ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதிய திட்டம் குறித்த குழுவிற்கு தலைமை தாங்கிய முன்னாள் நிதி செயலாளர் டி.வி.சோமநாதன் (T V Somanathan), தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme) மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme (OPS)) ஆகிய இரண்டின் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைக்கிறது என்று கூறினார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் (Unified Pension Scheme (UPS)) திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இது அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு உறுதியான ஓய்வூதியத்தை வழங்கும். இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, புதிய ஓய்வூதியத் திட்டம் அழைக்கப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசம் (2023), ராஜஸ்தான் (2022), சத்தீஸ்கர் (2022) மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு (2022) பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme (OPS))) மீண்டும் அமல்படுத்தியது.
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக அமைச்சரவையின் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருப்பது ஒரு பெரிய அரசியல் நடவடிக்கையாகும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) போல் இல்லாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு நிலையான ஓய்வூதியத்தை, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் (Unified Pension Scheme (UPS)) திட்டம் உறுதியளிக்கிறது. இது தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) எதிரான குறிப்பிடத்தக்க விமர்சனமாக இருந்தது. அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme (UPS)) ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
முதலாவதாக, உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் (Assured Pension): பணியாளர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% பெறுவார்கள். அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் குறைவாக வேலை செய்திருந்தால், ஓய்வூதியத் தொகை குறைக்கப்படும். ஆனால், அவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
உறுதிப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் (Assured Minimum Pension) : ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 10 வருட பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றால், அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் 10,000 ரூபாய் கிடைக்கும்.
உறுதிப்படுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் (Assured Family Pension): ஒரு ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவரது குடும்பம் ஓய்வு பெற்றவரின் கடைசி ஓய்வூதியத் தொகையில் 60% பெறும்.
பணவீக்க குறியீடு (Inflation indexation): மேலே குறிப்பிட்ட மூன்று வகையான ஓய்வூதியங்களில் அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும். இந்த நிவாரணம் தற்போதைய ஊழியர்களுக்கு இருப்பது போலவே, தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (All India Consumer Price Index for Industrial Workers) அடிப்படையில் கணக்கிடப்படும்.
ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்தமாக பணம் (Lump Sum Payment at Retirement) வழங்கப்படும். இது பணிக்கொடையுடன் கூடுதலாக இருக்கும், மேலும் பணி முடிந்த ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஓய்வுபெறும் தேதியில் மாதாந்திர ஊதியத்தில் (ஊதியம் மற்றும் அகவிலைப்படி) 1/10 என கணக்கிடப்படும்.
தேசிய ஓய்வூதிய (National Pension System (NPS)) அமைப்பு என்றால் என்ன, அது ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
தேசிய ஓய்வூதிய திட்டம் ஜனவரி 1, 2004 அன்று பழைய ஓய்வூதியத் (Old Pension Scheme (OPS)) திட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் இந்தியாவில் ஓய்வூதியக் கொள்கைகளை சீர்திருத்துவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியாகும். இந்தத் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஒன்றிய மற்றும் மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்கள், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய அமைப்பில் ((Unified Pension Scheme (UPS)) முன்மொழியப்பட்டதைப் போலவே, அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% நிர்ணயம் செய்யப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்றனர். வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அடிப்படைச் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதமாக இருந்த அகவிலைப் படி (Dearness Allowance) அவர்களுக்கும் கிடைத்தது.
தேசிய ஓய்வூதிய திட்டமானது (NPS) அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு பெரிய குறைபாடு இருந்தது. அது நிதியளிக்கப்படவில்லை, அதாவது ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. காலப்போக்கில், இது அரசாங்கத்தின் ஓய்வூதியப் பொறுப்பு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. சிறந்த சுகாதாரம் காரணமாக மக்கள் நீண்ட காலம் வாழ்வதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நீண்ட காலத்திற்கு தொடர முடியவில்லை. கடந்த 30-வருடங்களாக, ஒன்றிய மற்றும் மாநிலங்களின் ஓய்வூதிய பொறுப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
1990-91ல் ஒன்றியஅரசின் ஓய்வூதியத் தொகை ரூ.3,272 கோடியாகவும், அனைத்து மாநிலங்களின் ஓய்வூதியத் தொகை ரூ.3,131 கோடியாகவும் இருந்தது. 2020-21 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் ஓய்வூதியத் தொகை 58 மடங்கு அதிகரித்து ரூ.1,90,886 கோடியாகவும், மாநிலங்களின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் தொகை 125 மடங்கு உயர்ந்து ரூ.3,86,001 கோடியாகவும் இருந்தது.
தேசிய ஓய்வூதிய (National Pension System) அமைப்பு எப்படி வேலை செய்கிறது, அதற்கான எதிர்ப்பின் அடிப்படை என்ன?
தேசிய ஓய்வூதிய அமைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இரண்டு முக்கிய வழிகளில் வேறுபட்டது. முதலாவதாக, தேசிய ஓய்வூதிய அமைப்பு உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தின் உத்தரவாதத்தை (assured pension) நீக்கியது. இரண்டாவதாக, தேசிய ஓய்வூதிய அமைப்பானது ஊழியர் மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்புகளால் நிதியளிக்கப்பட்டது. ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பங்களித்தனர். அதே நேரத்தில் அரசாங்கம் 14% பங்களித்தது, இது இப்போது 18.5% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ், உள்ள நபர்கள் குறைந்த ஆபத்து முதல் அதிக ஆபத்து வரையிலான பல்வேறு திட்டங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
இந்தத் திட்டங்கள் பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் ஓய்வூதிய நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
அரசு ஊழியர்களுக்கு, தேசிய ஓய்வூதிய திட்டம் குறைந்த உறுதியான வருமானம் மற்றும் தேவையான பணியாளர் பங்களிப்புகளுடன் வழங்கியது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் பங்களிக்க வேண்டியதில்லை. இதனால் தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது.
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்ததால், பிரதமர் நரேந்திர மோடி 2023-ல் அப்போதைய நிதித்துறை செயலாளராக இருந்த டி.வி.சோமநாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். இந்தக் குழு பல்வேறு அமைப்புகள் மற்றும் மாநிலங்களுடன் 100-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியது. குழுவின் பரிந்துரைகள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட ((Unified Pension Scheme (UPS)) அறிவிப்புக்கு வழிவகுத்தது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத்தை யார் பெறலாம்?
நிதித்துறை செயலாளர் சோமநாதனின் கூற்றுப்படி, 2004 முதல் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தும். இந்த ஓய்வூதியதாரர்கள் தங்கள் நிலுவைத் தொகையை ஏற்கனவே தேசிய ஓய்வூதிய (National Pension System) அமைப்பின் கீழ் பெற்றுள்ளதைக் கொண்டு சரிசெய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
99%க்கும் மேற்பட்டோர், தேசிய ஓய்வூதிய (National Pension System) அமைப்பில் இருப்பதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ((Unified Pension Scheme (UPS)) மாறுவது நல்லது என்று அவர் நம்புகிறார். பணியாளர்கள் விரும்பினால், தேசிய ஓய்வூதிய (National Pension System) அமைப்பில் தொடர்ந்து இருக்க தேர்வு செய்யலாம்.
ஆனால், அது பயனளிக்காது. ஒரு முறை தேர்வு செய்தவுடன், அவர் அதை மாற்ற முடியாது. தற்போது, புதிய திட்டம் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கானது, ஆனால் மாநிலங்களும் இதை ஏற்றுக்கொள்ளலாம். முதல் ஆண்டில் நிலுவைத் தொகை ரூ.800 கோடி மற்றும் ஒட்டுமொத்தமாக ரூ.6,250 கோடி செலவாகும் என்று நிதிக் கவலைகள் குறித்து சோமநாதன் கூறுகையில்,
“UPS நிதி ரீதியாக மிகவும் விவேகமானது” என்கிறார் சோமநாதன். "இது பங்களிப்பு நிதியளிக்கப்பட்ட திட்டத்தின் அதே கட்டமைப்பில் உள்ளது. அதுதான் முக்கியமான வேறுபாடு. OPS என்பது நிதியில்லாத பங்களிப்பு இல்லாத திட்டமாகும். இது (யுபிஎஸ்) நிதியளிக்கப்பட்ட பங்களிப்புத் திட்டம்,” என்று அவர் கூறினார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமானது பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டின் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைக்கிறது, சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக கூடுதல் உத்தரவாதம் அளிக்கிறது.