தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், முன்பு நிர்ணயித்த போக்கைத் தொடர்வதாகத் தோன்றுகிறது - பொது நலனுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கிறது.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை பல்வேறு காரணங்களுக்காக சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மக்களின் நலன் சார்ந்து ஆதரவளிக்கும் முக்கியமான நலத்திட்டங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க அரசாங்கம் மீண்டும் தவறிவிட்டது. சமூக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க மறுப்பது புதிராக உள்ளது. குறிப்பாக அரசாங்கத்தின் தரவுகளின்படி, சுமார் 34% மக்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர். மேலும், 81 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிர்வாழ இலவச உணவு தானியங்கள் தேவைப்படும் ஒரு நாட்டில், தேசிய ஜனநாயக கூட்டணி, இப்போது அதன் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், சமூக நலன்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைக்கும் போக்கைத் தொடர்கிறது.
முக்கிய நலத்திட்டங்களில் நிதிப் பற்றாக்குறை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) ) மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ( National Food Security Act (NFSA)) உணவு மானியம் (Food Subsidy) ஆகிய இரண்டும் அரசாங்கத்தின் மிகப்பெரிய நலத்திட்டங்கள். கோவிட்-19 தொற்றுநோய்களின்போது ஒரு பெரிய பேரழிவைத் தடுக்க அரசாங்கம் இந்த திட்டங்களை நம்பியிருந்தது. 2014-15-ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக இந்த திட்டங்களின் பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் 100 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதே நேரத்தில் உணவு மானியம் (Food Subsidy) மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குகிறது.
கடந்த ஆண்டு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.72% செலவிட்டது. ஆனால், இந்த ஆண்டு அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.63% ஆக குறைந்துள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெற முடியாத ஒரு நாட்டில், சுமார் 50% பேர் மட்டுமே ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறார்கள்.
இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான (MGNREGA) நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.26% ஆகும். இது கடந்த ஆண்டு 0.29% ஆக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக, இந்த இரண்டு திட்டங்களும் இப்போது ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி முதன்முதலில் ஆட்சிக்கு வந்த 2014-15-ஆம் ஆண்டைவிட 25% குறைவாக உள்ளது. கிராமப்புற ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளதாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நிதிப் பற்றாக்குறையில் இருப்பதாலும் கிராமப்புற இடர்பாடுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
விதவைகள், முதியவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களும் நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இத்தகைய குழுக்களுக்கும், வருமானம் ஈட்டும் நபரை இழந்த குடும்பங்களுக்கும் நிதி உதவி அளிக்கும் தேசிய சமூக உதவித் திட்டத்திற்கு (The National Social Assistance Programme) நிதி ஒதுக்கீட்டில் எந்த அதிகரிப்பையும் காணவில்லை. இந்த ஆண்டு ஒதுக்கீடு பெயரளவில் கடந்த ஆண்டைப் போலவே உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக, அதன் செலவினம் 2014-15-ஆம் ஆண்டிலிருந்து 0.06% முதல் 0.03% வரை பாதியாக குறைந்துள்ளது.
இத்திட்டம் முதியவர்களுக்கு மாதத்திற்கு ₹200 ரூபாய் மற்றும் விதவைகளுக்கு மாதத்திற்கு ₹300 ரூபாய் சிறிய ஓய்வூதியத்தை வழங்குகிறது. பல பொருளாதார வல்லுநர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், 2006-ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தொகைகள் அதிகரிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு ₹30 ரூபாய் என்ற வறுமைக் கோட்டில் இருந்தாலும், இந்த பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் குறைந்தபட்சம் 66% வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
சமூகநலன் மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் (Women and Child Development Minister) இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50%க்கும் அதிகமானோர் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் கூறினார். கூடுதலாக, இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே இரத்த சோகை விகிதங்கள் (anaemia rates) உலக சராசரியை விட முறையே 20% மற்றும் 15% அதிகமாக உள்ளன. சாக்ஷம் அங்கன்வாடி (Saksham Anganwadi) மற்றும் போஷன் 2.௦ (Poshan 2.0) என்பது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நலத்திட்டமாகும். 2021-22 ஆம் ஆண்டில், அங்கன்வாடி திட்டம் முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் போஷன் அபியான் மற்றும் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்துடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த சேர்த்தல்களுடன் கூட, இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 2014-15-ஆம் ஆண்டிலிருந்து முதல் பாதியாக குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.13% ஆக இருந்தது, சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.06% ஆக இருந்தது.
பள்ளி செல்லும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியை எதிர்த்துப் போராட, அரசாங்கம் மதிய உணவு (mid-day meal (MDM)) திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் இந்தியாவில் சுமார் 12 கோடி குழந்தைகளை உள்ளடக்கியது. வருகையை அதிகரிப்பதிலும், கல்வி மற்றும் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. அதற்கான நிதி 2014-15-ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இத்திட்டம் வெற்றிகரமாக இருந்தபோதிலும், நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை நிதி அமைச்சகம் நிராகரித்தது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை கருத்தில் கொண்டு, இந்த திட்டங்களை விரிவுபடுத்துவதும், குழந்தைகளுக்கு அதிக சத்தான உணவை வழங்குவதும் முக்கியம்.
மத்திய கல்வி செலவினங்களுக்கு (முதன்மை மற்றும் இடைநிலை) செலவிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு 0.25% ஆக இருந்தது. தற்போது 0.22% ஆக குறைந்துள்ளது. தொடக்கக் கல்வி சேர்க்கை விகிதங்கள் அதிகமாக இருந்தாலும், கல்வியின் தரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக பணிகள் உள்ளன. எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வியின் பங்கு 2014-15-ஆம் ஆண்டில் 0.37% ஆக இருந்து இன்று 0.22% ஆக குறைந்துள்ளது கவலைக்குரியது.
சுகாதாரத்திற்கான நிதிஒதுக்கீட்டில் சிறிது அதிகரிப்பு மட்டுமே ஒன்றிய அரசு செய்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டு முதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதார அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பங்கு 0.25% முதல் 0.28% வரை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்களை வறுமைக்குள் தள்ளுகின்ற ஒரு நாட்டில் இந்த அதிகரிப்பு போதுமானதல்ல.
குறிப்பிடப்பட்ட திட்டங்கள் மற்றும் துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2014-15-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1% ஆக இருந்தது. இந்த ஆண்டு வெறும் 1.53% ஆக குறைந்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றின் போது இந்த எண்ணிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.31% ஆக கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இது இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
ஒரு மதிப்பீட்டின்படி, 2019-ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைத்ததிலிருந்து அரசாங்கம் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிவருவாயை இழந்துள்ளது. இந்த வரி குறைப்புகளால் ஏற்பட்ட குறைந்த நிதி இடத்தை ஈடுசெய்ய ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை கருத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் (World Inequality Lab) புதிய அறிக்கையின்படி, இந்தியா மனித மேம்பாட்டு குறியீட்டு (Human Development Index) தரவரிசையில் 132வது மோசமான நிலையில் இருப்பதில் ஆச்சரியமில்லை. மேலும், ஆங்கில ஆட்சியின் போது இருந்ததைவிட இன்று அது மிகவும் சமத்துவமற்ற நிலையில் உள்ளது.
இதற்கு மாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சகாப்தம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது விக்சித் பாரத் (Viksit Bharat ) கனவுகள் குறித்து தீவிரமாக இருந்தால், வளர்ந்த சமூகத்திற்கான பாதை ஏழை குடிமக்களுக்கு ஆதரவளிப்பதில் உள்ளது என்பதை அது உணர வேண்டும். எந்த ஒரு நாகரிக சமூகமும் அதன் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் நலமான வாழ்க்கையை வாழ முடியாதபோது அதை வளர்ந்த சமூகமாக கருத முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களின் உதாரணத்தை பின்பற்றுவதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் பயனடைய முடியும். அவை புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், காலப்போக்கில் அவற்றின் நிதி ஒதுக்கீடுகளையும் சீராக அதிகரித்தன.
மோஹித் வர்மா, குட் பிசினஸ் லேப்பில் மூத்த ஆராய்ச்சியாளர் (Senior Research Associate at Good Business Lab). ஷ்ரவன் எம்.கே, ஆராய்ச்சியாளர், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்.