கட்டமைப்பு வேலையின்மை பிரச்சினை மற்றும் 2024 ஒன்றிய நிதிநிலை அறிக்கை

 2017-18ல் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2022-23ல் 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக காலமுறை தொழிலாளர்வள  கணக்கெடுப்பு காட்டுகிறது. ஆனால், கட்டமைப்பு வேலையின்மை பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்க முற்படுகிறது? 


வேலையில்லா திண்டாட்டம், குறிப்பாக இளைஞர்களிடையே, இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய கவலையாக உள்ளது. இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி விவாதிக்க, முதலில் நாம் சில முக்கிய கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.


பொருளாதார வல்லுநர்கள் மக்களை வேலையின் அடிப்படையில், இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறார்கள். 1. தொழிலாளர் வளம் (labor force) மற்றும் 2. தொழிலாளர் வளத்தில் இல்லாதவர்கள் (not in the labor force) ஆவார். தொழிலாளர் வளம் பொதுவாக 15 முதல் 60 வயது வரையிலான (இந்த வயது வரம்பு நாடு வாரியாக மாறுபடும்) பணிபுரியும் வயதினரை உள்ளடக்கியது. தொழிலாளர் அல்லாத வளத்தில் குழந்தைகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அல்லது வயதானவர்கள் உள்ளனர். தொழிலாளர் வளத்தில், இரண்டு துணைக்குழுக்கள் உள்ளன. இதில், வேலை (employed) மற்றும் வேலையில்லாதவர்கள் (unemployed) ஆவார். வேலை செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு. வேலையில்லாதவர்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள் ஆனால் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.


பொருளாதார வல்லுநர்கள் தொழிலாளர் சந்தைகளைப் புரிந்துகொள்ள இரண்டு முக்கிய பொருளாதார குறிகாட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். முதலாவது, தொழிலாளர் வள பங்கேற்பு விகிதம் (labour force participation rate), இது வயது வந்தோருக்கான தொழிலாளர் வள விகிதமாகும். இரண்டாவதாக, வேலையின்மை விகிதம், இது வேலையில்லாத தொழிலாளர் வளத்தின் சதவீதமாகும். ஒட்டுமொத்த மக்கள்தொகையின் தொழிலாளரின் போக்குகளை அளவிடுவது விரும்பத்தக்கது என்றாலும், இது அதிக நேரம் எடுக்கும் மற்றும் விலை உயர்ந்ததாக உள்ளது. எனவே, பொருளியலாளர்கள், புள்ளியியலாளர்களின் உதவியுடன் தொழில் சந்தையின் போக்குகளை மதிப்பிடுவதற்கு ஆய்வுகளை நடத்துகின்றனர்.  


இந்தியாவில், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Office(NSSO)) 1972 முதல் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்புகளை நடத்தி வந்தது. இந்த ஆய்வுகள் இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை நிலை குறித்த தரவுகளை வழங்கின. இருப்பினும், இந்த ஆய்வுகள் ஒரு பெரிய கால தாமதத்தைக் கொண்டிருந்தன. மேலும் அடிக்கடி ஆய்வுகள் தேவைப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, 2017-18 முதல், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MOSPI)) காலாண்டு மற்றும் வருடாந்திர கணக்கெடுப்புகளை அவ்வப்போது காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) என்ற பெயரில் வெளியிடத் தொடங்கியுள்ளது. காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பு (PLFS) இந்தியாவின் தொழிலாளர் சந்தைகளின் போக்குகளை அளவிடுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.  


காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பு (PLFS) 2017-18 "ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது" என்று குறிப்பிட்டது. வேலையின்மை விகிதம் 6 சதவீதமாகவும், இளைஞர்களின் வேலையின்மை விகிதம் (15-29 வயது) 18 சதவீதமாகவும் உள்ளது. காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பு (PLFS) 2022-23 இன் படி, வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. ஆனால், மொத்த தொழிலாளர் வளத்தில் வேலையின்மைக்கும் இளைஞர் வேலையின்மைக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாக உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாகவும், இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 10 சதவீதமாகவும் உள்ளது.  


கிராமப்புற-நகர்ப்புறத்தைப் பொறுத்தவரை, கிராமப்புற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாகவும், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 15.7 சதவீதமாகவும் உள்ளது. தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பான, இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy (CMIE)) ஒரு தனி வேலையின்மை தரவை வெளியிடுகிறது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) படி, 2022-23 ஆம் ஆண்டில் இளைஞர் வேலையின்மை விகிதம் 45.4 சதவீதமாக இருந்தது. 


பாலின வாரியான வேலையின்மை விகிதம் ஆண் மற்றும் பெண் இளைஞர்களின் வேலையின்மையை முறையே 9.7 சதவீதம் மற்றும் 10 சதவீதமாகக் காட்டுகிறது. பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 17 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 27.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 55.5 சதவீதமாக இருந்தது. இது 2022-23 ஆம் ஆண்டில் 56.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர் வளத்தில் பெண்களின் குறைந்த பிரதிநிதித்துவமும் இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பிரச்சினையாகும்.  


பொருளாதார ஆராய்ச்சி இரண்டு வகையான வேலையின்மைகளை வேறுபடுத்துகிறது. முதலாவது, உராய்வு வேலையின்மை (frictional unemployment), தொழிலாளர்கள் தங்கள் ரசனை மற்றும் திறன்களுக்கு மிகவும் பொருத்தமான வேலைகளைத் தேடுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதால் இது நிகழ்கிறது. இரண்டாவது, கட்டமைப்பு ரீதியான வேலையின்மை (structural unemployment), அங்கு வேலை வாய்ப்புகளை விட அதிகமான மக்கள் வேலை தேடும் போது இது நிகழ்கிறது.


உராய்வு வேலையின்மை (frictional unemployment) தவிர்க்க முடியாதது, ஏனெனில் பொருளாதாரம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் பழையவற்றை அழித்து வருகிறது. எனவே பொருளாதார வல்லுநர்கள் உராய்வு வேலையின்மை பற்றி அதிகம் கவலைப்படவில்லை.


ஆனால், கட்டமைப்பு வேலையின்மை (structural unemployment) பொருளாதார நிபுணர்களுக்கு ஒரு பெரிய கவலைய்ளிப்பதாக உள்ளது. அதிகரித்து வரும் தொழிலாளர்களுக்குப் போதுமான வேலைகளை பொருளாதாரம் உருவாக்கவில்லை என்று அர்த்தம். இது இந்தியாவில் நடப்பதாகத் தெரிகிறது. 


கட்டமைப்பு வேலையின்மை (structural unemployment) இருப்பதைக் காண்பதற்கான ஒரு வழி, வேலைவாய்ப்பில் பல்வேறு துறைகளின் பங்கை பொருளாதார நடவடிக்கை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளின் பங்குடன் ஒப்பிடுவதாகும் (அட்டவணை 1). மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 15 சதவீதமாகவும், வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு 46 சதவீதமாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். மற்ற இரண்டு துறைகளில், அதாவது தொழில்துறை மற்றும் சேவைகளில் நாம் எதிர்மாறானதைக் காண்கிறோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு அதிகமாக உள்ளது. ஆனால் வேலைவாய்ப்பின் பங்கு குறைவாக உள்ளது.  


ஆண்-பெண் வகைப்பாட்டின் போக்குகளை பகுப்பாய்வு செய்யும்போது, குறைந்த வளர்ச்சி கொண்ட விவசாயத் துறையில் முக்கியமாக பெண்கள் வேலை செயவதை நாம் கவனிக்கிறோம். பெரும்பாலான ஆண்கள் வேகமாக வளர்ந்து வரும் சேவைத் துறையில் பணிபுரிகின்றனர். ஆண்களைவிட பெண்கள் ஏன் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள் என்பதை இந்த வேறுபாடு ஓரளவு விளக்குகிறது.  


அட்டவணை 1 : வேலைவாய்ப்பில் பல்வேறு துறைகளின் பங்கையும் பொருளாதார நடவடிக்கைகளில் அவற்றின் பங்கையும் ஒப்பிடுக. இரண்டும் சதவீதத்தில் அளவிடப்படுகிறது.


 


பொருளாதார நடவடிக்கைகளில், விவசாயத்தின் பங்கு 1951-ல் 60 சதவீதத்திலிருந்து இன்று 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், விவசாயத்தில் வேலைவாய்ப்பில் இதேபோன்ற வீழ்ச்சியை நாம் காணவில்லை. அதிக வளர்ச்சியை உருவாக்கும் துறைகள் வேலைவாய்ப்பில் இதேபோன்ற வளர்ச்சியை உருவாக்கவில்லை. இது இந்தியாவில் கட்டமைப்பு வேலையின்மை பிரச்சினையைக் காட்டுகிறது.  


விவசாயம் மாறுபட்ட வேலையின்மையை (disguised unemployment) எதிர்கொள்கிறது. மற்ற துறைகளில் வேலைகளுக்கான வாய்ப்புகள் இல்லாததால் தேவைக்கு அதிகமான மக்கள் வேலை செய்கிறார்கள். முறைசாராத் துறைகளில் உள்ள வேலைகள் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் வேலை தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது வேலை வாய்ப்புப் பிரச்சினையை மோசமாக்குகிறது. முறைசாரா துறையில், ஊதியம் குறைவாக உள்ளது. தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை.


கட்டமைப்பு வேலையின்மை (structural unemployment), தேவை மற்றும் விநியோக முனைகளில் தீர்க்கப்பட வேண்டும். வளர்ச்சித் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கும் அதே வேளையில், உயர் வளர்ச்சித் துறைகளில் பணிபுரிய உதவும் வகையில் கல்வி மற்றும் தொழிலாளர்களின் திறன் தொகுப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தேவைக்கான காரணிகளில் பணியாற்ற வேண்டிய அவசியமும் உள்ளது.  


ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024-ல், பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்பது முன்னுரிமைகளில் அரசாங்கம் செயல்படும் என்று நிதியமைச்சர் கூறினார். ஒன்பது முன்னுரிமைகளில் ஒன்று 'வேலைவாய்ப்பு மற்றும் திறன்' (Employment & Skilling) ஆகும். 'வேலைவாய்ப்பு மற்றும் திறன்' (employment and skilling) என்பதன் கீழ், நிதியமைச்சர் வேலைவாய்ப்பு கவலைகளை நிவர்த்தி செய்ய மூன்று திட்டங்களை அறிவித்துள்ளார்.


முறையான துறையில் வேலைகளை உருவாக்க புதிய ஊழியர்கள் மற்றும் முதலாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த மூன்று திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க கூடுதல் சலுகைகளையும் வழங்குகின்றன. ஏனென்றால், அதிக குறிப்பிட்ட திறன்கள் தேவைப்படும் சேவைத் துறையுடன் ஒப்பிடுகையில், விவசாயத்திலிருந்து உபரி தொழிலாளர்களை உறிஞ்சுவதற்கு உற்பத்தி மிகவும் பொருத்தமானது.


மேலும், தொழிலாளர் திறன்களை மேம்படுத்த புதிய திட்டங்களை நிதிநிலை அறிக்கை முன்மொழிந்துள்ளது. இதில், ஒரு திட்டம் 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மேம்பாடானது அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடநெறியின் உள்ளடக்கம் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் படிக்கும்போதே தொழில்துறைக்குத் தயாராக இருக்க உதவுகிறது. மேலும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் வகையில் ரூ.7.5 லட்சம் வரை திறன்களுக்கான கடன்களை (skill loans) வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.


நிதிநிலை அறிக்கை குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டிய குறிப்பிடத்தக்க முன்மொழிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு (internship) வழங்குவதற்காக, இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களுடன் அரசாங்கம் இணைந்து செயல்படும். இந்த பயிற்சி வகுப்பு 12 மாதங்கள் நீடிக்கும் எனவும். அடுத்த 5 ஆண்டுகளில், இத்திட்டம் 1 கோடி இளைஞர்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதம் ரூ.5,000 பயிற்சி வகுப்பு உதவித்தொகையுடன் ஒருமுறை உதவியாக ரூ.6,000 அரசு வழங்கும். நிறுவனங்கள் தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதியைப் பயன்படுத்தி பயிற்சிக்கான செலவை ஈடு செய்யும்.   


பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை (labor force participation rate (LFPR)) அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் அடங்கும். இது தொழில்துறையுடன் இணைந்து பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகளை உருவாக்கும் மற்றும் அரசு காப்பகங்களையும் அமைக்கும். கூடுதலாக, இது தொழில்துறையில் உள்ள பெண்களுக்கு குறிப்பாக திறன் திட்டங்களை ஏற்பாடு செய்யும். பெண்கள் சுயஉதவி குழுக்களால் (self-help groups (SHG)) நடத்தப்படும் நிறுவனங்களுக்கான சந்தைக்கான அணுகலை மேம்படுத்துவதை நிதிநிலை அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியா நீண்ட காலமாக கட்டமைப்பு வேலையின்மை (structural unemployment) பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மையைக் குறைக்க அரசாங்கங்கள் கடந்த காலங்களில் பல திட்டங்களைக் கொண்டு வர முயற்சித்தன. ஆனால், அவை குறைந்தளவே வெற்றியைப் பெற்றுள்ளன. கொள்கை வகுப்பாளர்களும் உற்பத்தியை ஊக்குவிக்கவும் முயற்சித்தனர். ஆனால், அது ஒரு தொலைதூர கனவாகவே உள்ளது.  


தற்போதைய அரசாங்கம் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தக் கொள்கைகளின் செயல்திறன் அவற்றின் உண்மையான மதிப்பைக் காட்டும். இது வேலைவாய்ப்பில் சமீபத்திய திட்டங்கள் உட்பட அனைத்து அரசாங்க திட்டங்களுக்கும் பொருந்தும். மக்களவைத் தேர்தலின் ஒரு நேர்மறையான முடிவு, வேலையில்லாத் திண்டாட்டமாக மாறியுள்ளது. இப்பிரச்னைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி தீர்வு காண வேண்டும்.


2022-23ல் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. இருப்பினும், இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 10 சதவீதமாக உள்ளது. அதாவது பொதுமக்களைவிட இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்கின்றனர். இளைஞர்களின் வேலையின்மை ஏன் அதிகமாக உள்ளது என்பதை மதிப்பிட்டு பார்க்க வேண்டும்.



Original article:

Share: