ஒரு புதிய அமைச்சர், ஏழு புதிய திட்டங்கள், மற்றும் கிராமப்புற வீடுகள் மற்றும் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மோடி 3.0 அரசாங்கம். மேலும், முதல் 100 நாட்களில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே, நரேந்திர மோடி அரசாங்கம் மோடி 3.0-ன் முதல் 100 நாட்களுக்கான கொள்கை நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்குமாறு அனைத்து செயலாளர்களையும் கேட்டுக்கொண்டது. பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்று அவர்கள் நம்பினர். உண்மையான தேர்தல் முடிவுகள் கட்சிக்கு ஏமாற்றமளித்தன. ஏனெனில், அதன் இலக்கான 370 இடங்களைவிட குறைவாக இருந்தது. இருந்தபோதிலும், முதல் 100 நாட்களுக்கான முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.
இப்போது, பாஜக ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. மேலும், அதன் நிலைத்தன்மையை பராமரிக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் போன்ற முக்கிய கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும். உற்பத்தி, குறிப்பாக உயர்தொழில்நுட்ப சிப் தயாரிப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மேலும், பிற துறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தியது.
விவசாயத்தில், மோடி 3.0 புதிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் தொடங்கியது. அவர் கிராமப்புற மேம்பாட்டையும் எடுத்துக் கொண்டார். மத்தியப் பிரதேசத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்த சவுகான், தனது மாநிலத்தில் விவசாயத்தை மாற்றியமைத்தார். அவரது நியமனம் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிப்பதைக் குறிக்கிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) திட்டத்தின் கீழ் ரூ.20,000 கோடி ரூபாயை விநியோகிப்பதே அரசாங்கத்தின் முதல் முக்கிய முடிவு. 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹6,000 ரூபாய் உறுதியளிக்கிறது. PM-KISAN திட்டத்தின் கீழ் நேரடி பணப் பரிமாற்றங்கள் தொடரும் என்பதைக் காட்டுகிறது. ஒரு குடும்பத்திற்கு 8,000 ரூபாயாக உயர்த்தப்படும் மற்றும் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்ய வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (agricultural research and development (R&D)) ஒதுக்கீடுகளில் அதிகரிப்பு என்ற நம்பிக்கைகள் இருந்தபோதிலும், இவை உணரப்படவில்லை. மத்திய பட்ஜெட் 2024-25 இவைகளில் குறிப்பிடத்தக்க நிதி அதிகரிப்பைக் காட்டவில்லை.
பின்னர், விவசாயத்திற்கான ஏழு புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது. விவசாயம், பயிர் அறிவியல், தோட்டக்கலை, கால்நடை சுகாதாரம், இயற்கை வள மேலாண்மை, வேளாண் கல்வி மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்குதல் இந்த திட்டங்களில் அடங்கும். அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டங்களுக்காக சுமார் ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டால், குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் நன்மைகளை வழங்க முடியும்.
உதாரணமாக, விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவது முக்கியம். விவசாயிகளை துல்லியமாக அடையாளம் காண்பது முதல் படியாகும். தற்போது, குத்தகையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் சுமார் 17% ஆகும். ஆனால் மைக்ரோ கணக்கெடுப்புகள் இது 25-30% ஆக இருக்கலாம் என்று கூறுகின்றன. பெரும்பாலும் நிறுவனக் கடன்களை அணுக முடியாத குத்தகை விவசாயிகள், அதிக வட்டி விகிதங்களை எதிர்கொள்கின்றனர். இது விவசாயத்தை குறைந்த லாபகரமானதாக ஆக்குகிறது. சரியான அடையாளம் மற்றும் குறைந்த வட்டி கடனுக்கான அணுகல் அவசியம்.
டிஜிட்டல்மயமாக்கல் என்பது விவசாயிகளை அடையாளம் காண்பதைத் தாண்டி செல்ல வேண்டும். இது பயிர் வகைகள், காப்பீட்டு நிலை, உர பயன்பாடு, மண் ஆரோக்கியம் மற்றும் உணவு மானியங்கள் பற்றிய தரவுகளை உள்ளடக்க வேண்டும். இந்த தரவுத் தொகுப்புகளை ஒரு பொதுவான விவசாய அடுக்கில் ஒருங்கிணைப்பது குறிப்பிடத்தக்க சேமிப்பு மற்றும் செயல்திறன் மேம்பாடுகளுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, மண் வள அட்டைகளை உர கொள்முதலுடன் இணைப்பது வளங்களை மேம்படுத்த முடியும். விவசாயத்தில் முதலீடுகள், குறிப்பாக காலநிலை-நெகிழ்திறன் நடைமுறைகள், கணிசமான வருமானத்தை வழங்க முடியும்.
கிராமப்புற வளர்ச்சியில், அரசாங்க ஆதரவுடன் கூடுதலாக 20 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என்று மோடி 3.0 அரசாங்கம் அறிவித்தது. இது கூலி வேலை செய்வர்கள், தச்சர்கள் மற்றும் எலக்ட்ரீஷியன்களுக்கு வேலைகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும். இது ஒரு குறிப்பிடத்தக்க நல்ல நடவடிக்கையாக இருக்கும். அது அரசியல் ரீதியாகவும் அரசாங்கத்திற்கு பயனளிக்கும்.
இறுதியாக, பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் (PM-Gram Sadak Yojana) கீழ், மோடி 3.0 கிராமப்புற சாலைகளில் ₹75,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கிராமப்புற சாலைகளில் முதலீடு செய்வது விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் அதிக வருமானத்தை அளிக்கிறது மற்றும் கிராமப்புற சந்தைகளை இணைப்பதன் மூலம் வறுமை குறைப்பு என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த முயற்சிகள் விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு நம்பிக்கையை அளிக்கின்றன.
அசோக் குலாட்டி, சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்தியன் கவுன்சில் அமைப்பில் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) பேராசிரியர்.