மசோதாவின் விதிகளின்படி, ஒரே நாடு ஓரே தேர்தல் உண்மையான செயல்முறை 2034-ஆம் ஆண்டு வரை நடைபெறாது.
மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலுக்கு வழி வகுக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவானது, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலங்களை ஒரே காலகட்டமாகும் திருத்தங்கள் மற்றும் புதிய பிரிவுகளைச் சேர்க்க முன்மொழிகிறது. இருப்பினும், மசோதாவின் விதிகளின்படி, ஒரே நேரத்தில் தேர்தல்களின் உண்மையான செயல்முறை 2034-ஆம் ஆண்டு வரை நடைபெறாது.
வெள்ளிக்கிழமை இரவு விநியோகிக்கப்பட்ட மசோதாவின் நகலின்படி, மக்களவை அல்லது எந்தவொரு மாநில சட்டமன்றமும் அதன் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு கலைக்கப்பட்டால், அந்த சட்டமன்றம் அதன் மீதமுள்ள ஐந்தாண்டு காலத்தை முடிக்க மட்டுமே இடைக்கால தேர்தல்கள் நடத்தப்படும்.
இந்த மசோதா பிரிவு 82(A) (மக்களவை மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள்) சேர்க்கவும், பிரிவுகள் 83 (நாடாளுமன்ற அவைகளின் காலம்), 172 மற்றும் 327 (சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பாக ஏற்பாடுகளைச் செய்ய நாடாளுமன்றத்தின் அதிகாரம்) ஆகியவற்றைத் திருத்தவும் பரிந்துரைக்கிறது.
வியாழக்கிழமை மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசியலமைப்பு (நூற்று இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024, திருத்தத்தின் விதிகள் "அறிவிக்கப்பட்ட தேதியில்" (“appointed date”) நடைமுறைக்கு வரும் என்று கூறுகிறது. இது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்களவையின் முதல் அமர்வில் குடியரசுத்தலைவர் அறிவிப்பார்.
திங்களன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மசோதாவின்படி, இந்த நடைமுறை 2029-ஆம் ஆண்டில் அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே இருக்கும் என்றும், இச்செயல்முறை 2034-ஆம் ஆண்டு தேர்தல் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா பின்வருமாறு கூறுகிறது: "பிரிவு 83 மற்றும் பிரிவு 172 எவ்வாறிருப்பினும், அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு மற்றும் மக்களவையின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு நடத்தப்படும் எந்தவொரு பொதுத் தேர்தலிலும் அமைக்கப்பட்ட அனைத்து சட்டமன்றங்களின் பதவிக்காலமும் மக்களவையின் முழு பதவிக்காலம் முடியும் போது முடிவடையும்."
மக்களவையின் பதவிக்காலம் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் என்றும், நியமிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்றங்களின் பதவிக்காலம் மக்களவையின் பதவிக்காலத்துடன் முடிவடையும் என்றும் இந்த மசோதா குறிப்பிடுகிறது.
செப்டம்பர் 2, 2023 அன்று அமைக்கப்பட்ட கோவிந்த் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது. மக்களவை அல்லது சட்டமன்றம் அதன் முழு பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கலைக்கப்பட்டால், புதிய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முந்தைய ஆட்சியின் எஞ்சிய காலத்தை மட்டுமே பூர்த்தி செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபைகளின் விதிமுறைகளை சீரமைக்க இரண்டாவது மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024, யூனியன் பிரதேசங்களின் அரசுச் சட்டம், (1963) பிரிவு 5 இல் தொடர்ச்சியான திருத்தங்களை முன்மொழிகிறது. டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம், (1991) பிரிவு 5 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், (2019) பிரிவு 17, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுடன் தேர்தல்களை ஒருங்கிணைக்கிறது.
முதல் கட்டமாக, மக்களவை மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோவிந்த் குழு பரிந்துரைத்தது.