதத் தலைவர்களுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது, ஐரோப்பாவில் அச்சு மற்றும் நேச நாடுகளுக்கு இடையே பதட்டங்கள் மற்றும் துருப்பு நகர்வுகள் அதிகரித்தன. இந்தியத் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அழுத்தத்தை எதிர்கொண்டனர். இதற்கிடையில், வங்காளம் கடுமையான போர்க்கால பணவீக்கம் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் மிக மோசமான பஞ்சத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டது.
பிரிட்டனின் தென்கிழக்கு ஆதிக்கங்கள் விரைவாக வீழ்ச்சியடைந்தன. ரங்கூன், சிட்வே போன்ற இடங்கள் கைப்பற்றப்பட்டன. ஜப்பானியப் படைகள் இந்தப் பகுதிகளைக் கைப்பற்றின. ஜெனரல் ஹிடேகி டோஜோ இந்த வெற்றிக்கு தலைமை தாங்கினார். அவர் ஜப்பானின் சர்வாதிகாரியாக இருந்தார் மற்றும் ஏகாதிபத்திய ஆட்சி உதவி சங்கத்தின் தலைவராக இருந்தார்.
அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி (Congress Working Committee (CWC)) ஜூலை 14, 1942 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது இந்தியில் பாரத் சோரோ அந்தோலன் (Bharat Chhoro Andolan) என்று அழைக்கப்பட்டது, இது ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று வாதிட்டது. இந்த நேரத்தில் காந்தியின் வழக்கத்திற்கு மாறான போர்க்குணமிக்க நிலைப்பாட்டை பற்றி வரலாற்றாசிரியர் சேகர் பந்தோபாத்யாய் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 8, 1942 அன்று, காந்தி கோவாலியா டேங்க் மைதானத்தில் தனது புகழ்பெற்ற "செய் அல்லது செத்து மடி" உரையை நிகழ்த்தினார். இது காந்தியின் வழக்கமான அகிம்சை அணுகுமுறையிலிருந்து விலகுவதைக் குறித்தது. ஏனெனில், 'இறப்பது' ஒரு வன்முறைச் செயலாகக் கருதப்பட்டது. வன்முறையைத் தடுக்க ஒத்துழையாமை (1920-21) போன்ற இயக்கங்களை காந்தி முன்பு வழிநடத்தினார்.
பெண் சுதந்திரப் போராளிகள்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, பெண்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர், இது இந்தியாவில் பெண்கள் தலைமையிலான அரசியல் செயல்பாட்டின் புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 8, 1942இல், மகாத்மா காந்தி மற்றும் பிற தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இது பெண் தலைவர்களை இயக்கம் முழுவதும் வழக்கத்திற்கு மாறான வழிகளில் முன்னேறத் தூண்டியது.
சரோஜினி நாயுடு, சுசேதா கிருபலானி, கமலாதேவி சட்டோபாத்யாய், உஷா மேத்தா, மாதங்கினி ஹஸ்ரா, கனக்லதா பருவா, பூர்ணிமா பானர்ஜி, அருணா ஆசப் அலி போன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் முக்கிய தலைவர்களாக உருவெடுத்தனர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தனது துணிச்சலுக்கு பெயர் பெற்ற அருணா ஆசஃப் அலி, 1946ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சரணடைவதற்கான காந்தியின் உத்தரவை மீறினார். அவர் ஒரு முஸ்லீம் காங்கிரஸ் தலைவரான ஆசப் அலியை மணந்தார். இந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் ஆதரிக்கவில்லை. முக்கிய காரணம், ஆசப் அலி அருணாவை விட 20 வயது மூத்தவர்.
பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் உயர் ஆணையர் டி.சி.ஏ.ராகவன் 'சுதந்திர வட்டங்கள்' (The Circles of Freedom) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகத்தில் அருணாவின் வாழ்க்கையைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை குறிப்பிட்டுள்ளார். 1928இல், அவர் தனது திருமணத்திற்குப் பிறகு பழைய டெல்லியில் உள்ள குச்சா செளனில் வசித்து வந்தார். இந்த வாழ்க்கை அவருடைய ஆங்கிலோ-இந்திய எதிர்ப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
1932இல், ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக அருணா சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி-இர்வின் ஒப்பந்தம் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறியது. காந்தி அருணாவை சிறையிலிருந்து வெளியேறச் சொன்னார். ஆனால் திகார் சிறையில் கைதிகள் தவறாக நடத்தப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார் அருணா. அவரின் இந்த போராட்டம் சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்து. அடுத்த பத்தாண்டுகள் அவர் அம்பாலாவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
பம்பாயில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கோவாலியா டேங்க் கூட்டத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக அருணா புகழ் பெற்றார். தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து, ராம் மனோகர் லோஹியா போன்ற தலைவர்களிடம் அடைக்கலம் அடைந்தார்.
அருணா, லோஹியாவுடன் இணைந்து ‘இன்குலாப்’ (Inquilab) என்ற செய்தித்தாளைத் தொகுத்து, 1946 வரை தொடர்ந்து போராடினார். காந்தி, அருணா சரணடைய வேண்டும் என்று விரும்பினார். அவர் அருணாவிற்க்கு எழுதிய கடித்த்தில், “உங்கள் தைரியம் மற்றும் வீரத்தை நான் பாராட்டுகிறேன். நீங்கள் மிகவும் மெலிந்து விட்டீர்கள். காவல்துறையிடம் சரணடையுங்கள் மற்றும் உங்கள் கைதுக்காக வழங்கப்படும் பரிசுத் தொகையை ஹரிஜன் (தீண்டத்தகாதவர்களின்) நோக்கத்திற்காக ஒதுக்குங்கள்,”என்றார்.
சோசலிசப் கொள்கையில் உறுதியாக இருந்த அருணா, தன் மீதான பரிசுத் தொகை நீக்கப்பட்ட பின்னரே சரணடைந்தார். மீண்டும் கைது செய்யப்பட்ட பிறகும் கூட, அருணா தனது அரசியல் கருத்துக்களை ஐஎன்எஸ் தல்வாரின் ராயல் இந்திய நேவி கலகத்தை ஆதரிப்பதன் மூலம் தொடர்ந்து குரல் கொடுத்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அருணா காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். அதற்கு பதிலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இந்த கட்சியில், அவர் ஒரு மகளிர் குழுவை உருவாக்கினார். இது 'இந்தியப் பெண்களின் தேசிய கூட்டமைப்பு' (National Federation of Indian Women) என்று அழைக்கப்பட்டது.
அருணாவின் கணவர் 1953இல் இறந்தார். அவர் இறப்பதற்கு முன், அமெரிக்காவுக்கான இந்தியாவின் முதல் தூதராக ஆசப் அலி ஆனார். இந்த பதவி முதலாளித்துவத்தை ஆதரிக்கச் செய்திருக்கலாம். இது பனிப்போர் காலத்தில் இருந்தது. ஆனால் அருணா மனம் மாறவில்லை. கம்யூனிசத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்.
1965இல், அருணா ஆர்டர் ஆஃப் லெனின் (Order of Lenin prize) பரிசைப் பெற்றார். இந்திய அரசாங்கம் 1992இல் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது (Padma Vibhushan) வழங்கி கௌரவித்தது. அருணா உயிரோடு இருக்கும்போதே அதைப் பெற்றார்.
1997ல் அருணாவுக்கு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது (அவர் இறந்த பிறகு) வழங்கப்பட்டது. 1998இல், அவரது நினைவாக ஒரு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. புது தில்லியில் ஒரு சாலைக்கு அவரது பெயரும் சூட்டப்பட்டது. இது அருணா ஆசஃப் அலி மார்க் என்று அழைக்கப்படுகிறது.
மற்ற முக்கிய சுதந்திர போராட்ட வீரர்கள்
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் பற்றிய டாக்டர். ஹரிஷ் சந்திராவின் ஆய்வு, ஆங்கிலேயர்களிடமிருந்து பெண்கள் கடுமையான துன்புறுத்தலை எதிர்கொண்டதை எடுத்துக்காட்டியது. சுதந்திரப் போராட்டத்தில் மற்றவர்கள் சேருவதைத் தடுக்க அவர்கள் அடிக்கடி அவமானப்படுத்தப்பட்டனர்.
ஆங்கிலேயரின் அட்டூழியத்தில் தடியடி மட்டுமல்ல துப்பாக்கிச் சூடும் அடங்கும். இந்திய தேசிய காங்கிரஸின் (INC) முதல் இந்தியப் பெண்மணி சரோஜினி நாயுடு, வெள்ளையனே வெளியேறு தீர்மானத்திற்குப் பிறகு உடனடியாக கைது செய்யப்பட்டார். ஒரு மூத்த தலைவர் என்ற அவரது அந்தஸ்து அவரை சிறையில் அடைப்பதற்கான முக்கிய இலக்காக மாற்றியது.
சரோஜினி நாயுடு இல்லாத காலத்தில், சுசேதா கிருபலானி போன்ற தலைவர்கள் முக்கிய பங்காற்றினர். காங்கிரஸ் தலைவர் ஜேபி கிருபலானியின் மனைவி சுசேதா கிருபலானி, அகில இந்திய மகிளா காங்கிரஸை நிறுவினார் (All India Mahila Congress).
அவர் பனாரஸ் இந்து பல்கலைகளகத்தில் அரசியலமைப்பு வரலாறு துறையில் பேராசிரியாராக இருந்தார். இந்த அனுபவம் அவரது பேச்சுக்களை செம்மை படுத்தியது. அவர் ராம் மனோகர் லோஹியாவுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். கிருபலானியின் அரசியல் கருத்துக்கள் கம்யூனிச கொள்கைகளால் நிறைந்திருந்தது. இந்த காரணிகளால் அவர் உத்தரபிரதேசத்தின் முதல் பெண் ஆளுநராக வர உதவியது. அவர் 2 அக்டோபர் 1963 அன்று பதவியேற்றார்.
உஷா மேத்தா மற்றொரு குறிப்பிடத்தக்க சுதந்திர போராட்ட வீரர் ஆவார். ஒரு வானொலி அறிவிப்பை வெளியிட்டபோது அவருக்கு 22 வயது. "இந்தியாவில் எங்கிருந்தோ 42.34 மீட்டர் தொலைவில் இருந்து ஒலி பரப்பப்படும் காங்கிரஸ் வானொலி இது" என்றார். காந்தியின் பேச்சு அவரை நெகிழ வைத்தது. அவர் அப்போதுதான் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ரேடியோ அலைகள் பரிமாற்ற தொழில்நுட்பத்தைப் (radio waves transmission technology) பயன்படுத்தினார். இதை ஆங்கிலேய அரசின் தணிக்கையைத் தவிர்க்க அவர் பயன்படுத்தினார்.
காங்கிரஸ் வானொலி ஆகஸ்ட் முதல் நவம்பர் 1942 வரை செயல்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட புரட்சியாளர்கள் பற்றிய செய்திகளை அது ஒலிபரப்பியது. அவர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசாத் ஹிந்த் ஃபௌஸ் (Azad Hind Fauz) பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டது. சில சமயங்களில், தேசபக்தி பாடல்களை ஒளிபரப்பியது. அப்படி ஒலி பரப்பப்பட்ட பாடல் "வந்தே மாதரம்".
மேத்தா ஒரு அரசாங்க மாஜிஸ்திரேட்டின் மகள் ஆவார். இதனால் அவரது செயல்கள் பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு குறைவான அளவாகவே தெரிந்திருந்தது. இருப்பினும், அவர் இறுதியில் பிடிபட்டு புனேவின் எரவாடா சிறையில் மார்ச் 1946 வரை சிறையில் அடைக்கப்பட்டார். தேசியவாத ஊடகங்கள் அவரை "ரேடியோ-பென்" (Radio-ben) என்று புகழ்ந்தன.
மாதங்கினி ஹஸ்ரா என்பவர் மற்றொரு தீவிர காந்தியவாதி மற்றும் புரட்சியாளர் ஆவார். அவர் "செய் அல்லது செத்து மடி" (Do or Die) என்ற முழக்கத்தை எடுத்துக்காட்டினார். 1942-ல், 73 வயதில், வங்காளத்தில் உள்ள தம்லுக் காவல் நிலையத்தைத் தாக்க 6,000 தன்னார்வலர்கள், பெரும்பாலும் பெண்கள், எதிர்ப்பு அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார். அவர்கள் நெருங்கியதும், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஹஸ்ரா பலமுறை சுடப்பட்டு, மூவர்ணக் கொடியைப் பிடித்துக்கொண்டு, ‘வந்தே மாதரம்’ (Vande Mataram) கோஷமிட்டபடி இறந்ததாகக் கூறப்படுகிறது.