ஒரு முறையான ஆய்வு மட்டுமே உரிய நேரத்தில் நீதியை பெற்று தரும் -ராகேஷ் குமார் கோஸ்வாமி

 சமீபத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறை எவ்வளவு கடுமையானது என்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கற்பழிப்பு சம்பவங்கள் காவல்துறை, நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் தங்கள் வேலையை விரைவாக செய்யவில்லை என்பதை இது போன்ற சம்பவங்கள் வெளிக்காட்டுகிறது.

 

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மகாராஷ்டிராவின் பத்லாபூரில் இரண்டு மழலையர் பள்ளி சிறுமிகள் போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 10 நாட்களில் இரண்டு முறை பேசியுள்ளார். தனது 78-வது சுதந்திர தின உரையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தாமதமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இது போன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது முக்கியம் என்று பிரதமர் கூறினார். மேலும், பிரதமர் மோடி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்து பரவலான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். ஞாயிற்றுக்கிழமை, மகாராஷ்டிராவின் ஜல்கானில் லக்பதி தீதி சம்மேளனத்தில் உரையாற்றிய மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் "மன்னிக்க முடியாதவை" என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

 

சம்பவங்கள் மற்றும் சட்ட மாற்றங்கள்


கொல்கத்தாவின் ஆர்.ஜி.கல்லூரியில் முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து போராட்டங்கள் வெடித்தன. அவர் இறந்ததை 36 மணிநேரம் கழித்து மருத்துவமனை உறுதி செய்தது. தடயவியல் அறிக்கைகள் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. சட்டச் சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் நடப்பதைக் கண்டு கோபமடைந்த பெண்கள் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தினர் கொல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (Central Bureau of Investigation (CBI)) மாற்றியது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. 


2012 டிசம்பரில் புதுடெல்லியில் 23-வயது பெண் கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர், குற்றவியல் நீதி அமைப்பில் அரசாங்கம் பல மாற்றங்களைச் செய்தது. பாலியல் வன்முறைக்கான வரையறையை விரிவுபடுத்துதல், விரைவு நீதிமன்றங்களை அமைத்தல் மற்றும் வயது வரம்பை குறைத்தல், 16 வயதுடையவர்கள் பாலியல் குற்றங்களுக்காக விசாரிக்கப்படலாம்


  இருப்பினும், சிறிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அரசாங்க அறிக்கையின்படி, 2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பாலியல் வன்முறை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். 2022-ஆம் ஆண்டில், 31,000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2012-டெல்லி வழக்கின் போது, இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 25,000 பாலியல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau (NCRB)) தரவுகள் கூறுகிறது.


 ஒரு கூட்டுத் தோல்வி 


 வருடாந்திர பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் 30,00- க்கும் அதிகமாக உள்ளது என்பது கவலைக்குரியது மட்டுமல்ல, குற்றவியல் நீதி அமைப்பின் நான்கு கூறுகளான காவல்துறை, வழக்குத் தொடுத்தல், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் ஆகியவற்றையும் மோசமாக பிரதிபலிக்கிறது. இந்த கூட்டுத் தோல்வி இந்த கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களிடையே தண்டனை குறித்த பயமின்மைக்கு வழிவகுத்தது. விசாரணைக்கு பொறுப்பான போலீசார், விசாரணை செயல்பாட்டில் எந்த தவறும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். முதல் படி குற்றம் நடந்த இடத்தைப் பாதுகாப்பதாகும், இதனால் வல்லுநர்கள் ஆதாரங்களை சரியாக சேகரிக்க முடியும். ஆரம்ப கட்டங்களில் மோசமாக கையாளப்பட்ட விசாரணை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் குற்றவாளிகள் தணடனை பெறுவதில் இருந்து தப்பிப்பதற்கு வழிவகுக்கிறது. இத்தகைய தோல்விகள் சில பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையிலிருந்து தாங்கள் எளிதில் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

 

உதாரணமாக, கொல்கத்தா வழக்கில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதில் 14 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது மற்றும் பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்கில், பொதுமக்கள் கோபத்திற்குப் பிறகுதான் காவல்துறை செயல்பட்டது. இந்த தாமதத்திற்கு பம்பாய் உயர்நீதிமன்றம் காவல்துறையை விமர்சித்தது.

 

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு, முறையான விசாரணை முக்கியமானது. குற்றம் நடந்த இடத்திலிருந்து முக்கிய ஆதாரங்களை சேகரிப்பதும் இதில் அடங்கும். எனவே, புலனாய்வாளர்களின் பங்கு மிக முக்கியமானது. காவல்துறை மாநிலத்தின் முக்கியமான அங்கம் என்பதால், சரியான நேரத்தில் மற்றும் நியாயமான நீதியை உறுதி செய்வதில் மாநில அரசுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களுக்கு பிறகே வழக்குகள்  மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (Central Bureau of Investigation (CBI)) மாற்றப்படுவது கவலைகளை அதிகரிக்கிறது. இது மாநில விசாரணை அமைப்புகளின் மீதான நம்பிக்கையை  குறைக்கிறது.


  விசாரணையில் குறைபாடு இருந்தால், வழக்கை நீதிமன்றத்தில் தொடர அரசு தரப்பு போராடுகிறது. இது விசாரணைகள், மேல்முறையீடுகள் மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளின் போது சிக்கல்களை உருவாக்குகிறது. இது பெரும்பாலும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்க வழிவகுக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி,  குற்றங்களுக்கான தண்டனை விகிதங்கள் 2018 முதல் 2022 வரை 27% -28% ஆக இருந்தன, அதாவது இந்தியாவில் கிட்டத்தட்ட 70%  பாலியல் குற்ற வழக்குகள் விடுதலையில் முடிகின்றன. தண்டனைகள் வழங்கப்பட்ட வழக்குகளில்கூட, தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதால், நீதி வழங்குவது ஒரு நீண்ட செயல்முறையாக உள்ளது. 2012-ஆம் ஆண்டு டெல்லி வழக்கில், விரைவு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் குற்றவாளி என்று அறிவித்தாலும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 


சீரமைக்கப்பட்ட நீதி முறைமை (Revamped justice system)


இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட குற்றவியல் நீதி அமைப்பில், கொடூரமான குற்றங்களாக வகைப்படுத்தப்பட்ட ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தடயவியல் பரிசோதனை கட்டாயமாகும். இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்டவர் 12 வயதுக்குட்பட்டவராக இருந்தால் மரண தண்டனை வழங்கலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தடயவியல் பரிசோதனையானது (forensic examination), நிபுணர்கள் குழு கள பரிசோதனைகளை நடத்தி ஆதாரங்களை சேகரிப்பதை உறுதி செய்வதன் மூலம் குற்றவியல் விசாரணைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம், 197- க்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2024 (Bharatiya Nagarik Suraksha Sanhita, 2024), தடயவியல் தேர்வுகளை வீடியோ பதிவு செய்வதையும் கட்டாயமாக்குகிறது. புதுப்பிக்கப்பட்ட குற்றவியல் நீதி அமைப்பு அமலாக்க முகவர் புகார்கள் மற்றும் கருணை மனுக்கள் மீது செயல்படுவதற்கும், குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கும், பெண்களுக்கான இணைய வழி முதல் தகவல் அறிக்கைகளை (e-FIR for women) பதிவு செய்வதற்கும், சமகால சவால்களை எதிர்கொள்வதற்கான விசாரணைகளுக்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது. 


  இருப்பினும், புலனாய்வு அமைப்பு தனது பணியை முழுமையாகச் செய்தால் மட்டுமே இந்த சட்ட சீர்திருத்தங்கள் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும், ஆரம்ப விசாரணைகளில் தோல்விகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் முழுமையற்ற அல்லது தாமதமான சேகரிப்பு ஆகியவை குறைபாடுள்ள விசாரணைகளுக்கு வழிவகுக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது கடினமாகுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை உறுதி செய்வதற்கு ஒரு வலுவான வழக்கை உருவாக்க குற்றம் நடந்த இடத்தைப் பாதுகாப்பது மற்றும் தடயவியல் ஆதாரங்களை சேகரிப்பது புலனாய்வு நிறுவனத்திற்கு மிக முக்கியமானது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு விரைவாகவும் காலவரையறைக்குட்பட்ட முறையிலும் மேல்முறையீடுகளை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும்

 

இந்த நடவடிக்கைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்காது என்றாலும், குறைந்தபட்சம் குற்றச்செயலில் ஈடுபடுவர்களின் மனதில் தண்டனை குறித்த அச்சத்தை உருவாக்கும். மேலும். பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பங்களும் நீதிக்காக நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்யும். 


  ராகேஷ் கோஸ்வாமி, புது தில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் (Indian Institute of Mass Communication) இதழியல் பேராசிரியராக உள்ளார் .

Original article:

Share: