ஒடிசா குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற, குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுவான (Particularly Vulnerable Tribal Group (PVTG)) போண்டா (Bonda) சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் பினி முதுலி ஆவார்.
குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுக்கள் (PVTGs) என்றால் என்ன?*
ஒடிசா மாநில குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறிய போண்டா சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் பினி முதுலி ஆவார். போண்டா சமூகம் அரசாங்கத்தால் குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுவாக (PVTG) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. போண்டாக்கள் ஒடிசாவில் உள்ள 13 PVTG-களில் ஒன்றாகும். மேலும், அவர்கள் முக்கியமாக மல்கங்கிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர்.
1. 1. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 10.45 கோடி மக்கள்தொகை பழங்குடியினர் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 8.6% ஆகும். 18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசத்தில் 75 சமூகங்கள் ஆபத்தில் இருக்கும் பழங்குடி குழுக்களாக (PVTGs) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
2. குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுக்கள், பட்டியல் பழங்குடியினருக்குள் உள்ள சிறப்புக் குழுக்கள் ஆகும். ஆபத்தில் இருக்கும் பழங்குடியின குழுக்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளது. இந்த பழங்குடியினருக்கு வழக்கமான பழங்குடியினரை விட அதிக உதவி தேவைப்படுகிறது.
3. 1960-61-ல் தேபார் ஆணையம் சில பழங்குடி குழுக்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை என்று கண்டறிந்தது. அவர்கள் முதலில் "பழமையான பழங்குடியின குழுக்கள்" (Primitive Tribal Groups (PTG)) என்று அழைக்கப்பட்டனர். 2006-ல், பெயர் குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுக்கள் (PVTGs) என மாற்றப்பட்டது.
4. ஆரம்பத்தில் 52 ஆபத்தில் இருக்கும் பழங்குடி குழுக்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், இந்த எண்ணிக்கை 75 குழுக்களாக அதிகரித்தது. இந்த குழுக்கள் இந்தியாவில் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 22,544 கிராமங்களில் வசிக்கின்றன. மொத்த மக்கள் தொகை சுமார் 28 லட்சம் மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் முக்கியமாக மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வசிக்கின்றனர். இந்த குழுக்கள் விவசாயத்திற்கு முந்தைய வாழ்க்கை முறைகள், குறைந்த கல்வியறிவு விகிதங்கள் மற்றும் உயிர்வாழ்வதற்கு அடிப்படை விவசாயத்தை சார்ந்துள்ளன.
5. மக்கள்தொகையின் அளவு மாறுபடுகிறது. கிரேட் அந்தமானீஸ் மற்றும் ஓங்கே போன்ற சில குழுக்களில் 1,000-க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ளனர். மற்றவர்கள், மரியா கோண்ட் மற்றும் சௌரா போன்றவர்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். பிர்ஹோர் போன்ற சில பழங்குடியினர் மக்கள் தொகை தேக்கத்தை எதிர்கொள்கின்றனர். மேலும், ஓங்கே மற்றும் கிரேட் அந்தமானிகள் குறைந்து வருகின்றனர். போண்டா பழங்குடியினர் ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில், ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில் வாழ்கின்றனர். அவர்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 32 தொலைதூர மலை கிராமங்களில் பரவியுள்ளனர் மற்றும் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததாக நம்பப்படுகிறது.
6. குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுக்கள் விலக்கப்படுதல், சிறிய மக்கள் தொகை மற்றும் தனித்துவமான கலாச்சார பண்புகள் காரணமாக தனிமைப்படுத்தபடுகின்றன. அவர்கள் சமூக பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். மேலும், வளர்ச்சி மற்றும் இயற்கை பேரழிவுகளால் இடம்பெயர்ந்து செல்லும் அபாயத்தில் உள்ளனர். அவர்களின் வரையறுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவம் முடிவெடுப்பதில் பங்கேற்பதை கடினமாக்குகிறது.
7. குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுக்களுக்கு உதவ ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுக்கள் மேம்பாட்டுத் திட்டம் பாரம்பரிய அறிவுக்கு மதிப்பளித்து கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதான் மந்திரி ஜன்ஜாதிய விகாஸ் திட்டம் (Pradhan Mantri Janjatiya Vikas Mission (PMJVM)) பழங்குடி சமூகங்களை சந்தைகளுடன் இணைப்பதையும், சிறு வன உற்பத்திக்கு (Minor Forest Produce (MFP)) நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
8. பிற முக்கிய முயற்சிகளில் பிரதான் மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா (Pradhan Mantri Adi Adarsh Gram Yojana), ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் (Integrated Tribal Development Project (ITDP)) மற்றும் பழங்குடியினர் பகுதிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பழங்குடியினர் துணைத் திட்டம் (Tribal Sub-Plan (TSP)) ஆகியவை அடங்கும்.
9. ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் பழங்குடியினக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியையும், படிக்கும் போது தங்குவதற்கான இடத்தையும் வழங்குகிறது. வன உரிமைச் சட்டம் 2006, பழங்குடியின மக்களுக்கு அவர்கள் தலைமுறைகளாக வாழ்ந்த வன நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது. பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன (Support to Tribal Research Institute (STRI)) திட்டமானது பழங்குடியினரின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் நன்றாகப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பழங்குடி மக்களை நியாயமற்ற முறையில் நடத்துதல் மற்றும் வன்முறையிலிருந்து (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act) பாதுகாக்கிறது. பஞ்சாயத்துகள் சட்டம் 1996 பழங்குடியினப் பகுதி மகளுக்கு சொந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இடஒதுக்கீடு பழங்குடியின மக்கள் நேரடியாக அரசு வேலைகளைப் பெற உதவுகிறது.
நவம்பர் 29, 2023 அன்று, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை, பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN)) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. நவம்பர் 15, 2023 அன்று ஜார்க்கண்டில் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் (Janjatiya Gaurav Divas) சமயத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 75 குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒன்பது அமைச்சகங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சாலை கட்டுமானம் மற்றும் வீட்டுத் திட்டங்கள் உட்பட 11 வெவ்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும்.
10. பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்திற்கு சுமார் ₹ 24,000 கோடி நிதி நிலை அறிக்கையில் ஒன்றிய அரசிடமிருந்து ₹ 15,336 கோடி மற்றும் மாநிலங்களிலிருந்து ₹ 8,768 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது.
ஆபத்தில் இருக்கும் பழங்குடி குழுக்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு, சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்விக்கான சிறந்த சேவை, சுகாதாரம், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒன்றிய பழங்குடியினர் விவகார அமைச்சகம், PM-JANMAN பணியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு (Information, Education, and Communication (IEC)) பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 10, 2024 வரை நடைபெற்ற இந்த பிரச்சாரமானது, ஆபத்தில் இருக்கும் பழங்குடி குழுக்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு அனைத்து அரசாங்கத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.