சிறைபிடிக்கப்பட்ட யானைகளை மேலும் கட்டுப்படுத்தும் விதிகள் -சுப்ரா சோட்டி

 சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கான (இடமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகள் சில தெளிவற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த தெளிவற்ற விதிகள் யானைகளின் சட்டவிரோத வர்த்தகத்தை எளிதாக்கக்கூடும். 


இந்தியாவில், யானைகள் ஞானம் மற்றும் வலிமையின் புனித சின்னங்களாக மதிக்கப்படுகின்றன. இருப்பினும், தனிநபர்களால் சிறைபிடிக்கப்பட்ட யானைகள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இதை பிரதிபலிக்கும் வகையில், கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் யானைகளின் வாழ்க்கையை "எட்டர்னல் ட்ரெப்ளிங்கா" ("Eternal Treblinka") என்று ஒப்பிட்டது.  இந்த ஒப்பீடு பிரபலமற்ற நாஜி அழிப்பு முகாம்களைக் குறிக்கிறது. 


மத நோக்கங்களுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், சுற்றுலாவுக்காகவும் பயன்படுத்தப்படும் யானைகள் கொடுமையை தாங்கிக் கொள்கின்றன. யானைகள் இயற்கைக்கு மாறான முறையில் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. யானைகள் சமூக விலங்குகள், ஆனால் அவை பெரும்பாலும் தனிமைப்படுத்தல் மற்றும் தவறான பயிற்சி முறைகளை எதிர்கொள்கின்றன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972), யானைகளுக்கு மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்கினாலும், அவை இன்னும் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு, சிறையிலேயே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.


புதிய விதிகள் மற்றும் சட்ட ஓட்டைகள் 


மார்ச் 2024இல், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (Ministry of Environment, Forests and Climate Change (MoEFCC)) சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கான (பரிமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகளை வெளியிட்டது. தனியாரின் காவலில் சிறைபிடிக்கப்பட்ட யானைகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், காடுகளில் இருந்து சட்டவிரோதமாக பிடிபடுவதைக் குறைப்பதும் இந்த விதிகளின் முக்கிய குறிக்கோள் ஆகும். யானைகளை எவ்வாறு கொண்டு செல்லலாம் மற்றும் இடமாற்றம் செய்யலாம் என்பதை விதிகள் கோடிட்டுக் காட்டுகின்றன. யானைகளின் உரிமையை மாற்றுவதற்கான நடைமுறையையும் குறிப்பிடுகிறது.


காட்டு யானைகளை கொண்டு செல்வதற்கான அல்லது மாற்றுவதற்கான நடைமுறைகள் மற்றும் காரணங்கள் தெளிவாக இல்லை. இந்த தெளிவின்மை வணிக சுரண்டலுக்கு மேலும் வழிவகுக்கும். உதாரணமாக, ஒரு யானையை இனி ஒரு உரிமையாளரால் பராமரிக்க முடியாது எனில், உரிமையை மாற்றலாம் என்று விதிகள் கூறுகின்றன. இருப்பினும், இந்த பரிமாற்றம் வணிக ரீதியானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  இதன் விளைவாக, யானைகளை அசையும் சொத்தாக வர்த்தகம் செய்யப்படலாம்.

 

யானைகளை தற்காலிகமாக கொண்டு செல்லவும் விதிகள் அனுமதிக்கின்றன. இருப்பினும், தனியாருக்குச் சொந்தமான யானையை மாநில எல்லைகளுக்குள் அல்லது குறுகிய காலத்திற்குள் கொண்டு செல்வதை நியாயப்படுத்த எந்த தெளிவான தேவையும் இல்லை. தனியாருக்குச் சொந்தமான பல யானைகளைக் கொண்ட மாநிலங்கள், மதச் சடங்குகள், திருமணங்கள் அல்லது அரசியல் பேரணிகள் போன்ற நிகழ்வுகளுக்கு அவற்றை குத்தகைக்கு விடலாம்.  


இந்த நடவடிக்கைகள் யானைகளை ஒரு பொருளாக கருதுவதன் மூலம் அவற்றின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.  யானைகளை மதச் செயல்பாடுகள், சுற்றுலா அல்லது பிற வணிக நோக்கங்களுக்காக மாற்றுவது அவற்றைப் பொருளாதாரச் சொத்துகளாக மாற்றுகிறது. இது யானைகளை பணம் சம்பாதிக்கும் கருவியாகக் கருதுகிறது. தனியார் யானை உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளை "வாடகைக்கு" வழங்க இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியும். இது காட்டு யானைகளைப் பிடிப்பதை ஊக்குவிக்கும் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.


மைக்ரோசிப் (Microchip) தவறான பயன்பாடு மற்றும் சிறைப்பிடிக்கப்பட்ட பிறப்புகள் 


ஜனவரி 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 2,675 சிறைபிடிக்கப்பட்ட யானைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு தீவிர பிரச்சனையை எழுப்புகிறது. இந்த யானைகள் இறக்கும் போது, ​​அவற்றை மாற்றுவதற்காக காட்டில் இருந்து புதிய யானைகள் பிடிக்கப்படுகின்றன. யானை திட்டம் (Project Elephant) (2002) முயற்சியின் ஒரு பகுதியாக சிறைபிடிக்கப்பட்ட பெரும்பாலான யானைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டன.  இந்த முயற்சியானது இந்தியாவில் உள்ள அனைத்து சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கு பொருந்தும். மேலும், உரிமைச் சான்றிதழ்களுடன் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறந்த யானையிடமிருந்து மைக்ரோசிப்கள் எடுக்கப்பட்டு, சட்ட விரோதமாகப் பிடிப்பதை சட்டப்பூர்வமாக்குவதற்காக காட்டில் பிடிபட்ட யானைக்குள் வைக்கப்படுகின்றன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


சிறைபிடிக்கப்பட்ட யானைகளில் மைக்ரோசிப்களை அகற்றி அழிக்க விதிகள் தேவையில்லை. இதை வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் செய்ய வேண்டும். விதிகளின்படி யானை இடமாற்றம் அல்லது போக்குவரத்தின் போது இறந்தால் பிரேத பரிசோதனை அறிக்கை தேவையில்லை. இது கண்காணிப்பு மற்றும் பொறுப்புடைமை இடைவெளியை உருவாக்குகிறது. இந்தச் சுழற்சியைத் தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட யானைகளை சட்டப்பூர்வமாக உரிமையாளராக வகைப்படுத்தவும் விதிகள் அனுமதிக்கின்றன.


அதற்கு பதிலாக, தனியார்பராமரிப்பில் உள்ள யானைகளுக்கு மனிதாபிமான, ஆக்கிரமிப்பு இல்லாத பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்த வேண்டிய நிலை தேவைப்படுகிறது. இது வணிகச் சுரண்டலின் சுழற்சியை முறியடிக்கவும், யானைகள் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்கவும் உதவும்.  கோவில்கள், ஊர்வலங்கள், சுற்றுலா போன்றவற்றில் உயிருள்ள யானைகளுக்குப் பதிலாக மின்னணு யானைகளை பயன்படுத்த வேண்டும். காட்டுயானைகளை பாதுகாக்க பொதுமக்கள், கோவில் கமிட்டிகள் மற்றும் அரசு இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 


மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம் 


மேலும், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களுக்கு யானைகள் கடத்தப்படுவதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அசாமில் உள்ள ஒரு தனியார் உரிமையாளரால் டெல்லி கோவிலுக்கு யானை "பரிசாக" கொடுக்கப்பட்டது இதற்கு ஒரு உதாரணம். துரதிர்ஷ்டவசமாக, புதிய விதிகள் இந்த அழிந்து வரும் விலங்குகளை எளிதாக வர்த்தகம் செய்ய உதவியுள்ளன.

 

ஆகஸ்ட் மாதம், இந்த எழுத்தாளர் மற்றும் பிறரிடமிருந்து அறிக்கைகள் வெளியான பிறகு, சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் (Ministry of Environment, Forests and Climate Change (MoEFCC)) கீழ் யானைத் திட்டம் நடவடிக்கை எடுத்தது. சிறைபிடிக்கப்பட்ட யானைகளை சட்டவிரோதமாக இடமாற்றம் செய்வதை எடுத்துக்காட்டும் ஒரு குறிப்பாணையை அது வெளியிட்டது. சிறைபிடிக்கப்பட்ட யானைகள் (பரிமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகள் (2024), பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இந்த குறிப்பாணை வலியுறுத்தியது மற்றும் சிறைபிடிக்கப்பட்ட யானைகளின் மரபணு சுயவிவரங்களை டிஜிட்டல் மயமாக்குவது கட்டாயமாக்கியது. யானை இடமாற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், அவை விதிகளில் உள்ள முக்கிய பிரச்சினைகளை முழுமையாக சரி செய்யவில்லை.


துரதிர்ஷ்டவசமாக, சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கு போதுமான பாதுகாப்பை சட்டம் வழங்கவில்லை. யானைகளின் நலனில் கவனம் செலுத்தும் மற்றும் வணிகச் சுரண்டலைத் தடுக்கும் தெளிவான விதிகள் இல்லாததால், இந்த முரண்பாடுகள் அனைத்தும் தொடரும். யானைகள் புனித விலங்குகளாக வணங்கப்படுகின்றன. ஆனால், வனவிலங்குகள் மேலும் சுரண்டப்படும்  காட்டு விலங்குகளாகவே இருக்கின்றன.


சுப்ரா சோட்டி சுற்றுச்சூழல் வழக்கறிஞர் மற்றும் இந்தியாவின் ஹ்யூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் (Humane Society International (HSI) ) வனவிலங்கு கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிபுணர் ஆவார். 




Original article:

Share: