என்.ஐ.ஏ.வின் அதிகார வரம்பை உச்ச நீதிமன்றம் விரிவுபடுத்துகிறது : வழக்கு என்ன? - அஜய் சிஹ்னா கற்பூரம்

 ஏற்கனவே விசாரணையில் உள்ள ஒரு முக்கிய திட்டமிடப்பட்ட குற்றத்துடன் "இணைக்கப்பட்ட" குற்றங்களை விசாரிக்க NIA-க்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. முக்கியக் குற்றத்தில் குற்றம் சாட்டப்படாத வேறு ஒருவரால் இணைக்கப்பட்ட குற்றத்தைச் செய்திருந்தாலும் இது பொருந்தும்.


உச்சநீதிமன்றம் இந்த வார தொடக்கத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் (National Investigation Agency’s (NIA)) விசாரணைக்கான அதிகாரங்களை விரிவுபடுத்தியது. 

நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, ஏற்கனவே விசாரணையில் உள்ள முக்கிய திட்டமிடப்பட்ட குற்றத்துடன் "இணைக்கப்பட்ட" குற்றங்களை விசாரிக்க என்ஐஏ-வுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியது. மேலும், இணைக்கப்பட்ட குற்றம், திட்டமிடப்பட்ட குற்றத்தில் குற்றம் சாட்டப்படாத ஒருவரால் செய்யப்பட்டிருந்தாலும் இது பொருந்தும்.


தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டம், 2008 (National Investigation Agency Act(NIA Act)) குறிப்பிட்ட சில திட்டமிடப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்புக்கு வழங்குகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி இந்த அமைப்பு அவ்வாறு செய்யலாம். NIA சட்டத்தில் "அட்டவணை" எனப்படும் சட்டங்களின் பட்டியல் உள்ளது. இது NIA விசாரிக்கக்கூடிய குற்றங்களை கோடிட்டுக் காட்டுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (Unlawful Activities (Prevention) Act(UAPA)) மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (Anti-Hijacking Act), 1982 ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் இதில் அடங்கும்.


வழக்கின் உண்மைகள் 


ஜனவரி 2020-ம் ஆண்டில், பஞ்சாபின் மொஹாலியில் உள்ள காவல் சிறப்பு பணிக்குழுவால் (police Special Task Force) சுக்பீர் சிங் என்ற நபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பான குற்றங்களுக்காக போதைப்பொருள் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் சட்டத்தின், 1985 (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS Act)) கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், தான் பிடிபட்ட கார் அங்குஷ் விபன் கபூருக்கு சொந்தமானது என்று சிங் தெரிவித்தார். கபூரை அவரது கடையில் இருந்து காவல்துறையினர் கைது செய்தபோது, அந்த இடத்தில் ஹெராயின் என்ற சட்டவிரோத போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் 2021 ஜூலையில் ஜாமீன் வழங்கியது. 


சுக்பீர் சிங் குஜராத்தில் 2018-ம் ஆண்டு முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 500 கிலோ போதைப் பொருட்களை அவர் கடத்தியதாகவும் விநியோகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூன் 2020-ம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் (MHA) விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (NIA) மாற்றியது. NIA இந்த வழக்கை மீண்டும் பதிவு செய்து, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்ட சதி செய்ததாக பல குற்றச்சாட்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டது. இந்த குற்றச்சாட்டுகள் UAPA-ன் பிரிவுகள் 17 மற்றும் 18-ன் கீழ்வரும் மற்றும் NIA சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றங்களும் அடங்கும். சுக்பீர் சிங் கைது செய்யப்பட்டதை அறிந்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) பஞ்சாப் காவல்துறையிடம் இருந்து அவரை காவலில் எடுத்தது. பின்னர், கபூரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என்று சிங் மீண்டும் குறிப்பிட்டிருந்தார்.


மே 2023-ம் ஆண்டில், கபூருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு NIA பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்தை அணுகியது. குஜராத்தில் மீட்கப்பட்ட 500 கிலோ ஹெராயின் மற்றும் கபூருடனான தொடர்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்றம், காவலில் வைத்து விசாரணை நடத்துவதுடன் தெளிவான அணுகுமுறை தேவை என்று கூறியது. ஜாமீன் ரத்து உத்தரவு மற்றும் விசாரணையை என்ஐஏ-வுக்கு மாற்றும் உள்துறை அமைச்சக உத்தரவு ஆகிய இரண்டையும் எதிர்த்து கபூர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். 


கபூர் & ஒன்றிய அரசின் வாதம் என்ன?


தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தின் (NIA Act) 8-வது பிரிவின் அடிப்படையில் கபூரும் ஒன்றிய அரசும் எதிராக வாதிட்டனர். எந்தவொரு திட்டமிடப்பட்ட குற்றத்தையும் விசாரிக்கும் போது, ​​தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்ற குற்றங்களையும் விசாரிக்க முடியும் என்று இந்த பிரிவு கூறுகிறது. எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்ததாகக் கூறப்பட்டு, அது திட்டமிடப்பட்ட குற்றத்துடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே இது அனுமதிக்கப்படும். அதன் அடிப்படையில், திட்டமிடப்பட்ட குற்றத்துடன் தொடர்பை நிரூபிக்க முடிந்தால், NIA திட்டமிடப்படாத குற்றங்களை ஆராயலாம்.


போதைப்பொருள் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் சட்டத்தின் (NDPS Act) கீழ் குற்றங்கள் சேர்க்கப்படவில்லை என்பதால், தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தின் (NIA Act) கீழ் ஒரு திட்டமிடப்பட்ட குற்றத்திற்காக அவர் விசாரிக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தின் முன் கபூர் வாதிட்டார். மனுதாரருக்கும் குஜராத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் (அவை பட்டியலிடப்பட்ட குற்றங்கள்) அவருக்கு எதிராக செயல்பட முடியாது என்றும் அவர் வாதிட்டார். 


மறுபுறம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் திட்டமிடப்பட்ட குற்றம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நடவடிக்கையானது  குஜராத்தில் கபூருக்கு எதிராக கூறப்படும் குற்றத்துடன் தொடர்புடையது என்று ஒன்றிய அரசு வாதிட்டது. கபூர் ஒரு பயங்கரவாத வலையமைப்பின் ஒரு பகுதியாக உள்ளார். மேலும், அவர் குஜராத்திற்குள் போதைப்பொருட்களை கடத்தி அவற்றை சுத்திகரிப்பு மற்றும் மேலும் விநியோகிப்பதற்காக பஞ்சாப்-க்கு கொண்டு செல்கிறார் என்று அது நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும், கபூருக்கும் சுக்பீர் சிங்கிற்கும் இடையிலான தொடர்பு, தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) விசாரணையில் கபூரின் தொடர்பைக் காட்டுகிறது என்றும் ஒன்றியம் குறிப்பிட்டிருந்தது.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 


ஜாமீன் ரத்து உத்தரவிலோ அல்லது குஜராத் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவிலோ தலையிட நீதிமன்றம் எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை. 


தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தின் (NIA Act) பிரிவு 8-ல் பயன்படுத்தப்படும் "குற்றம் சாட்டப்பட்டவர்" என்ற சொற்றொடர், குஜராத்தில் சுக்பீர் சிங் போன்ற விசாரணையின் கீழ் உள்ள குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களால் செய்யப்பட்ட தொடர்புடைய குற்றங்களை மட்டுமே என்ஐஏ விசாரிக்க முடியும் என்பதை நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. எவ்வாறாயினும், பிரிவு 8-ன் அடிப்படையில் இதற்கான "நோக்கம் மற்றும் அர்த்தமுள்ள விளக்கம்" வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், இது வேறு நபர் அதைச் செய்திருந்தாலும் கூட, இந்த விசாரணையில் இணைக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்க என்ஐஏவை அனுமதிக்கிறது. 


"வேறு எந்த குற்றத்திற்கும், திட்டமிடப்பட்ட குற்றத்திற்கும் இடையிலான தொடர்பு அல்லது இணைப்பு மிக முக்கியமானது" என்றும், திட்டமிடப்பட்ட குற்றம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் செய்த வேறு எந்த குற்றத்தையும் என்ஐஏ விசாரிப்பதற்கு முன்பு இந்த இணைப்பு இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. தற்போதைய வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 17/18 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்த திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கும், போதைப்பொருள் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் சட்டத்தின் (NDPS Act) கீழ் கபூருக்கு எதிராக கூறப்படும் குற்றங்களுக்கும் இடையே "ஒரு தொடர்பு, உறவு மற்றும் இணைப்பு உள்ளது" என்று நீதிமன்றம் கூறியது. 


திட்டமிடப்பட்ட குற்றத்துடன் "தொடர்பு" குறித்து கேரள உயர்நீதிமன்றம்


2023 டிசம்பரில், திட்டமிடப்பட்ட குற்றத்துடன் "தொடர்பு" என்ற சொல்லை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் விவாதித்தது. இதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பானது. செப்டம்பர் 28, 2022 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (Popular Front of India (PFI)) உறுப்பினர்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் சட்டவிரோத சங்கமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செயல்பாட்டாளர்களை கொலை செய்ய சதி செய்ததாக காவல்துறை முடிவு செய்தது.


இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகும் விசாரணை தொடர்ந்தது, இறுதியில் அது செப்டம்பர் 16, 2022 அன்று NIA-க்கு மாற்றப்பட்டது. இதில், "கேரளாவில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் துணை அமைப்புகளின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதற்கும், மாநிலத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய அதன் பணியாளர்களை தீவிரவாதிகளாக்குவதற்கும் சதி செய்தார்கள்" என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. டிசம்பரில், என்ஐஏ அறிக்கை தாக்கல் செய்தது. மூத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) தலைவர்களால் திட்டமிடப்பட்ட ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த கொலை என்று அறிக்கை கூறுகிறது. தேசிய புலனாய்வு அமைப்பும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் குற்றச்சாட்டுகளை சுமத்தியது.


கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) உறுப்பினர்களான மனுதாரர்கள், இந்த வழக்கை என்ஐஏ விசாரித்திருக்கக் கூடாது என்று வாதிட்டனர். UAPA-ன் கீழ் கொலைக்கும் திட்டமிடப்பட்ட குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் கூறினர். ஆனால், உயர்நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. இந்த தொடர்பை "பரந்த கண்ணோட்டத்தில்" பார்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. கொலை வழக்கு மற்றும் UAPA-ன் கீழ் திட்டமிடப்பட்ட குற்றம் ஆகிய இரண்டிலும் PFI தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும் அது குறிப்பிட்டது. எனவே, இரண்டு குற்றங்களும் இணைக்கப்பட்டதாக கருத வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.




Original article:

Share: