நடத்தை விதிகள் என்ன கூறுகின்றன? இது சமூக ஊடகங்களின் பயன்பாட்டை போதுமான அளவு உள்ளடக்குகிறதா? குடிமை பணி விதிகள் மறுஆய்வு செய்ய வேண்டுமா? “தகுதியற்றவர்” என்றால் என்ன?
குற்றச்சாட்டுகள் என்ன?
கூடுதல் தலைமைச் செயலாளர் ஏ.ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் “அவதூறான அறிக்கைகளை” (‘derogatory statements’) பதிவிட்டதாக இந்திய ஆட்சிபணி அதிகாரி என்.பிரசாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அறிக்கைகள் மாநில நிர்வாகத்தின் மதிப்பை குறைப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த கருத்துக்கள் இந்திய ஆட்சிப் பணிக்குத் தகுதியற்றவர் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயதிலக் தனக்கு எதிராக ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டதாக பிரசாந்த் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை ஜெயதிலக் மறுத்தார்.
‘மல்லு இந்து அதிகாரிகள்’ (‘Mallu Hindu Officers’) என்ற மத அடிப்படையிலான வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதற்காக கே. கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் குழு, ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு இடையே ஒற்றுமையை குலைப்பதாகவும், வகுப்புவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கோபாலகிருஷ்ணன் தனது கைப்பேசியை ஹேக் செய்த பின்னர் இந்த குழு உருவாக்கப்பட்டதாக கூறினார். இருப்பினும், இதை அரசாங்கம் நிராகரித்தது. காவல்துறை விசாரணையில் ஹேக்கிங் செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. கோபாலகிருஷ்ணன் தனது கைப்பேசியில் “அனைத்து தரவுகள் மற்றும் பயன்பாட்டினை” (‘factory reset’) அழித்து இருப்பதாகவும் காவல்துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிகள் என்ன கூறுகின்றன?
1968-ஆம் ஆண்டு அகில இந்திய பணி (நடத்தை) விதிகள், இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி மற்றும் இந்திய வனப்பணி அதிகாரிகளுக்கான விதிகளை அமைத்தது. இந்த விதிகள் அவர்களின் நடத்தைக்கான நடத்தை நெறிமுறையை கோடிட்டுக் காட்டுகின்றன. சில விதிகள்:
அதிகாரிகள் உயர்ந்த நெறிமுறைகள், ஒருமைப்பாடு மற்றும் நேர்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் அரசியல் ரீதியாக நடுநிலையாகவும், பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளில் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள கோட்பாடுகளை நிலைநிறுத்த வேண்டும். அதிகாரிகள் பொது ஊடகங்களில் உத்தியோகபூர்வ கடமைகளின் ஒரு பகுதியாக மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
எந்த ஒரு பொது மேடையிலும் அரசின் கொள்கைகளை விமர்சிக்க அதிகாரிகள் பொது ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது. அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை விமர்சித்தால், நீதிமன்றத்திற்கு செல்லவோ அல்லது பத்திரிகைகளை அணுகவோ முடியாது. அத்தகைய நடவடிக்கைகளுக்கு அவர்கள் அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். ஆட்சிபணியில் இருந்து கொண்டு பொருத்தமற்ற வகையில், அதிகாரிகள் செயல்படக்கூடாது என்ற பொது விதியும் இதில் அடங்கும்.
பிரச்சனைகள் என்ன ?
முதலாவதாக, சமூக ஊடகங்களை அதிகாரிகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை விதிகள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இரண்டாவதாக, அதிகாரிகளின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் பல்வேறு புதிய நடத்தை வழிகாட்டுதல்களைச் சேர்ப்பதன் மூலம் விதிகள் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், ‘ஆட்சிபணியில் இருப்பதற்கு தகுதியற்றவர்’ என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படலாம் அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். எல்லா சூழல்களிலும், ஜூனியர் அதிகாரிகளுக்கு எதிராக இந்த விதிகளை செயல்படுத்துவது மூத்த அதிகாரிகள் தான். எனவே, இந்த விதிகளை தவறாகப் பயன்படுத்துவதில் இருந்து ஜூனியர் அதிகாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
எதை மறுபரிசீலனை செய்யலாம்?
முதலாவதாக, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தெளிவான விதிகள் உருவாக்கப்படலாம். இந்த விதிகள் எந்த வகையான அதிகாரப்பூர்வ தகவல்களை பகிரலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இதில் அதிகாரிகள் தங்கள் பணி தொடர்பான அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.
இரண்டாவதாக, கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில், ‘ஆட்சிபணியில் இருப்பதற்கு தகுதியற்றவர்’ என்ற சொல்லை விளக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டு பட்டியலை உருவாக்கலாம். இந்தப் பட்டியல் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இருக்கலாம். குறிப்பாக, ஜூனியர் அதிகாரிகள், அரசு ஊழியர் என்று தங்களது பெயரை வெளியிடாமல் இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்கள் பல்வேறு அரசாங்க முயற்சிகளுக்கு விளம்பரம் செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக உள்ளன. அதை சரியாகப் பயன்படுத்தினால் குடிமக்களுக்கு தங்களின் சிறந்த முயற்சியை வெளிப்படுத்த முடியும். அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும்போதும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போதும் பெயர் தெரியாமல் (anonymity) பார்த்து கொள்ள வேண்டும்.
ரங்கராஜன். ஆர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி.